ண்டாரி தமிழ்மணி என்பவர் நாம் தமிழர் கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட பொறுப்பாளர். இவரது மனைவி ஜான்சி ராணி கடந்த ஜூலை 29-ம் தேதி (திங்கள்கிழமை) தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த முயற்சியில் 63 சதவீத தீக்காயங்களுடன் தற்போது ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக, வண்டாரி தமிழ்மணியும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். தனது கணவரின் நிலை கண்டு மனம் வெதும்பிய ஜான்சி ராணி தானே தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து தீக்குளித்தார். ( தற்போது 2.8.19 அன்று ஜான்சிராணி இறந்து விட்டார்.)இது குறித்து சமூகவலைத்தளங்களில் பலர் எழுதி வருகின்றனர்.

Tamilmani
வண்டாரி தமிழ்மணி

நாம் தமிழர் கட்சியின் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களில் வண்டாரி தமிழ்மணி முக்கியமான பிரமுகராக செயல்பட்டு வந்துள்ளார். அதனடிப்படையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளராகவும் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டுள்ளார். அரசியல் ஈடுபாட்டுடன் கூடவே சுமார் எட்டாண்டுகளுக்கு முன் கட்சி சார்ந்த நண்பர்களோடு கூட்டு சேர்ந்து “தமிழ் நகை கடை” ஒன்றை நடத்தி வந்துள்ளார். கட்சியின் மீதுள்ள ஈர்ப்பால் ஏராளமாக செலவும் செய்துள்ளார். அவரது கடையில் நாம் தமிழர் தம்பிமார்கள் நகை வாங்குவது விற்பது என நடந்துள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் துரை முருகனின் அறிமுகம் வண்டாரி தமிழ்மணிக்கு கிடைத்துள்ளது. மேற்படி ஆசாமி யூட்யூபில் சாட்டை என்கிற பெயரில் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். பொது மேடைகளிலும், தனது யூட்யூப் சேனலிலும் அரசியலில் எதிர்தரப்பில் இருப்பவர்களை – குறிப்பாக பெரியார் – திராவிட அரசியலை – தரகுறைவான ஆபாச வார்த்தைகளில் பேசுவதன் மூலமே தம்பிமார்களிடம் புகழ் பெற்றவர் துரை முருகன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இவருக்கும் சீமானுக்கும் இடையிலான கருத்து வேறுபாட்டின் காரணமாக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு பின் உடனடியாக மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் துரை முருகன். தற்போது மாநிலப் பொறுப்பிலும் இருக்கிறார்.

படிக்க:
பீகார் தொழிலாளியின பந்து வீச்சில் டக் அவுட்டான சீமான் !
♦ தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்

வண்டாரி தமிழ்மணியிடன் அறிமுகம் ஆன துரை முருகன் தனது திருமணத்திற்காக 2012 – 2013-ம் ஆண்டு வாக்கில் எண்பதாயிரம் ரூபாய்க்கு நகைகள் வாங்கியுள்ளார். இந்த தொகையை திருமணத்திற்கு வரும் மொய் பணத்தில் இருந்து திரும்பக் கொடுத்து விடுவதாக உறுதி அளித்துள்ளார். எனினும், திருமணத்திற்கு பின் சொன்னபடி பணம் தரவில்லை. இதற்கிடையே கட்சிக்காக செலவழித்த வகையில் தொழில் முடக்கம் ஏற்பட்டு நகை கடையை மூடும் நிலைக்கு வந்துள்ளார் தமிழ்மணி. டாடா ஏஸ் ஒன்றை வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

பெரியண்ணன் சீமான் மற்றும் துரைமுருகன்

தமிழ்மணியின் டாடா ஏஸ் வண்டிக்கு மாதம் சுமார் 11 ஆயிரம் வங்கிக் கடனுக்கான மாதாந்திர தவணை கட்ட வேண்டும். சமீபத்தில் நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக இவரது டாடா ஏஸ் வண்டியை கட்சி நிர்வாகிகள் கேட்டு வாங்கியுள்ளனர். அப்போது வண்டி வாடகைக்கு ஓடினால் தினமும் 1500 ரூபாய் கிடைக்கும், ஆனால் அந்த தொகை கூட வேண்டாம்; ஒரு மாதம் வண்டியைப் பயன்படுத்திக் கொண்டு அதற்கு பதிலாக மாதாந்திர தவணைத் தொகையை கொடுத்தால் போதும் என தமிழ்மணி நிர்வாகிகளிடம் பேசி அதனடிப்படையில் வண்டியைக் கொடுத்துள்ளார். வண்டியை எடுத்துச் சென்ற நிர்வாகிகள் அந்த பணத்தையும் கொடுக்கவில்லை.

வறுமை ஒருபக்கம் வாட்ட; கடன் இன்னொரு பக்கம் கழுத்தை நெறிக்க என்ன செய்வதெனத் தெரியாத தமிழ்மணி, சாட்டை துரைமுருகன் தனக்குத் தர வேண்டிய கடனில் பல வருடங்களாக நிலுவையில் இருக்கும் 33,000 ரூபாயைத் திரும்பக் கேட்டுள்ளார். வாங்கிய கடனை இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என இழுத்தடித்து வந்துள்ளார் துரை முருகன். இத்தனைக்கும் சமீபத்தில் தான் துரைமுருகன் ஒரு ஹுண்டாய் க்ரேட்டா காரும் 1,60,000 ரூபாய் விலையில் புத்தம் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட்டும் வாங்கியுள்ளார் என்கின்றன தம்பிமார்கள் இடும் முகநூல் பதிவுகள். பணம் திரும்பக் கிடைக்காத நிலையில் விசயத்தை கட்சியின் பிற நிர்வாகிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் தமிழ்மணி.

வேறு வழியின்றி தமிழ்மணிக்குச் சேர வேண்டிய கடன் நிலுவைத் தொகையைத் திரும்பச் செலுத்தியுள்ளார் துரைமுருகன். இருந்தும் ஆத்திரம் அடங்காமல் தமிழ்மணி மற்றும் அவரது மனைவியின் கைபேசி எண்களை தனக்கு விசுவாசமான தம்பிமார்களிடம் கொடுத்துள்ளார். துரைமுருகனின் திட்டப்படி உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நாம் தமிழர் ஆதரவு கும்பல் தமிழ்மணியையும் அவரது மனைவியையும் ஆபாசமாக திட்டித் தீர்த்துள்ளனர். குறிப்பாக எட்டு வயதே ஆன தமிழ்மணியின் பெண் குழந்தையையும் தம்பிமார்கள் விட்டு வைக்காமல் ஆபாசமாக பேசியுள்ளனர். அதிர்ச்சியடைந்த தமிழ்மணி நேரடியாக துரைமுருகனிடமே தொலைபேசி இது குறித்து கேட்டுள்ளார் (அந்த உரையாடலின் ஆடியோ பதிவு முகநூலில் பகிரப்பட்டு வருகின்றது). தமிழ்மணியிடம் திமிராக பேசும் துரை முருகன், தன் மீது அன்பு கொண்ட தம்பிகள் ஏதும் செய்தால் அதற்கு நான் பொறுப்பில்லை என்கிறார்.

படிக்க:
சீமான் – கந்து வட்டி அன்புச் செழியனை ஆதரிப்பது ஏன் ? கருத்துக் கணிப்பு
♦ என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் !

பின் விசயத்தை சீமானிடமே கொண்டு சென்றுள்ளார் தமிழ்மணி. அதற்கு நீ என்ன வேண்டுமானும் களப்போராளியாக இருந்து விட்டுப் போ… ஆனால் நான் துரைமுருகனை மேடையில் பேச வைத்துதான் கட்சியை வளர்த்து வருகிறேன்… என துரைமுருகனுக்கே ஆதரவாக பேசியுள்ளார். இந்த விவகாரங்கள் மொத்தமும் தனக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகளிடம் தமிழ்மணி பேசியுள்ளார். அந்த உரையாடல்கள் முகநூலில் ஆடியோ பதிவுகளாக பகிரப்பட்டு வருகின்றன. ஒரு சில ஆடியோ பதிவுகளை கேட்டபோது மனம் கனத்துப் போனது.

கட்சிக்காக தனது வாழ்கையையே பணயம் வைத்து எல்லா வகைகளிலும் தோற்றுப் போன ஒரு மனிதனின் புலம்பல்களாக இருந்தன அந்த உரையாடல்கள். தனது கட்சி வாழ்க்கையைக் குறித்து ஓரிடத்தில் தமிழ்மணி இவ்வாறு சொல்கிறார் : “இதே ஒரு வாழ்க்கை முறையா இருந்திச்சி அண்ணே. காலைல பல் விளக்குவதைப் போல. இப்போ எல்லாம் வெறுத்துப் போச்சு. இனி என்ன இந்தக் கடனில் இருந்து வெளி வர வேண்டும். ஏதோ தொழில் நடந்தால் போதும். ஊரில் விவசாயம் இருக்கு; வருசத்துக்கு நாலு மூடை நெல்லு வரும். எனக்கென்ன சிகரெட்டு தண்ணி பழக்கம் கூட இல்லை. எப்படியாவது பிழைச்சி மேல வந்துடுவேன்”.

இதற்கிடையே நாம் தமிழர் தம்பிமார்களின் ஆபாச தொலைபேசி அழைப்புகள் அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளன. இந்நிலையில் மனம் நொந்து போன தமிழ்மணி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். தனது கணவனின் நிலை கண்டு விரக்தியடைந்த தமிழ்மணியின் மனைவி ஜான்சி ராணி தீக்குளித்துள்ளார். தற்போது 63% தீக்காயங்களுடன் மதுரை மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். ( தற்போது 2.8.19 அன்று ஜான்சிராணி பரிதாபமாய் இறந்து விட்டார்.)

தமிழ்மணியின் நிலையறிந்த அவரக்கு நெருக்கமான நாம் தமிழர் தம்பிமார்கள் இந்த விவரங்களை முகநூலில் பதிவிட்டு துரைமுருகனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர். எனினும், தமிழ்மணி மனைவியின் தற்கொலை முயற்சி குடும்ப பிரச்சினையின் காரணமாகவே நடந்தது என அவரே போலீசாரிடம் தெரிவித்ததாகவும், இதை கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களும் விலகி நிற்பவர்களுமே பெரிதுபடுத்துகிறார்கள் எனவும் நாம் தமிழர் சார்பில் ஒரு அறிக்கை வெளியாகிறது.

மழுப்பலான கட்சியின் அறிக்கையை தமிழ்மணியை அறிந்த நாம் தமிழர் தம்பிமார்கள் ஏற்காமல் தொடர்ந்து துரைமுருகனை நீக்குமாறு குரல் கொடுக்கவே அடுத்ததாக மருத்துவமனையின் முன் சோகமாக அமர்ந்திருக்கும் தமிழ்மணியை பேசச் சொல்லி 15 வினாடிகள் ஓடும் காணொளி ஒன்றை பதிவு செய்து பரப்பி வருகின்றனர் துரைமுருகன் ஆதரவு தம்பிமார்கள். அதில், இது குடும்ப பிரச்சினை என்றும், தான் உயிராக நேசித்த கட்சிக்கு எந்த தொந்திரவும் செய்ய வேண்டாம் எனவும் தமிழ் மணி கேட்கிறார்.

ஆனால் சம்பவங்களின் கோர்வையை மிக கவனமாக பார்ப்பவர்கள் எவருக்கும் இதில் உண்மை என்னவென்பதை புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்காது. பொருளாதார ரீதியில் ஏற்கனவே நலிவடைந்து வறுமையில் வாடும் நிலை மனைவியின் உயிரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் ஒருவரின் மனநிலையை துரைமுருகனின் ஆதரவாளர்கள் இந்த சூழலிலும் கேடாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதை அந்த காணொளியே அப்பட்டமாக உணர்த்துகின்றது.

சொல்லப்பட்ட வார்த்தைகளில் மட்டுமல்ல, சொல்லாத வார்த்தைகளிலும் உண்மை புதைந்து கிடக்கிறது. தமிழ்மணிக்கு நெருக்கமான தம்பிமார்கள் அவரது மனைவியின் மருத்துவ செலவுக்கு உதவுமாறு வேண்டி வங்கி கணக்கு விவரங்களை முகநூலில் பகிர்ந்து வருகின்றனர். உடனடியாக நாம் தமிழர் தலைமை அந்த கோரிக்கை அதிகாரப்பூர்வமற்றது எனவும், அந்த பதிவுகளை கட்சித் தொண்டர்கள் பகிரக் கூடாது எனவும் அறிக்கைவிட்டுள்ளது.

மேற்படி விவகாரங்கள் அனைத்தும் முகநூலில் பதிவு செய்யப்பட்ட நாம் தமிழர் ஆதரவாளர்களின் பதிவுகளில் பகிரங்கமாக உள்ளது. குற்றவாளி துரைமுருகனை நாம் தமிழர் கட்சி காப்பாற்றும் நடவடிக்கை மிக மோசமாக அம்பலமாகி உள்ளது.

சில முகநூல் பதிவுகள் மற்றும் ஆதாரங்களுக்கு பின் வரும் இணைப்புகளில் பார்க்கவும்.

 

*****

தமிழ்மணிக்கு நிகழ்ந்த அநீதிக்கு யார் பொறுப்பு ?

நாம் தமிழர் என்கிற கட்சியே கீழிருந்து மேல் வரை எவ்வித ஜனநாயகமும் இல்லாது கட்டப்பட்டிருக்கும் ஒரு இனவாத அமைப்பு. வெளிப்படையாக ஹிட்லரைப் போற்றுவது, சாதியின் அடிப்படையில் இனத்தை தீர்மானிப்பது, இனத் தூய்மைவாதம் பேசுவது என இவையெல்லாம் அந்தக் கட்சி அடிப்படையிலேயே ஒரு வலதுசாரி தத்துவத்தின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் வெளிப்பாடுகள். திருச்சி சங்கர் அய்யர் என்பவரே தனது அரசியல் குரு என சீமான் பல பேட்டிகளில் குறிப்பிடுகிறார். மேற்படி அய்யர் மண்டபத்தில் வைத்து எழுதிக் கொடுத்த தத்துவத்தின் படி பார்ப்பனர்கள் தமிழர்கள், ஆனால் தமிழகத்திலேயே பல நூற்றாண்டுகளாக வாழ்ந்தாலும் நாயக்கர்களும், நாயுடுகளும், அருந்ததி இன மக்களும் வந்தேறிகள்.

எப்படி இந்துத்துவ அரசியல் இசுலாமியர்களை எதிர்நிலையில் நிறுத்துகிறதோ அதே போல் நாம் தமிழர் ‘வடுகர்களை’ எதிர்நிலையில் நிறுத்துகிறது. எப்படி இந்துத்துவம் லிபரல் ஜனநாயகம் பேசுபவர்களை ஆண்டி இந்தியன்களாக அறிவிக்கிறதோ அதே போல் பெரியாரிய திராவிட அரசியல் பேசுகிறவர்களை இனத்துரோகிகளாக அறிவிக்கின்றனர் நாம் தமிழர் தம்பிமார்கள்.

படிக்க:
வேணாம் அழுதுருவேன் – சீமான் வீடியோ
♦ ஓம் சீமான் ! ஜெய் சீமான் !

அங்கே ராமன் என்றால் இங்கே முருகன். அங்கே சர்வாதிகாரம் என்றால் இங்கே “அன்பான” சர்வாதிகாரம். அவர்களுக்கு ராம ராஜ்ஜியம் என்றால் இங்கே பார்ப்பன நேசன் ராஜராஜனின் ராஜ்ஜியம். சீமான் தனது அரசியலைக் கொண்டு அதிகாரத்தை வென்றெடுப்பது குறித்துப் பேசுவதில்லை “அதிகாரத்தைக் என்னிடம் கொடுத்து விடுங்கள்” என மக்களை எச்சரிக்கிறார்.

வலதுசாரி அரசியலின் இலக்கு சமூகத்தின் லும்பன் பிரிவினர். பாரதிய ஜனதா யாரை நோக்கி, யாருக்காக பேசுகிறதோ அதே லும்பன் பிரிவினரை நோக்கித்தான் சீமானும் பேசுகிறார். இந்துத்துவத்தின் பார்ப்பன சாதிவெறி தன்னை மதவெறியாக வெளிப்படுத்திக் கொள்கிறது என்றால், தமிழ்  ஆண்ட சாதிகளின் வெறி இனவெறியாக நாம் தமிழர் அரசியலில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

சரியாகச் சொல்லப்போனால் எதிர்காலத்தில் இந்துத்துவ அரசியலின் தமிழக நுழைவுக்கு பாதை போட்டுக் கொடுக்கிறது நாம் தமிழர் கட்சி. முந்தைய காலங்களில் பார்ப்பனர்கள் பல்லக்குகளில் வருவர்; பல்லக்குத் தூக்கிகள் இருப்பார்கள். அவர்களுக்கு முன் “முள் பொறுக்கிகள்” என சிலரை வைத்திருப்பார்கள். இந்த முள் பொறுக்கிகளின் வேலை பல்லக்கு வருவதற்கு முன் பாதையில் உள்ள முட்களை அப்புறப்படுத்துவது. இந்துத்துவத்தை பல்லக்கில் சுமந்து வருகிறது பாஜக – அதற்காக பெரியாரியம் என்கிற ‘முட்களை’ அகற்றும் முள்பொறுக்கி வேலையைச் செய்து கொண்டிருக்கிறார் சீமான்.

இதற்கு ஏற்ப மொத்த கட்சியும் ஜனநாயகமற்ற நாஜிக் கட்சியின் பாணியில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த பலிபீடத்தில் தான் தமிழ்மணிகள் பலியிடப்படுகின்றனர். தலைமையின் மேல் கேள்விக்கிடமற்ற பக்தியும், உட்கட்சி ஜனநாயகமின்மையும் ஏற்கனவே கிறுக்குப் பிடித்த குரங்கிற்கு சாராயம் ஊற்றிக் கொடுத்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்மணியையும் அவரது மனைவியையும் தொலைபேசியில் அழைத்து ஆபாசமாக ஏசியவர்கள் இவர்கள்தான். இவர்கள் கட்சியின் உத்தரவைப் பெற்றுத்தான் இப்படிச் செயல்பட வேண்டும் என்பதில்லை – குறிப்பான சந்தர்ப்பங்களில் எப்படிச் செயலாற்ற வேண்டும் என்பதை சாராயம் அருந்திய பைத்தியக்கார குரங்குகள் தாமே தீர்மானித்துக் கொள்ளும். ஆதாரம் வேண்டுமா? இந்தப் பதிவுக்கான எதிர்வினைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் தமிழர் என்கிற இந்துத்துவ கும்பலின் முள்பொறுக்கிகளை தமிழ் இளைஞர்கள் புரிந்து கொள்வதோடு தனிமைப்படுத்த வேண்டிய தருணம் இது.

– சாக்கியன்

7 மறுமொழிகள்

  1. #இந்த விடயத்தில் இரு தரப்பையும் விசாரிக்க வேண்டும்….இரு தரப்பு பிரச்சனை வைத்து…கட்சி பற்றி நாகரிகம் இல்லாத வார்த்தையில் பேசுவது தவறு… நாம் தமிழர் கட்சி தமிழ் மக்களுக்கான அரசியல் பாதை….வினவு உங்கள் பதிவுகள் அனைத்தும் சமூக மாற்றத்திற்காக இருந்தால் மகிழ்ச்சி….! திருட்டு திராவிட கட்சிகள் பற்றி எழுதுங்கள்….! மோடி மட்டும் விமர்சனம் செய்யாதீர்கள்….திருட்டு திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி கட்சிகளை ஒழிப்பதே தற்போது அவசியம்….! நன்றி…! பெரியாரை பின்பற்றுவது என்று இணைத்து திருட்டு திமுக கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டாம்…

  2. சீமானிற்கே பொதுக்கூட்டங்களில் மரியாதையாகப் பேசத் தெரியாது. சிங்களப் பெண்களை கற்பழிப்பேன் எனக் கத்துற ரவுடி. சீமானே பணத்திற்காக கட்சி நடாத்துபவர். துரைமுருகன் அவ் வழியே.இந்த தமிழ்மணி குடும்பத்துடன் களப் பணியாற்றியவர். இன்று அவரது முழுக் குடும்பமுமே களப்பணியாற்றியவர்கள். குறிப்பாக 8 அகவைச் சிறுமி. இன்று அச் சிறுமியினையும் விட்டுவைக்கவில்லை இந்த நாம் ரவுடிகள். கேட்டால் அதிமுக அப்படி, திமுக இப்படி என்பார்கள். அவர்கள் மாதிரி இருப்பதற்கு நீங்கள் ஏன் மாற்று?

    நேற்று வினயரசு. இன்று தமிழ்மணி. நாளை ஏனையோர்.

  3. முகநூல் பதிவுகளை மட்டுமே வைத்து ஒரு செய்தி. நல்லா வருவீங்கடா.

  4. Vinavu is one sided surprised their views are similar to DMK,
    Hence I assume Vinavu dropped its nutral media policy!!!

    From here i am not going to follow Vinavu articles or views since totally one sided that is DMK favourism!!!

  5. //குறிப்பான சந்தர்ப்பங்களில் எப்படிச் செயலாற்ற வேண்டும் என்பதை சாராயம் அருந்திய பைத்தியக்கார குரங்குகள் தாமே தீர்மானித்துக் கொள்ளும். ஆதாரம் வேண்டுமா? இந்தப் பதிவுக்கான எதிர்வினைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.// கட்டுரையாளர் எதிர்பார்ப்பை பொய்யாக்க மாட்டார்கள் “நாம் (போலி)தமிழர்” தம்பிகள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க