Friday, September 22, 2023
முகப்புஉலகம்அமெரிக்காபூமியைத் தின்று தீர்க்கும் கொள்ளையர்கள் யார் ?

பூமியைத் தின்று தீர்க்கும் கொள்ளையர்கள் யார் ?

-

eart overshoot day (3)பூமியின் ”இலக்கு கடந்த நாள்” (Earthi Overshoot day) கடந்த ஆகஸ்டு 13-ம் தேதி அன்று கடைபிடிக்கப்பட்டது. மத்தீஸ் வாக்கெனெக்கல் என்ற சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவரால் ஏற்படுத்தப்பட்ட குளோபல் ஃபுட்பிரிண்ட் நெட்வொர்க் Global Footprint Network என்ற தன்னார்வ அமைப்பு, ஆண்டு தோறும் பூமியின் இலக்கு கடந்த நாளை அறிவித்து வருகிறது. பூமியின் சேமிப்பிலுள்ள வளங்கள் மற்றும் மறு உற்பத்திக்கான வளங்களைக் கணக்கிட்டு அதற்கும் மனித இனத்தின் வருடாந்திர சுவீகரிப்பிற்கும் உள்ள சமன்பாட்டை கணக்கிடுவதன் மூலம் இந்த தேதி நிர்ணயிக்கப்படுகிறது.

1970-ம் ஆண்டின் சுவீகரிப்பையும் இயற்கை வளங்களின் இருப்பையும் கணக்கிட்ட இவ்வமைப்பு, அந்த ஆண்டின் “இலக்கு கடந்த நாளை” டிசம்பர் 23-ம் தேதியாக நிர்ணயித்தது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இந்த தேதி படிப்படியாக முன்னேறி, இந்த ஆண்டு ஆகஸ்டு 13-ம் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மனித இனத்திற்கு இந்த ஆண்டு பூமி அளிக்க முடிந்திருக்க கூடிய வளங்களை நாம் ஆகஸ்டு 13-ம் தேதியோடு தின்று தீர்த்து விட்டோம் என்று பொருளாகிறது. இந்த தேதிக்குப் பின் நாம் சுவீகரிக்கும் பூமியின் ஒவ்வொரு வளமும், நமது தேவைக்கும் இயற்கையின் ரிசர்வ் மற்றும் மறு உற்பத்தித் திறனுக்கும் அப்பாற்பட்டதாகும்.

ஒவ்வொரு ஆண்டும் பூமியிலிருந்து உறிஞ்சியெடுக்கப்படும் இயற்கை வளங்களைக் கணக்கிட்டால் இரண்டரை பூமிகளுக்கு ஒப்பான வளங்களை ஆண்டு தோறும் மனித இனம் சுவீகரிப்பதாக கொள்ள முடியும் என்று மேற்படி அமைப்பு அறிவித்துள்ளது. ஜப்பான் தனது அளவை விட 5.5 மடங்கு அதிக நிலப்பரப்பின் வளங்களை சுவீகரிப்பதாகவும், இந்தியா தனது அளவை விட இரண்டு மடங்கு அதிக நிலப்பரப்பின் வளங்களை சுவீகரிப்பதாகவும் இவ்வமைப்பு அறிவித்துள்ளது.

eart overshoot day (2)முன்னெப்போதும் இல்லாத வகையில் இயற்கையின் வளங்கள் உறிஞ்சியெடுக்கப்படும் இதே காலகட்டத்தில் தான் முன்னெப்போதும் இல்லாத வகையில் இருப்போரும் இல்லாதோருக்குமான இடைவெளி அதிகரித்துள்ளது. வறுமையில் உழல்வோரின் எண்ணிக்கை வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இதே காலகட்டத்தில் தான் அதிகரித்துள்ளது.

உலகின் மொத்த வளங்களில் சரிபாதி அளவு ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வெறும் ஒரு சதவீதம் பேரிடம் குவிந்துள்ளதாக தெரிவிக்கிறது ஆக்ஸ்பாம். மேலும், முதல் 80 பணக்காரர்களின் சொத்து மதிப்பானது ஒட்டுமொத்த மனித இனத்தில் வறுமையில் உழலும் 50 சதவீதமான மக்களின் சொத்து மதிப்பிற்கு ஈடானதாம். அதாவது சுமார் 400 கோடி மக்களின் சொத்து மதிப்பும், வெறும் 80 தனிநபர்களின் சொத்து மதிப்பும் ஒன்று! – இந்த இடைவெளி முற்றுப் பெறாமல் தொடர்ந்து வளர்ந்து வருவது குறித்த அச்சம் முதலாளித்துவ உலகில் மெல்ல மெல்ல வெளிப்படத் துவங்கியுள்ளது.

இருப்போருக்கும் இல்லாதோருக்கும் இடையேயான இடைவெளி அதிகரிப்பது ஆபத்தானது என்று ஐ.எம்.எஃப் தலைவர் கிரிஸ்டின் லகார்டேயும் போப்பாண்டவர் பிரான்சிசும் இப்போது அலறுகின்றனர். எதார்த்த உண்மைகள் மக்களைக் கிளர்ந்தெழச் செய்து முதலாளித்துவ இன்பக் கனவை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து விடக்கூடாது என்ற அச்சத்தின் விளைவே அவர்களின் அலறல்.

எனினும், இயற்கையின் மேல் முதலாளித்துவ உலகம் கட்டவிழ்த்து விட்டுள்ள கூட்டு வல்லுறவு உடனடியாக நிறுத்திக் கொள்ள முடியாத ஒரு நச்சு சுழற்சியில் சிக்கிக் கொண்டுள்ளது. கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாக முதலாளித்துவ உலகம் பொருளாதாரப் பெருமந்தத்தில் இருந்து மீள வழி தெரியாமல் திகைத்து நிற்கிறது. பெரிய மீன் சின்ன மீனை விழுங்குவது போல், வல்லரசுகளால் சிறிய நாடுகள் விழுங்கப்படுகின்றன – கிரீஸ் நெருக்கடி இந்த அபாயச் சீரழிவின் சமீபத்திய வெளிப்பாடு.

முடிந்த வரை மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைக் கொள்ளையிடுவதன் மூலம் இந்த நெருக்கடியில் இருந்து வெளி வந்து விட முடியும் என்று வல்லரசு நாடுகள் கணக்கிடுகின்றன. இதன் விளைவாக மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களின் மீதும், பல்லுயிர்ச் சூழலின் மீதும் மீட்டுறுவாக்கம் செய்ய முடியாத வகையிலான சுரண்டலை ஏகாதிபத்திய நாடுகள் கட்டவிழ்த்து விட்டுள்ளன.

eart overshoot day (4)நாம் தாதுமணல் கொள்ளையன் வைகுண்ட ராஜனையும், கிரானைட் திருடன் பி.ஆர். பழனிச் சாமியையும், ஆற்று மணல் கொள்ளையன் ஆறுமுகசாமியையும் மட்டுமே நாம் அறிந்துள்ளோம். தமிழகத்தை ஒட்டச் சுரண்டிய இம்முதலைகளைப் போல உலகளாவிய அளவில் பிரம்மாண்டமான இயற்கை வளக் கொள்ளையர்கள் சமீப காலமாக பெருகி வருகின்றனர். இவர்கள் இயற்கையிலிருந்து அநீதியான முறையில் அடிக்கும் கொள்ளை மீண்டும் எந்தக் காலத்திலும் எந்த வகையிலும் மாற்றீடு செய்ய முடியாத பாதிப்புகளை விட்டுச் செல்கிறது.

ஐநா சபையின் உணவு மற்றும் தண்ணீருக்கான அமைப்பு 2025-ம் ஆண்டு வாக்கில் உலக மக்கள் தொகையில் சுமார் 200 கோடி மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்று கணக்கிட்டுள்ளது. இது வரை கண்டறியப்பட்டுள்ள எண்ணைய் ரிசர்வ் மேலும் 46 ஆண்டுகளில் தீர்ந்து விடும் என்று பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனமே அச்சம் தெரிவித்துள்ளது. இவை தவிர காடுகள், மலைகள் மற்றும் பூமியிலிருந்து கிடைக்க கூடிய வளங்கள் அனைத்துமே எதிர்வரும் நூற்றாண்டுக் காலத்திற்குப் பின் தீர்ந்து விடக் கூடிய அபாயத்தின் விளிம்பில் மொத்த மனித சமூகமும் ஊசலாடிக் கொண்டுள்ளது.

eart overshoot day (1)தனது நெருக்கடியில் இருந்து மீள முன்னெப்போதும் இல்லாத வெறியுடன் முதலாளித்துவ உலகம் செயல்பட்டு வருகிறது. மோடியைப் போன்ற தனது சுரண்டலுக்கு பொருத்தமான ஆளும் கும்பல் மூன்றாம் உலக நாடுகளில் அதிகாரத்தில் அமர்வதை உத்திரவாதம் செய்கிறது. இயற்கையின் மேல் தொடுக்கப்படும் தாக்குதலை “வளர்ச்சி” என்று தனது அடிவருடிகளான முதலாளித்துவ அறிஞர்களையும் ஊடகங்களையும் வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது.

இயற்கையை அழித்தொழிக்கும் பேரழிவு நடவடிக்கை வளர்ச்சியல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்வதோடு அதை சர்க்கரை தடவிய பொருளாதார வார்த்தைகளில் நியாயப்படுத்தும் முதலாளிய அடிவருடிகளையும், இந்த நடவடிக்கைகளுக்குத் துணை நிற்கும் அரசியல் மற்றும் ஆளும் வர்க்க அடியாட்களையும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

ஒன்று, மனித குல விரோதிகளான இவர்கள் தோற்கடிக்கபட வேண்டும் – அல்லது ஒட்டு மொத்த மனித இனமும் அழிந்து போக வேண்டும். மூன்றாவதாக ஒரு வாய்ப்பு நம் முன் இனியெப்போதும் இருக்கப் போவதில்லை.

  • தமிழரசன்

மேலும் படிக்க:

  1. 01.இயற்கை வள பொருள்களான மார்பிள் போன்றவற்றை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். 02. முதலாளித்துவ நிறுவன நுகர் பொருள்களை புறக்கணிக்க வேண்டும். 03.மோட்டார் வாகன – மின்சார – மின்னியல் சாதன பயன்பாட்டை குறைக்க வேண்டும். 04.குடிசை தொழில் – குறைந்த மூலதன உற்பத்தி பொருள்களை மட்டுமே வாங்க வேண்டும். 05.முதலாளித்துவத்திற்கு எதிராக செயல்படும் அதே வேளையில் குறும் தொழில் முயற்சியை பலபடுத்த வேண்டும்.06.கிராமங்களை தன்னிறைவு பெற முயல வேண்டும். 07.பெருநிறுவன முதலாளிகளிடம் வேலை செய்வதை தவிர்த்து சுய தொழிலுக்கு முயல வென்டும்.08.எளிய தொழில் முயற்சியை இளையோரிடம் வளர்க்க வேண்டும்.09.மது – சூது போன்றவை தவிர்த்த ஒழுக்கநெறி சமுதாயத்தை வளர்க்க வேண்டும்.10.பிரச்சினைகளுக்கான இன்ன பிற தீர்வுகளை நடை முறை படுத்த வேண்டும்.நிச்சயம் சிறிது சிறிதாக சமதர்ம சமுதாயம் மலரும் என்பது உறுதி

    • ஸ்ரீதரன் அப்பண்டைராஜ் அவர்கள் கூறியதை நூறு சதவீதம் ஆமோதிக்கிறேன்.

  2. //ஒன்று, மனித குல விரோதிகளான இவர்கள் தோற்கடிக்கபட வேண்டும் – அல்லது ஒட்டு மொத்த மனித இனமும் அழிந்து போக வேண்டும். மூன்றாவதாக ஒரு வாய்ப்பு நம் முன் இனியெப்போதும் இருக்கப் போவதில்லை.// Yes only two options.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க