Sunday, July 21, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

-

ஜான் பெலாமி ஃபாஸ்டர், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் மன்த்லி ரிவ்யூ இதழின் ஆசிரியர். ஓரேகான் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை பேராசிரியர். மார்க்சிய சூழலியல் தொடர்பான இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. சூழலியலின் பால் மார்க்சியமும், குறிப்பாக மார்க்சின் எழுத்துகளும் கொண்டுள்ள அக்கறைகளை விளக்கப்படுத்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

வளர்சிதை மாற்றப் பிளவு குறித்த மார்க்சின் கோட்பாடு (Marx’s Theory of Metabolic Rift)  என்ற இவரது புகழ் பெற்ற கட்டுரை, அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் சோசியாலஜியில் வெளியிடப்பட்டது. முதலாளித்துவ கட்டமைப்பின் கீழ் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவில் நிகழும் நாசகரமான மாற்றங்களைச் சுட்டுவதற்கு மார்க்ஸ் உருவாக்கிய வளர்சிதை மாற்றப் பிளவு என்ற கருத்தாக்கத்தை இக்கட்டுரையின் வாயிலாக அறிமுகப்படுத்தினார் ஃபாஸ்டர்.

ஃபாஸ்டரின் கருத்துப்படி உலகம் இன்று எதிர்கொண்டிருக்கும் சூழலியல் நெருக்கடி என்பது முதலாளித்துவத்தின் விளைவாகத் தோன்றியிருக்கும் ஒரு கட்டமைவு நெருக்கடியாகும். முதலாளித்துவமும் சூழலியல் பேண்தகைமையும் (Environmental Sustainability) ஒன்றுக்கொன்று ஒவ்வாதவை என்கிறார் ஃபாஸ்டர். மனிதகுலத்துக்கு முன்னால் இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன. சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் (Socialism or Cannibalism) என்றார் ஜெர்மன் கம்யூனிஸ்டு புரட்சியாளர் ரோசா லக்சம்பர்க். ரோசாவின் கூற்றைச் சற்றே மாற்றி, சோசலிசம் அல்லது இறுதிப் பேரழிவு (Socialism or Exterminism)  எனக் கூறுகிறார் ஃபாஸ்டர்.

பத்திரிகையாளர்கள் ஜிப்சன் ஜான், பி.எம்.ஜித்தீஷ் ஆகியோர் ஜான் பெலாமி ஃபாஸ்டருடன் நிகழ்த்திய நேர்காணலை ஃபிரண்ட்லைன் ஆங்கில இதழ் (“Socialism a necessity for human survival”,  Feb 02, 2018) வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கப்பட்ட மொழியாக்கத்தைத் தருகிறோம்.

* * *

இயற்கை குறித்து  மார்க்ஸ், எங்கெல்ஸின் கருத்து என்ன?

பொருள்முதல்வாதிகள் என்ற முறையில் மார்க்சும் எங்கெல்சும் வரலாறு குறித்த பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தையும், இயற்கை குறித்த பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தையும் இயல்பாகவே பிரிக்கவொண்ணாதவையாகக் கருதினார்கள்.

“ஆற்றலைச் சேமிக்கின்ற அதே நேரத்தில், மனிதத் திறனின் சாத்தியங்களை நிறைவு செய்வது என்ற வகையில், மனித இனத்துக்கும் இயற்கைக்கும் இடையிலான வளர்சிதை மாற்றத்தினை அறிவுபூர்வமாக நெறிப்படுத்துவதே சோசலிசம்” என்று விளக்கினார் கார்ல் மார்க்ஸ்.

“பூமி யாருக்கும் சொந்தமானது அல்ல. இந்தப் புவிப்பரப்பிலுள்ள மக்கட்சமூகத்தினர் அனைவரும் சேர்ந்தாலும் கூட, அவர்கள் இந்தப் பூமியைத் தங்கள் உடைமையாகக் கருதவியலாது. ஒரு குடும்பத்தலைவன் குடும்பத்தைப் பேணிப் பாதுகாத்து, அடுத்த வாரிசுக்கு விட்டுச்செல்வதைப் போல, இந்தப் பூமியைப் பேணிப் பாதுகாத்து, வளர்த்து, வருங்காலச் சந்ததிக்கு விட்டுச்செல்லும் காவலர்களே மக்கட்சமூகத்தினர்” என்கிறார் மார்க்ஸ். முதலாளித்துவத்துக்கும் சூழலியலுக்கும் இடையிலான உறவை, அறிவியல்பூர்வமாகவும், ஒரு வலிமையான இயங்கியல் சட்டகத்தில் வைத்தும் புரிந்து கொள்ளும் விதத்திலும் வேறு யாருடைய ஆய்வும் சொன்னதில்லை என்று நான் கூறுவேன்.

சூழலியல் பேரழிவைத் தோற்றுவிப்பது முதலாளித்துவமே!

முதலாளித்துவம் என்ற தற்போதைய சமூகப் பொருளாதார அமைப்பு உலகின் சூழலியல் அமைப்புகள் அனைத்தையும் அச்சுறுத்துவதோடு நிற்கவில்லை. இந்தப் பூமியே மனித குலத்தின் இருப்பிடமாக தொடர்ந்து நீடித்திருக்குமா என்ற அச்சுறுத்தலை விடுக்கிறது. இது கேள்விக்கிடமற்ற உண்மை. இன்றைய அறிவியலின் எல்லாத்துறைகளும் இந்த உண்மையை அங்கீகரிக்கின்றன. 2017 நவம்பரில் உலகின் 184 நாடுகளைச் சேர்ந்த 15,000 அறிவியலாளர்கள் இது குறித்து மனித குலத்தை இன்னொருமுறை எச்சரித்தார்கள். எனவே, நாம் கேள்வியை இப்படி எழுப்பவேண்டியுள்ளது.

புவியின் அழிவை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவியலாததாக்குகின்ற இந்தப் போக்கிற்கான கூறுகள், முதலாளித்துவத்தின் இயக்கத்தைத் தீர்மானிக்கின்ற விதிகளிலேயே இருக்கின்றனவா? ஆம் என்பதுதான் இதற்கான விடை. முதலாளித்துவத்தின் விதி ஒன்றுதான். அதை மார்க்சின் சொற்களில் கூறுவதாயின், “மூலதனத்தைக் குவி, குவி, மேலும் குவி என்பதுதான் மோசஸின் இறைக்கட்டளை.”

அதிகரித்த அளவில் மூலதனத்தைக் குவிப்பதைத் தவிர, இந்த முதலாளித்துவ அமைப்பிற்கு வேறு எதைப் பற்றியும் அக்கறை இல்லை.  அத்தகைய மூலதனக் குவிப்பு சாத்தியமாக வேண்டுமென்றால், பொருளாதாரம் முடிவே இல்லாமல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு வளரவேண்டுமானால், உலகிலுள்ள அனைத்துமே வாங்கவும் விற்கவுமான பண்டமாக்கப்படவேண்டும். உலகமே பணத்தால் ஆனதாக மாற்றப்படவேண்டும்.

இந்தப் பூமியின் உயிரியல், புவியியல், வேதியியல் இயக்கப்போக்குகளில் தோன்றும் முறிவுகளும் பிளவுகளுமே (Ruptures or Rifts in the Bio-Geo-Chemical Processes of the Planet)  இதன் விளைவு. இப்பிரச்சினையைத்தான் வளர்சிதை மாற்றப் பிளவு என்று கணித்தார் மார்க்ஸ் – இன்றைய சூழல் அமைப்பியலாளர்கள் கணிப்பதைப் போலவே.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சூழலியல் நெருக்கடிக்கு ஒரு தீர்வை வழங்கக் கூடுமா?

தொழில்நுட்பம் குறித்துப் பல தவறான அபிப்ராயங்கள் நிலவுகின்றன. நமது காலத்தின் மிக முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்குக் காரணம் – தனியார் மூலதனக் குவிப்புக்கான கட்டமைப்பு என்ற பொருளில் – முதலாளித்துவமல்ல.

புதிய கண்டுபிடிப்புகள் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கும் சாத்தியத்தை வழங்குவதால், அணு ஆயுதங்களை இதற்குப் பொருத்தமாக நவீனப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. துல்லியமாகத் தாக்க முடியும் என்பதால், இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக அணு ஆயுதப் போர் கூட சாத்தியமே என்ற ஆபத்தான, அபத்தமான கருத்துகளும் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், இந்த புவிக்கோளத்தில் தோன்றியிருக்கும் சூழலியல் முறிவை எதிர்கொள்வது எப்படி என்ற பிரச்சினையில் இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்துவது குறித்து யாரும் சிந்திப்பதில்லை.

சூழலியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான எல்லா தொழில்நுட்பங்களும் நம்மிடம் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், மூலதனத்தை மென்மேலும் குவித்துக் கொள்ளும் பொருட்டு, இயற்கை இந்தப் பூமிக்கு விதித்திருக்கும் வரம்புகளைத் தாண்டிப் பொருளாதாரத்தை வளரச்செய்ய வேண்டுமென்றும், இந்த நோக்கத்தைப் பாதுகாப்பான முறையில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றும் முதலாளித்துவ அமைப்பு விரும்புகிறது. இந்த விருப்பத்தைத் தொழில்நுட்பத்தால் தீர்த்துவைக்க முடியாது.

இயற்கை விதிக்கின்ற எல்லா வரம்புகளையும் மீறப்பட வேண்டிய தடைகளாக மட்டுமே கருதுகின்ற முதலாளித்துவத்தின் மிகக் குறுகலான பார்வையை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இப்பிரச்சினையைக் கடக்கவியலாத இயற்கையின் வரம்புகள் (Insuperable natural limits) என்று அழைத்தார் மார்க்ஸ். நாம் இந்தச் சமூகத்தை அர்த்தமுள்ள சமத்துவத்தையும் சூழலியல் பேண்தகைமையையும் நோக்கிப் பெருமளவில் நகர்த்திச் செல்ல வேண்டுமானால், – சுதந்திரமும் மனித குலத்தின் எதிர்காலமும் இதைத்தான் கோருகின்றன – சமூக உறவுகளை நாம் மாற்றியமைப்பது அவசியம். இந்த முதலாளித்துவ கட்டமைப்பு அதனை ஏற்றுக்கொள்ளாது.

சோசலிசம் இயற்கையைச் சீரழிக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

“உற்பத்திச் சக்திகளின் உயர்ந்த கட்ட வளர்ச்சியை சோசலிசம் கோருகிறது என்று மார்க்சியம் கூறுவதால், அது இயற்கையை மிகப்பெரும் அளவில் சுரண்டுவதற்கும் அழிப்பதற்கும் வழிவகுக்காதா?” என்று கேட்கப்படுகிறது. உற்பத்தி சக்திகளின் உயர்ந்த கட்ட வளர்ச்சி என்பதன் பொருள் என்ன? உற்பத்தி சக்திகளில் தலையாய சக்தி மனிதர்கள்தான் என்பதையும் அவற்றின் வளர்ச்சி என்பது வேலைப்பிரிவினயின் வளர்ச்சியே என்பதையும் மார்க்ஸ் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

“இறுதியாக சோசலிசத்தின் கீழ் உற்பத்தியாளர்களின் ஒருங்கிணைவானது, மனித சாத்தியத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், ஆற்றலைச் சேமிக்கும் வகையிலும் இயற்கையுடனான தமது வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்” என்கிறார் மார்க்ஸ். இதனை உற்பத்தி உற்பத்திக்காகவே என்றோ, தொழில்மயம் தொழில்மயத்துக்காகவே என்றோ யாரும் விளக்கப்படுத்த முடியாது. வளர்ச்சியின் அலகு இந்தப் பூமிதான் என்பதால், பேண் தகைமையைத்தான் (Sustainability) மார்க்ஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

பருவநிலை மாற்றம் அறிவியல் வழியில் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அதனைச் சிலர் மறுப்பது ஏன்?

பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் அறிவியல் எந்த அளவுக்கு அசைக்க முடியாத உறுதியுடன் இருக்கிறதோ, அதைக் காட்டிலும் சற்று அதிகமாகவே பருவநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் இன்றைய அறிவியல் உறுதியாக இருக்கிறது.

“இது அனைத்தையும் மாற்றுகிறது” (This Changes Everything -Naomi Klein)  என்ற தனது நூலில் நவோமி கிளைன் சரியாகத்தான் சொல்கிறார். அவரது கருத்துப்படி பருவநிலை மாற்றப் பிரச்சினையை வலதுசாரிகள் மறுப்பதற்கான காரணம் மிகவும் வெளிப்படையானது.

புவி சூடேறுதலைக் கட்டுப்படுத்துகின்ற முயற்சியானாலும் சரி, அல்லது புதைபடிவ எரிபொருள் தொழிலின் மீது (fossil fuel industry) கட்டுப்பாடுகளை விதிக்கின்ற முயற்சியானாலும் சரி, அவற்றை முதலாளித்துவத்துக்கு எதிரான அச்சுறுத்தலாகவும் புதைபடிவ எரிபொருள் தொழிலை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறைகளுக்கு எதிரான அச்சுறுத்தலாகவுமே வலதுசாரிகள் காண்கிறார்கள். அந்த வகையில் வலதுசாரிகள் அஞ்சுவது சரிதான் (The Right is right)  என்கிறார் நவோமி கிளைன். பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான இயக்கமென்பது தவிர்க்கவியலாமல் புரட்சிகரமான மாற்றத்துக்கானதாகவும் முதலாளித்துவத்துக்கு எதிரானதாகவும் இருக்கிறது என்கிறார் நவோமி கிளைன்.

நவோமி கிளைன் வலதுசாரிகளை விமரிசித்த போதிலும், அவரது உண்மையான இலக்கு வலதுசாரிகள் என்பதை விடத் தாராளவாத மையவாதிகளே (liberal centrists) ஆவர். இந்த மையவாதிகள் வேறொரு முறையில் பருவநிலை மாற்றப் பிரச்சினையை மறுக்கிறார்கள். சமூக உறவுகளில் மாற்றத்தைக் கொண்டு வராமலேயே, சந்தை மற்றும் தொழில்நுட்பத்தின் துணையுடன் மந்திர வித்தையைப் போல புவி சூடேறுதலைத் தடுத்து விட முடியும் என்று எதார்த்தத்துக்குப் புறம்பான வகையில் வாதிடுகிறார்கள்.

சூழலியல் பேரழிவை நம்மால் தடுக்க முடியுமா?

நம்மை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலியல் பேரழிவிலிருந்து தப்புவதற்கு தொழில்நுட்பத் தடைகளோ, வேறு பௌதிகத் தடைகளோ ஏதும் இல்லை. ஆனால், வழமையான முறையில், அதாவது, மூலதனக் குவிப்பு வழக்கம் போல நிகழ்ந்து கொண்டிருக்க, அதன் போக்கிலேயே இப்பிரச்சினைகளைத் தீர்க்கவியலாது.

ஒரு பேரழிவைத் தடுக்கின்ற அதே நேரத்தில், பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் முடியும். சாத்தியமான தீர்வுகள் பல உள்ளன. ஆனால், அநேகமாக அவை அனைத்துமே மூலதனக் குவிப்புக்கு எதிரானவையாகவே இருக்கின்றன.

அமெரிக்காவில் யாருக்கும் தேவைப்படாத, யாரும் விரும்பாத பொருட்களை, பெரும்பாலும் குப்பைகள் என்று சொல்லத்தக்கவற்றை மக்களின் தலையில் கட்டுவதற்கான விளம்பரங்களுக்காக மட்டும் ஒரு டிரில்லியன் டாலர்கள் ஆண்டுதோறும் செலவிடப்படுகின்றன.

உலகப் பொருளாதாரத்தில் சூழலியில்ரீதியில் அழிவுத்தன்மை வாய்ந்த துறை இராணுவம். அழிவினை இலக்காகக் கொண்ட இந்தத் துறைக்கு ஆண்டுதோறும் ஒரு டிரில்லியன் டாலர்களைச் செலவிடுகிறது, அமெரிக்கா. மேலும் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். இத்தகைய செலவுகள் அனைத்துமே தேவையற்றவை. எனினும், இவற்றையெல்லாம் மாற்ற வேண்டுமென்றால், மூலதனத்தின் இயக்க விதிகளுக்கு எதிராகச் செயல்படுவது அவசியம்.

ஒரு புரட்சிகரமான எதிர்வினை என்பதன் பொருள் நாம் விதிகளை மாற்ற வேண்டும் என்பதுதான். பெட்ரோல்ட் பிரெக்ட் கூறியதைப் போல, எரிந்து கொண்டிருக்கும் இந்த வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு நாம் வழி தேடவேண்டும். அதற்கான நமது போராட்டத்தில்தான் எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் நாம் பெற முடியும்.

முதலாளித்துவ நெருக்கடியும் பாசிசமும்

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நாம் காணும் பாசிசத்தின் எழுச்சி என்பது மையப் பொருளாதாரங்களின் மூலதனம் எதிர்கொள்ளும் கட்டமைவு நெருக்கடியுடன் தொடர்புள்ளவை.

டிரம்பும் வெள்ளை மாளிகையும்  என்ற எனது நூலில் இத்தகைய பிரச்சினைகள் பலவற்றைக் கையாண்டிருக்கிறேன். பாசிசம் என்பது நெருக்கடியில் சிக்கிய முதலாளித்துவக் கட்டமைப்பிலிருந்து பிறப்பது. அது குறிப்பான வர்க்க அடித்தளத்தைக் கொண்ட தெளிவானதொரு அரசியல் கட்டமைப்பு.  தாராளவாத ஜனநாயக அரசின் நெருக்கடியையும் பாசிசத் தன்மை கொண்ட அரசமைப்பால் அது மாற்றீடு செய்யப்படுவதையும் இது காட்டுகிறது.

1930 -களிலும் 40 -களிலும் பாசிசம் குறித்த விமரிசனமென்பது மார்க்சியத்திடமிருந்துதான் வந்தது என்றபோதிலும் அது பரவலாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது. ஒரு அரசமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சி நடப்பதைப் போன்ற தோற்றத்தை பாசிச அரசுகள் பராமரித்த போதிலும், தாராளவாத ஜனநாயக அரசுக்குரிய வரம்புகளை மறுத்து, முதலாளித்துவ ஆளும் வர்க்கம் நடத்துகின்ற ஆட்சி என்றவாறே பாசிசம் புரிந்து கொள்ளப்பட்டது.

பின்னர் முதலாளித்துவத்துக்கும் பாசிசத்துக்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று காட்டும் விதத்தில் பாசிசத்துக்கு வியாக்கியானம் அளிப்பதற்குத் தாராளவாதக் கோட்பாட்டுப் பிரிவினர் அரும்பாடுபட்டார்கள். பாசிசம் என்பதை ஒரு வகை உளவியல் பிறழ்ச்சி போலக் காட்டுவதற்கும், நிறவெறி தோன்றிய வரலாற்றுப் பின்புலத்திலிருந்து அதனைப் பிரித்தெடுத்துவிட்டு, நிறவெறிதான் பாசிசம் என்பதுபோலக் காட்டுவதற்கும் இவர்கள் பெரிதும் முயன்றார்கள். பாசிசம் என்பதை அரசியல்ரீதியான வர்க்கக் கட்டமைவாக நாம் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. அப்போதுதான் அதனைத் தீர்மானகரமாக முறியடிக்க முடியும். பெட்ரோல்ட் பிரெக்ட் கூறியதைப் போல, முதலாளித்துவத்தை எதிர்க்கத் தயாராக இல்லாதவர்கள் பாசிசத்தை எதிர்க்க முடியாது.

ஒரு புதிய புரட்சிகர சூழலை நாம் வந்தடைந்து விட்டோமா?

முதலாளித்துவக் கட்டமைப்பை ஒரு நாளில் கடந்து சென்றுவிட முடியாதென்பதை நாம் அறிவோம். நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை வெற்றி கொள்வதற்கு முதலாளித்துவ வர்க்கத்துக்குப் பல நூற்றாண்டுகள் ஆயின. நாம் நீண்டதொரு புரட்சி என்ற கோணத்தில் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில், தன் ஒவ்வொரு அடி வைப்பிலும் அது புரட்சிகரமானதாகவும் இருக்க வேண்டியுள்ளது. இந்தப் பூமியும் நாமும் பிழைத்திருக்க வேண்டுமென்றால், மூலதனத்தின் இயக்க விதியை எதிர்த்துத்தான் நாம் நகர வேண்டும். மூலதனக் குவிப்பின் தர்க்க நியாயத்தை முறியடிக்க இடையறாது போராடவேண்டும். இது நம்முடைய காலம் நம் அனைவருக்கும் அளித்திருக்கும் பாடமாகும்.

சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் என்று நாம் பேசும் நிலை ஒருகாலத்தில் இருந்தது. இன்று நமது தெரிவு சோசலிசம் அல்லது இறுதிப் பேரழிவு என்பதாக மாறிவிட்டது. சோசலிசத்தை நோக்கிய முன் நகர்வு என்பது தவிர்க்கவியலாத் தேவை ஆகிவிட்டது. மனித சுதந்திரம் என்ற இலட்சியத்துக்காக மட்டுமல்ல, மனித இனம் பிழைத்திருப்பதற்கான வழியே  சோசலிசம்தான் என்றாகிவிட்டது.

150 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று மார்க்சுடைய மூலதனத்தின் பொருத்தப்பாடு குறித்து..

மார்க்சின் விமரிசனபூர்வமான இயங்கியல் ஆய்வுமுறையும், முதலாளித்துவ சமூகம் குறித்த அவரது வரலாற்று ஆய்வுகளும் அவரது பணியைத் தன்னிகரற்றதாகவும் தவிர்க்கவியலாததாகவும் ஆக்கியிருக்கிறது. கடந்த 150 ஆண்டு காலத்தில் சமூக விஞ்ஞானத்துறையில் நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகள் அனைத்தைக் காட்டிலும் மார்க்சியம் நெடிதுயர்ந்து நிற்கிறது.

மாறி வரும் வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப சோசலிச இயக்கம் முன்னேறிச் செல்லச் செல்ல, தான் வாழ்ந்த காலத்தின் தேவைகளுக்கு அப்பால் நெடுந்தொலைவுக்கு ஊடுறுவிப் பார்த்த மார்க்சின் சிந்தனைகளுக்குள் பொதிந்திருக்கும் புதிய, புதிய அறிவியல் கூறுகளை அது கண்டு கொள்ளும் என்று ரோசா லக்சம்பர்க் ஒரு முறை சொன்னார். அது உண்மையென நிரூபிக்கப்பட்டு வருகிறது.

நம்முடைய வரலாற்றுக் கட்டத்தின் தேவைகளுக்கேற்ப நமது போராட்டங்கள் புதிய புதிய வடிவங்களை எடுக்கலாம். ஆனால், அவருடைய ஆய்வுமுறை நீடித்து நிற்கிறது.

மொழியாக்கம்: சூரியன்

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com