கிண்டிலில் வெளியாகியிருக்கும் ‘போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை: ஒரு உரையாடல்’ கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு நூல். நூலின் ஆசிரியர் டாக்டர் சட்வா, ஒரு மயக்க மருந்தியல் நிபுணர்.

இந்தப் புத்தகத்தின் நோக்கம், கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பேசப்பட்டுவரும், பிரபலமாகிவரும் எந்த அறிவியல் அடிப்படைகளுமில்லாத மருத்துவ முறைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை அம்பலப்படுத்துவது.

அதனை மிக எளிய நடையில், எல்லோருக்கும் புரியும் வகையில், ஏற்கும் வகையில் செய்திருக்கிறார் என்பதுதான் இந்த மின்னூலின் சிறப்பு.

நோய்கள் எப்படி உருவாகின்றன, தொற்று நோய்களின் வரலாறு, பரவாத நோய்களின் வரலாறு, பொதுச் சுகாதாரத் துறையின் தோற்றம், அதன் அவசியம் என முக்கியமான அடிப்படைகளில் இருந்து புத்தகம் துவங்குகிறது.

இந்தப் புத்தகத்தில் மிகச் சுவாரஸ்யமான பகுதி, நம் நாடுகளிலும் மேலை நாடுகளிலும் உள்ள மருத்துவம் சார்ந்த மூட நம்பிக்கைகளைப் பட்டியல் இட்டிருப்பது.

இந்தப் புத்தகம் திரும்பத் திரும்பச் சொல்லவருவது, ஒரு மருந்து ஒரு நோயைத் தீர்க்கிறதென்றால், எப்படித் தீர்க்கிறது, அந்த மருந்தின் எந்தக் கூறு இதைச் செய்கிறது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும். ஆனால், அப்படி நிரூபித்துவிட்டால், உடனடியாக அந்த மருந்து நவீன மருத்துவத்தின் அங்கமாகிவிடும்.

தவிர, இந்த மாற்று மருத்துவ முறைகள் உலகம் முழுவதுமே ஏதோ ஒரு மதத்தோடு, மொழியோடு, இனத்தோடு இணைக்கப்பட்டிருப்பதையும் சட்வா சுட்டிக்காட்டுகிறார்.

இந்தப் புத்தகத்தின் பிற்பகுதி மிகவும் சுவாரஸ்யமானது. இந்தப் பகுதியில்தான் தடுப்பூசிகள் குறித்துப் பரப்பப்படும் புரளிகளால் ஏற்படும் விளைவுகளை விரிவாக விளக்குகிறார். தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டுவது ஆண்ட்ரூ வேக்ஃபீல்ட் என்பவரின் ஆய்வுக் கட்டுரையை. அந்த ஆய்வுக் கட்டுரைக்குப் பின்னால் உள்ள சதியை மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறது புத்தகம்.

அதேபோல, ஏ1, ஏ2 என பாலை பிரித்து விற்பதற்குப் பின்னால் இருக்கும் ஒரு பால் நிறுவனத்தின் திட்டம், சர்க்கரை நோய் குறித்த கட்டுக்கதைகள், ஆண்மைக் குறைவுக்கான பரம்பரை வைத்திய மோசடி, எர்வாமாட்டின் தைலத்தின் கதை என ஒரு பெரிய சதுரங்க வேட்டையையே இந்தப் பகுதி விவரிக்கிறது.

படிப்பவர்களுக்கு முழுமையாகப் புரிய வேண்டும் என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்குள் முடித்துவிடலாம்.

படிக்க:
பாரி சாலன் – ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள் ?
♦ பாசிச பாஜக -வின் நடவடிக்கைக்கு புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சி கண்டனம் !

இம்மாதிரியான விஷயங்களில் ஆர்வமில்லாவிட்டாலும்கூட, புத்தகத்தின் சுவாரஸ்யத்தன்மைக்காகவே படிக்கலாம். அறிவியல், பொருளாதாரம் குறித்து எழுதுவோர் கவனத்தில் வைக்க வேண்டிய மொழிநடை டாக்டர் சட்வாவினுடையது.

புத்தகத்தை வாங்குவதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விலை 69 ரூபாய்தான்.

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க