பாஷையின் சிறப்பியல்பு, பாஷையின் சீர்திருத்தம், பாஷை வேறுபடுகிறது என்பதான சொற்களில் வடமொழி எழுத்தைப் பயன்படுத்தித் தமிழ் மொழியின் வரலாறு குறித்து வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் எனும் பரிதிமாற் கலைஞர் அவர்கள் நூல் எழுதியுள்ளார். வடமொழிக் கலப்புக் குறித்தும் எழுதியுள்ளார்.

நூல் எழுதிய காலத்தில் வடமொழியின் செல்வாக்கு எவ்வகையில் தாக்கம் பெற்றுள்ளது என இந்நூல் மூலம் எளிதில் உணரமுடிகிறது. (நூலின் அணிந்துரையிலிருந்து…)

வடமொழி தமிழ் மொழியோடு கலக்கப் புகு முன்னரே, முன்னது பேச்சுவழக்கற்று ஏட்டு வழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்து விட்டது. ஏட்டு வழக்கொன்றுமேயுள்ள பாஷையோடு இருவகை வழக்குமுள்ள பாஷையொன்று கூடியியங்கப் புகுமாயின் முன்னதன் சொற்களே பின்னதன் கட் சென்று சேருமேயன்றிப் பின்னதன் சொற்கள் முன்னதன் கட்சென்று சேரா, இது பாஷை நூலின் உண்மைகளுளொன்று. இதுவே வழக்காற்று முறை. இம்முறை பற்றியே வடசொற்கள் பல தமிழின் கட் புகுந்தன. தமிழ்ச் சொற்களிற் சிலதாமும் வடமொழியின்கண் ஏறாமற் போயின. எனினும் தென்னாட்டு வடமொழியாளர் மட்டிற் சில ஊர்ப் பெயர், மலைப்பெயர், யாற்றுப் பெயர் முதலாயினவற்றைத் தங்கள் சப்த சாஸ்திரத்திற் கியைந்த வண்ணம், ஓசை வேறுபாடு செய்து கொண்டு தாங்கள் வகுக்கப் புகுந்த புராணாதிகளில் வழங்குவாராயினர். இதுதானுண்மை; இதற்கு மேலொன்றுஞ் சொல்லல் இயலாது.

இனித் தமிழ்ப் புலவர்களாயினார் சமஸ்கிருதச் சொற்களை எவ்வளவோ விலக்கிப்பார்த்தும் அவற்றை விலக்குதல் முடியாது போயிற்று. போகவே தமிழ்ப் புலவர்களும் தங்கள் முயற்சிகளெல்லாம் வீணாதல் கண்டு வேண்டா வெறுப்பாய்த் தமக்கு வேண்டிய சிற்சில சொற்களை மட்டில் தங்கள் எழுத்திலக்கண விதிகட்குத் தக்கவாறு திரித்து மேற்கொள்வாராயினார்; ஆரியச் சொற்கள் தமிழில் வருவதற்கேற்ற விதிகளும் வகுத்தனர். பின்னர்க் கொஞ்சங் கொஞ்சமாக வடசொற்கள் பல தமிழ்மொழியின் கண் இடம் பெறுவனவாயின.

அதன்மேல் முதலிடை கடையெனும் முச்சங்கத்தார் காலத்தினும் வடசொற்கள் தமிழ் நூல்களிலேறின. ஆயினும் அவை சிறிதளவேயாம். தொல்காப்பியம்’ என்னும் இலக்கணத்தினுள்ளும், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் நூற்றொகைகளுள்ளும் ஆங்காங்கு இரண்டொரு வடசொற் காணப்படலாமே யன்றி, அதற்குமேலில்லை,

பின்னர்ப் பெளத்தராயினார் தலையெடுத்துத் தம் மதத்தை யாண்டும் பரப்பிப் பல்லாயிரக்கணக்காகச் சனங்களைச் சேர்த்துக் கொண்டு அக்காலத்திலிருந்த ஆரியரை யெதிர்த்தனர். இப்பகைமை தென்னாட்டினும் பரவிற்று. பரவவே தமிழருட் பலர் பௌத்த மதம் மேற்கொண்டு ஆரியரை யெதிர்ப்பதில் நோக்க முற்றிருந்தனர். அக்காலத்தில் மறுபடியும் தமிழ்ப் புலவர்கள் தங்களாற் கூடியமட்டில் வட சொற்களைத் தமது தமிழ்மொழியின் கண்ணே கலக்க வொட்டாது தடுத்தனர். முன்னரே தமிழிற் போந்து வேரூன்றி விட்ட வடசொற்களைத் தொலைப்பது அவர்கட்குப் பெருங்கஷ்டமாய்விட்டது. ஆதலின் அவர்கள் என்செய்ய வல்லர்? முன்னரே வந்தனபோக, இனிமேலாதல் அப்பொல்லாத வடசொற்கள் தமிழின் கண் வாராதவாறு பாதுகாத்தல் வேண்டுமென்று சிறிதுகாலம் முயன்றனர். அவ்வாறே இவர்களது விடாமுயற்சியாற் சிறிது காலம் வடசொற்கள் தமிழில் அதிகமாய் வந்து கலவாமலுமிருந்தன. இக்காலத்திலேதான் ‘செந்தமிழ், கொடுந்தமிழ்’ எனத் தமிழ் இரு பிரிவினதாகியியங்கப் புகுந்தது. செந்தமிழாவது புலவராயினார் பயிலுந் தமிழ்; கொடுந்தமிழாவது புலவரல்லாத சாமானிய மக்கள் பயிலுந் தமிழ்.

படிக்க:
தாய் மொழி வழிக் கற்றல் – அவசியம் ஏன் ?
100 நாட்களுக்குள் 46 அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு !

… இனி எத்துணை நாள் மேன்மேலெழும் வெள்ளத்தைத் தடுத்துக் கொண்டிருத்தல் இயலும்? ஆதலாற் பெளத்தரது முயற்சியாலேற்பட்ட கரைகள் ஆரிய பாஷையின் அலைகளால் எற்றுண்டு அழிவனவாயின. பௌத்த சமயமுந் தலைதாழ்ந்தது.

இந்நிலைமையிற் சைனர் எழுந்தனர். அங்ஙனமெழுந்த சைனர் ஆரியரது ஆசாரங்களுட் பலவற்றை மேற்கொண்டனர்; அஃதன்றியும் வடமொழியின்கண் விசேஷ கெளரவமுடையராய் அதனைப் பெரிதும் பயில்வாராயினர். வடமொழியின் பாகதங்களையும் அவற்றினிலக்கணங்களையும் நன்குணர்ந்து கொண்டனர். இத்தகைய சைனப் புலவர்கள் தமிழ் மொழியையும் அப்பியசிக்கப் புகுந்து, தமிழின் கண்ணே அளவிறந்த வடசொற்களையேற்றினர்.

அத்துணையோடமையாது “மணிப் பிரவாளம்’ என்றதோர் புதிய பாஷை வகுத்துவிட்டனர். அஃதாவது தென்மொழியும் வடமொழியும் சரிக்குச்சரி கலந்த பாஷையாம். மணியும் பவளமுங் கலந்து கோத்ததோர் மாலை காட்சிக்கின்பம் பயத்தல் போலத் தமிழுஞ் சம்ஸ்கிருதமுங் கலந்த பாஷை கேள்விக்கின்பம் பயக்குமென்ற போலி யெண்ணமே இத்தகைய ஆபாச பாஷையொன்று வகுக்குமாறு தூண்டிற்று. ‘ஸ்ரீ புராணம்’ என்னும் சைன நூல் முழுவதும் மணிப்பிரவாள மென்னும் இவ்வாபாச நடையின் இயன்றதாமாறு காண்க.

இவ்வாறு சைனர் ஒருபுறஞ் செய்து கொண்டு செல்லா நிற்க, மற்றொரு புறத்தில் ஆரியப்புலவர் சிலர் தமிழ் மொழியை யப்பியசித்துக்கொண்டு, நீதிமார்க்கத்தையும் சமய சாஸ்திரங்களையும் தமிழர்க்குப் போதிப்போ மெனப் புகுந்து, தமது கருத்துக்களையெல்லாம் மேற்கூறிய மணிப்பிரவாள பாஷையில் வெளிப்படுத்துரைப்பாராயினார். ‘நாலாயிரப்பிரபந்தம்’ என்ற தமிழ் நூலிற்கு வியாக்கியானங்களும் இத்தகைய மணிப்பிரவாள நடையில் வகுக்கப்பட்டிருத்தல் காண்க. இவ்வண்ணம் பல திறத்தானும் வடசொற்கள் வந்து தமிழின்கண் அளவின்றியேறின. (நூலிலிருந்து பக. 9-11)

நூல் : தமிழ் மொழியின் வரலாறு
ஆசிரியர் : வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞர்)

வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில் நுட்பப்பயிலக வளாகம்,
தரமணி, சென்னை – 600 113.
தொலைபேசி எண்: 044 – 2254 2992.

பக்கங்கள்: 104
விலை: ரூ 45.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க