ரு நாட்டின் முன்னேற்றத்தை அளவீடு செய்வதற்கு அந்நாட்டில் கர்ப்ப காலத்தில் / பிரசவம் ஏற்படும்போது தாய்மார்கள் மரணமடையும் சதவிகிதம் எவ்வளவு? பிறந்த பின் ஒரு வருடத்திற்குள் சிசு மரணமடையும் சதவிகிதம் எவ்வளவு? என்பதைத்தான் முதலில் பார்க்கப்படும்.

இதில் கர்ப்ப காலத்தின் போது பிரசவத்தின் போது பிரசவத்திற்குப் பின் ஆறு வாரங்களுக்குள் ஏற்படும் தாய் மரணங்களை கர்ப்ப கால தாய் இறப்பு விகிதம்” MATERNAL MORTALITY RATE என்று அழைக்கிறோம்

ஏன், இந்த MMR எனும் Maternal Mortality Rate க்கு இத்தனை வெய்ட்டேஜ் (முக்கியத்துவம்) என்றால் கர்ப்பம் மற்றும் பிரசவம் / குழந்தை பிறப்பு ஆகியவை மனிதனின் வாழ்க்கை சங்கிலியில் இன்றியமையாதவை. மேலும் இயற்கை இயல்புடனேயே நடைபெறுபவை. இதை Physiological Process என்று வழங்குவோம்.

படிக்க :
♦ பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !
♦ போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை : ஒரு விஞ்ஞான உரையாடல்

மாறாக பிரவசம் என்பதோ கர்ப்பம் என்பதோ நோய்க்குறி அன்று. Pathological process அன்று. ஆயினும் ஒரு பெண் கர்ப்பமடைந்ததில் இருந்து அவள் ஒரு கருவை தன்னகத்தே வளர்த்து பிரசவிக்கும் வரை அவளது உடலில் பல மாற்றங்களை சந்திக்கிறாள்.

ரத்த கொதிப்பு ஏற்படுதல் (Pregnancy Induce Hypertension)
கர்ப்பம் சார்ந்த நீரிழிவு நோய் ( Gestational Diabetes)
ரத்த சோகை ( Gestational Anemia)
உயரம் குறைவாக இருந்தாலோ இடுப்பெலும்பு குறுகலாக இருந்தாலோ குழந்தையின் கபால விட்டம் பெரிதாக இருந்தாலோ பிரசவத்தின் போது குழந்தை இறங்காமல் மேலேய நின்று கீழிறிங்குவது தடை படும் ( Cephalo pelvic Disproportion)
ஏற்கனவே தாய்க்கு இதய நோய் / வலிப்பு நோய் இருப்பின் பிரசவத்தின் போது அதன் தீவிரம் கூடி பிரச்சனை தரும் (Heart disease)
பிரசவத்தின் போது ஏற்படும் வலிப்பு நோய்
தாய்க்கு பனிக்குடம் முன்கூட்டியே உடைந்து அதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கர்ப்பபைக்குள்ளேயே மலம் கழித்து அதை சிசு உண்டு மரணிக்கும் தன்மை (Pre mature rupture of membrane / Meconium Aspiration syndrome)
குழந்தை பிரசவிக்கப்பட்டாலும் நஞ்சுக்கொடி முறையாக வெளியே வராமல் போகலாம்.
குழந்தையும் நஞ்சுக்கொடியும் வெளியே வந்ததும் கர்ப்பப்பை இயல்பாக சுருங்கிவிட வேண்டும். ஆனால் சில நேரங்களில் அவ்வாறு நேராமல் அதீத உதிரப்போக்கு நேரும் தன்மை வரும். இதனால் தாய் கண்ணுக்கு முன்னே மரணமடையும் நிலை வரும். இதை Post partum Hemorrhage என்போம்

மேற்சொன்னவையன்றி இன்னும் ஏனைய முறைகளில் பல சவால்களை முன்னிறுத்தியது கர்ப்ப காலமும் பிரசவமும். இதனால் தான் இதற்கான பிரத்யேக படிப்பாக இரண்டு வருடம் பயிலும் DGO ( Diploma in obstetrics and gynaecology) மற்றும் மூன்று வருட பட்டப்படிப்பான MD( OG) இருக்கிறது.

இன்னும் எம்பிபிஎஸ் பயிலும் மருத்துவர்கள் தங்களது இறுதி ஆண்டு படிப்பில் மூன்று மாதங்கள் கட்டாயமாக மகப்பேறு மருத்துவப்பிரிவில் பாடம் கற்பார்கள். மேலும் தங்களது பயிற்சி மருத்துவ காலத்தில் இன்னும் மூன்று மாதங்கள் மகப்பேறு துறையில் கட்டாயப் பணி செய்வார்கள்.

இத்தனை கடினமான பயிற்சிகளைப் பெற்ற நிபுணர்களும், பிரசவம் பார்க்கத் தேவையான சிறப்பு பயிற்சிகளை கற்றுச்தேர்ந்த செவிலியர்களும், நடுநிலை சுகாதார செவலியர்களும் சேர்ந்து 1980களில் ஆரம்பத்தில் ஒரு லட்சம் பிறப்பிற்கு 500+ தாய் மரணங்கள் நடந்து வந்த நம் நாட்டின் நிலையில் இருந்து தற்போது 2019-ம் ஆண்டு 113 என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த MMR கடந்த 2019-2020-ம் ஆண்டு 53.3 தான்; அதாவது தமிழகத்தில் ஒரு லட்சம் குழந்தை பிறப்பிற்கு 53.3 தாய்மார்கள் இறக்கிறார்கள். தமிழகத்தில் நடக்கும் பிரசவங்களில் 99% சதவிகிதம் மருத்துவமனைகளில் மட்டுமே நடக்கின்றன.

மருத்துவமனைகளில் பிரசவங்கள் நடக்கும் போதும் ஒரு லட்சத்துக்கு 53 மரணங்கள் நிகழ்கின்றனவே என்ற கேள்வி வருவதை அறிய முடிகின்றது. அதற்கான காரணம் அரசு பல முயற்சிகளை செய்து தாய்மார்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து கர்ப்ப கால சிகிச்சைகளை வழங்கி பிரவசத்தை எளிமையாக்கினாலும் பல கர்ப்பம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வருவதும் இன்னும் பலர் இத்தகைய சிறப்பான வசதிகளை பயன்படுத்திக் கொள்ளாமல் தங்களது கர்ப்பகால சந்திப்புகளை உதாசீனம் செய்வதாலும் ஆபத்து காலங்களில் விரைவில் மருத்துவமனைகளை எட்டாமல் தாமதிப்பதும் தாய் மரணங்களுக்கு இன்றவளவும் காரணங்களாக இருக்கின்றன.

எனினும் கர்ப்பகால தாய் மரணங்களைக் குறைத்திட ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகின்றன. அவற்றை இங்கு சுருக்கமாக விளக்குகிறேன்

1. ஜனனி சுரக்ஷா யோஜனா
சுருக்கமாக JSY என்று அழைக்கப்படும் இந்த திட்டம் 2005ஆம் ஆண்டில் இருந்து வழக்கத்தில் இருக்கிறது. இந்த திட்டம் மூலம் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சுகாதார நிலையங்களில் பிரசவம் நிகழுமாயின் கிராமமாக இருப்பின் தாய்க்கு ரூபாய் 700 நகரமாக இருப்பின் ரூபாய் 600 உடனடியாக கிடைக்கும். இது பிரசவ கால செலவினங்களுக்கு உதவும் ஊக்கத்தொகையாகும்.

2. ஜனனி சிசு சுரக்ஷா கார்யக்ராம்
சுருக்கமாக JSSY என்று அழைக்கப்படும் இந்த திட்டம் 2011ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இந்த திட்டம் மூலம் கர்ப்பகால கவனிப்புகள் அரசாங்க நிலையங்களில் நடக்கும் பிரசவங்கள் அனைத்தும் இலவசம். மேலும் சுகப்பிரவசங்களுக்கு மூன்று நாட்கள் மூன்று வேளை உணவு ( தாயோடு சேர்த்து கூட தங்கும் ஒருவருக்கும் வழங்கப்படுகின்றது) சிசேரியன் என்றால் ஏழுநாட்கள் மூன்று வேளை உணவு வழங்கப்படும்.

பிரசவத்திற்கு தாய் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வருவதையும் நல்லமுறையில் குழந்தை பெற்று மீண்டும் தாயையும் சேயையும் நலமுடன் வீட்டுக்கு சென்று விடுவதையும் இந்த திட்டம் இலவசமாக்கியது. மேலும் பிறந்த குழந்தைக்கு ஒருவருடம் வரை எந்த நோய் ஏற்பட்டாலும் இலவச சிகிச்சை உறுதி செய்யப்பட்டது.

3. லக்ஷயா (LaQshya)
இந்த திட்டம் 2017 முதல் இயங்கி வருகின்றது. இதன் மூலம் அரசு சுகாதாரத்துறைக்கு கீழ் இயங்கி வரும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் மகப்பேறு மற்றும் பிரசவம் பார்க்கும் அறைகள், சிசேரியன் அறுவை சிகிச்சை நடக்கும் அரங்கங்களின் தரத்தை உறுதி செய்வது.

மகப்பேறு சிகிச்சை வழங்கும் நிபுணர்கள் , மருத்துவர்கள் , செவிலியர்கள் சரியான எண்ணிக்கையில் இருப்பதை உறுதி செய்வது, அவர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்குவது, அவர்களது அறிவை அப்டேட் செய்வதை உறுதி செய்வது, மகப்பேறு மற்றும் பிரசவ கால அவசர சிகிச்சைத்துறையை மேம்படுத்துவது என்று இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

4. பிரதான் மந்திரி சுரக்ஷித் மட்ரித்வ அபியான்

சுருக்கமாக PMSMA திட்டம். இது 2016-ம் ஆண்டு முதல் நடந்து வருகின்றது. ஒவ்வொரு மாதத்தின் ஒன்பதாவது நாள் நாடு முழுவதும் உள்ள அரசு சுகாதார நிலையங்களில் மகப்பேறு நிபுணர்களின் நேரடி பங்கெடுப்பில் இரண்டாம் மற்றும் மூன்றாம் மும்மாத நிலையில் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு செக்அப் நடைபெறுவதை இந்த திட்டம் உறுதி செய்கின்றது.

இதன் மூலம் அதிக கவனம் தேவைப்படும் HIGH RISK தாய்மார்கள் அடையாளம் கண்டறியப்படுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். பிரசவம் சார்ந்த அவர்களது மரணமடையும் வாய்ப்பு வெகுவாக குறைக்கப்படுகின்றது.

5. சுமன் திட்டம் ( சுரக்ஷித் மட்ரிவ்த ஆஷ்வாசன்)

இந்த திட்டம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கர்ப்ப காலத்தில் இருக்கும் எந்த தாய்க்கும் சிகிச்சை அளிக்க யாரும் மறுக்கக்கூடாது. மீறி மறுத்தால் அது அலட்சியமாகப் பார்க்கப்பட்டு தண்டனை நிச்சயம் எனும் நிலையை இந்த திட்டம் பிரகடணப்படுத்துகின்றது. கர்ப்ப கால தாய் மரணங்களை கட்டாயம் ஆவணப்படுத்த வேண்டும். மேலும் அவற்றை தீவிரமாக ஆய்வுக்குட்படுத்திட வேண்டும் என்பதை இந்த திட்டம் வலியுறுத்துகின்றது.

ஒவ்வொரு தாயும் கட்டாயம் கர்ப்ப காலத்தில் குறைந்தபட்சம் ஆறு முறை மருத்துவரை சந்தித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை இந்தத் திட்டம் விதிக்கின்றது. பிரதி வாரம் செவ்வாய்க்கிழமையை பிரத்யேகமாக கர்ப்ப கால தாய்மார்களை கவனிக்கும் நாளாக ANTENATAL CARE DAY என்று அறிவித்து அவர்களுக்கு நாடு முழுவதும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த நாளில் சத்தான மதிய உணவு தாய்மார்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது.

படிக்க :
♦ பிரசவத்துக்கு ஆஸ்பத்திரி போவக் கூடாதுன்னு எந்த முட்டாள் சொல்றான் ?
♦ பெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா ? நவீன மருத்துவமா ?

நடுவண் அரசு கொண்டு வந்து தமிழக மருத்துவமனைகளில் அமல்படுத்திடும் மேற்சொன்ன திட்டங்களன்றி நமது தமிழகத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பின்வருமாறு

1. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை
தற்போது அரசாங்க மருத்துவமனைகளில் பதிந்து முறையாக கர்ப்ப கால பரிசோதனைகளை செய்து கொண்டு அரசாங்க மருத்துவமனையில் பிரசவம் பார்த்து முறையாக குழந்தைக்கு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளும் தாய்க்கு ரூபாய் 18000 ( ஊட்டச்சத்து பெட்டகம் அடக்கமாக) வழங்கப்படுகின்றது. இது நாட்டிலேயே முன்னோடி திட்டமாகும். ஊட்டச்சத்து பெட்டகத்தில் புரதச்சத்து பிஸ்கட்கள், பேரீச்சம் பழங்கள், சத்துமாவு, நெய், துண்டு என்று தாய்வீட்டில் கவனிப்பது போன்று அரசு கவனிக்கிறது.

2. பிறந்த குழந்தைக்கு அம்மா குழந்தைகள் நலப்பெட்டகம் வழங்கப்படுகின்றது
குழந்தைகள் நலப்பெட்டகத்தில் கொசு வலை , நகவெட்டி, குழந்தைகளுக்கான பிரத்யேக சோப், பவுடர் என்று சிறப்பான திட்டமாகும். இவையன்றி நாடுமுழுவதும் கர்ப்பமுற்ற தாய்மார்களை முறையாக பதிவு செய்து அவர்களது கர்ப்பகாலம் முழுவதும் சேவை வழங்கி அவர்கள் பிரசமுற்று குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவது வரை அத்தனையும் PREGNANCY INFANT COHORT MONITORING AND EVALUATION என்ற பிரத்யேக மென்பொருள் திட்டம் மூலம் பதிந்து கண்காணிக்கப்படுகின்றது.

இத்தகைய திட்டத்தை வளர்ந்த நாடுகளில் மட்டுமே கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் நமது நாட்டில் இந்த திட்டம் கடந்த பத்து வருடங்களாகவே செயல்படுத்தப்பட்டு வருவதையும் அறிந்து கொள்ளுங்கள்.

மேற்சொன்ன அத்தனையும் செய்து பிரசவங்களை இலவசமாக்கி இலகுவாக்கி தரமானதாக்கி தாய் மரணங்களை குறைக்க எண்ணினால், ”நான் மரபு வழிப்படி வீட்டில் பிரசவம் செய்து கொண்டு மரணத்தை தேடிக்கொள்வேன்” என்று தாய்மார்கள் நினைப்பது வேதனை அளிக்கின்றது.

உண்மையில் அரசின் இந்த சேவைகளை பாரம்பரிய வாழ்க்கையில் இருக்கும் மலைவாழ் மக்கள் கூட தேடித்தேடி வந்து பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் படிப்பறிவில் சிறந்து விளங்கும் மேட்டுக்குடி மக்களே அறிவியலை புறந்தள்ளி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அழைக்கின்றனர். அவர்களது அறைகூவலை ஏற்றால் மீண்டும் தற்போது நடக்கும் தாய் மரணங்களை காட்டிலும் பத்து மடங்கு அதிகமாகும் நிலை ஏற்படும்.

சுகாதாரத்துறை சார்பாக பலமுறை கெஞ்சி கூத்தாடி அழைக்கப்பட்டும், காவல் துறை மூலம் எச்சரிக்கை வழங்கப்பட்டும் கூட பாரம்பரிய முறைப்படி வீட்டிலேயே முறையான பயிற்சி பெறாதவர்கள் மூலம் பிரசவம் பார்த்துக்கொள்கிறேன் என்று எம்எஸ்சி நர்சிங் பயின்ற சகோதரி முடிவு செய்தது தான் மிகப்பெரிய ஆச்சரியமும் அவலமும்.

குழந்தையின் தலை இடுப்பெலும்பில் சிக்கி மரணிக்க அது அழுகிப்போக தாய்க்கு HELLP எனும் கல்லீரல் கோளாறு மற்றும் ரத்த தட்டணுக்கள் குறைந்து போகும் தன்மை ஏற்பட்டு மரணமடைந்திருக்கிறார். இது நிச்சயம் பலருக்கும் பாடமாக அமைய வேண்டிய நிகழ்வு.

அரசாங்கமும் சரி, அறிவியலும் சரி எவ்வளவு முயற்சி செய்தாலும் தன் உயிரையும் உடலையும் காத்துக்கொள்ளும் தன்னலன் பேணாதவர்களை காத்திட இயலாது. அறிவியல் பாதையில் செல்வோம்! வெல்வோம் !

தற்போதும் கூட மருத்துவ வசதிகள் முழுமையாக சென்று சேராத தமிழகம் அளவு மருத்துவ வசதியை கண்டிராத அசாம் மாநிலத்தில் MATERNAL MORTALITY RATE 213 என்ற அளவில் அதிகமாக உள்ளது. தமிழகத்திலோ இந்த அளவை 53 என்று குறைத்துள்ளோம்.

நாம் வளர்ந்த நாடுகளின் அளவை எட்டிட அறிவியல் கூறும் பாதைக்கு அனைவரும் வருவதே சிறப்பானது என்று கூறி இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

முகநூலில் : Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர், சிவகங்கை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க