உத்தரப்பிரதேசம்: சம்பலும் அரசின் பொய்யுரைகளும்

ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கோவில் முன்பு பள்ளியாக இருந்தது என உரிமை கோரி ஒரு முஸ்லிம் நீதிமன்றத்தை அணுகினால், அல்லது ஒரு குறிப்பிட்ட கோவில் முன்பு புத்த விகாரமாக இருந்தது என்று நிரூபிக்க உதவ வேண்டும் என பௌத்த மதத்தினர் நீதிமன்றத்தை அணுகினார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட மனுக்களை நீதிமன்றம் பரிசீலிக்குமா?

ம்பலில் நான்கு பேர் இறந்துள்ளனர். நான்கு இந்தியர்கள். சரியாகச் சொல்ல வேண்டுமானால் நான்கு முஸ்லிம்கள். (தற்போது பலி ஐந்தாக மாறிவிட்டது). இந்துக்களிடம் கடைப்பிடிப்பது போல அவர்களிடமும் போலீஸ் தங்கள் அதிகாரத்தை கடைப்பிடித்திருந்தால் அவர்களும் இப்போது உயிரோடு இருந்திருப்பார்கள். ஏதேனும் ஒரு உணர்வுப்பூர்வமான விஷயத்தில் கட்டுப்பாட்டை இழக்கின்ற, உணர்ச்சிவசப்படுகின்ற ஒரு இந்து மக்கள் திரளை கட்டுப்படுத்த மிகவும் அபூர்வமாகவே போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள். இந்துக்களின் வீடுகள், வாகனங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றின் மீது தீ வைப்பதையும் ஆக்கிரமிப்பதையும் தாக்குதல் நடத்துவதையும் எல்லாம் நாம் பார்த்ததுண்டு. ஆனால் சம்பலில் செய்ததைப் போல வட இந்தியாவில் போலீஸ் செய்ததை நாம் படித்ததில்லை. இந்து பண்டிகை காலங்களின் போது (கன்வார் யாத்திரை) காவடி எடுத்து வருவோர் மக்களையும் போலீஸையும் தாக்குகின்ற காணொளிகளை நாம் பார்த்ததுண்டு. ஆனால் போலீஸ் சுயமே கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதைத் தவிர சம்பலில் செய்ததைப் போல துப்பாக்கிச் சூடு நடத்தியதை நாம் பார்த்ததில்லை.

போலீஸ் அதிகாரிகள் சுயமே தங்களோடு கேட்க வேண்டிய ஒரு கேள்வி உண்டு. கல் எரிபவர்களாக இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்ட ஒரு இந்து மக்கள் திரள் மீது சம்பலில் செய்தது போல நீங்கள் செய்வீர்களா?

ஒரு முஸ்லிமைக் கூட தாங்கள் சுட்டுக் கொலை செய்யவில்லை என்று கூறிய போலீஸ், முஸ்லிம்களே சுட்டுதான் அவர்கள் நான்கு பேர்களும் இறந்தார்கள் என்ற கதையைக் கட்டவிழ்த்து விடுகிறது. ஐந்து வருடங்கள் முன்பு உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய பொழுது 21 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்ட பொழுதும் இதையே தான் போலீசார் கூறினார்கள். முஸ்லிம்களின் தேகங்களின் மீது பாய்ந்த குண்டுகள் தங்களுடைய அதிகாரப்பூர்வமான துப்பாக்கிகளில் இருந்து வெளிவரவில்லை என்று போலீஸ் கூறியது. இதில் அரசுக்கு அக்கறை இல்லையெனில் சத்தியம் ஒருபோதும் வெளிவராது. அவர்கள் சத்தியத்தின் இடத்தில் கற்பனைகளைக் கட்டமைப்பார்கள். டெல்லி மதவெறி தாக்குதலின் போது முஸ்லிம் செயல்பாட்டாளர்கள் மீதும் எல்கர் பரிஷத் தாக்குதலின் போது அந்த நிகழ்வோடு வெகுதூர தொடர்புள்ள செயல்பாட்டாளர்கள் மீதும் போலீஸ் இதே போன்று தான் குற்றம் சுமத்தியது.

முஸ்லிம்களை தூண்டி விட்டார்கள் என்றும் அது கலவரத்தில் முடிந்தது என்றும் குற்றம் சாட்டி சம்பல் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் மகன் மீதும் போலீஸ் வழக்குப் பதிந்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

முஸ்லிம்களின் மரணத்தில் போலீஸ் அதிகாரிகள் தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கவில்லை. மாறாக படுகொலைக்கு ஆளானவர்களின் துக்கத்தில் இருக்கும் குடும்பங்களோடு அவர்கள் கூறினார்கள், “(போலீஸ் மீது) குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு முன்னால் அவர்கள் (கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள்) பதில் அளிக்க வேண்டும். அவருடைய பிள்ளைகள் ஏன் கல் எறியப் போனார்கள். அவர்கள் ஏதேனும் மத ரீதியான வேலைக்கோ புனித செயலை செய்வதற்கோ தொழில் கடமையை நிறைவேற்றுவதற்கோ அங்கே போகவில்லை”.

மக்கள் திரண்டதும் கல் எரிந்ததும் தூண்டி விடப்படும் செயலாகத்தான் தாங்கள் பார்ப்பதாக போலீஸ் கூறியதாக தி வயர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வே குழு பள்ளிக்கு வந்த பிறகு திரண்ட முஸ்லிம்கள் தயார்நிலையோடு தான் வந்தார்கள் என்றும் அவர்கள் தாக்குதல் நடத்தத் சதித்திட்டம் தீட்டினார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் சட்டமன்ற உறுப்பினர் மகனின் மீதும் சுமத்திய முதல் தகவல் அறிக்கையில் போலீஸ் கூறுகிறது. சர்வே குழு பள்ளிக்கு வந்த பொழுது அவர்களோடு வந்த (இந்துத்துவ தீவிரவாதிகள்) ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை எழுப்பியதின் காரணத்தினால் தான் மக்கள் கோபம் கொண்டு திரண்டு போராட்டம் நடத்தினார்கள் என்ற வாதத்தை அங்கீகரிக்க முடியாது என போலீஸ் கூறுகிறது.


படிக்க: உ.பி: நீதிமன்றத்தின் துணையோடு சம்பல் பகுதியில் கலவரத்தை உருவாக்கும் பாசிச கும்பல்


நடு நிலைமையான பார்வையாளர்கள் கேட்கும் ஒரு கேள்வி உண்டு. நீதிமன்றம் நியமனம் செய்த ஒரு குழு பள்ளிக்கு வருகின்ற பொழுது அவர்களோடு ஒரு கும்பல் உடன் வருவதையும் பிறரை தூண்டி விடக் கூடிய விதத்தில் முழக்கங்களை எழுப்புவதையும் தடை செய்வது அரசின், போலீஸின் கடமை அல்லவா? சர்வேவை முழுமைப்படுத்தி அந்த அதிகாரிகள் குழு திரும்பும் வரை ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தது. இது ஒரு சாதாரண சர்வே நடவடிக்கையாக இருந்தது எனில் ஏன் அங்கே கும்பல் கூடி ஜெய் ஸ்ரீ ராம் கோசமிட்டார்கள்? அப்படிப்பட்ட ஒரு செயலுக்கு ஆட்சியாளர்கள் ஏன் அனுமதி கொடுத்தார்கள்?

இதில் நீதிமன்றங்களுக்கும் பங்கு உண்டு. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கோவில் முன்பு பள்ளியாக இருந்தது என உரிமை கோரி ஒரு முஸ்லிம் நீதிமன்றத்தை அணுகினால், அல்லது ஒரு குறிப்பிட்ட கோவில் முன்பு புத்த விகாரமாக இருந்தது என்று நிரூபிக்க உதவ வேண்டும் என பௌத்த மதத்தினர் நீதிமன்றத்தை அணுகினார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட மனுக்களை நீதிமன்றம் பரிசீலிக்குமா? கோவில் உருவாக்கப்படுவதற்கு முன்னால் அங்கே என்ன இருந்தது என்று கண்டுபிடிக்க சர்வே நடத்த நீதிபதிகள் சம்மதிப்பார்களா? அதனுடைய விடை நம் அனைவருக்கும் தெரியும். நீதிமன்றங்கள் அப்படிப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்வது மட்டுமல்ல ,மனுதாரருக்கு அபராதமும் விதிக்கும். ஏனெனில் இந்த நாட்டில் எல்லாவற்றுக்கும் முன்பாக இந்து அடையாளங்கள் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை என்றும் எல்லாம் பிறகு உருவானது தான் என்றும் அந்த நீதிபதிகளும் நம்புகிறார்கள்.

இப்படிப்பட்ட வழக்குகளில் சம்பலில் செய்ததைப் போல சர்வே நடத்துவதற்கு நீதிமன்றங்கள் அவசரம் காட்டுவார்களா என்று நாம் கேட்க வேண்டும். எப்பொழுது முதல் நமது நீதிமன்றங்கள் ஒரு மனுவை தாக்கல் செய்த உடனேயே நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் செயல் ஊக்கம் பெற்றது?

சம்பலில் நடந்தது இதுதான்.

மசூதி இருந்த இடத்தில் முன்பு கோயில் இருந்தது என்ற உரிமை கோரலுடன் அதனுடைய உண்மை தன்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஒரு மனுத் தாக்கல் செய்யப்படுகிறது. நீதிபதி உடனடியாக அரசுக்கும் மசூதி நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் கூட அனுப்பாமல் சர்வே நடத்த உத்தரவிட்டதுடன் இதற்காக அதிகாரியையும் நியமனம் செய்கிறது. உத்தரவு கிடைத்த சில மணி நேரங்களில் வட்டார அரசு நிர்வாகம் அனைத்துவித வசதிகளையும் அளித்து சர்வேயை ஆரம்பிக்கிறது. இது வட்டார முஸ்லிம்களுக்கிடையே கோபத்தை உருவாக்கியது. ஆனால் அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களை அமைதிப்படுத்தி சர்வே நடத்துவதற்கு வழிவகை செய்தார்.

ஆனால் இரண்டு தினங்களுக்குப் பிறகு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஒரு சர்வே குழு மீண்டும் பள்ளிக்கு வருகிறது. இந்த குழுவுடன் பள்ளிக்கு வர சில கும்பலுக்கும் அரசு அனுமதி அளிக்கிறது. சர்வே குழுவுடன் வந்த கும்பல் ஜெய் ஸ்ரீ ராம் என கோசம் எழுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது வட்டார முஸ்லிம்களைக் கோபப்படுத்தியது. அவர்கள் கல் எறிந்தார்கள். உணர்ச்சிவசப்பட்ட மக்கள் திரள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காணொளி காட்சிகள் வெளியாகின. இதுவரை ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

நடந்த நிகழ்விற்குப் பொறுப்பேற்க மறுக்கும் போலீஸ் படுகொலைகளுக்கு முஸ்லிம்களையே குற்றம் சாட்டுகிறது. இந்த எதிர்ப்பை சதித்திட்டம் எனக் குற்றம் சாட்டி முஸ்லிம் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்கிறது.

இது இந்தியாவில் ஒரு அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. அரசு அமைப்புகள் தங்களுக்கு எதிராக உள்ளது என்றும் நீதித்துறை தங்களை ஒதுக்குவதற்கும் ஒடுக்குவதற்கான செயல்பாடுகளை தாட்சண்ணியம் இன்றி ஆரம்பித்துள்ளது என்றும் முஸ்லிம்களுக்குத் தெரியும்.

இவை எல்லாம் நடப்பது சட்டத்தின் அடிப்படையில் தான். இதன்மூலம் முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்பை கூட காட்டுவதற்கு இயலாத நிலைமை, சூழல் உருவாகும். அல்லது அவர்கள் நாட்டின் சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டு உயரும்.

இந்த நாட்டில் உள்ள ஒரு சட்டத்திற்கு – 1991 வழிபாட்டுத் தல சட்டத்திற்கு – என்ன ஆனது என்று கேட்டால் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி டி ஒய் சந்திர சூட்டின் கேலி நிறைந்த புன்னகை தான் நினைவிற்கு வரும். இந்தக் கேள்வியைப் புறம் தள்ளிய சந்திர சூட், ஒரு உருவாக்கத்தின் உண்மைத் தன்மை குறித்து அறிவதற்கும் திருப்தி அடைவதற்குமான ஆர்வம் அனைத்து இந்துக்களுக்கும் உண்டு என்று அவர் கூறினார். அவர் வழிகாட்டிய பிறகு தான் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ள முஸ்லிம் பள்ளிகள், தர்காக்கள் பிற வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றைக் குறித்து இந்து பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் (சங்கி) கும்பலுக்கு ‘ஆர்வம்’ எழத்துவங்கியது. சந்திரசூட் சுட்டிக்காட்டிய வழியில்தான் அனைத்து நீதிமன்றங்களும் இப்போது பயணிக்கின்றன. முஸ்லிம்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துத் தான் இதற்கு எதிராகப் போராடவும் எதிர்த்து நிற்கவும் வேண்டியுள்ளது.

– பேரா. அபூர்வானந்த்

தமிழில்: KS அப்துல் ரகுமான்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க