திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் ! பாகம் 2

திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !  – கட்டுரை வெளியானதில் இருந்து மூடர் கூட தம்பிமார்கள் நம்மை வசைபாடி மகிழ்கின்றனர்.

அந்த வசைகளை வரிசைப் படுத்தினால் “இயற்கை வைத்தியம் சரியானது, அலோபதி மருத்துவத்திலும் மரணம் அதிகம், பாட்டி வைத்தியம் – வீட்டு பிரசவங்களில் மரணமில்லை, இன்றும் கிராமங்களில் எந்தப் பிரச்சினையுமின்றி சுகப்பிரசவம் நடைபெறுகிறது, ஹீலர் பாஸ்கர் – பாரி சாலனை படித்தீர்களா, பார்த்தீர்களா?” என்பவை அதிகம் இருக்கின்றன. மொத்தத்தில் இலுமினாட்டி மூடத்தனத்தில் பலரும் மூழ்கிக் கிடப்பதை பரிதாபத்துடன் ஏற்கத்தான் வேண்டும்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இலுமினாட்டிகள் குறித்த தன் ‘ஆராய்ச்சியை’ விளக்குகிறார் விஞ்ஞானி சீமான்

நாம் தமிழர் சீமான் முன்வைக்கும் சதிக்கோட்பாடுகளின் நீண்ட பட்டியலில் இலுமினாட்டி சதிக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு. அந்தக் காலத்தில் தமிழ் மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததாக சத்தியம் செய்கிறார். ஆதாரமாக சிறு தானியம் முதல், தென்னங் கள்ளு வரை கிருபானந்த வாரியார் போல அடுக்குகிறார்.

இவற்றின் வகை மாதிரியாக எழுத்தாளரும், பெரியாரை கடுமையாக திட்டுபவரும், தமிழ் தேசியம் – இயற்கை வைத்தியம் இன்ன பிறவற்றை ஆதரிப்பவருமான திருவாளர் பா. ஏகலைவன் என்பவர் கூறுவதைக் கொஞ்சம் கேட்போம்!

லூசுங்களா.
———————-
யு டியூப் பார்த்து சுகப்பிரசவம் பார்த்தால்தான் அந்த பெண்மணி இறந்தார். போலி தமிழ் தேசியம் பேசியவர்களால்தான் இப்படி நடந்தது. என்று விதம் விதமாக கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

சரி, நவீன மருத்துவமனைகளில், நவீன மருத்துவத்தில் தினம் தினம் எத்தனை மரணங்கள் நடந்துகொண்டிருக்கிறது? அதனால் அந்த மருத்துவத்தையே மூடிவிடலாமா? அந்த மரணங்களுக்கு எந்த கார்பரேட் கம்பெனிகள் பதில் சொல்ல முடியும்?

இங்கே சுகப்பிரசவம் என்பது வாடிக்கையான ஒன்றுதான். இன்றைக்கும் கிராமங்களில் பல பிரசவங்கள் அப்படி நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த தலைமுறைக்கு முன்பிருந்த ஒவ்வொருவரும் அரை டசனுக்கும் குறையாத பிள்ளைகளை சுகப்பிரசவத்தில் பெற்றுப் போட்டவர்கள்தான். இந்த தலைமுறையினரில் பெரும்பகுதியினர் சுகப்பிரசவத்தில் பிறந்தவர்கள்தான்.

அந்த சுகப்பிரசவங்களிலும் பாதிக்கு மேலானோர் மருத்துவமனைகளுக்கு வெளியே சுகமாய் பெரியவர்களின், அனுபவஸ்தர்களின் மேற்பார்வையில் பிரசவித்தவர்கள்தான். ரத்தப்போக்கு அதிகம் ஆனால் எந்த தேசியம் பேசுபவர்கள் சொன்னாலும் சரி இறப்புதான். அலோபதி மருத்துவத்திலும் அதுதான் நடக்கும். இறந்துபோன அந்த பெண்மணிக்காக வருத்தப்படுவோம்.

அதே நேரத்தில் ஏன் அந்த ரத்தப்போக்கு நிகழ்ந்தது என்பதையும், அதற்கான காரணங்களையும் ஆராய்ந்து இனி அப்படி நடக்காமல் விழிப்புணர்வை சொல்வதையிட்டு ஒட்டுமொத்தமாக அந்த மரபுவழி மருத்துவமே- சுகப்பிரசவமே சரியில்லை என்று பேசக்கூடாது.

ந்த வாதத்தை நாம் இப்படிப் புரிந்து கொள்வோம் – ”மருத்துவமனையிலும் மரணம் நடக்கிறது, குரங்குக் குப்பன் வைத்தியம் பார்த்தாலும் மரணம் நடக்கிறது. எனவே மருத்துவர்களும் குரங்குக் குப்பனும் ஒன்று தான்” என்கிறார் ஏகலைவன். மருத்துவ சிகிச்சை பலனின்றி ஏற்படும் மரணங்களுக்கு காரணம் முதன்மையாக மருத்துவமல்ல. கர்ப்பம் தரித்த ஆரம்ப காலம் தொட்டு மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல் இருப்பது, ஊட்டச் சத்துக் குறைபாடு என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

ஆனால், திருப்பூரில் நடந்தது ஒரு கொலை. அந்த அப்பாவிப் பெண்ணின் கர்ப்பத்தை உரிய முறையில் நேரத்தில் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனைகளைப் பின்பற்றி, சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்திருந்தால் இன்றைக்குத் தாயும் சேயும் நலமோடு இருந்திருப்பார்கள். நன்றாக வாழ்ந்திருக்க வேண்டிய ஒரு பெண்ணின் மரணத்திற்கு தாங்கள் பரப்பிய முட்டாள்தனங்கள் தான் காரணம் என்கிற குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் பேசும் சாமர்த்தியம் தம்பிமார்களுக்கே சாத்தியம். கிருத்திகாவின் கணவர் வறுமை காரணமாக இந்த தவறை செய்யவில்லை.

ஹீலர் பாஸ்கர், பாரி சாலன் உள்ளிட்ட இலுமினாட்டி வகையறாக்களின் பலமே அறைகுறை உண்மைகள் தான். மாயத்தோற்றங்களை (Hallucination) உளமாற நம்பும் மனநலம் குன்றியவர்களைப் போல் இவர்கள் பொய்களையும் சதிகளையும் நம்புகின்றனர். ஒரு வித்தியாசம், இவர்கள் தன்னுணர்வோடு நம்புவதோடு கேட்பவர்களை நம்பவைக்கும் சாமர்த்தியத்தையும் கொண்டிருக்கின்றனர். சுருக்கமாக காரியக் கிறுக்கர்கள்.

இத்தகைய முட்டாள்தனத்தில் மக்களை மூழ்கவைத்து அலைக்கழிக்கும் வழக்கம் அமெரிக்காவில் துவங்கி பல நாடுகளில் இருக்கிறது. உலகிலேயே அதிக மூடநம்பிக்கைகள், கடுங்கோட்பாட்டு மதப் பிரிவுகள் (பெந்தகோஸ்தே), இதர சதிக்கோட்பாட்டு கொள்கைப் பற்றாளர்கள் அதிகம் வாழும் நாடு அமெரிக்காதான். சூப்பர் ஸிங்கர் முதல் இலுமினாட்டி வரை அங்கிருந்துதான் இறக்குமதியாகின்றது.

தற்போது பிரசவகால மரணம் என்ற ஒரு அம்சத்தை மட்டும் பார்ப்போம். திரு ஏகலைவனும், மற்ற இயற்கை வழி வைத்தியத்தை ஆதரிப்போரும் அறுதியிட்டு சொல்வது, கிராமங்களிலும், பெரியவர்களால் வழிநடத்தப்படும் பிரசவங்களும் எந்த மரணமுமின்றி ஆரோக்கியமாக நடைபெறுகிறது என்பதே. எனினும் அதற்கு ஆதாரமாய் இவர்கள் ஒரு தரவையும் தருவதில்லை. எல்லாம் பொதுவில் ஒரு நம்பிக்கைதான்.

உண்மை என்ன? நவீன மருத்துவம் வளர்வதற்கு முன் அம்மை, பிளேக், மலேரியா போன்ற கொடிய கொள்ளை நோய்களாலும் இன்னபிற தொற்று வியாதிகளாலும் பிரசவத்தின் போதும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் பதினைந்து பிள்ளைகள் பெற்றனர் எனக் கூறுபவர்கள் அப்படி பிறந்த பத்துப் பதினைந்தில் எத்தனை பிழைத்தது என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டும். ஆனால் இவர்கள் ஆதாரப்பூர்வமாகப் பேசுவதில்லை. “நாதஸ் திருந்தி விட்டான்” என நாதசே சொல்லிக் கொள்வதைப் போலத் தான் வாதிடுகிறார்கள், வசைபாடுகிறார்கள்.

நவீன மருத்துவத்தின் வளர்ச்சிக்குப் பின் பிரசவ கால மரணங்கள் பல மடங்கு குறைந்திருப்பதற்கு ஏராளமான புள்ளி விவரங்கள் உள்ளன. அதே நேரம் இன்றைக்கும் இந்தியா போன்ற நாடுகளில் முன்னேறிய நாடுகளை விட அதிக மரணங்கள் ஏற்படுவதற்கு காரணம் மேற்கண்ட வளர்ச்சி இன்னும் முழுமை அடையவில்லை என்பது தான். அப்படி நமக்கு கிடைக்காத நவீன மருத்துவத்தை பெறுவதற்காக போராடுவதை விடுத்து இந்த அறிவிழந்த கோமாளிகள் நம்மை கற்காலத்திற்கே இழுத்துச் சென்று பெண்களை, மக்களை கொல்வதற்கு வழி சொல்கிறார்கள்.

பிரசவகால மரணங்களின் வரலாறும், புள்ளிவிவரமும் என்ன சொல்கின்றன பார்ப்போம்!

___________

யூனிசெஃப் நிறுவனம், பேறுகால மரண விகிதம் குறித்து ஒரு புள்ளிவிவரக் கணக்கை வெளியிட்டது. 1990, 2010, 2015 ஆகிய ஆண்டுகளில் பகுதி வாரியாக 15 முதல் 49 வயதிற்குட்பட்ட பிரசவித்த பெண்களின் கணக்கைக் கொண்டு இந்தப் புள்ளிவிவரக் கணக்கு எடுக்கப்பட்டது.

கடந்த 1990-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2015-ம் ஆண்டிற்கான பேறுகால மரண விகிதம் உலக அளவில் குறைந்துள்ளதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த 25 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 44% அளவிற்கு பேறுகால மரணம் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உலக அளவில் சராசரியாக பேறு கால மரண விகிதம், கடந்த 1990-ம் ஆண்டு, 1,00,000 வெற்றிகரமான பிரசவத்திற்கு 385- மரணமாக இருந்தது. ஆனால் 2015-ல் அது 216-ஆக (44%) குறைந்திருக்கிறது. அதேபோல பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, இந்தியா ஆகிய வளரும் நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய மண்டலத்தில் 558-லிருந்து 182-ஆக குறைந்திருக்கிறது.

பேறுகால மரணம் – ஒப்பீட்டு அறிக்கை

இந்த மரணங்களில் பெருமளவு பங்களிப்பது, (சுமார் 27%) பிரசவத்தின் போது மற்றும் அதற்குப் பிறகு ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கே ஆகும். (கிருத்திகா மரணத்தில் ஏற்பட்டது, எவ்வித முன்னனுபவமற்ற மூடர்களின் முட்டாள்தனத்தால் ஏற்பட்ட இரத்தப் போக்கு) கருவுற்ற பெண்ணை மரணத்தை நோக்கித் தள்ளும் இத்தகைய இடர்பாடுகள், கர்ப்ப காலத்திலோ, பிரசவ காலத்திலோ எவ்வித எச்சரிக்கையுமின்றி எப்போது வேண்டுமானாலும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கிறது இந்த அறிக்கை. மேலும், திறன்வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் நடைபெறும் பிரசவங்களே பெருமளவில் மரணத்திற்கு இட்டுச் செல்கின்றன என்றும் குறிப்பிட்டுக் காட்டுகிறது அந்த அறிக்கை.

கடந்த 2018, பிப்ரவரி 16 அன்று உலக சுகாதார நிறுவனம் தனது இணையதளத்தில், வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பேறுகால மரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில:

 1. ஒவ்வொரு நாளும் சுமார் 830 பெண்கள் கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்தின் போதான தவிர்க்கக்கூடிய காரணங்களுக்குப் பலியாகின்றனர்.
 2. கர்ப்பகால / பிரசவ கால மரணங்களில் 99% மரணங்கள் வளரும் நாடுகளில் மட்டுமே நிகழ்கின்றன.
 3. கிராமம் மற்றும் பின் தங்கிய சமூகத்தினர் மத்தியில்தான் இந்த கர்ப்பகால/ பிரசவ கால மரணங்கள் ஏற்படுகின்றன.
 4. 2015-ம் ஆண்டில் மட்டும் சுமார் 3,03,000 மரணங்கள். இவற்றில் பெரும்பாலானவை போதுமான கர்ப்பகால / பிரசவ கால பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதாலேயே ஏற்படுகின்றன.

இவ்வகை மரணங்களில் கிட்டத்தட்ட 75% மரணங்கள் ஏற்படுவதற்கான காரணமாக அவ்வறிக்கையில் கூறப்படுபவையாவன:

 • கடுமையான இரத்தப் போக்கு
 • நோய்த்தொற்று
 • கர்ப்பகாலத்தில் அதிக இரத்த அழுத்தம்
 • பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்
 • பாதுகாப்பற்ற கருக்கலைப்பு

இவ்வகையான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாகக் கூறப்படுபவை:

 • வறுமை
 • அருகாமையில் மருத்துவ வசதி கிடைக்கப்பெறாமை
 • கர்ப்பகாலம், பிரசவம் குறித்த முழுமையான அறிவியல் அறிவு கிடைக்கப்பெறாமை
 • போதுமான சேவைகள் கிடைக்கப்பெறாமை
 • கலாச்சார நடவடிக்கைகள்

இவை அனைத்துமே முக்கியக் காரணங்களாக கோடிட்டுக் காட்டப்படுகின்றன.

கடந்த 2010-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும், சுமார் 2,87,000 பேறு கால மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இம்மரணங்களில் சஹாரா – ஆப்பிரிக்க பகுதிகளில் 56% மரணங்களும், தெற்காசிய நாடுகளில் 29% மரணங்களும் ஏற்பட்டுள்ளன. இவ்விரண்டு பகுதிகளுமே மொத்த மரணத்தில் சுமார் 85% தன்னகத்தே கொண்டுள்ளன.  நாடுகளின் அளவில் பார்த்தால் கர்ப்பகால/ பிரசவ கால மரணங்களில் நம்பர் 1 இடத்தைப் பெற்றிருப்பது இந்தியாதான். ஒட்டுமொத்த பேறுகால மரணங்களில், 19% இந்தியாவில் நிகழுகின்றன. இதற்கு அடுத்தபடியாகத்தான் நைஜீரியா (14%) வருகிறது.

வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தற்போது வளரும் நாடுகளில் அதிக அளவில் பேறு கால மரணங்கள் நிகழ்கின்றன. ஆனால், 20-ம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டம் வரையில், வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும், சம அளவிலேயே பேருகால மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஏனெனில் மருத்துவ உலகில் விஞ்ஞான வளர்ச்சி பெரும்பாய்ச்சலில் நடைபெறாத காலகட்டத்தில் இரண்டு நாடுகளுக்கும் ஒரே மாதிரியான வளர்ச்சியே நீடித்தாலும், மருத்துவ ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் வளர்ந்த பின்னர், அதன் பலன் கிடைக்கப்பெற்ற நாடுகளுக்கும், கிடைக்கப் பெறாத நாடுகளுக்குமிடையேயான வித்தியாசம் அதிகமாக வளர்ந்திருக்கிறது.

மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரையில், எங்கெல்லாம் மருத்துவ வசதிகள்  அதிகமாக நிறுவப்பட்டனவோ அங்கெல்லாம் பேறுகால மரணங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. இது நாடுகளுக்கு இடையில் மட்டுமல்ல, மாநிலங்களுக்கு இடையிலுமான வித்தியாசத்திலும் வெளிப்படையாகவே தெரிகிறது.

குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரையில் கடந்த 2013-ம் ஆண்டை ஒப்பிடுகையில் பேறுகால உயிரிழப்பு விகிதம், 22% வீழ்ச்சி அடைந்திருப்பதாக ’மாதிரி பதிவு அமைப்பு’, கடந்த ஜூன் 7 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

பேறுகால உயிரிழப்பு விகிதம் 2011-2013 காலகட்டத்தில், 1,00,000-க்கு 167-ஆக இருந்தது, கடந்த 2014- 2016 காலகட்டத்தில் 130-ஆக குறைந்திருப்பதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. குறிப்பாக தென்மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா,கேரளா, தமிழ்நாடு ஆகியவை மிகப்பெரிய முன்னேற்றமடைந்துள்ளன என்று கூறுகிறது.

ஐக்கியநாடுகள் சபை 17 சர்வதேச இலக்குகளை முன்வைத்து உருவாக்கிய நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் ஒன்றான பேறுகால மரண விகிதத்தை 1,00,000-க்கு 70 என்ற விகிதத்திற்குக் கீழ் கொண்டு செல்லவேண்டும் என்ற இலக்கை தமிழகம், கேரளா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்கள் அடைந்துவிட்டன. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த இலக்கிற்கு நெருங்கி நிற்கின்றன. இந்தியாவில் பிற மாநிலங்கள் மிகவும் பின் தங்கியே உள்ளன.

’மாதிரி பதிவு அமைப்பு’ வெளியிட்ட இந்த ஆய்வறிக்கை, சுமார் 62,96,101 கர்ப்பிணிப் பெண்களின் தகவல்களைக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்பெண்களில் பேறுகால மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 556 ஆகும்.

மேற்கண்ட தரவுகளை வைத்துக் கொண்டு “முன்னோர்கள் முட்டாளில்லை” கூட்டமும், ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் பக்தர்கள் கூட்டமும், “எங்க முப்பாட்டன் காலத்திலிருந்தே நாங்கள் திடகாத்திரமாகத்தான் இருந்தோம்” என குதூகலமாக சுய இன்பம் அடைவது பச்சைப் பொய் என்பது உறுதி.

தமிழகமும் பிற தென் மாநிலங்களும் முன்னணியில் நிற்பதற்கு முக்கியக் காரணங்கள்  இங்கு பரவலாகத் திறக்கப்பட்டிருக்கும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவையே ஆகும். மேலும் இன்று தமிழகத்தில் மிகச்சிறு எண்ணிக்கையை தவிர்த்து விட்டு அனைத்து பிரசவங்களும் மருத்துவமனைகளில்தான் நடக்கின்றன. இத்தகைய வளர்ச்சிகள் வருவதற்கு முன்னர், இந்தியா முழுவதுமே மிகவும் பின் தங்கிய நிலையில்தான் இருந்தன என்பதற்கான ஆதாரங்களும் பல உள்ளன. இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமே, இத்தகைய நிலையில் பின்தங்கியே இருந்தன என்பதே உண்மை.

மேம்படுத்தப்பட்ட மருத்துவ கண்டுபிடிப்புகளால்தான் இன்றைய நீண்ட ஆயுளே ஒழிய, முப்பாட்டனின் பாரம்பரிய வழியினால் அல்ல!

இந்திய பிறப்பு இறப்பு பதிவேடுகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் பாலகர் மரண விகிதத்தில் (infant mortality rate) இந்தியா மிகவும் பின் தங்கியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் 1000 பாலகர்களுக்கு 116 பாலகர்கள் மரணம் என்ற விகிதத்தில் இருந்தது. அதே காலகட்டத்தில் ஸ்வீடன் நாட்டின் பாலகர் இறப்பு விகிதம் 1000-க்கு 21-ஆக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் பாலகர் இறப்பு விகிதம் 1000-க்கு 34 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் 2016-ம் ஆண்டு பாலகர் இறப்பு விகிதம் 1000-க்கு 2.72 ஆகும்.

1900-ம் ஆண்டு 1000-க்கு 232-ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதம் 1925-ம் ஆண்டு 174-ஆகவும், 1951-ம் ஆண்டு 116-ஆகவும் குறைந்துள்ளது. அதாவது பழங்காலத்தில் அதிகமாக இருந்த மரண விகிதம், விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, நவீன அலோபதி மருத்துவமுறையின் காரணமாக படிப்படியாக குறைந்து தற்போது மிகவும் குறைந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பதிவாளர் ஜெனரலின் அறிக்கைகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்படும் புள்ளிவிவரக் கணக்கின் படி 1910-ம் ஆண்டு 1000-க்கு 35 ஆக இருந்த பேறுகால மரண விகிதம், 1950-ம் ஆண்டு 8-ஆகக் குறைந்திருக்கிறது.

மேலை நாடுகளில், அறிவியல் வளர்ந்து, நோய் தடுப்பு மற்றும் நோய்த்தொற்று கட்டுப்படுத்தும் மருத்துவ ஆராய்ச்சிகள் பெருகி, அவற்றின் பலனாகவே பாலகர்கள் இறப்பு விகிதமும், பேறுகால இறப்பு விகிதமும் குறைந்தனவேயன்றி தங்கள் மூதாதையர்களைப் போல அவர்கள் பின்னோக்கிச் சென்று அறிவியலற்ற முறையில் வைத்தியம் செய்து கொள்ளவில்லை.

”புள்ளி விவரங்களெல்லாம் இலுமினாட்டிகளின் மருந்து கம்பெனிகளுடைய சதி” என்று ஹீலர் பாஸ்கர் மற்றும் பாரிசாலனின் குரலாகக் கொதிப்போருக்கு புரிய வைக்க எங்களிடமிருக்கும் ஒரே வைத்தியம் பாட்டி வைத்தியம்தான்.  உங்கள் வீட்டின் / தெருவிலிருக்கும் வயதான பாட்டிமார்களிடம் கேட்டுப் பாருங்கள், ”அந்தக்காலத்தில் ’தமிழ் கலாச்சாரத்தின்படி’ பெற்றுக் கொள்ளப்பட்ட பிள்ளைகளில் எத்தனை உயிரோடு இருக்கும்? எத்தனை குழந்தைகள் மரணமடையும்?” என்று. பாட்டி சொல்லியாவது பேரன்மார்களுக்கு ஹீலர்பாஸ்கர், பாரிசாலன் பிணி ஒழிகிறதா என்று பார்க்கலாம்.

திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !  –பாகம் 1

 • வினவு செய்திப் பிரிவு

7 மறுமொழிகள்

 1. மூடர்கூடம் தம்பிகளின் மறுமொழிளுக்கு பதில் சொல்லி முடியாது.கொங்குமண்டலம் ஒரு சிறப்பான பகுதிதான் ஏனெனில் வினவில் எத்தனையோ கட்டுரைகள் வருகின்றன ஆனால் அதற்க்கெல்லாம் மறுமொழி அதிகம் பதியாத ‘தம்பிமார்கள்’ கொங்கு சென்டிமென்ட்களுக்கு வரிந்து கட்டிக்கொண்டு மறுமொழிகளை பொழிவார்கள். ஈமு பிசினஸின் பிறப்பிடமல்லவா?
  பொதுவாக கொங்கு மண்டலம் அல்லாத எங்களை போன்ற பிற மாவட்டாத்தார்களின் அனுபவம் ‘கொங்குமண்டல’ மக்கள் வயதில் சிறுயவர்களைக்கூட மரியாதையாக விழிப்பது என்ற நாகரீகம்.ஆனால் இந்த கட்டுரைக்கு வரும் பாருங்கள் எகவசனங்கள்.ஒத்துப்போகிறவர்களைத்தான் கொங்கு மண்டலம் மரியாதையாக நடத்துமா???

 2. கிருத்திகாவுக்கு இயற்கையாக பிரசவம் ஏற்பட்டிருக்க வேண்டும் தான். ஆனால் அது மருத்துவமனையில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் இம்மாதிரியான நெருக்கடி வரும்போது சிசேரியன் செய்திருப்பார்கள். இப்படியொரு மரணம் நடந்திருக்காது. பாட்டி வைத்தியம், இயற்கை வைத்தியம் ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சிதான் தற்போதைய அலோபதி மருத்துவம் என்பதை தமிழகத்தின் பெரும் மூடர் கூட்டம் புரிந்து கொள்வதில்லை. அதற்கு உண்மையான அறிவியல் சார்ந்த மனநிலை உருவாகாதது தான் காரணம். 2000 ஆண்டு காலத்திற்கும் மேற்பட்ட பாரம்பரியம் கொண்டவர்கள் தமிழர்கள் என பிதற்றுகிறார்கள். ஆனால் பொது இடங்களில் மலம், சிறுநீர் கழிக்கக்கூடாது, எச்சில் துப்பக்கூடாது போன்ற எளிய சுகாதார உணர்வுகூட நம் மக்களுக்கு இல்லை. உண்மையான அறிவியல் மனநிலையை வளர்க்கக்கூடிய பள்ளிக் கல்வி முறையும் நம்மிடம் இல்லை. சமச்சீர் கல்வி மாதிரி அரைவேக்காட்டு கல்வித் திட்டங்கள் தான் உண்டு. நாம் படிக்கும் அச்சு ஊடகங்களை பற்றியும் பார்க்கும் தொலைக்காட்சியை பற்றியும் சொல்லவே வேண்டியதில்லை. அந்தக் காலத்துப் பெரியவர்கள் அனைவரும் ஏதோ ராகி கூழும் கம்மஞ்சோறும் குடித்துவிட்டு 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்ந்ததாக கப்ஸா விடுகிறார்கள். உண்மையில் அந்தக் காலத்தில் அரிசி கிடைப்பதே கடினம். விழா காலங்களில் தான் அரிசி உணவையே கண்ணில் பார்ப்பார்கள். சமூகத்தில் மிகப் பெரும்பான்மையினர் ஏதோ ஒரு வகையான சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அன்றைக்கு பெண்கள் பிரசவத்திற்கு தாய் வீடு போய்விட்டு வருவது நோய்வாய்ப்பட்டு உயிர் பிழைத்து வருவது மாதிரி. நிறைய பெண்கள் பிரசவத்தின்போது மாண்டு போனார்கள். வதவதவென நிறைய குழந்தைகளை பெற்றுக்கொண்டார்கள். அவற்றில் சில குழந்தைகள் மரணமடைந்தனர். சின்னம்மை, பெரியம்மை, தட்டம்மை, காலரா, டைபாய்டு பிளேக் என கணக்கு வழக்கு இல்லாத நோய்களால் மிக அதிகமாக மக்கள் மாண்டார்கள். நவீன மருத்துவம் தான் இந்த நோய்களுக்கெல்லாம் முடிவு கட்டியது. இன்றைக்கு நவீன மருத்துவம் மட்டும் இல்லையெனில் இந்த அளவுக்கு இந்தியாவிலும் உலகிலும் மக்கள் தொகை அடர்த்தியாக அதிகரித்திருக்காது. கொள்ளை நோய்களால் பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கும். இப்போது வீரியம் கொண்ட கிருமிகளால் பழைய நிலைமை வந்துவிடுமோ என அச்சமாக இருக்கிறது.

 3. மருத்துவ புள்ளி விவரங்கள் ஏமாற்று வேலை என்பது எனது சொந்த அனுபவத்திலேயே தெரிந்து கொண்டேன்.
  நேரடியாக விளக்க நான் தயார், அதன் மூலம் எனக்கு கிடைத்த நன்மைகள் நம் அனைவருக்கும்(கட்டுரை எழுதிய அன்பர் உட்பட) கிடைக்க ஒரு ஆரம்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
  மருத்துவ முறை தேர்ந்தெடுத்தல் தனி நபர் உரிமை.
  மருத்துவ முறை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்பவர்களை கட்டுரை என்ற பெயரில் நாகரிகமின்றி சாடுவது சரியில்லை.
  மருத்துவ வியாபார விளம்பரங்கள், பொய் பிரச்சாரங்களைப் பற்றி வாய் திறக்காமல் இப்போது மட்டும் ஏன் இப்படி கட்டுரை எழுத வேண்டும்?
  அல்லோபதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எண்ணற்றோர்.
  அல்லோபதி சிகிச்சையின் போது ஏன் பொறுப்பு துறப்பு கையொப்பம் ஏன் பெறுகிறார்கள்?
  உயிரிழப்பிற்க்கு மருத்துவ முறை மட்டுமே பொருப்பாகாது
  வீண் விமர்சனங்களை விடுத்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து.

 4. டெங்கு காய்ச்சலின் போது நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பம் நடித்த விளம்பரம் தான் நினைவுக்கு வருகிறது. மறைந்த “அம்மா”வின் அரிய மூலிகை கண்டுபிடிப்பான நிலவேம்பு கசாயம் குடிக்க சொன்னார்கள். ஆனால் “அம்மா”விற்கு காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு என்றதும் அப்பல்லோவில் மருத்துவம் பார்த்தார்கள்.
  இங்கு இப்படி காசு இருப்பவனுக்கு உயர் மருத்துவம், காசு இல்லாதவனுக்கு பாட்டி வைத்தியம் என்கிற நிலை தான் உள்ளது.
  இதை மாற்றி அனைவருக்கும் தரமான மருத்துவம் வேண்டும் என்கிறது கட்டுரை. அதை நானும் ஆதரிக்கிறேன்.
  புரியாதவர்களுக்கு புரிய வைக்கலாம். புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு அனுபவமே பாடம். கிருத்திகா விசயத்தில் ஏற்பட்ட அனுபவம் மற்றவர்களுக்கு பாடம். தாயில்லா அவ்விரண்டு குழந்தைகளுக்கு யார் பொறுப்பு?

  • Enaku ore kozhappama iruku,enakum iyarakai maruthuvam than pudikum coz fever na kooda tablet poda solranga athu chemical thane ithe nilavembu kudicha nallathu thane side effect ethuvum varathu illa

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க