ஞானவாபி மசூதியும் இந்திய நீதித்துறையும்!

ஞானவாபி மசூதி பிரச்சினை உச்ச நீதிமன்றம் வந்தபோது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட் ”ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையைக் கண்டறிவதை சட்டம் (வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991) தடுக்கவில்லை; அதன் தன்மையை மாற்றுவதை மட்டுமே சட்டம் தடை செய்கிறது” என்று ஒரு வியாக்கியானத்தை முன்வைத்தார்.

0

த்தர பிரதேசத்தின் வாரணாசியில் அவுரங்கசீப் கட்டிய 17 ஆம் நூற்றாண்டு ஞானவாபி மசூதியின் அடித்தளத்தில் ‘இந்துக்கள்’ வழிபாடு நடத்தத் தொடங்கியுள்ளனர். ஜனவரி 31 அன்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தது. உத்தரவு பிறப்பித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே அங்கு பூஜை நடத்தப்பட்டுவிட்டதாக காசி விஸ்வநாதா் கோயில் அறக்கட்டளை தலைவா் தெரிவித்தாா்.

தான் ஓய்வு பெறவிருக்கும் கடைசி பணி நாளில் இத்தீர்ப்பை வழங்கி வாரணாசி மாவட்ட நீதிபதி அஜய கிருஷ்ண விஸ்வேஷா (Ajaya Krishna Vishvesha) கரசேவை ஆற்றியுள்ளார்.

இந்துக்கள் வழிபாட்டு சடங்குகளை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை 7 நாட்களுக்குள் செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றைய நாள் இரவே வழிபாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதிகாலை 3:30 மணிக்கு பூஜையும் நடத்தப்பட்டுவிட்டது.

முஸ்லீம்கள் தினமும் ஐந்து முறை தொழுகை நடத்துவதோடு போட்டி போடும் விதத்தில் தினம்தோறும் ஐந்து முறை பூஜை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


படிக்க: பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா! | மீள்பதிவு


மசூதியின் அடித்தளத்தில் நான்கு பாதாள அறைகள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்று அங்கு வசித்து வந்த பூசாரியின் குடும்பத்தின் வசம் இருப்பதாகவும் ’இந்து’ தரப்பினரால் கூறப்படுகிறது. ’பரம்பரை பூசாரிகள்’ என்ற முறையில் அவர்கள் கட்டிடத்திற்குள் நுழைந்து பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று அக்குடும்பத்தினர் வாதிட்டனர். 1993-ஆம் ஆண்டு வரை அங்கு பூஜை செய்து வந்ததாக அவர்களால் கூறப்படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை.

ஞானவாபி மசூதி வழக்கின் மையப் பொருளாக இருப்பது இந்திய தொல்லியல் துறையின் தொல்பொருள் ஆய்வு தான். மசூதி அமைந்துள்ள பகுதியில் இந்து கோயில் இருந்ததற்கான சான்றுகளைத் தேடி இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினரைத் தவிர மற்றவர் கைகளுக்கு கிடைக்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் கலவர சூழலை உருவாக்க 839 பக்கங்களைக் கொண்ட அவ்வறிக்கையின் சில பகுதிகள் திட்டமிட்டே கசியவிடப்பட்டுள்ளது.

சங்கப் பரிவார கும்பல் பல பத்தாண்டுகளாகவே ஞானவாபி மசூதி பிரச்சினையை எழுப்பி வருகிறது. இராமர் கோவில் திறப்பு உத்வேகம் அளித்துள்ளதால் ஞானவாபி மசூதியை மற்றொரு பாபர் மசூதியாக மாற்ற வேண்டும் என்று துடிக்கிறது காவி பாசிச கும்பல். மேலும் இந்து முனைவாக்கத்தை கூர்மையாக்கி 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளவும் எத்தனிக்கிறது.


படிக்க: பாசிசத்தை அரசியலமைப்பிற்கு உட்படுத்துங்கள்! – சந்திரசூட்


இப்பிரச்சினையை தற்போது சங்கப் பரிவார கும்பலுக்கு ஏற்ற வகையில் இவ்வளவு பூதாகரமாக வளர்த்து விட்டதில் நீதிமன்றத்தின் பங்கு அளப்பரியது.

எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையையும் மாற்றுவதை வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 தடைசெய்கிறது. பாபர் மசூதி தவிர மற்ற அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஆகஸ்ட் 15, 1947 அன்று எந்தத் தன்மையில் இருந்தனவோ அவை அவ்வாறே தொடர வேண்டும் என்று அச்சட்டம் கூறுகிறது. இது ஒன்றும் நீதிமன்றங்கள் அறியாததல்ல. அறிந்துதான் நீதிமன்றங்கள் தொடர்ந்து கரசேவை ஆற்றி வருகின்றன.

ஞானவாபி மசூதி பிரச்சினை உச்ச நீதிமன்றம் வந்தபோது, அதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட் ”ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையைக் கண்டறிவதை சட்டம் (வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991) தடுக்கவில்லை; அதன் தன்மையை மாற்றுவதை மட்டுமே சட்டம் தடை செய்கிறது” என்று ஒரு வியாக்கியானத்தை முன்வைத்தார். தனது சட்ட வியாக்கியானத்தின் மூலம் சங்கப் பரிவார கும்பலின் செயல் திட்டத்திற்கு புத்துயிர்ப்பு அளித்தார்.

மசூதி குழு உச்சநீதிமன்றத்தின் அவசர தலையீட்டைக் கோரியது. ஆனால் உச்சநீதிமன்றம் அதை நிராகரித்துவிட்டது. கீழ் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறிவிட்டது.

அயோத்தியைப் போலவே வாரணாசியிலும் கரசேவையில் தங்களது பங்கை நீதிமன்றங்கள் சிறப்பாக ஆற்றிவிட்டன!


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க