ருவநிலை மாற்றம் குறித்து யூடியூப்பில் தேடுங்கள். அதை மறுக்கும் காணொளி ஒன்றை உடனடியாக நீங்கள் காணலாம். உண்மையில், பருவநிலை மாற்றம் குறித்து இணையத்தில் நடக்கும் விவாதங்களில் அறிவியலில் நம்பிக்கை கொண்டவர்களை விட மறுப்பாளர்கள் மற்றும் சதிக்கோட்பாட்டாளர்களின் கையே ஓங்கியிருக்கிறது என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. பருவநிலை மாற்றத்திற்கு மனித நடவடிக்கைகள்தான் முதன்மையான காரணம் எனும் அறிவியலின் ஒருமித்த கருத்தை பெரும்பாலான யூடியூப் காணொளிகள் எதிர்க்கின்றன.

விஞ்ஞானத்தைப் பற்றிய தவறான தகவல்கள் பரவுவதன் பின்னனியில் சமூக ஊடகங்களின் முதன்மையான பங்கை அந்த ஆய்வு எடுத்துரைக்கிறது. மேலும் விஞ்ஞானிகளும் அவர்களை ஆதரிப்பவர்களும் தங்களது கண்டுபிடிப்புகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான ஆக்கபூர்வமான மற்றும் ஈர்க்கும் வழிகளை வளர்ப்பதில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்று அது அறிவுறுத்துகிறது. ஆனால் அதைவிட இன்றியமையாததாக, அறிவியல் தகவல்களை தனி மனிதர்கள் மற்றும் சமூகத்தின் நடத்தையை பாதிக்கும் வகையில் கையாள்வது குறித்து நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது.

Climate Change melting-glaciersபருவநிலை மாற்றம் குறித்து யூடியூபிலுள்ள தொடர்பின்றி எடுக்கப்பட்ட 200 காணொளிகளின் அடிப்படையில் இந்த ஆய்வினை ஜெர்மனியின் ஆர்.டபிள்யூ.டி.எச் ஆச்சென் பல்கலைக்கழகத்தை (RWTH Aachen University) சேர்ந்த ஜோகிம் ஆல்காயர் நடத்தியுள்ளார். அவற்றில் பெரும்பான்மையாக 107 காணொளிகள் பருவநிலை மாற்றம் மனிதர்களால் ஏற்பட்டது என்பதை மறுத்தோ அல்லது பருவநிலை மாற்றம் என்பதே ஒரு சதி என்றோ கூறுவதாக அவர் கண்டறிந்துள்ளார்.

சதிக்கோட்பாடுகளை தூண்டும் காணொளிகள் அதிக பார்வையை பெற்றிருக்கின்றன. மேலும் சதிக்கோட்பாடுகளை பரப்பும் காணொளிகள் அதற்கு அறிவியல் சாயமடிக்க பருவநிலை பொறியியல் (geo engineering) போன்ற குறிச்சொற்களையும் பயன்படுத்துகின்றன.

படிக்க:
குழந்தைகள் கலையின் வடிவத்தில் தம்மை வெளிப்படுத்துகிறார்கள் !
♦ பூமி தட்டையானது – மூட நம்பிக்கைக்கு யூ டியூப் முதன்மையான காரணம்

உடல் நலம் குறித்த வதந்தி :

அறிவியல் உண்மைகளை பரப்புவதில் வெற்றி பெற முடியாமலிருப்பது பருவநிலை மாற்றம் குறித்த துறை ஒன்று மட்டுமல்ல. சான்றாக தொற்றுநோய்களை குறிப்பாக நமக்கு மிகவும் தெரிந்த ரூபெல்லா (measles-mumps-rubella or MMR) தடுப்பு மருந்தினை எடுத்துக்கொள்வோம். இந்த மருந்தின் பாதுகாப்பு குறித்து ஏராளமான தகவல்கள் இருந்த போதும் அது ஆபத்தானது என்ற தவறான தகவல் உலகின் பல்வேறு நாடுகளில் பரவலாக பரப்பப்பட்டது. விளைவு பல நாடுகளில் தடுப்பூசியின் அளவு குறைந்தது.

நன்கு அறியப்பட்ட சதிக்கோட்பாடுகள் தான் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றில்லை. தென்னிந்திய மாநிலமான கேரளாவில் 17 நபர்களின் உயிரை பறித்து நிபா (Nipah) வைரஸ் தாக்குதல் உச்சத்திலிருந்த போது ஒரு நபர் சொந்தமாக ஒரு சதிக்கோட்பாட்டை பரப்பினார். மாவட்ட மருத்துவ அதிகாரியின் அதிகார்பூர்வ கடிதம் போல போலியாக ஒன்றை உருவாக்கி கோழிக்கறி மூலமாக தான் நிபா வைரஸ் பரவுகிறது என்ற வதந்தியை பரப்பினார்.

நிபா வைரஸ் தாக்குதலால் மரணித்த ஒருவரது உடலை அடக்கம் செய்யும் மருத்துவ ஊழியர்கள். (கோப்புப் படம்)

உண்மையில் பழந்தின்னி வவ்வால்கள் தான் நிபா வைரஸின் மூலம் என்ற கருத்தினை அறிவியல் நிறுவியுள்ளது. வாட்ஸப்பில் பரவிய அந்த வதந்தி கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கோழிக்கறி உண்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கோழிக்கறி வியாபாரிகளுக்கு நட்டத்தையும் ஏற்படுத்தியது.

நம்முடைய நினைவுகள் இணக்கமானவை என்பதால் ரூபெல்லா தடுப்பு மருந்து மற்றும் நிபா வைரஸ் குறித்த வதந்திகள் மனித மனங்களிடையே ஏற்படும் பாதிப்புகள் குறித்து வியப்படைய ஒன்றுமில்லை. நம்முடைய அசலான நினைவுகளை புதிய மற்றும் தவறான நினைவுகளால் மாற்ற முடியும். தங்களது கைமீறிய நிகழ்வுகள் அல்லது சிக்கல்களை பற்றி தெரிந்து கொள்ள மக்களுக்கு வலிமையான கருவியாக சதிக்கோட்பாடுகள் காட்சியளிக்கின்றன.

சமுக ஊடகங்களின் தனிநபர் விருப்பங்கள் அடிப்படையிலான படிமுறைத்தீர்வுகள் (personalisation algorithms) இதனை மேலும் சிக்கலாக்குகின்றன. நமக்கு மன நிறைவு தருகின்ற, நம்பிக்கை சார்ந்த மற்றும் தேடி கிளிக் செய்யும் வடிவங்கள் அடிப்படையில் தகவல்களை நமக்கு சீராக படிமுறைத்தீர்வுகள் தருகின்றன. மனிதர்களால் பருவநிலை மாற்றம் நடப்பதில்லை என்று கூறும் காணொளிகள் தொடர்ந்து கிடைக்கும் போது பருவநிலை மாற்றம் குறித்த சந்தேகம் கொண்ட ஒருவருக்கு சொந்தமாக முடிவெடுக்கும் வாய்ப்பு குறைகிறது.

வதந்திகள், எதிர்பாராத வடிவங்கள் மற்றும் மாறுபட்ட அளவிலான நுணுக்கங்களுடன் வருவதை டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் விரைவான வளர்ச்சி மேலும் உறுதி செய்கிறது. ஒரு அதிகாரியின் கடிதத்தை நகலெடுப்பது அல்லது இணைய தேடுபொறிகளைக் கையாள திறன்சார்ந்த சொற்களைப் பயன்படுத்துவது என்பது அமிழ்ந்திருக்கும் பனிப்பாறையின் முனை மட்டுமே. டீப்ஃபேக்ஸ் (DeepFakes) போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மூலம் வதந்திகளையே மிகவும் யதார்த்தமான அறிவியல் காணொளிகளாக காட்டும் போக்கு வளர்வது, வதந்திகளை கண்டறிவதை மேலும் கடினமாக்குகிறது.

படிக்க:
♦ கேள்வி பதில் : பெர்முடா முக்கோணம் மர்மம் உண்மையா ?
♦ திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !

எப்படி இந்த சிக்கலை எதிர்கொள்ள போகிறோம்?

சரியான அறிவியல் தகவல்களை கொடுப்பது மூடநம்பிக்கைகள் பற்றிய மக்களின் விழிப்புணர்வை வலுப்படுத்தும். மேலும் மக்களது கருத்தியல்கள் மற்றும் சார்புநிலைகளையும் நாம் எதிர்கொண்டாக வேண்டும்.

நிறுவன கட்டமைப்புகளை உருவாக்கி வதந்திகளை கட்டுப்படுத்த சமூக ஊடக நிறுவனங்கள் முயல்கின்றன. “இந்த ஆய்வு நடத்தப்பட்டதிலிருந்து நூற்றுக்கணக்கான மாற்றங்களை எங்களது கட்டமைப்பில் செய்திருக்கிறோம். இன்று யூடியூப் எப்படி வேலை செய்கிறது என்பதை ஆய்வின் முடிவுகள் துல்லியமாக காட்டவில்லை…. அமெரிக்காவில் இந்த மாற்றங்கள் இது போன்ற காணொளி பரிந்துரைகளை 50 விழுக்காடு வரை ஏற்கனவே குறைந்துள்ளன” என்று யூடியூப் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

மற்ற நிறுவனங்கள் தரவு சரிபார்ப்பவர்களை அதிகளவில் வேலைக்கு எடுக்கின்றன. வதந்திகளை பற்றி ஆய்வு செய்ய என்னை போன்ற கல்வியாளர்களுக்கு நிதியொதுக்கீடும் செய்கின்றன. உடல்நலத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தலைப்புகளுக்கான தேடல் குறியீட்டு சொற்கள் தடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் தொடர்ந்து பரப்பப்படும் அறிவியல் வதந்திகளை பார்க்கும் போது இவ்வழிமுறைகள் போதாமையாக இருக்கின்றன. விளைவாக, உலகம் முழுதும் பல்வேறு நாடுகள் சட்டங்கள் உருவாக்கியும், இணையத்தை முடக்கும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.

அறிவியலாளர்கள் பங்களிக்க வேண்டும்:

உண்மையான அறிவியல் தகவல்களுக்கும் சதி கோட்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தர்க்கபூர்வமாக புரிந்து கொள்ளும் திறனை மக்களிடம் வளர்ப்பது மற்றொரு சாத்தியமான தீர்வாகும். சான்றாக, உண்மையான தகவல் மற்றும் வதந்திகளை வேறுபடுத்திப் பார்ப்பதற்கான குழந்தைகளின் திறன்களை மேம்படுத்த தகவல் கல்வியறிவு முயற்சி ஒன்றை கேரளாவில் உள்ள ஒரு மாவட்டம் கிட்டத்தட்ட 150 அரசுப்பள்ளிகளில் தொடங்கியுள்ளது. இது தொடக்கமாக இருக்கலாம். ஆனால் ஒரு மாற்றத்தை இது ஏற்படுத்தும் என்பதற்கு ஏராளமான சான்றுகள் ஏற்கனவே உள்ளன.

யூடியூப் பருவநிலை மறுப்பாளர்கள் புவி பொறியமைப்பியல் போன்ற தேடு பொறிச்சொற்களை தவறாக பயன்படுத்தியதை போல தங்களது உழைப்பு நிராகரிக்கப்படவோ அல்லது தவறாக பயன்படுத்தப்படவோ இல்லை என்பதை உறுதி செய்யும் போராட்டத்தில் அறிவியாலர்களும் தங்களை அதிகளவில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சதிக்கோட்பாடுகள், வதந்தியாயினும் உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில் சவாரி செய்கின்றன. அதேசமயம் [எதையும்] சந்தேகிப்பது தான் அறிவியல் நடைமுறைக்கு இயல்பானது. ஆனால் பருவநிலை மாற்றத்தில் மனிதர்களின் பங்கை பொருத்தவரையில் 99 விழுக்காடு அறிவியலாளார்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

விஞ்ஞானிகள் இதனை அதிகளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் புதுமையான மற்றும் வசப்படுத்தும் உத்திகளைப் பயன்படுத்தி பொதுமக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். இதில் மக்களது [அறிவியலற்ற] நம்பிக்கைகளை மாற்றுவதோடு நடத்தைகளையும் பாதிக்கும் வண்ணம் சொந்தமாக சமூக ஊடக உள்ளடக்கத்தை உருவாக்குவதும் அடங்கும். இல்லையெனில், அவர்களது குரல்கள் எவ்வளவு நம்பகமானவையாக இருந்தாலும், அறைகுறையான தரவுகளால் தயாரிக்கப்படும் அடுக்கடுக்கான தகவல்கள் மற்றும் அவற்றின் மூர்க்கத்தனத்தால் தொடர்ந்து அவை மூழ்கடிக்கப்படும்.


தமிழாக்கம் :
சுகுமார்
கட்டுரையாசிரியர் : சந்தோஷ் விஜய்குமார், நியூகேஸிலின் நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் சுகாதாரத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக உள்ளார்.
நன்றி : scroll

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க