அஜ்மீர் தர்காவை அபகரிக்கத் துடிக்கும் பாசிசக் கும்பல்

நீதிபதி சந்திரசூட்டின் ஞானவாபி மசூதி குறித்த தீர்ப்புதான் தற்போது அனைத்துக்கும் அடிக்கொள்ளியாக அமைந்திருக்கிறது. அதனடிப்படையில் தான் இன்று சங்கிகள் வரிசையாக நீதிமன்றங்களுக்குப் படையெடுக்கிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரத்தில் கரீஃப் நவாஸ் என்கிற சூஃபி மதப்பெரியவரின் தர்கா அஜ்மீர் தர்கா என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாது ஆப்கானிஸ்தான் முதல் இந்தோனேசியா வரை உள்ள முஸ்லிம்கள் வழிபட்டுச் செல்கின்ற வகையில் முஸ்லிம் மக்களிடையே புகழ் பெற்று விளங்குகிறது அஜ்மீர் தர்கா.

இப்போது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிசக் கும்பல் அஜ்மீர் தர்காவைக் குறி வைத்திருக்கிறது. இந்துக்களின் பெயரால் அஜ்மீர் தர்காவை அபகரித்துக் கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது.

பாபர் மசூதியை இடித்துத் தள்ளிவிட்டு இராமர் கோயிலைக் கட்டிக்கொண்டதைத் தொடர்ந்து ருசி கண்டுவிட்டது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல். அடுத்து வாரணாசியில் இருக்கும் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகப் பிரச்சனையைக் கிளப்பி வழக்குப் போட்டு, வழக்கு நிலுவையில் இருக்கும் போதே நீதிமன்றத்தின் மூலமாகவே ஞானவாபி மசூதிக்குள்ளேயே சிவலிங்க வழிபாட்டு உரிமையை சட்டப்பூர்வமாகவே பெற்று விட்டது.

அதையே மாடலாக்கிக் கொண்டு சென்ற மாத நடுவில் உத்தரப்பிரதேசம் சம்பல் பகுதியில் இருக்கும் ஜாமா மசூதியில் பிரச்சனையைத் தொடங்கியது. கிரி மகராஜ் என்கிற மடத்துச் சாமியார் ஒருவன் புறப்பட்டு “சம்பல் ஜாமா மசூதி இதற்கு முன்னர் ஹரிஹர் கோயிலாக இருந்தது, அதை இடித்துத்தான் ஜாமா மசூதி கட்டப்பட்டுள்ளது” என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தான். ஹரிஹர் கோயிலை இந்துக்களுக்கு மீட்டுத் தர வேண்டும் என்றும் தொல்லியல் துறை மூலம் ஜாமா மசூதியை அகழாய்வு செய்ய வேண்டும் என்றும் வழக்கில் கோரியிருந்தான்.

அந்த மனுவை உடனே விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றமும் அந்த இடத்தை ஆய்வு (சர்வே) செய்ய ஒரு சிறப்புப் பிரதிநிதியை நியமித்து அனுப்பி வைத்தது. அதே நாளில் சென்று ஆய்வும் நடத்திவிட்டனர்.

சில நாட்கள் கழித்து மீண்டும் நீதிமன்ற பிரதிநிதி சர்வே செய்யப் போகும்போது போலீஸ் பெரும்படையாகப் பாதுகாப்புக்குச் சென்றது. அத்துடன் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூச்சலிட்டவாறு இந்துத்துவ கும்பலும் உடன் செல்லவே அவர்களை எதிர்கொள்ள முஸ்லிம் மக்கள் மசூதியை நோக்கி ஒன்று கூடினர்.

போலீசு பாதுகாப்பில் இருக்கும் திமிரில் கல்லெறிந்து வம்பிழுத்தது இந்து மத வெறி கூட்டம் தான். தற்காப்புக்காக எதிர்த் தாக்குதலில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது போலீஸ் இந்து வெறி குண்டர்களுடன் சேர்ந்து கொண்டு மக்களை மட்டுமல்லாது கட்டிடங்களையும் வாகனங்களையும் அடித்து நொறுக்கியதுடன் துப்பாக்கியால் சுட்டு ஐந்து பேரைக் கொலை செய்தது.


படிக்க: உத்தரப்பிரதேசம்: சம்பலும் அரசின் பொய்யுரைகளும்


இனி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பலுக்கு சம்பல்தான் முன் மாதிரியாகிவிட்டது. அதே நோக்கத்தோடும் அதே வழிமுறைகளோடும் தான் இப்போது அஜ்மீர் தர்காவைக் குறி வைத்திருக்கிறது.

“அஜ்மீர் தர்கா ஏற்கெனவே பதினோராம் நூற்றாண்டில் சிவன் கோவிலாக இருந்தது. கோரி முகமது இந்தியா மீது படையெடுத்து வந்தபோது அந்தக் கோயிலை இடித்துத் தள்ளிவிட்டு அந்த இடத்தில் இப்போது உள்ள தர்கா கட்டப்பட்டது. அப்போது ராஜஸ்தானத்தை ஆட்சி செய்த ராஜபுத்திர மன்னர் பிரிதிவிராஜ் சவுகான் பிறந்ததே ஆஷ்மீரில் தான். அப்போது அஜ்மீர் நகரத்துக்குப் பெயர் அஜய் மேரு என்றிருந்தது. இவை அனைத்தும் 1911 இல் அஜ்மீரின் வரலாற்றுச் சித்தரிப்பு (Ajmer Historic Descriptive) என்ற நூலில் ஹர்பிலாஸ் சந்தா என்பவர் தெளிவுபட எழுதி இருக்கிறார். அதுவே மறுக்க முடியாத ஆதாரம்” என்று கூறி இந்து சேனா என்கிற அமைப்பின் தேசியத் தலைவன் என்று சொல்லிக் கொண்டு விஷ்ணு குப்தா என்கிற நபர் அஜ்மீர் நீதிமன்றத்தில் வழக்குப் பகுதி செய்துள்ளான்.

அந்தப் புகாரில் கோரி முகமதுவால் இடிக்கப்பட்ட சிவன் கோவில் இடிபாடுகளைக் கொண்டே தர்கா கட்டப்பட்டு இருக்கிறது. அதற்கான சான்று இப்போதும் காணக்கிடக்கிறது. தர்காவின் நடுவில் இருக்கும் ஒரு நிலவறையில் இன்றும் அந்த சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது என்று அண்டப்புளுகை அள்ளி விட்டிருக்கிறான். ஆகவே ஹிந்துக்களாகிய எங்களுக்கு அந்த சிவலிங்கத்தை வழிபடுவதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளான்.

மேலும் அன்று இருந்த சிவன் கோவில் இடிக்கப்பட்டிருந்தாலும் இந்து மத சம்பிரதாயப்படி அந்த லிங்கம் அமைந்திருந்த இடம் எப்போதும் அந்த லிங்கத்திற்கே அதாவது அந்த விக்கிரகத்துக்கே சொந்தமானதாகும். ஆகவே சிவலிங்கத்திற்கு உரிமையான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள முஸ்லிம்களை அப்புறப்படுத்திவிட்டு அந்தக் கோவில் நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் சம்பல் ஜாமா மசூதியில் கலவரம் நடத்தப்பட்ட சில நாட்களிலேயே அதே வழி முறையில் அஜ்மீர் நீதிமன்றமும் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டதுடன் இதுபற்றி விளக்கம் அளிக்க அஜ்மீர் தர்கா கமிட்டிக்கும் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திற்கும் தொல்லியல் துறைக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


படிக்க: ஞானவாபி மசூதியும் இந்திய நீதித்துறையும்!


சம்பல் நீதிமன்ற வழக்கிலும் இப்போது அஜ்மீர் நீதிமன்ற வழக்கிலும் நீதிபதிகளின் நடவடிக்கைகள் 1991 வழிபாட்டுத் தலங்கள் பற்றிய சிறப்புச் சட்டத்தை அப்பட்டமாக மீறுகின்ற செயலாகும்.

அந்த சட்டம் 1980 மற்றும் 90களில் பாபர் மசூதி பிரச்சனையைக் கையில் எடுத்த இந்து மத வெறி கும்பல் இந்தியாவெங்கும் ரத யாத்திரை நடத்தி கலவரங்களை நடத்தியபோது 1991இல் நரசிம்மராவ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

அச்சட்டப்படி இந்தியாவில் உள்ள மத வழிபாட்டுத் தலங்கள் எந்த மதத்தைச் சேர்ந்ததாயினும் அது 1947 ஆகஸ்ட் 15 ‘சுதந்திர’ தினத்தன்று எப்படி இருந்ததோ யாருக்கு உரிமையாய் இருந்ததோ அதன்படியே தொடர வேண்டும். யாரும் அதை மறுத்து அதற்கு முன்பிருந்த நிலைமைகளைக் கூறி உரிமை கோர முடியாது என்று ‘தெளிவாகத்தான்’ குறிப்பிடுகிறது அச்சட்டம்.

மேலும் 2019 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த போது அந்த தீர்ப்பில் 1991 ஆம் ஆண்டு சட்டப்படியே வழிபாட்டுத் தலங்கள் பற்றிய உரிமைப் பிரச்சினைகள் அணுகப்பட வேண்டும் என்றும், அச்சட்டத்தின்படி பாபர் மசூதி இடிப்பு வழக்கு நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் வழக்கு என்பதால் அது விலக்கானது என்றும் கூறியதுடன், ராமர் கோவில் கட்டுவதற்கான தீர்ப்பை இனிவரும் காலங்களில் நீதிமன்றங்களில் முன்னுதாரணமாகக் காட்ட முடியாது என்பதையும் ‘அழுத்தமாகத்தான்’ குறிப்பிட்டிருந்தது.

அதற்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு ஞானவாபி மசூதி பிரச்சனையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பிலும் 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப்படியே நில உரிமைப் பிரச்சனைகள் அணுகப்பட வேண்டும் என்று அந்த சட்டத்தை ‘உறுதிப்படுத்தி’ தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனாலும் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் எழுதிய அந்த தீர்ப்பில் ஒரு பக்கம் அச்சட்டத்தை உறுதி செய்வதாகக் கூறிவிட்டு, அதே சமயம் ஒவ்வொரு பக்தருக்கும் தனது வழிபாட்டுத்தலத்தின் வரலாறு மற்றும் அதன் உண்மைத் தன்மையை (character) ஆய்வு செய்து தெரிந்து கொள்ளும் உரிமையை யாரும் மறுக்க முடியாது என்று கூறப்பட்டது.

இதன் மூலம் எங்கும் எந்தவொரு வழிபாட்டுத்தலத்தையும் யாரும் அகழாய்வு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ஆனால் அவ்வாறு தெரிந்து கொள்ளலாமே தவிர அந்த நிலத்தின் தன்மையை மாற்ற முடியாது என்று இரட்டைத்தன்மையுடன் இந்து வெறியர்களுக்கு வழியமைத்துக் கொடுத்திருக்கிறது நீதிபதி சந்திர சூட்டின் தீர்ப்பு.

இன்னொருபுறம், 1991 சட்டம் செல்லத்தக்கது அல்ல என்று தனி ஒரு வழக்கு இன்னும் தீர்ப்பளிக்கப்படாமல் நிலுவையிலிருந்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

நீதிபதி சந்திரசூட்டின் மேற்குறிப்பிட்ட தீர்ப்புதான் தற்போது அனைத்துக்கும் அடிக்கொள்ளியாக அமைந்திருக்கிறது. அதனடிப்படையில் தான் இன்று சங்கிகள் வரிசையாக நீதிமன்றங்களுக்குப் படையெடுக்கிறார்கள்.

2022 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கம் இருக்கிறதா என்று தேடிப் பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை என்றும் ஒவ்வொரு நாளும் அது பற்றி புதுப்புது வழக்குகள் போட்டுக் கொண்டிருப்பது சரியல்ல என்றும் பேசியிருந்தார்.

ஆஹா தலைவரே சமாதானத்தைப் போதிக்கிறார் சமரசத்தை விரும்புகிறார் என்று ஊடகத்தினர் புகழ்ந்து தள்ளினர்.

இந்த பேச்சின் சூட்சமம் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களுக்குச் சரியாகப் புரிந்திருக்கிறது. அதாவது தலைவர் சொல்ல வருவது எல்லா மசூதிகளிலும் சென்று தேடுங்கள். புதுப்புது வழக்குகளை எல்லா இடங்களிலும் அன்றாடம் போடுங்கள் என்பதுதான். அதன்படி தான் இப்போது பெரும் பெரும் மசூதிகளாகத் தேடிப்பிடித்து ஒவ்வொன்றாக நீதிமன்றத்தின் மூலம் ஆய்வு செய்யப் புறப்பட்டிருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க உள்ளிட்ட சங்கப் பரிவார குண்டர்கள்.

ஒவ்வொருவனுக்கும் ஒரு அமைப்பு அதற்கு அவனே தலைவன் என்று அவனவனும் பிரபலம் தேடும் நோக்கத்திலும் புறப்பட்டு இருக்கிறார்கள்.

யார் ஜனநாயகத்துக்கு விரோதமானவர் சந்திரசூட்டா? மோகன் பகவத்தா? என்று கேள்வி எழுப்புவது அறிவீனம். எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்லக் கொள்ளி? ஆர்.எஸ்.எஸ் கூடாரத்தில் அர்ஜுன் சம்பத் முதல் திருப்பதி நாராயணன், ரங்கராஜ் பாண்டே என்று எல்லாமே எரிகிற கொள்ளிகள்தான்.

இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல் நேரடியாக நாடாளுமன்றத்தின் மூலமாகவும், தனித்தனித் துறை சார்ந்த உயர்மட்ட அதிகாரிகள் மூலமும், போலீசின் மூலமாகவும், மற்றும் அனைத்துக்கும் மேலாகத் தனது சொந்த குண்டர் படைகளின் மூலமாகவும்தான் நாட்டு மக்களின் மீது பாசிச ஒடுக்கு முறைகளை ஏவுகின்றது.

இப்போது நீதிமன்றங்களை தங்களது கேடயமாக்கிக் கொண்டு விட்டார்கள். எனில் நிலவுகின்ற இந்த அரசு கட்டமைப்பின் அதே நிறுவனங்களைக் கொண்டு மக்கள் எப்படி தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும்?

பாசிச கும்பலை எப்படி வீழ்த்த முடியும்?

இக்கட்டமைப்புக்கு மாற்றாக புதியதொரு பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசையும் அதற்குப் பொருத்தமான பிற சமூக பொருளாதார கட்டமைப்பையும் உருவாக்கப் போராடுவதே தீர்வாக அமைய முடியும்.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க