ற்போது நடைபெற்று வருகின்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் டிசம்பர் 4 அன்று, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தி தொடர்பாகப் பேசியதைப் பார்த்தவர்களுக்கு பாசிஸ்டுகள் எப்படிப்பட்ட திமிர்த்தனத்தோடும், உடல்மொழியோடும் இருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

வங்கிகள் சட்டத் திருத்த மசோதா தொடர்பாக நிர்மலா சீதாராமன் இந்தியில் பேசினார். அப்போது ‘இந்தி தெரியாமல் இந்தியில் தவறாகப் பேசுகிறார்’ என்று எதிர்க்கட்சியினர் தரப்பிலிருந்து குரல் எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், “நான் உங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களின் மாநிலத்தில் (தமிழ்நாடு) இருந்து வருகிறேன். அங்கே இந்தி படிப்பதே பெரிய பிரச்சனை. நான் சின்ன வயதில் இந்தி படித்தபோது கிண்டல் செய்யப்பட்டேன். அதனால், என்னுடைய இந்தியைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். உங்கள் பக்கத்தில் இருப்பவர்களிடம் கேளுங்கள். உங்கள் நண்பர்களின் இந்தி விரோதத்தைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்.

மேலும் “நான் சின்ன வயதில் இந்தி கற்ற சென்றபோது, தமிழ்நாட்டிலிருந்து கொண்டு, தமிழ்நாட்டின் உப்பைத் தின்றுவிட்டு வடநாட்டு மொழியான இந்தியைப் படிக்கப் போகிறாயா?” என்று பலமுறை அவமானப்படுத்தப்பட்டதாகவும், இந்த நிலை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பின்புலத்தால்தான் என்றும் கூறினார்.

”தமிழ்நாட்டில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் வந்தேறி மொழிகளாகக் கருதப்படுகிறது. தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது. அப்போது நான் இந்தி படிப்பதில் என்ன தவறு? சென்னையில் இந்தி பிரச்சார சபா எரிக்கப்பட்டது. நீங்கள் எனக்குப் பிடித்த மொழியைப் படிப்பதற்கான அடிப்படை உரிமையைப் பறித்தீர்கள். அதுவும் திணிப்புதானே” என்று பேசினார்.


படிக்க: வங்கிச் சட்டம்: மக்கள் பணத்தைச் சூறையாடுவதற்கான மாபெரும் தயாரிப்பு


போலி சுதந்திரத்திற்குப் பிறகான பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிப்பதற்கான முயற்சிகளை எதிர்த்து தமிழ் மக்களும், ஜனநாயக இயக்கங்களும் உயிரைக் கொடுத்துப் போராடி வந்த, இன்று வரை போராடிக் கொண்டிருக்கிற வரலாறு நாம் அறிந்ததே. தமிழ் மொழியைக் காக்கின்ற நோக்கிலும், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கின்ற நோக்கிலும் ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் விளக்கிப் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை.

அதேபோல் தமிழுக்கு அப்பாற்பட்டு இந்தி மட்டுமில்லாமல் பிறிதொரு மொழியைத் தனிப்பட்ட முறையில் கற்பதற்கான உரிமை தமிழ்நாட்டில் யாருக்கும் பறிக்கப்படவில்லை. இந்திப் பிரச்சார சபாக்களில் இந்தி கற்றுக் கொடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு நடத்தக்கூடிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி கட்டாயமாகத்தான் இருக்கிறது. இங்கு விண்ணப்பித்துத்தான் தமிழ் படிக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆனால் இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு தனிப்பட்ட அனுபவங்கள் என்று கூறி, பொய்யையும், புரட்டையும் பேசி தமிழ்நாட்டின் மீது தனது வன்மத்தைக் கக்கியுள்ளார் நிர்மலா சீதாராமன். தனது பேச்சின் மூலம் இந்தி பேசக் கூடிய மாநிலங்களில் தமிழ் மக்களின் மீது வெறுப்பை உருவாக்கும் வேலையைச் செய்துள்ளார். இவர் இந்தியை ஒழுங்காக கற்றுக் கொள்ளாததற்கு தமிழ்நாட்டின் மீதும், அரசியல் இயக்கங்களின் மீதும் வன்மத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார்.


படிக்க: அஜ்மீர் தர்காவை அபகரிக்கத் துடிக்கும் பாசிசக் கும்பல்


அதானி கிரீன் நிறுவனம் மின்சார விநியோகத்துக்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்தது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் மூலம் முறையாக விசாரிக்க உத்தரவிட வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குரல் எழுப்பியும், போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இது குறித்துப் பேசியுள்ள ராகுல் காந்தி “அதானி குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடி அனுமதிக்க மாட்டார். ஏனெனில், அதானி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் பிறகு மோடியும் விசாரணைக்கு உட்பட வேண்டியது இருக்கும் என்பது அவருக்குத் தெரியும்” என சரியாக அம்பலப்படுத்தியுள்ளார்.

கார்ப்பரேட் கிரிமினல் அதானிக்கு துணையாக இருக்கும் பாசிச மோடி கும்பலின் மக்கள் விரோதத் தன்மையை மறைப்பதற்கும், திசை திருப்புவதற்கும்தான் நிர்மலா சீதாராமனின் இந்த போலி இந்திப் பற்று நாடகம்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க