உ.பி: நீதிமன்றத்தின் துணையோடு சம்பல் பகுதியில் கலவரத்தை உருவாக்கும் பாசிச கும்பல்

பல ஆண்டுகளாக நிலைத்துநின்ற இந்துக் கோவில்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டு தான் இஸ்லாமிய வழிப்பாட்டுத் தலங்கள் கட்டப்பட்டன என்று ஆதாரமற்ற மதவெறிப் பிரச்சாரத்தின்மூலம் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க  பாசிசக் கும்பல், மசூதிகளை இடித்து அங்கு இந்துக்கோவில்களைக் கட்டுவதில் தீவிர முனைப்புக் காட்டி‌வருகிறது.

த்தரப்பிரதேச மாநிலத்தின் சம்பல் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) நடந்த கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பதற்றமான சூழல் நிலவிவருவதால் பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டு‌ நவம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் மற்றும் தடை உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கலவரத்திற்கான காரணம் என்ன?

தீவிர இந்துத்துவவாதி என்று கூறப்படும் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், சம்பல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குதான் இந்த கலவரங்களுக்கெல்லாம் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. தற்போது ஷாஹி ஜும்மா மசூதி (Shahi Jama Masjid) அமைந்திருக்கும் இடத்தில் ஹரிஹர இந்துக்கோவில் இருந்ததென்றும் ,1529 இல் முகலாய மன்னர் முகமது பாபரின் ஆட்சிக்காலத்தில் கோவில் தகர்க்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதென்றும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கோவிலை இந்தியத் தொல்லியல் துறை உடனடியாக தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த சிவில் நீதிபதி, மசூதியில் சர்வே செய்யவும் அதனை மேற்பார்வையிட வழக்குரைஞர் ஆணையம் (Advocates Commission) ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். நவம்பர் 19ஆம் தேதி மசூதி நிர்வாகத்தின் ஒப்புதலுடன், இருதரப்பு பிரதிநிதிகளின் மேற்பார்வையில் எவ்வித இடையூறுமின்றி முதற்சுற்று சர்வே நடைபெற்றுள்ளது.

கடந்த நவம்பர் 24 ஆம் தேதி இரண்டாம் கட்ட சர்வே பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் வருகை தந்தபோது, சர்வே எடுக்க எதிர்ப்பு தெரிவித்து மசூதிக்கு முன்  ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தக் காவலர்களுக்கு ஆணை கிடைத்துள்ளதால் அனைவரும் கலைந்து சென்றுவிடுமாறு தலைமை இமாம் அறிவிப்பு விடுத்த‌போதிலும் பெரும்பாலான மக்கள் இறுதிவரை களத்திலேயே நின்றனர்.

கலவரத்தில் ஈடுபட மக்களைத் தூண்டிவிட்டதாகக் குற்றஞ்சாட்டி சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. சியா உர் ரெஹ்மான் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், “இந்தியா முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்கும் பலரும், தற்போது மசூதி‌ இருக்கும் இடத்தில் முன்னர் இந்துக்கோவில் இருந்ததற்கான  ஆதாரங்கள் பல வரலாற்று ஆவணங்களில், ஏன், முகலாய ஆவணங்களில்கூட இருப்பதாகவும், மேலும் மசூதியின் கட்டமைப்பில்  இந்துக்களின் கலைநுட்பங்கள் வெளிப்படுவதாகவும் கூறுகின்றனர். எனவே, இந்துக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

1980களில் நிலத்தின் உரிமைகோரி  மதக்கலவரங்கள் தொடர்ந்து அரங்கேறின. இதனைத் தடுக்க பாராளுமன்றத்தில் 1991 வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991 (The Places Of Worship (Special Provisions) Act, 1991) என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி நிலப்பிரச்சினை தவிர்த்து, 15 ஆகஸ்டு 1947 அன்று வழிப்பாட்டுத் தலங்கள் எவ்வாறு இருந்ததோ அப்படியே தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும், 15 ஆகஸ்டு 1947 நாளுக்கு முன்னர் வழிப்பாட்டு தலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை எதிர்த்து வழக்காட முடியாது என்பதும்  இச்சட்டத்தின் மையக் கருத்தாகும். இச்சட்டத்தின் படி, 15 ஆகஸ்டு 1947-க்கு முன்னர் ஒரு சமயத்தினரின் அல்லது ஒரு சமயப் பிரிவின் வழிபாட்டுத் தலத்தை, வேறு சமயத்தினரோ அல்லது ஒரே சமயத்தின் வேறொரு பிரிவினரோ ஆக்கிரமிப்பு செய்திருந்தால் இச்சட்டப்படி, ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.

அதனடிப்படையில் ஷாஹி மசூதி இருப்பது எந்த வகையிலும் சட்டத்திற்குப் புறம்பானது அல்ல. இந்த சட்டத்தைக் கணக்கில் கொள்ளாமல் மசூதிக்குச் சென்று சர்வே மேற்கொள்ள நீதிபதி உத்தரவிட்டதுதான் சட்ட மீறலாகும். இந்த ஆய்விற்கு வழிவகை செய்துகொடுத்த ‘பெருமை’ முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களையே சாரும். ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையை ஆராயும் உரிமை நீதிமன்றத்திற்கு உள்ளது என்று வியாக்கானம் செய்து வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-க்கு எதிராக ஞானவாபி மசூதி வழக்கில் அவர் அளித்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டுதான் தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் மனுத் தாக்கல் செய்த வழக்குரைஞர் விஷ்ணு மற்றும் அவரது தந்தையின் பின்புலத்தை ஆராய்ந்தால், உ.பி. ஞானவாபி மசூதி (காசிநாதர் கோவில் என்று கோரிய) வழக்கில் இந்துக்களின் பக்கம் நின்று வாதாடியுள்ளனர் என்பது தெரியவருகிறது.

பல ஆண்டுகளாக நிலைத்துநின்ற இந்துக் கோவில்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டு தான் இஸ்லாமிய வழிப்பாட்டுத் தலங்கள் கட்டப்பட்டன என்று ஆதாரமற்ற மதவெறிப் பிரச்சாரத்தின்மூலம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க  பாசிசக் கும்பல், மசூதிகளை இடித்து அங்கு இந்துக்கோவில்களைக் கட்டுவதில் தீவிர முனைப்புக் காட்டி‌வருகிறது. அந்த வகையில் தான் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்துத் தகர்த்து ராமர் கோவிலைக் கட்டிமுடித்துத் திறந்துவைத்தது மோடி-அமித்ஷா கும்பல். அதன் தொடர்ச்சியாகவே சம்பல் மசூதி நடைபெறும் சம்பவத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

இதுமட்டுமின்றி தனது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்றிட பொது சிவில் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற சட்டங்களைக் கொண்டுவருவதன் மூலம் இஸ்லாமியர்களை நாட்டின் இரண்டாந்தர குடிமக்கள் ஆக்குவது, அவர்கள்மீது மதரீதியான தாக்குதல்களையும் வெறுப்புப் பேச்சுக்களையும் கட்டவிழ்த்துவிடுவது போன்ற வேலைகளில் காவிக்கும்பல் ஈடுபட்டுவருகிறது.

மோடியின் பத்தாண்டுக்கால ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளது.‌ இந்த பாசிசக் கும்பலின் பிடியிலிருந்து இஸ்லாமியர்களை விடுவிப்பதற்கு  ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு எனும் மாற்றை முன்வைத்துப் போராடுவதே இந்த தருணத்தின் உடனடித் தேவையாகும்.


ஜென்னி லீ

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க