தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்

ண்மையில் பன்னிரண்டாம் வகுப்புப் புத்தகத்தில் தமிழைவிடத் தொன்மையான மொழி சமற்கிரதம் (தமிழ் 2300 ஆண்டுகள், சமற்கிரதம் 4000 ஆண்டுகள்- தொன்மை) எனக் குறிப்பிடப்பட்டதனைத் தொடர்ந்து எது தொன்மையானது என்ற வழக்காடல் இடம்பெற்றுவருகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பலரே சமற்கிரதத்திற்காக பொய்ப்பரப்புரையில் ஈடுபட்டிருப்பதேயாகும்.

சமற்கிரதத்தின் தொன்மைக்காக வழக்காடுபவர்கள் எல்லோருமே அறிவியலிற்குப் புறம்பாக வெறும் புராணங்களையும், கட்டுக்கதைகளையும், புரட்டல்களையுமே சான்றாகக் கொண்டுள்ளார்கள். இவை பற்றிய ஒரு விளக்கமாகவே இக்கட்டுரை அமையவுள்ளது. முடியுமானவரை நான் எனது ஆய்வுகளைக் குறித்த பெயரிலிருந்தே தொடங்குவதனை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அந்த வகையிலேயே இதனையும் அணுகுவோம்.

தமிழ் – சமற்கிரதம் ஆகியவற்றுக்கான பெயர்க் காரணம் :

முதலில் தமிழைப் பார்த்தால், தமிழின் பெயர் இயற்கையாகவே அமைந்துள்ளது. “தமிழிற்கு அமிழ்து என்று பெயர்” என்று பாரதிதாசன் பாடியிருப்பார். இந்த ‘அமிழ்து’ என்ற சொல்தான் தமிழிற்கு அடிப்படை. இதனை விளக்கிய புலவர் இரா.இளங்குமரனார் பின்வருமாறு விளக்கியிருப்பார்.

Tamil - Sanskrit“ஒரு குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் குடிக்கமுனையும் போது அம்மு, அம்மு என ஓசை எழுப்புவதால் அம்மா என்ற சொல் பிறந்தது; அதிலிருந்தே அமிழ்தம் (தாய்ப்பால்) என்ற சொல் பிறந்தது . அமிழ்வதால் (உள்ளிறங்கி சுவையீட்டுவதால்) அமிழ்தம் எனப்படும்”. இச் சொல்லானது வடமொழியிலுள்ள அ+மிர்த் என்பதிலிருந்து வேறுபட்டது {அமிர்த்= சாவற்ற வாழ்வு என்ற பாற்கடல் கடைந்த கற்பனைக்கதை, இரண்டிற்குமுள்ள பலுக்கல் (ஒலிப்பு) ஒற்றுமையினைக் கொண்டு, இரண்டும் ஒன்றல்ல}. அமிழ்து என்ற சொல் தோன்றியதனை மேலே பார்த்தோம். இப்போது அமிழ்து என்ற சொல்லை இடைவிடாமல் விரைவாக மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

அமிழ்து,அமிழ்து……. தமிழ், தமிழ் ‘தமிழ்’என்ற சொல் வந்துவிட்டதா!

அம்மாவிலிருந்து மலர்வது எவ்வாறு அமிழ்(து) ஆகின்றதோ {அம்+இழ் = அமிழ், இழ்-இதழ்}, அதே போன்று தம்மிலிருந்து மலர்வது தமிழ் {தம்+இழ்=தமிழ்} ஆகின்றது. இவ்வாறு இயற்கையாக வாழ்வியலோடு இணைந்து தமிழ் மொழிக்கான பெயர்க் காரணம் காணப்படுகின்றது.

அடுத்து சமற்கிரதத்தினைப் பார்ப்போம். சமற்கிரதம் என்பதற்குச் செயற்கையாக நன்றாகச் செய்யப்பட்ட மொழி என்பதே பொருள் {‘Sanskrit’ is derived from the conjoining of the prefix ‘Sam’ meaning ‘samyak’ which indicates ‘entirely’, and ‘krit’ that indicates ‘done’}. எவ்வாறு நன்றாகச் செய்யப்பட்டது?

படிக்க:
சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !
♦ நூல் அறிமுகம் : தமிழ் மொழியின் வரலாறு

ஏற்கெனவே இருந்த மொழிகளிலிருந்து சொற்களை (Raw Form) எடுத்து, நன்றாக முழுமையாகச் செய்யப்பட்ட சொற்களே சமற்கிரத மொழிச் சொற்கள் (Refined Form). இன்னமும் விரிவாகச் சொன்னால், இங்கு ஏற்கெனவேயிருந்த பிராகிருதம், பாலி, தமிழ் போன்ற மொழிகளிலிருந்து எடுத்த சொற்களையும், தாம் ஏற்கனவே கொண்டு வந்த ஐரோப்பிய மொழிச் சொற்களையும் (இவை எல்லாமே பேச்சு வழக்கிலான சொற்களே) இணைத்து நன்றாகச் செய்யப்பட்ட மொழியே சமற்கிரதமாகும்.

இவ்வாறு ஐரோப்பிய மொழிச் சொற்களையும், இங்கிருந்த மொழிச் சொற்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட மொழியாதலாலேயே, சமற்கிரதத்தினை இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினைச் சேர்ந்த ஒரு மொழி எனப் பல அறிஞர்கள் குறிப்பிடுவார்கள்.

இப்போது சொல்லுங்கள், சமைக்கப்பட்ட மொழி தொன்மையானதா? அல்லது அந்தச் சமையலிற்கே மூலப்பொருளான மொழி தொன்மயானதா?

பேச்சுமொழி :

மொழிப் பெயர்க் காரணத்தினைப் பார்த்தோம், இப்போது பேச்சு வழக்கில் எந்த மொழி தொன்மையானது எனப் பார்ப்போம். பேச்சு வழக்கில் எந்தமொழி தொன்மையானது எனக் கண்டறிவது இலகுவானதல்ல, ஏனெனில் சைகை மொழியானது (அசைவு மொழி) சில வகையான ஒலிக்கோவைகளாக மாறிப் பின்னரே பேச்சுமொழியாகப் படிமலர்ச்சி பெறும். மேலும், பேச்சுமொழிக்கான தொல்லியல் சான்றுகளும் காணப்படமாட்டாது. எனவேதான் பேச்சு வழக்கிலான மொழிகளில் எது தொன்மையானது எனக் கண்டறிவது கடினமானது.

Indus Valley Civilizationஇங்கு எங்களிற்குச் சார்பாக அமைந்துள்ள விடயம் யாதெனில் இன்று மரபணு ஆய்வுகள், தொல்லியல் உடற்கூறு ஆய்வுகள் போன்ற அறிவியல் முறைகள் மூலம் சிந்துவெளி நாகரிகம் ஒரு திராவிட நாகரிகம் என்றும், அது ஆரியர்கள் வருகைக்கு முற்பட்டது என்பதும் ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றிச் சான்றுப்படுத்தப்பட்டுவிட்டது. குறிப்பாக இங்கிலாந்திலுள்ள ஒரு பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த 16 அறிவியலாளர்கள் (16 scientists led by Prof. Martin P. Richards of the University of Huddersfield, U.K.) மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஒரு ஆய்வில் ஆரியர்களின் இந்தியப் படையெடுப்பு ஐயத்திற்கு இடமின்றி சான்றுப்படுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அரியானாவின் ராகிகடி ஆய்வும் இதனையே வலியுறுத்தியிருந்தது(“An Inconvenient Truth” என்ற தலைப்பில் இந்தியா டுடே’ 2018 செப்.10-ல் வெளிவந்தது).

இவ்வாறான ஆரியர் வருகைக்கு முன்னரே சிந்துவெளி நாகரிகத்தில் தமிழ் இருந்தமைக்குமான சான்றுகளும் இன்று பெருமளவில் கிடைத்துள்ளன. சிந்துவெளி நாகரிக எழுத்துகளிற்கும் (தொல் தமிழி) தமிழிற்குமுள்ள தொடர்புகளும் வெளிவந்துவிட்டன. எனவே ஆரியர் வருகைக்கு முன்னரே பேச்சு வழக்கில் தமிழ் இருந்தது என்பது உறுதியாகிவிட்டது. சிந்துவெளி நாகரிகம் தழைத்தோங்கிய பகுதிகளில் இன்றைக்கும் தமிழ்ப் பெயர்களைக் கொண்ட பல ஊர்கள் (கொற்கை, வஞ்சி, தொண்டை…. ) இருக்கின்றன.

படிக்க:
சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !
♦ பள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலர்கள் தேவையா ? | வில்லவன்

இவ்வாறு ஏற்கனவே செழிப்புற்றிருந்த சிந்துவெளி நாகரிகத்தினை அப் பகுதிக்கு வந்து சேர்ந்த ஆரியர்களே அழித்தாக ஒரு கருத்து உள்ளது. இதனை ரிக் வேதம் (Rig vedda 1.51.11) ‘அசுரன் பிப்ருவின் கோட்டைகளை (Pur) இந்திரா ஆரியர்களிற்காக அழித்தார்’ எனச் சுட்டுவதாக வரலாற்றாசிரியர் டி.டி.கோசம்பி ‘இந்திய வரலாறு ஒரு அறிமுகம்’ எனும் நூலில் (தமிழாக்கம் பக்கம் 150) குறிப்பிடுவார். இதனையே க.கைலாசபதி தனது ‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்’ எனும் நூலில் “வச்சிராயுதம் ஏந்திய இந்திரன் மட்பாண்டங்களை உடைப்பது போல எதிரிகளை வென்றான் என்று வேதங்கள் பாடுவது சிந்துவெளி நாகரிகத்தை அழித்தான் என்பதனையே குறிக்கும்” என்கின்றார் (பக்கம் 6).

வேறு சில ஆய்வாளர்கள் வறட்சியால் சிந்துவெளி நாகரிகம் அழிந்த பின்பே ஆரியர் வந்தாகக் கூறுவார்கள். எது எவ்வாறாயினும் ஆரியர்கள் வரும்போதே இங்குள்ள மக்கள் மொழி அறிவுடனேயே இருந்துள்ளார்கள் என்பது உறுதியாகின்றது. எனவே பேச்சு வடிவத்திலும் தமிழ் மொழியானது சமற்கிரதத்தை விடத் தொன்மையானது என்பது தெளிவாகின்றது.

எழுத்து வடிவம் :

எழுத்து வடிவில் எந்த மொழி தொன்மையானது எனப் பார்ப்பதே அறிவியல் சான்றுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இலகுவானதும், நடைமுறை வாய்ப்பு உள்ளாதுமான ஒரு முறையாகும். ஆனால் இந்த முறையான ஒப்பீட்டிற்கு, வட மொழித் தாங்கலாளர்கள் வரவே மாட்டார்கள். ‘பல்லில்லாதவன் தனக்கு பக்கோடா பிடிக்காது’ என்ற மாதிரி தமது வேதங்கள் ‘எழுதாக் கிளவி’ / ‘எழுதா மறை’ என்பார்கள். (உண்மையில் அவை எழுத்து வடிவம் இல்லாத மறைகளே).

ஏற்கெனவே இருந்த சிந்துவெளி (தொல் தமிழி) எழுத்து வடிவம், பிராகிரத பிராமி (அசோகர் கல்வெட்டு வடிவம்), தமிழி போன்ற வரி வடிவங்களிலிருந்து தமக்கு என ஒரு எழுத்து வடிவத்தினை (Sanskrit Nagari ) CE 1ம் – 4ம் நூற்றாண்டுகளிற்கு இடைப்பட்ட காலத்திலேயே உருவாக்கிக் கொண்டார்கள். அவர்கள் பெரிதும் பயன்படுத்தும் தேவநாகரி வரிவடிவம் CE 4ம் நூற்றாண்டிலேயே உருவானது {சான்று- Gazetteer of the Bombay Presidency at Google Books, Rudradaman’s inscription from 1st through 4th century CE found in Gujarat, India, Stanford University Archives, pages 30–45, particularly Devanagari inscription on Jayadaman’s coins pages 33–34}} . தமக்கு என ஒரு சொந்த எழுத்து வடிவம் இல்லாது இன்றும் தேவநாகரி எழுத்துவடிவினையே பயன்படுத்திவருகின்றார்கள்.

இந்த `தேவநாகரி` என்ற சொல்லே தே+நகர் (Devanagari=Deva+Nagari) என்ற இரு சொற்களையே அடிப்படையாகக் கொண்டவை. இவையிரண்டுமே தமிழ்ச் சொற்களையே அடியாகக் கொண்டவை என்பது தெரிந்தால் நீங்கள் வியப்படையக் கூடும். தே என்ற சொல் தெய்வம் என்பதனைத் தமிழில் குறிக்கும். அதே போன்று மக்கள் நகர்ந்து சென்று (move ) உருவாகும் இடமே நகர் {ஊர்ந்து சென்று உருவான ‘ஊர்’ என்பது போல}. இவ்வாறு உருவான தேவநாகரி வடிவமானது வடமொழியில் 7-ம் நூற்றாண்டுக்குப் பின்னரே பொதுப் பயன்பாட்டிற்கு வருகின்றது (சான்று- Oxford University Press, ISBN 978-0195356663, pages 40–42). 12-ம் நூற்றாண்டிற்குப் பின்னர் மிகப் பெருமளவில் எழுதிக் குவித்த அவர்களின் திறமையினை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும், ஆனால் அவற்றினைக் காலத்தால் முன் கொண்டு செல்ல முயல்வது நேர்மையற்ற செயலேயாகும்.

அவர்களின் எழுத்து வடிவத்திற்கு பல நூற்றாண்டுகளிற்கு முற்பட்ட தமிழி எழுத்து வடிவங்களிற்கான பல சான்றுகள் {அறிவியல்ரீதியில் சான்றுப்படுத்தப்பட்ட பல சான்றுகள்} எமக்கு இன்று கிடைத்துள்ளன.

கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டு. (ஜம்பை)

1. 1970-ல் கொற்கைத் துறையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு 2.6 மீட்டர் ஆழத்தில் உள்ள ஒரு குழியில் (KRK 4), மரக்கரித் துண்டு (charcoal) ஒன்று தோண்டி எடுக்கப்பட்டு, கரிமக்கணிப்பு (கார்பன் 14) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் காலம் BCE (கி.மு).850 முதல் BCE(கி.மு)660 வரை) என கணிக்கப்பட்டது. அதே குழியில்( KRK 4), 2.44 மீட்டர் ஆழத்தில், பண்டைய தமிழி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டதால், அந்த தமிழி எழுத்துப் பொறிப்பின் காலமும் BCE755 ஆகத்தான் இருக்கவேண்டும் என்கிறார், தொல்பொருள் ஆய்வாளர் நடனகாசி நாதன் அவர்கள். ஆகவே அந்த ‘தமிழி’ எழுத்துப் பொறிப்பின் காலம் BCE 8 ஆம் நூற்றாண்டு என ஆகிறது.
(SOURCE: Tamil’s Heritage , PAGE: 31).

2. கொடுமணல் தமிழ் பொறிப்பின் காலம் BCE 400
(SOURCE: முனைவர் கா.ராஜன் “தொல்லியல் நோக்கில் சங்ககாலம்” பக்: 66)

3. பொருந்தல் அகழாய்வில் கிடைத்த நெல் மாதிரி ஒன்று, அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில், அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு (Accelerator Mass Spectrometry by the Beta Analytic Lab , USA ), அதன் காலம் BCE 450 என கணிக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன் இன்னொரு நெல் மாதிரி ஒன்று அதே ஆய்வு நிலையத்தில் காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அதன் காலம் BCE 490 என கணித்தறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். அந்த மட்பாண்டங்களிலும் தமிழி எழுத்துக்கள் காணப்பட்டன. இந்தக்காலக் கணிப்புகளின்படி, தமிழி காலம் BCE 5-ம் நூற்றாண்டு என்பது ஐயத்திற்கு இடமின்றி சான்றுபடுத்தப்பட்டுவிட்டது. மேலும் இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், தமிழ் எழுத்து அசோகர் பிராமிக்கு இரு நூற்றாண்டுகள் முற்பட்டது (அசோகர் பிராமியின் காலம் BCE 3-ம் நூற்றாண்டு ஆகும்) என்பதோடு, அசோகர் பிராமியில் இருந்து தமிழி உருவாகவில்லை என்பதும் திண்ணம் என்கிறார் முனைவர் ராஜன் அவர்கள்.
(Source : Hindu Newspaper Dated 15.10.2011, porunthal Excavations prove existence of Indian scripts in 5th century BC : expert)

4. வடஇலங்கையில் (ஈழம்) தமிழி கல்வெட்டுகளும், தென் இலங்கையில் பிராகிருத பிராமி கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அவைகளில் சில அசோகர் காலத்திற்கும் முந்தியவை என இலங்கை பிராமிக் கல்வெட்டுகளின் தந்தை எனக் கருதப்படும் பரனவிதான கணித்துள்ளார். இலங்கை அறிஞர்கள் கருணாரத்னா, பெர்ணான்டோ, மற்றும் அபயசிங்கி ஆகியோர் அசோகர் பிராமிக்கு முன்பே, பண்டைய தமிழி எழுத்து, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்துவிட்டது என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். டாக்டர் சிற்றம்பலம் அவர்கள் தனது ‘யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு’ என்ற நூலில் BCE 4ம், 3ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழி எழுத்துப் பொறிப்புகள் இலங்கையில் கிடைப்பது குறித்து தெரிவித்து உள்ளார்.
(SOURCE: TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 34)

இவ்வாறு சான்றுகளை அடுக்கிக்கொண்டே செல்லாம். மேற்கூறிய சான்றுகளைக் கொண்டு University of Cambridge இனைச் சேர்ந்த பேராசிரியர் திலிப் கே. சக்ரபர்த்தி (Dilip K.Chakrabarti ) அவர்கள் தான் வெளியிட்ட An Oxford Companion to Indian Archaeology, Indian Archaeological History ஆகிய இரு நூல்களிலும் தமிழி ஆனது அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்று தெரிவித்துள்ளார். எனவே தமிழியே எழுத்து வடிவில் தொன்மையானது என்பது யாருமே மறுக்கமுடியாது. இந்தியாவில் கிடைத்த பழங்கல்வெட்டுகளில் 65 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவை தமிழிலேயே இருப்பதும் கவனிக்கத்தக்கது. அண்மையில் கீழடி அகழ்வாய்விலும் பல தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட சான்றுகள் பெருமளவிற்கு கிடைத்துவருகின்ற போதும், அவற்றினை உரியமுறையில் ஆய்வுகளிற்கு உட்படுத்த நடுவண் அரசு முட்டுக்கட்டை போட்டுவருவது தெரிந்ததே.

மொழியின் சிறப்பு :

தொன்மை மட்டுமல்ல, மொழியின் சிறப்பிலும் தமிழே உயர்ந்தது. தமிழ் இயற்கையாக வாழ்வியலோடு ஒன்றி அறிவியல் மொழியாகக் காணப்பட, சமற்கிரதமானது புராணங்களை அடியாகக் கொண்ட ஒரு ஆதிக்க மொழியாகவேயுள்ளது. ‘எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பிய விதியோ, தமிழ்மொழியிலுள்ள வேர்ச்சொல் விளக்கங்களையோ சமற்கிரதத்தில் எண்ணிப் பார்க்கவே முடியாது.

எடுத்துக்காட்டாக Planet எனும் ஆங்கிலச் சொல்லிற்கான தமிழ்ச்சொல் (கோள்) – சமற்கிரதச்சொல் (கிரகம்) என்பவற்றினையே எடுப்போம். இங்கு கிரகம் என்பது ஆளுகைக்காரர் என்ற பொருளில் சோதிட நம்பிக்கையினையும், கோள் என்ற அறிவியற்சொல் தாமாக ஒளிராமல் விண்மீன்களிலிருந்து ஒளியினைக் கொள்வதால் {மின்னுவதால் ஏற்பட்ட மின்- ‘மீன்’ ஆனது போல, கொள்வதால் ஏற்பட்ட கொள் – ‘கோள்’} கோள் என அறிவியலையும் (சங்க காலத்திலேயே) பேசியுள்ளது. ஒரு புறத்தில் ‘பிறப்பொக்கும்’ என சம-அறம் பேசும் தமிழ் எங்கே? ‘சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்’ என சாதி முறையினைக் கடவுளே படைத்தாகக் கூறும் வடமொழி எங்கே?. மொழியின் பெருமை பேசினால் பதிவு நீளும் என்பதால் இத்துடன் முடிப்போம்.

தமிழும் சமற்கிரதமும் இரண்டு கண்களா?

இரண்டு கண்களேயானாலும் ஒரே நேரத்தில் இரு காட்சிகள் காண முடியாது. பிற மொழிகளை அழிப்பதனையே தொழிலாகக் கொண்ட சமற்கிரதம் (மொழி பேசுவோர்), எவ்வாறு அழிக்க முயற்சிக்கப்படும் மொழியான தமிழுடன் ஒன்றாக முடியும். சில நூற்றாண்டுகளிற்கு முன்னர் வரை ஒன்றாகத் தமிழாகவிருந்த மலையாளம் இன்று எவ்வாறு பிரிந்துபோனது?

சிலப்பதிகாரத்தில் காணப்படும் தமிழர் இசை வடிவங்கள், நடன வடிவங்கள் எல்லாம் இன்று எமது கையினை விட்டுப்போனது எவ்வாறு? மேற்கூறியனவற்றுக்கு எல்லாம் ஒரே காரணம் ஆதிக்க மொழியான சமற்கிரதமே (உண்மையில் அம்மொழித் தாங்கலாளர்களே). ஆதிக்க மொழியும், அற மொழியும் ஒருபோதும் ஒன்றாகமுடியாது. அவ்வாறு பேசுவோர்கள் ஒரு மறைமுகத் திட்டத்தினூடாக தமிழை அழிக்க / சிதைக்கவே முனைவார்கள்.

பாடநூல் குழப்பம் :

இறுதியாக, மீண்டும் பாடப் புத்தகத்திற்கு வந்து, ஏன் அவ்வாறு குறிப்பிடப்பட்டது எனப் பார்ப்போம். உண்மையில் இது அறிஞர் George L. Hart என்பவரின் கருத்தாகும். அவர் சமற்கிரதத்தின் தொன்மையினைக் கணிக்கும்போது ஆரியர்களின் படையெடுப்பின் முதல் அலையான 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தினையும் (BCE 2000) , தமிழின் தொன்மையினை தமிழி எழுத்துகளின் முந்திய கண்டுபிடிப்புக் காலத்தையும் (BCE 300 ) {உண்மையில் அதனையும் தாண்டிய பல தமிழி எழுத்துகள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றினை BCE 300 இற்குள் அடக்கும் முயற்சி ஒன்று இந்திய நடுவண் அரசால் அசோகரின் கல்வெட்டினையே முந்தியதாகக் காட்ட மேற்கொள்ளும் முயற்சியாக மேற்கொள்ளப்படுகின்றது} கவனத்திற்கொண்டுள்ளார்.

அதாவது சமற்கிரத்தின் பேச்சு வடிவத் தொடக்க காலத்தையும் (BCE 2000 ), தமிழ் மொழியின் எழுத்துவடிவம் கிடைத்துள்ள காலத்தையும் (BCE 300) ஒப்பிட்டுத் தொன்மையினைக் கணித்துள்ளார். இது முற்றிலும் தவறு. ஒன்றில் இரு மொழிகளின் பேச்சுத் தொன்மையினை ஒப்பிட்டிருக்கவேண்டும் அல்லது சான்றுகள் அடிப்படையிலான எழுத்து வடிவத்தினையே ஒப்பிட்டிருக்க வேண்டும். தமிழ் – சமற்கிரத பேராசிரியரான அவர் இன்னொரு இடத்தில் புத்தகம் என்ற சொல்லைச் சமற்கிரதச் சொல்லாகவே கூறுகின்றார். உண்மையில் அது ஒரு தமிழ்ச்சொல். பழங்காலத்தில் ஓலைச் சுவடிகளைப் பழுதடையாமல் காப்பதற்காக பொத்தி வைப்பதால் ஏற்பட்ட பொத்தகம் என்ற சொல்லே மருவி புத்தகம் ஆகியது. அதனை எடுத்து ‘ஸ்’ என்ற எழுத்தை நுழைத்து ‘புஸ்தகம்’ என வடமொழியாக்கிக் கொண்டார்கள். அச் சொல்லினைத் தவறாகக் கருதியது போன்றே, இந்த ஒப்பீட்டினையும் தவறாகவே அணுகியுள்ளார்.

அவரின் பிழையான ஒப்பீட்டினை அப்படியே பாடநூலில் உள்வாங்கியிருப்பதனை என்ன சொல்வது! முன்பொருமுறை மோடியே ‘தமிழே சமற்கிரதத்தை விடத் தொன்மையானது’ எனக் கூறியிருக்க, மோடியின் அடிமையான தமிழக அரசு இவ்வாறு பாடப்புத்தகத்தை வெளியிடுவதனை என்ன சொல்வது? ‘More loyal than the king’ என்பதுதானே நினைவிற்கு வந்துதொலைக்கின்றது.

சுருக்கமாகக் கூறினால், மேலே தமிழே சமற்கிரதத்தைவிடத் தொன்மையானது என மொழிப்பெயர், பேச்சு வடிவம், எழுத்து வடிவம் என்பவற்றைக் கொண்டு நிறுவினோம். மொழியின் தொன்மையினை விடத் தொடர்ச்சியே முதன்மையானது. எனவே நாம் அதில் கவனம் செலுத்தி, தமிழை அறிவியல்-  வாழ்வியல் முறைகளில் பயன்படுத்துவோம். அதுவே இப்போது எமது மொழிக்கு நாம் செய்யக்கூடிய ஒன்றாகும்.

வி.இ.  குகநாதன்

28 மறுமொழிகள்

  1. எந்த வகையில் பார்த்தாலும் சமஸ்கிரத மொழி தமிழ் மொழியை விட குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.அதனுடைய வீச்சும் தமிழ் மொழியை விட பல மடங்கு அதிகம். ஆரியர்கள் இந்திய துணை கண்டத்தில் நுழைந்த காலகட்டம் கிமு 2500 முதல் கிமு 1500 வரை என கணக்கிடப்படுகிறது. அப்போது அவர்கள் நாடோடி சமூகம். அவர்களிடம் அப்போதே வாய்மொழி இலக்கியமாக ரிக்வேதம் இருந்தது. அது சமஸ்கிருத மொழியின் மிகவும் பழமையான வடிவத்தில் புனையப்பட்டது. அதனால் சமஸ்கிருதத்தின் பழைய வடிவம் பேச்சு மொழியாக நிச்சயம் இருந்திருக்கிறது. தமிழ் மொழியில் சங்ககாலத்தை எந்தவகையிலும் கிமு ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் கொண்டு போக முடியாது. கீழடியில் கிடைக்கக்கூடிய ஆய்வு செல்வங்களை எந்தவகையிலும் சிந்து சமவெளி நாகரிக காலத்தோடு ஒப்பிட முடியாது. சிந்து சமவெளி நாகரிகம் கி-மு இரண்டாயிரத்துக்கு முந்தையது. கீழடி காண்பிக்கும் சங்க காலம் கிமு ஐந்தாம் நூற்றாண்டை விட பழமை கொண்டது அல்ல. அதனால் தமிழறிஞர் என்று கூறிக்கொள்ளும் கும்பலும் வினவு கும்பலும் அறிவு நாணயத்தோடு நடந்து கொள்ள வேண்டும். சமஸ்கிருதம் ஆதிக்கவாதிகளின் கருவியானது மிகவும் பிற்காலத்தில்தான். சிந்து சமவெளி நாகரிக மக்களால் ஏதோ ஒரு திராவிட மொழி பேசப்பட்டு இருக்கலாம். ஆனால் அது நிச்சயம் தமிழ் இல்லை. தமிழ் மொழி மிகவும் பிற்காலத்தில் தான் தென் திராவிட மொழியிலிருந்து கன்னடம் துளு ஆகிய மொழிகளோடு பிரிந்தது. தமிழ்நாட்டில் அறிவுத்துறை குறிப்பாக தமிழ்மொழி சார்ந்த அறிவுத்துறை எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இந்த பைத்தியக்காரனின் கட்டுரை ஒரு உதாரணம். மொழி வெறிக்கும் மொழி உணர்வுக்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி தான் உள்ளது. ஆங்கில பாடப் புத்தகத்தை தயாரித்த குழுவினர் சரியான தகவலை தான் வெளியிட்டு இருக்கிறார்கள்.

  2. பெரியசாமி நீங்கள் இந்த தளத்திலேயே பல பெயர்களுடன் சுற்றும் ஒரு ஆசாமி தான் என்பது என் சந்தேகம், சரி இருக்கட்டும் நீங்கள் செத்த பாஷைக்கு முட்டு கொடுக்கும் கருத்துக்களை பார்ப்போம்..

    //கிமு 2500 முதல் கிமு 1500 வரை என கணக்கிடப்படுகிறது. அப்போது அவர்கள் நாடோடி சமூகம். அவர்களிடம் அப்போதே வாய்மொழி இலக்கியமாக ரிக்வேதம் இருந்தது…//

    இதற்க்கு ஆதாரத்தை அளிக்கவும், 3000 ஆண்டுகளுக்கு முன்பே ரிக்வேதம் இருந்ததற்கான என்ன தடயங்கள் இது வரை சிக்கி இருக்கின்றன என்று அடுக்கவும் ….

    //அது சமஸ்கிருத மொழியின் மிகவும் பழமையான வடிவத்தில் புனையப்பட்டது. அதனால் சமஸ்கிருதத்தின் பழைய வடிவம் பேச்சு மொழியாக நிச்சயம் இருந்திருக்கிறது.//

    வடிவம் என்றாலே அதற்க்கு ஒரு உருவம் இருந்தது என்று தான் பொருள், அப்படி என்றால் பழைய சமஸ்க்ருத வடிவத்திற்கான ஆதாரங்களை கொடுக்கவும் .. அப்படி அதற்கு பழைய வடிவம் இருந்தது என்றால், பிறகு ஏன் அது புதிதாக தேவநாகரி எழுத்து வடிவத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்..

    சிந்துவெளி எழுத்துக்களையும், ஆதிச்ச நல்லூர் முதுமக்கள் தாழிகளில் உள்ள எழுத்துக்களும் 100 சதம் ஒத்து போவதாக ஆரிய திராவிட கோட்பாடுகளை ஏற்காத ஆய்வாளர்கள் கூட ஏற்கிறார்கள்.. இன்னமும் சிந்துவளி, ஆதிச்சநல்லூர், கீழடி நாகரீகங்களின் ஒற்றுமையை ஆய்வு செய்வதற்கு முட்டுக்கட்டை போடுவது உங்கள் பாசிச பிஜேபி அரசு தான். அதனை செய்ய சொல்லுங்கள், அதனை செய்தால் உண்மை உங்களை போன்றோரின் முகத்தில் அறைய அல்ல வாந்தி எடுக்கவே தயாராக தான் இருக்கிறது

  3. Rebecca mary என்னும் அரைவேக்காட்டுக்கு,

    சமஸ்கிருத மொழிக்கு எழுத்து கிடைத்தது கிபி நான்காம் நூற்றாண்டு வாக்கில்தான். ஆனால் அதை வைத்து அந்த மொழியை விட தமிழ் பழமையானது என சொல்ல முடியாது. ரிக் வேத கால சமஸ்கிருதமும் ஈரானில் இருக்கும் அவஸ்தன் மொழியும் சகோதரிகள். கிமு 2000 வாக்கிலேயே ரிக் வேதம் நாடோடி சமூகமாக இருந்த ஆரியர்களிடம் இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ரிக் வேதத்தில் இருக்கும் தெய்வங்கள் அவஸ்தன் கலாச்சாரத்தில் எதிர்மறை பாத்திரங்களாக வருகிறார்கள். தமிழகத்தில் தமிழ் அறிஞர்கள் என்று சொல்லப்படும் கூட்டம் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்ட கூடியவர்கள். அரைவேக்காட்டு தனத்துக்கு பேர் போனவர்கள். ரிக் வேத கால சமஸ்கிருதம் தமிழ் மொழியை விட பழமையானது என்று சொல்வதற்கு ஒருவர் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் ஆதரவாளர் ஆகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. உலகின் மிகவும் பழமையான நூல்களில் ரிக்வேதமும் ஒன்று என்பது சர்வதேச அளவிலான ஆராய்ச்சியாளர்கள் கருத்து.. ஆதிச்சநல்லூரில் இருக்கும் தாழிகளின் எழுத்துக்களும் சிந்து சமவெளியில் இருக்கும் குறியீடுகளும் சில வகைகளில் ஒத்துப்போவதால் சிந்து சமவெளியில் திராவிட மொழி ஒன்றைப் பேசினார்கள் என சொல்லலாமே தவிர தமிழ் மொழியை பேசினார்கள் என சொல்ல முடியாது. அப்படி சொல்லக் கூடியவன் பைத்தியக்காரனாக தான் இருப்பான். தமிழ் மொழி மிகவும் பிற்காலத்தியது. ஆந்திராவில் இருக்கும் ஒரு கும்பல் சிந்து சமவெளியில் தெலுங்கு மொழியில் பேசினார்கள் அங்கே இருப்பது தெலுங்கு மொழி குறியீடுகள்தான் என கூறிக்கொண்டு திரிகிறது. நீங்கள் எப்படி எவ்வளவு அறிவாளியாக இருக்கிறீர்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. பிளஸ் டூ ஆங்கில பாடப் புத்தகத்தை தயாரித்தவர்கள் சரியாகத்தான் எழுதியிருக்கிறார்கள். இந்த முட்டாள்தனமான கட்டுரையை கண்டு நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன்.

  4. சமக்ருதம் இந்திய மொழியல்ல அது இந்த மண்ணுக்கு தொடர்பில்லாத அந்நிய மொழி தான் என்று கூறியதற்கு, முதலில் உங்களை நான் பாராட்டுகிறேன். இப்போது விசயத்திற்கு வருவோம் ..

    //ஆதிச்சநல்லூரில் இருக்கும் தாழிகளின் எழுத்துக்களும் சிந்து சமவெளியில் இருக்கும் குறியீடுகளும் சில வகைகளில் ஒத்துப்போவதால் சிந்து சமவெளியில் திராவிட மொழி ஒன்றைப் பேசினார்கள் என சொல்லலாமே தவிர தமிழ் மொழியை பேசினார்கள் …//

    சில வகையில் அல்ல ..நூற்றுக்கு நூறு ஒத்து போவதாகவே உறுதி படுத்தி இருக்கிறார்கள். சிந்து வெளியில் பேசிய, எழுதிய திராவிட மொழி பழந்தமிழே தான்.. வெறும் மொழி மட்டுமல்ல, மக்கள் பயன்படுத்திய பானைகள் பொம்மைகள் மற்ற பொருட்கள் அனைத்துமே இரண்டு நாகரீகங்களிலுமே(சிந்து கீழடி) ஒன்று போலவே தான் இருக்கின்றன.. முறையான ஆராய்ச்சி நடந்தால் அந்த உண்மை உலகிற்கு வெட்டவெளிச்சம் ஆகி விடும் என்பதால் தான், அதனை நடத்தவிடாமல் உங்களை போன்ற பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் தடுத்து கொண்டிருக்கின்றன. உங்களின் செத்த சமஸ்க்ருதிதில் இருப்பதே நூற்றுக்கு 60 விழுக்காடு தமிழ் மொழியிடம் இருந்து கடன் வாங்கிய சொற்கள் தான்.. பாலகிருஷ்ணன் என்பவர் தக்க சான்றுகளுடன் தன்னுடைய நூலான “சிந்துவெளி பணப்பாட்டின் அடித்தளமான திராவிடம்” என்னும் நூலில் எந்த மொழி வெறியும் இல்லாம ஆய்வு செய்திருக்கிறார் அதனை முடிந்தால் புரட்டவும். சிந்துவெளி நாகரீகத்தினை நேரடியாக ஆய்வு செய்த ஐராவதம் மகாதேவன் போன்றவர்களே ஏற்று கொண்ட ஒரு ஆய்வு தான் அந்த நூல்..

    மேலும், 3000 ஆண்டுகளுக்கு முன்பே சமக்ருதம் இந்த மண்ணில் நுழைந்து விட்டதென்றால், அதன் பண்பாட்டு கூறுகள் கொஞ்சமேனும் சிந்து வெளி நாகரீகத்தில் கிடைத்திருக்க வேண்டும், அனால் அப்படி எந்த ஒரு வேத பண்பாட்டு நாகரிகமும் சிந்துவெளி நாகரீகத்தில் ஒரு புள்ளி அளவு கூட கிடைக்கவில்லை, வெறும் 2500 ஆண்டுகள் பழமையான கீழடியிலேயே வேத நாகரீகம் சம்மந்தமான ஒரு சூடம் காட்டும் தட்டு கூட கிடைக்காத பொது, அதனை விட பழமையான சிந்துவெளி நாகரீகத்தில் வேத நாகரீகம் தொடர்பான எந்த ஒரு ஆணியும் இல்லை என்பது இங்கு உள்ளங்கை நெல்லிக்கனியான உண்மை ..

    ஆகவே, 7000 ஆண்டுகள் பழமையானது என்கிற ‘சுவாமி’விவேகானந்தர் அவுத்து விட்ட கதையை எல்லாம் இங்கு வாந்தி எடுக்க வேண்டாம்.. அதனையெல்லாம் எப்போதோ உடைத்து எறிந்தாகி விட்டது.. உங்களை போன்ற பார்ப்பன அடிவருடிகள் வேறு ஏதாவது முயற்சிக்கவும்..

  5. அசைக்க முடியாத தரவுகளுடன் அமைந்த சிறப்பான கட்டுரை. ரிக்வேதம் என்கின்றார்களே, அதற்கான எழுத்துச் சான்று கி.பி 1040 இலேயே முதன்முதலில் கிடைத்துள்ளது. கிடைக்கும் சான்றுகளின் படி அதுவே ரிக்வேதப் பழமை. வாயால வடை சுடுவது இனிச் செல்லாது.

  6. சமக்ருதம் நாடோடி மொழியாக இருந்த போது இப்போது புழங்கும் அதே சொற்கள், ஒலிப்பு முறைகளோடு தான் இருந்தனவா. ஏன் கேட்கிறேன் என்றால் இப்போதுள்ள சமக்ருதத்தில் இருக்கும் சொற்களில் பாதிக்கு மேல் தமிழ் மொழியின் சொற்களை தான் கடன் வாங்கி பயன்படுத்தி கொண்டிருக்கின்றது. எடுத்துக்காட்டாக சில சொற்கள்:- படம், பாடம், சங்கம், நிலையம், ஜலம், அர்ச்சனை, பூசை, சிலை, கலை, தீபம், மண்டபம் போன்ற அனைத்தும் திராவிட மொழிகளில் இருந்து களவாடியவை தான். அப்படி இல்லை, வெறும் ஒலி வடிவிலான பேச்சு மொழியாக இருந்த காலத்தில் இருந்தே இந்த சொற்கள் வழங்கி வந்தன என்றால் அதற்க்கு தக்க சான்றுகள் கொடுக்கவும். நீங்கள் கூறும் ரிக் வேதம் பல திருத்தங்களோடு இப்போதுள்ள நவீன சொற்களோடு தான் புழங்குகிறது. இப்போதுள்ள 4 வேதங்களில் மிருக பலி செய்ததற்கான வரிகளையே பல இடங்களில் நீக்கி சுத்த சைவமாக மாற்றி இருக்கிறார்கள்.. ஆகவே அதனை ஒரு ஆதாரமாக காட்ட வேண்டாம்..

    சொற்கள் மட்டுமல்ல எழுத்து அமைப்புகளையும் தமிழில் இருந்து தான் சமக்ருதம் எடுத்துக் கொண்டது. அதனால் தான், மற்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளை போல அல்லாமல் சமக்ருதம் தமிழ் மொழியின் வரிசை படி அ ஆ இ ஈ என்று தனது நெடுங்கணக்கை அமைத்துக் கொண்டது.. எழுத்து, சொற்கள் மட்டுமல்லாது இங்கிருக்கும் கலைகளையும் திருடி கொண்டு, ஊரான் பிள்ளைக்கு தனது இனிஷியலை போட்டு கொண்டு சொந்தம் கொண்டாடுகிறது.. சமஸ்க்ருதம் செய்த வரலாற்று களவாணிதனங்கள் அடுத்தடுத்த விவாதங்களில் பிரித்து மேயப்படும் நன்றி…

  7. மொழி, கலை (இசை, நடனம்) வழிபாடு என சகலமும் நம்மிடம் இருந்து களவாடப்பட்டதுதான். நாகரீகம் அறியாத நாடோடிகளாக வந்த நாய்கள் ஆற்றங்கரை நாகரிகத்தில் திளைத்திருந்த நம்மிடம் நயவஞ்சகமாக ஊடுருவிவிட்டனர். சமகாலத்தில் உலகிலேயே சிறப்புடன் இருந்திருக்க வேண்டிய நாம் இந்த பார்ப்பனியம் எனும் கல்லைக்கட்டி நீந்துவதால் அமிழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதில் இந்த சூத்திர விபீசண பெரிய’ஸ்’வாமி பன்னாடைகளின் இம்சை வேறு..!
    ரெபெக்கா மேரியின் விவாதம் சிறப்பாக உள்ளது. ஆனால் எப்போது மடிசார் கட்டிக்கொண்டு U-Turn அடிப்பார் என்று சொல்ல முடியாது

    • ஆரியர்கள் ஒன்றும் சாதியமைப்பை கொண்டு வரவில்லை. ஏனெனில் ஆரியர்கள் அடிப்படையில் நாடோடிகள். அவர்கள் இந்தியத் துணைக் கண்டம் மட்டுமல்லாது ஈரான், ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கும் போய் நிலை கொண்டனர். ஈரானிலும் ஐரோப்பாவிலும் சாதி அமைப்பு ஏதும் இவர்களால் உருவானதாக வரலாறு இல்லை. சாதி அமைப்பு என்பது இந்தியத் துணைக் கண்டத்திற்கே உரித்தான அசிங்கம். அது சிந்து சமவெளி நாகரீக மக்களிடம் ஏதோ ஒரு வகையில் இருந்திருக்க வேண்டும். அல்லது வேத காலத்தின் பிற்பகுதியில் உருவாகி குப்தர்களின் ஆட்சியின் போது வலுவடைந்து இருக்க வேண்டும். அதனால் சாதி அமைப்புக்கு எல்லா ஆரியர்களையும் பொத்தாம் பொதுவாக திட்ட வேண்டாம். ஏனெனில் ஈரானுக்கும் ஐரோப்பாவுக்கும் போன ஆரியர்கள் சாதி அமைப்பை உருவாக்கவில்லை. இந்தியத் துணை கண்டத்தில் மட்டும் இந்த அசிங்கம் உருவானது. அது ஏன் எப்படி என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும். ரெபக்கா மேரி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் அரைகுறைகள்.

  8. ரிக் வேத கால சமஸ்கிருதம் இந்தியத் துணைக் கண்டத்துக்கு வெளியிலிருந்து வந்தது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அது அப்போது நாடோடிகளாக இருந்த ஆரியர்களால் பேசப்பட்ட மொழி. அந்த மொழியில் தான் ரிக் வேதம் என்னும் வாய்மொழி இலக்கியத்தை ஆரியர்கள் புனைந்தனர். மேலும் ரிக் வேதகால சமஸ்கிருதத்தில் திராவிட மொழியின் தாக்கமும் உண்டு. ஆனால் அந்த திராவிட மொழி நிச்சயம் தமிழ் மொழி கிடையாது. தமிழ்மொழி மிகவும் பிற்காலத்தில் உருவானது. 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒட்டுமொத்த இந்தியத் துணை கண்டத்தில் திராவிட மொழிதான் பேசப்பட்டது. அந்த திராவிட மொழி காலப்போக்கில் வட திராவிட மொழி, நடு திராவிட மொழி, தென் திராவிட மொழி என பிரிந்தது. வட திராவிட மொழியிலிருந்து இன்று பாகிஸ்தானில் சில லட்சம் மக்களால் பேசப்படும் பிராகுய் என்னும் மொழியும் பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சில பழங்குடியினரால் பேசப்படும் மற்ற திராவிட மொழிகளும் உருவாயின. நடுத் திராவிட மொழியிலிருந்து தெலுங்கு முதலிய மொழிகள் உருவாகின. தென் திராவிட மொழியிலிருந்து தான் தமிழ், கன்னடம் மற்றும் துளு ஆகிய மொழிகள் பிறந்தன. ஆகையால் தெலுங்கு, கன்னடம், துளு ஆகிய மொழிகளுக்கே தமிழ் மொழி தாய் கிடையாது. சகோதரி மொழி மட்டுமே. தெலுங்கு, கன்னடம், துளு ஆகிய மொழிகளுக்கு தமிழ் மொழியை தாயாக சித்தரிப்பது சில தமிழறிஞர்களின் மிகையுணர்ச்சி தானே தவிர அதில் உண்மை கிடையாது. கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் போய் தமிழில் இருந்துதான் கன்னடமும் தெலுங்கும் உருவாகின என வாதிட்டால் உதைப்பார்கள். இந்த லட்சணத்தில் சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழியை பேசினார்கள் என வாதிடுவது மிகப்பெரிய பித்தலாட்டம். ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் சிந்து சமவெளியில் பேசப்பட்டது திராவிட மொழி என்று சொன்னார்களே தவிர தமிழ் மொழி என்று சொல்லவில்லை. அப்படி சொல்லவும் முடியாது. ஏனெனில் தமிழ் மொழியின் காலகட்டம் மிகவும் பிற்காலத்தியது. தமிழ்நாட்டில் தமிழ் மொழி குறித்த சில மாயைகள் அரசியல் காரணங்களுக்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றில் இரண்டை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். ஒன்று லெமூரியா கண்டம் இருந்தது அதுதான் குமரிக்கண்டம் என்னும் பித்தலாட்டம். லெமூரியாக் கண்டம் என்பதே கிடையாது. கண்ட இடப்பெயர்வு கோட்பாடு (continental drift theory) அதை பொய்யாக்குகிறது. இன்னொன்று சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழியை பேசினார்கள் என்னும் பித்தலாட்டம். உண்மை ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் பொய் ஊரெல்லாம் சுற்றி வருமாம்.

  9. பெரியஸ்வாமியை அறிவிலி என்றால் குறைத்து மதிப்பிடுவதாகிவிடும். கிட்டத்தட்ட சங்கிகளைப் போல் சிந்திக்கிறார். ரகசியமாக மாட்டுமூத்திரம் குடிப்பார் போலிருக்கிறது.
    கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலுவின் நேர்காணல் சுட்டியை இணைத்துள்ளேன். பொறுமையாக கேட்டு விட்டு விவாதத்திற்கு வாருங்கள்.
    https://youtu.be/QH0QJKzgW8k

    • இந்த ஒரிசா பாலு நடிகர் வடிவேலு மாதிரி ஒரு பெரிய காமெடி பீஸ். மனித இனம் உருவாகியே 2 லட்சம் ஆண்டுகள் தான் ஆகின்றன. அதிலும் மனிதர்கள் நாடு, நகரம் ஆகிய அமைப்புகளை ஏற்படுத்தி நாகரீகத்தோடு வாழ தலைப்பட்டது கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் தான். அப்படி இருக்கும்போது அது எப்படி 45 ஆயிரம் ஆண்டுகள் முன்னர் தமிழர் நாகரிகம் இருந்திருக்க முடியும்? தமிழ்நாட்டில் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் என்றாலே கோமாளி கூட்டம் தான் என்பது நிருபணமாகிறது. இல்லாத லெமூரியா கண்டத்தை இருந்தது என்று சொல்லி அதை குமரிக்கண்டம் என்று திரித்து பித்தலாட்டம் செய்வது, சிந்து சமவெளி நாகரீகத்தில் தமிழ் மொழி பேசினார்கள் என்று மனசாட்சி இல்லாமல் பச்சை பொய்யை பேசுவது ஆகியன இந்த கோமாளி கூட்டத்தின் வேலை. இவர்களுக்கெல்லாம் சம்பளம் வேறு. மக்களின் வரிப்பணம் எப்படி எல்லாம் பாழாகிறது. அப்படியே லெமூரியா கண்டமும் இருந்தது என வைத்துக் கொண்டாலும் அது இருந்ததாக அப்போதைய அறிஞர் Philip Schalter ஆல் சொல்லப் பட்ட காலம் 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர். அப்போது பூமியில் மனிதர்களே கிடையாது. கார்த்திகேயன் மாதிரி சில பைத்தியங்கள் இந்த கோமாளி கூட்டத்தின் பேச்சுகளையும் எழுத்துகளையும் உண்மை என நம்பி உண்மையை சொல்பவர்களை சங்கி சிங்கி என வசைபாடுகிறார்கள்.

      • சென்னைக்கு அருகில் இருக்கும் அத்திரம்பாக்கம் என்னும் கிராமத்தில் 2,50,000 முதல் 3,85,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகளை கண்டுபிடித்துள்ளார்கள். ஆகவே மனித இனம் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பும் இருந்துள்ளன .. சிந்து சமவெளி நாகரிகம் இருந்த பகுதியில் கூட இவ்வளவு பழமையான கற்கருவிகள் கிடைத்ததில்லை ..ஆகவே இங்கு காமெடி பீஸ் யாரென்று காலம் முடிவு செய்யும் ..

        இதற்க்கான ஆதாரங்கள் :- https://thewire.in/science/stone-tools-found-tamil-nadu-suggest-humans-left-africa-much-earlier

        https://www.nationalgeographic.com/news/2018/01/india-stone-tools-human-evolution-archaeology-science/

  10. //சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழியை பேசினார்கள் என வாதிடுவது மிகப்பெரிய பித்தலாட்டம்.//

    வேற அவர்கள் என்ன சீன மொழி பேசினார்களா ??? திராவிட மொழி என்றால் அது தமிழ் மட்டும் தான், அவர்கள் பேசியது பழந்தமிழ் மொழி தான்.. திராவிடம் என்றாலே மூன்றுபக்கமும் கடல் சூழ்ந்த நாடு(பகுதி) என்று பொருள், அப்படி பார்த்தால் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த நாடு தென்னிந்தியா குறிப்பாக தமிழகம் தான்..

    //கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் போய் தமிழில் இருந்துதான் கன்னடமும் தெலுங்கும் உருவாகின என வாதிட்டால் உதைப்பார்கள். //

    அதே போன்று கன்னடமும் தெலுங்கும் திராவிட மொழிகள் தான் என்று கூறி பாருங்கள், அதற்கும் உங்கள் பல்லை உடைத்து அனுப்புவார்கள். அவர்களை பொறுத்தவரை தங்கள் மொழியை ஆரியத்தோடு தான் இணைத்து கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் ஏற்கவில்லை என்றால் தமிழில் இருந்து கிளைத்த மொழிகள் இல்லை என்றாகிவிடுமா ..

    இதுவரை கிடைத்த சான்றுகளில் தமிழகத்தில் கிடைத்த தொன்மையான எழுத்துக்கள் தான் சிந்துவெளி எழுத்துக்களோடு ஒத்துப்போகின்றது. வேறு எந்த மொழியின்(தெலுங்கு, கன்னடம்) பழைய எழுத்துக்களும் ஒத்து போகவில்லை என்பது தன் ஐராவதம் மஹாதேவன் கூற வருவது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதன் காலம் கி.மு. 2000 – கி.மு. 1500 ஆகும். இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து.

    //அந்த திராவிட மொழி காலப்போக்கில் வட திராவிட மொழி, நடு திராவிட மொழி, தென் திராவிட மொழி என பிரிந்தது. வட திராவிட மொழியிலிருந்து //

    முதலில் , சிந்துவெளி நாகரீகம் ஆரிய நாகரீகமல்ல என்று ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.. இதற்க்கு மேல் அங்கு பேசப்பட்டது வடதிராவிடமா , தென் திராவிடமா அல்லது வேறு என்ன மொழி என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.. ஆடு மாடு மேய்த்து கொண்டு வந்த உங்களின் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பல்களை செத்த பாஷையாம் சமற்கிருதத்தை தூக்கி கொண்டு போக சொல்லுங்கள், அதை மட்டும் நீங்கள் செய்தால் போதும் …

    சிந்துவெளி மக்களோடு ஒத்து போக கூடிய அறிவிலும் பண்பிலும் முதிர்ச்சி பெற்ற மக்கள் இந்தியாவை பொறுத்தவரை தமிழர்கள் மட்டுமே தான் ..அது வேறு எந்த மொழிகளுக்கும் இல்லாத தமிழர்களின் 2000 ஆண்டு இலக்கிய வரலாற்றை ஆராய்ந்தாலே தெரியும் …

    • சிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைத்த குறியீடுகள் சமஸ்கிருத மொழியின் பழைய எழுத்து வடிவம் என்று சொல்லி நிறைய பேர் புத்தகங்களை எழுதி தள்ளி இருக்கிறார்கள். ஐஐடி களில் கருத்தரங்குகளையும் நடத்தியிருக்கிறார்கள். ஆகையால் இந்த மாதிரியான சேட்டைகள் புதிது அல்ல.

      • அப்படி பட்ட நபர்களை நான் சந்தித்து உரையாடியும் இருக்கிறேன், சமஸ்க்ருதத்தில் பழைய எழுத்துக்களுக்கான ஆதாரங்களை கேட்டபோது மழுப்பினார்களே தவிர அதற்க்கு எந்த சான்றுகளும் தரவில்லை ..

  11. இந்த ஒரிசா பாலுவுக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. மனித இனம் தோன்றியது கடந்த 2 லட்சம் ஆண்டுகளுக்குள்தான். அதுவும் மனிதர்கள் நாடு, நகரம் ஆகியவற்றை ஏற்படுத்தி நாகரீகத்தோடு வாழ ஆரம்பித்தது கடந்த 10000 ஆண்டுகளாகத்தான். அதற்கு முன்னர் மனிதர்கள் காட்டுமிராண்டிகளாக தான் இருந்தார்கள். ஒரிசா பாலு மாதிரியான காமெடி பீஸ்கள் சமஸ்கிருத மொழிக்கும் இருக்கிறார்கள். சமஸ்கிரத மொழி 10 ஆயிரம் ஆண்டு காலம் பழமையானது. சிந்து சமவெளி நாகரிகம் தான் சரஸ்வதி நதி நாகரீகம். ஐரோப்பாவில் இருக்கும் அனைத்து மொழிகளும் கலாச்சாரங்களும் இந்தியாவில் இருந்துதான் போயின என இவர்கள் காமெடி செய்கிறார்கள். இங்கே சென்னையிலேயே கல்யாணராமன் என்னும் ஒரு காமெடி பீஸ் இருக்கிறார் இவர் ஒரு காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவராம் சரஸ்வதி சிந்து நதி ஆராய்ச்சி மையம் என்னும் ஒன்றை நடத்தி வருகிறார் இவருடைய இணையதளத்தை பார்த்தால் தலை சுற்றும். அந்த வலைத் தளத்தின் முகவரி கீழே

    http://bharatkalyan97.blogspot.com/?m=1

    நானே சங்கியாக தெரியும்போது இவர்கள் உங்களுக்கு எப்படி தெரிவார்களோ. தமிழ்நாட்டில் அரசியல் காரணங்களுக்காக தமிழ் மொழி குறித்த மாயைகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன இதனால் தமிழ் மொழிக்கு வெளியுலகில் நியாயமாக கிடைக்க வேண்டிய மரியாதை கிடைப்பதில்லை. ஆங்கில பாடப் புத்தகத்தை தயாரித்தவர்கள் சரியாக தான் எழுதியிருக்கிறார்கள்.

  12. “வேற அவர்கள் என்ன சீன மொழி பேசினார்களா ??? திராவிட மொழி என்றால் அது தமிழ் மட்டும் தான், அவர்கள் பேசியது பழந்தமிழ் மொழி தான்.. ”

    எப்படி அம்மா அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள். ஏதாவது ஞானதிருஷ்டியில் பார்த்தீர்களா? அல்லது டைம் மெசினில் போய் பார்த்தீர்களா? சிந்து சமவெளியில் தமிழ் மொழியை பேசினார்கள் என்றால் ஏன் பாகிஸ்தானில் பேசப்படும் பிராகுயி என்னும் திராவிட மொழிக்கும் தமிழுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது? சிந்து சமவெளியில் திராவிட மொழி பேசப்பட்ட தற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அது நிச்சயம் தமிழ் இல்லை. ஏனெனில் தமிழ் மொழி கிமு 1000 வாக்கில் தான் தென் திராவிட மொழியிலிருந்து பிரிந்து வலுவான பேச்சு மொழியாக உருவாகி இருக்க வேண்டும். ஆங்கில பாடப் புத்தகத்தை உருவாக்கியவர்கள் இதற்கு மேற்கோள் காட்டுவது George L Hart என்னும் அறிஞரை. இந்த அறிஞர்தான் தமிழ்மொழி செம்மொழி என்னும் உண்மையை அதிகாரப்பூர்வமாக கடிதம் மூலம் வெளியிட்டவர். இவர் கடிதம் வெளியிட்ட பின்னர் தான் மத்திய அரசிடம் செம்மொழி என்னும் தகுதியை வாங்க தமிழ் அறிஞர்கள் என்னும் கூட்டமும் திராவிட கட்சிகளும் முனைப்பு காட்டினர். இந்த அறிஞர் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் ஆழ்ந்த புலமை உள்ளவர். அவர் சொல்வது மிகவும் சரியானது தான். ஆங்கிலப் பாட நூலில் சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது.

  13. சமஸ்க்ருதம் 4000 ஆண்டுகள் பழமையானது என்று நீங்கள் எந்த டைம் மெஷினில் பார்த்துவிட்டு வந்தீர்களோ அதே டைம் மெஷினில் தான் நானும் பார்த்து வந்தேன். கி.பி யில் எழுத்து உருவான சமஸ்க்ருதமே 4000 ஆண்டுகள் பழமையென்றால், கி.முவில் உருவான தமிழ் எத்தனை ஆண்டுகள் பழமையானதாக இருந்திருக்கும் என்று நான் சொல்லி தெரிய வேண்டி அவசியமில்லை…

    //ஏனெனில் தமிழ் மொழி கிமு 1000 வாக்கில் தான் தென் திராவிட மொழியிலிருந்து பிரிந்து வலுவான பேச்சு மொழியாக உருவாகி இருக்க வேண்டும். //

    இதற்க்கு தெளிவான ஆதாரம் இருந்தால் கொடுக்கவும், அந்த தென் திராவிட மொழி எப்படி இருந்தது, அதன் எழுத்து அமைப்பு , உச்சரிப்பு ஆகியவற்றை கொடுக்கவும் .. இல்லை என்றால் இதோடு இதை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளவும் ..

    //சிந்து சமவெளியில் தமிழ் மொழியை பேசினார்கள் என்றால் ஏன் பாகிஸ்தானில் பேசப்படும் பிராகுயி என்னும் திராவிட மொழிக்கும் தமிழுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது?//

    எப்பா புத்திசாலி … பக்கத்தில் இருக்கும் கேரளத்திலேயே வடமொழி தாக்கத்தால் சேர நாடு தமிழ் சிதைந்து தான் மலையாளமாக உருமாறி இருக்கிறது எனும் போது, எங்கோ 2500 மைல் அங்கிட்டு பேசப்படும் பிராகுய் மொழி மட்டும் எப்படி தப்பிக்கும், மோசமான பண்பாட்டு படையெடுப்புகள், வடமொழி தாக்குதல், பாரசீக மொழியின் தாக்கம், அரபு மொழியின் தாக்கம் என்று பல்வேறு தாக்கங்களை தாங்கி கொண்டு ஒருஅளவு தமிழின் சாயலோடு இருப்பதே பெரிது.. இதில் இடைவெளி பற்றி பேசுவது அறிவின்மை ..

    இப்போதும் சொல்கிறேன் சிந்துவெளியில் இருந்தது பழந்தமிழ் தான்…தமிழக்தில் கிடைத்த பழமையான எழுத்துக்களோடு மட்டும் தான் சிந்துவெளி எழுத்துக்கள் ஒத்துபோகின்றதே தவிர மற்றபடி வேறு எந்த மொழியினுடைய எழுத்துக்களோடுமல்ல ..இதனை தான் ஐராவதம் மகாதேவன் அஸ்க்கோ பர்போலா போன்ற ஆய்வாளர்கள் கூறுவதும் …

  14. மலையாளத்தில் இருக்கும் சமஸ்கிருத மயத்தை நீக்கிவிட்டு பார்த்தால் அது கொடுந்தமிழ் என்பது தெரியும். ஆனால் பிராகுயி மொழி அப்படி செய்தால் ஏன் தமிழோடு ஒத்த மொழியாக கன்னடம் மாதிரி தெரிவதில்லை. கன்னடம் தெலுங்கு ஆகியவற்றில் இருக்கும் ஆரியத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் தமிழுக்கும் கன்னடத்திற்கும் இருக்கும் இடைவெளியை விட தமிழுக்கும் தெலுங்குக்கும் இடையே இருக்கும் இடைவெளி அதிகம். ஏனெனில் தமிழும் கன்னடமும் தென் திராவிட மொழியிலிருந்து பிரிந்தவை. தெலுங்கு மொழி நடுத் திராவிட மொழியிலிருந்து பிரிந்தது. அதனால் தான் தமிழுக்கும் கன்னடத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளியை விட தமிழுக்கும் தெலுங்குக்கும் இடையே இருக்கும் இடைவெளி அதிகம். வட திராவிடத்திலிருந்து பிரிந்த பிராகுயி மொழியோடு ஒப்பிடும்போது இந்த இடைவெளி இன்னும் அதிகம். அதனால் சிந்து சமவெளியில் பழந்தமிழில் பேசினார்கள் என்பது கற்பனை மட்டும். எழுத்து உருவான காலத்தை வைத்து ஒரு மொழியின் பழமையை எடை போடக்கூடாது என்பது மொழியியலாளர் கருத்து.. ஆங்கிலம் பிரெஞ்சுக்கு அப்புறம் வெகு காலம் கழித்து தான் தமிழ் மொழி அச்சில் ஏறியது. அதற்காக ஆங்கிலத்தையும் பிரெஞ்சு மொழியையும் தமிழைவிட பழமையானவை எனக் கூற முடியுமா. ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்துக்குள் நுழையும்போது ஊமைகளாக வரவில்லை. அவர்கள் ஏதோ ஒரு மொழியை பேசிக்கொண்டு வந்தார்கள். அந்த மொழியில் தான் ரிக்வேதத்தை புனைந்தார்கள். ரிக் வேதத்துக்கும் மற்ற வேதங்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. ரிக் வேதத்தில் பயன்படுத்தப்பட்ட மொழி மிகவும் பழமை வாய்ந்த சமஸ்கிருதம். Archaic language. ரிக் வேதம் காட்டும் நிலப்பரப்பு இன்றைய பஞ்சாபிலிருந்து பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் என ஈரான் வரை நீள்கிறது. மற்ற வேதங்களை போல் அல்லாமல் ரிக் வேதம் நாடோடி வாழ்க்கை முறை அது சார்ந்த சடங்குகள் ஆகியவற்றை அலசுகிறது. அப்புறம் ரிக் வேத சமஸ்கிருத நடையோடு ஒப்பிடக்கூடிய ஈரானின் அவஸ்த்தன் மொழி மற்றும் கலாச்சாரம். இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன. இவற்றால்தான் உலகின் மிகவும் பழமை வாய்ந்த இலக்கியங்களில் ரிக் வேதமும் ஒன்று என மேற்கத்திய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எத்தனை முறை கால இயந்திரத்தில் பயணம் செய்ய நேர்ந்தாலும் மரமண்டைகளுக்கு உரைக்காது. ஏனெனில் தமிழகம் அறிவு வறுமைக்கு பெயர்போன மாநிலம். அதிலும் தமிழ் அறிஞர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் கோமாளிகள் பற்றி சொல்லவே தேவை இல்லை சில காலத்துக்கு முன்னர் தினமணி நாளேட்டில் மலையமான் என்னும் கோமாளி தமிழ் மொழியிலிருந்து கொரிய மொழி உருவானது எண்ணும் தோரணையில் கட்டுரையை தீட்டினார். சிறிது காலம் கழித்து சிந்தி மொழி தமிழில் இருந்து உருவானது என எழுதினாறர் இனி ஜாவா சி பிளஸ் பிளஸ் மட்டும் தான். வாழ்க்கை ஐராவதம் மகாதேவன் அஸ்கோ பர்போலா போன்றவர்கள் சிந்து சமவெளியில் திராவிட மொழி பேசப்பட்டது என்று சொன்னார்களே தவிர தமிழ் மொழியை பேசினார்கள் என்று சொல்லவில்லை.

  15. அப்படி எந்த ஒரு இடைவெளியும் தமிழுக்கும் தெலுங்கிற்கும் இருப்பதாக எனக்கு தெரியவில்லையே.. செப்பு அதாவது சொல்லு என்பது தெலுங்கில் இருக்கும் சுத்தமான தமிழ்ச்சொல் தான், அதே போன்று பசுமாட்டை குறிக்கும் ஆவு என்ற சொல் தூய தமிழ் தான், சில சொற்கள் பெயர்-பெரு, பன்றி-பண்டி, பாடு(Sing )-பாடு, பத்து-பத்தி, புகை-புகே, போ- வெள்ளு வெளியேறு என்னும் தமிழ் சொல்லின் அடியொற்றி வந்ததே. ஆகவே இது போன்ற நூற்றுக்கணக்கான சொற்கள் தமிழாகவே இருக்கின்றன .. உங்கள் வாதம் செல்லாது …

    //ஆங்கிலம் பிரெஞ்சுக்கு அப்புறம் வெகு காலம் கழித்து தான் தமிழ் மொழி அச்சில் ஏறியது. அதற்காக ஆங்கிலத்தையும் பிரெஞ்சு மொழியையும் தமிழைவிட பழமையானவை எனக் கூற முடியுமா. //

    அட அறிவே … ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் விஞ்ஞானம் கண்டுபிடிப்பிற்கும் வித்யாசம் கூட தெரியாத மங்குனியா நீங்கள்.. நான் கேட்டது 3000 ஆண்டுகளுக்கு முன்பே சமக்ருதம் இருந்தது என்பதற்கு என்ன சான்று இருக்கிறது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்குள் வந்துவிட்டார்கள் என்றால், அந்த மொழியின் பண்பாட்டின் கூறு ஒன்று கூட சிந்துவெளியில் கிடைக்கவில்லையே.. 2500 ஆண்டுகள் பழமையான கீழடியிலேயே வேத நாகரீகம் தொடர்பாக ஒன்றும் கிடைக்கவில்லையே.. பார்ப்பன கைக்கூலிகளுக்கு எவ்வளவு சொன்னாலும் இது மட்டும் மண்டையில் உரைக்கவில்லை என்றால் நான் என்ன செய்வது ..

    //ரிக் வேதம் காட்டும் நிலப்பரப்பு இன்றைய பஞ்சாபிலிருந்து பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் என ஈரான் வரை நீள்கிறது.//

    ரிக் வேதத்தில் இருந்து அதற்காக ஆதாரத்தை கொஞ்சம் எதுத்துக் காட்டவும் ..

    //ஐராவதம் மகாதேவன் அஸ்கோ பர்போலா போன்றவர்கள் சிந்து சமவெளியில் திராவிட மொழி பேசப்பட்டது என்று சொன்னார்களே தவிர தமிழ் மொழியை பேசினார்கள் என்று சொல்லவில்லை.//

    தமிழோடு ஒத்த திராவிட மொழி என்று தான் கூறினார்கள், இன்றளவும் தமிழ்நாட்டில் கிடைக்க பெரும் பழைய எழுத்துக்கள் மட்டும் தான் சிந்துவெளி எழுத்துக்களோடு ஒத்து போகின்றது … உங்களின் அடுத்த பார்ப்பன கைக்கூலி வேலையை அடுத்த மறுமொழியில் மீண்டும் முயற்சிக்கவும் ..

  16. //மலையாளத்தில் இருக்கும் சமஸ்கிருத மயத்தை நீக்கிவிட்டு பார்த்தால் அது கொடுந்தமிழ் என்பது தெரியும். //

    நீங்கள் ஒரு அறிவு விளக்கம் இல்லாத பார்ப்பன கைக்கூலி என்பது இதன் மூலம் தெரிகிறது .. சமஸ்க்ருத்தை கடாசிவிட்டால் மலையாளத்தில் மிச்சம் இருப்பது செந்தமிழ் தான் .. மெதுவாக பேசுங்கள் என்பதை கூட மிக அழகாக “பைய்ய பறையு” என்று தான் பேசுவார்கள். கீழே போகிறேன் என்பதை தாழ(கீழ) போறேன் ” என்று தான் சொல்வார்கள்.. தண்ணீரை வெள்ளம் என்று தான் அழைப்பார்கள். அவர்களை உணவை “சோறு” என்னும் தூய தமிழில் தான் பேசுகிறார்கள், ஏனென்றால் மலையாளிகள் சோறு தின்கிறார்கள், ஆனால் நாம் …. இன்றும் கூட தமிழ்நாடு மக்களை காட்டிலும் ழகரத்தை மிக சரியாக உச்சரிப்பது அவர்கள் தான்..

  17. நான் ஒரு மொழி குடும்பத்தில் இருக்கும் மொழிகளுக்கிடையே இருக்கக்கூடிய இடைவெளிகளை பற்றி பேசுகிறேன். நீங்கள் ஒரு மொழி குடும்பத்திற்கே பொதுவாக இருக்கும் சொற்களைப் பற்றி பேசி குழப்புகிறீர்கள். சிந்து சமவெளியில் தமிழ் மொழி பேசப்பட்டு பயன்படுத்தப்பட்டு இருந்திருந்தால் அங்கிருக்கும் குறியீடுகள் காலப்போக்கில் வளர்ந்து செம்மைப்படுத்தப்பட்டு நல்ல எழுத்து வடிவம் கி-மு ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் தமிழ் மொழிக்கு வாய்த்திருக்கும். ஆனால் கீழடி முதலிய இடங்களில் கிடைக்கக்கூடிய தமிழ்மொழிக்கான எழுத்து வடிவம் மிகவும் ஆரம்ப நிலை வடிவமே.Elementary. இந்தக் குறியீடுகள் குறிலுக்கும் நெடிலுக்கும் வேறுபாடு காட்டாதவை. அதனால் தான் சிந்து சமவெளியில் திராவிட மொழி பேசப்பட்டு இருக்கக்கூடும். ஆனால் அது நிச்சயம் தமிழ் கிடையாது என கூறுகிறோம். கிமு இரண்டாயிரத்துக்கு பிறகு ஆரியர்கள் இந்தியத் துணை கண்டத்தில் நிலை கொண்டதற்கான தொல்லியல் ஆதாரங்கள் நிறையக் கிடைத்துள்ளன. ஆனால் அவை சிந்து சமவெளி பகுதியில் அந்த நாகரீகத்தின் காலகட்டத்தில் கிடைக்கவில்லை. அதனால் தான் சிந்து சமவெளி நாகரிகமும் வேதகால நாகரீகமும் வேறு வேறு என தொல்லியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அதற்காக கிமு இரண்டாயிரத்தில் சமஸ்கிருதம் பேச்சுமொழியாக கூட இல்லை என்று சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். தமிழ்மொழி பிற்காலத்தில் தான் தென் திராவிடத்திலிருந்து பிரிந்து உருவாகியிருக்க வேண்டும். அதனுடைய ஆரம்பநிலை எழுத்து வடிவங்கள் இதைத்தான் காண்பிக்கின்றன. மலையாளத்தில் இருக்கும் சமஸ்கிருத மயத்தை நீக்கிவிட்டால் எஞ்சியிருப்பது கொடுந்தமிழ் தான். செந்தமிழ் அல்ல. தமிழ்நாட்டில் அரசியல் நோக்கத்திற்காக திட்டமிட்டே தமிழ் மொழி குறித்த சில மாயைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே போன்ற அரசியல் நோக்கத்துக்காக சமஸ்கிருத மொழிக்கும் அகில இந்திய அளவில் ஏன் உலக அளவில் கூட சில மாயைகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் உண்மை என ஒன்று இருக்கிறது. பகுத்தறிவு இருப்பவர்கள் அதை அலசி ஆராய்ந்து தேடுவார்கள். மொழி வெறியும் மொழி வெறுப்பும் இருப்பவர்கள் இதை செய்ய மாட்டார்கள். சுற்றிவளைத்து குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள்.

  18. //கிமு இரண்டாயிரத்துக்கு பிறகு ஆரியர்கள் இந்தியத் துணை கண்டத்தில் நிலை கொண்டதற்கான தொல்லியல் ஆதாரங்கள் நிறையக் கிடைத்துள்ளன. //

    சிந்துவெளியில் ஆரியர் இருந்ததற்கான ஆதாரங்களை கூறவும் …

    //தமிழ்மொழி பிற்காலத்தில் தான் தென் திராவிடத்திலிருந்து பிரிந்து உருவாகியிருக்க வேண்டும்.//

    தென் திராவிட மொழி எது அது எப்படி இருந்தது என்று போன மறுமொழியிலேயே கேட்டுவிட்டேன், இதற்கான ஆதாரத்தை இதுவரை நீங்கள் நாணயமாக கொடுக்கவில்லை .. ஆகவே இதனை நான் செல்லாத வாதமாக (Void statement ) எடுத்துக் கொள்கிறேன் ..

  19. “சிந்துவெளியில் ஆரியர் இருந்ததற்கான ஆதாரங்களை கூறவும் …”
    சிந்து சமவெளி நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது அங்கு ஆரியர்கள் இல்லை. அது கிமு இரண்டாயிரத்துக்கு பிறகு தேய ஆரம்பித்த காலகட்டத்தில் ஆரியர்கள் வருகை நிகழ்ந்தது. அந்த நாகரிகம் தேய ஆரம்பித்ததற்கு ஆரியர்கள் தான் காரணம் என்றும் பருவநிலை மாறுபாடு தான் காரணம் என்றும் பல வாதங்கள் வல்லுநர்களால் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்தின் மக்கள் விட்டுப்போன எச்சங்களுக்கும் வேதகால நாகரிகத்தின் எச்சங்களுக்கும் ஆயிரம் ஆண்டு கால இடைவெளி இருப்பதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள். இரண்டு நாகரீகங்களும் ஒன்றல்ல என ஏற்கனவே சொன்னேன். திரும்ப ஏன் சிந்து சமவெளியில் ஆரிய அடையாளத்தை கேட்கிறீர்கள் என தெரியவில்லை. ஆனால் தேய்மானம் அடைந்த காலத்தில் ஆரியர்கள் வந்து கலந்து இருக்கலாம் என ஒரு சாரார் கூறுகிறார்கள். எந்த வகையில் பார்த்தாலும் சிந்து சமவெளியில் திராவிட மொழி பேசப்பட்டது பயன்படுத்தப்பட்டது என்று சொல்லலாமே தவிர அது தமிழ் இல்லை. திராவிட மொழி குடும்பம் தமிழ் மொழியை விட தொன்மையானது. தென் திராவிடத்திலிருந்து தமிழ் கன்னடம் துளு ஆகிய மொழிகள் பிறந்ததாக விக்கிபீடியாவில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. வேண்டுமானால் அதில் போய் பார்த்துக் கொள்ளவும். ஐராவதம் மகாதேவன் அஸ்கோ பர்போலா போன்ற வல்லுநர்கள் சிந்து சமவெளியில் திராவிட மொழி பேசப்பட்டது என்று சொன்னார்களே தவிர அது தமிழ் தான் என்று சொல்லவில்லை. சொல்ல மாட்டார்கள். திராவிட மொழிக்குடும்பத்தில் எத்தனையோ பிரிவுகள் உள்ளன. அதில் ஒரு பிரிவில் இருந்து பிறந்ததுதான் தமிழ் மொழி. ஆகையால் திராவிடம் என்றால் தமிழ் தமிழ் என்றால் திராவிடம் என்று சொல்வது மிகையான வாதம். மற்ற திராவிட மொழிகளை காட்டிலும் அதிக திராவிட தன்மைகளை தமிழ் மொழி பாதுகாத்து வைத்திருப்பதால் சிலர் அப்படி சொல்லக்கூடும். ஆனால் தமிழ் என்பது பல கிளைகளாக பிரிந்த திராவிட மொழிக் குடும்பத்தின் ஒரு கிளையின் கிளையிலிருந்து பிறந்தது.
    உங்களுக்கு நான் ஒரே ஒரு ஆலோசனையை வழங்க கடமைப்பட்டுள்ளேன் தமிழ்மொழி சமஸ்கிருத மொழி குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேற்கத்திய ஆய்வாளர்கள் ஆங்கில மொழியில் எழுதியவற்றை தயவு செய்து படிக்கவும் உள்ளூரில் இருக்கும் தமிழ் கோமாளிகள் தமிழ் மொழியில் எழுதியவற்றையும் யூட்யூபில் சொன்னதையும் பார்த்துவிட்டு தயவுசெய்து வாதம் செய்ய வேண்டாம். இங்கு இருக்கக்கூடிய அரசியல் நிலைமை அப்படி.

  20. நம் வரலாற்று அறிஞர்களின் அறிவு நாணயத்தை இழிவுபடுத்தும் பெரியஸ்வாமியின் பேச்சுக்கள் அருவருப்பை ஏற்படுத்துகிறது…!

  21. நான் மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறுவதைத்தான் நம்ப கூடியவன். ஏனெனில் அவர்கள்தான், ஒரு சிலர் தவிர, விருப்பு வெறுப்பில்லாமல் ஆராய்ச்சி நோக்கில் மட்டும் ஆராய கூடியவர்கள். சமஸ்கிருதம் தமிழ் ஆகிய இந்திய மொழிகள் குறித்து சில அரிய உண்மைகளை அவர்கள்தான் கண்டுபிடித்து கூறியிருக்கிறார்கள். தமிழறிஞர்கள் சமஸ்கிருத பண்டிதர்கள் எனக் கூறப்படும் கோமாளி கூட்டம் அல்ல. உண்மையில் நீங்கள் இந்த கோமாளிகளை நினைத்து தான் அருவருப்பு அடைய வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க