பாசிசத்தை அரசியலமைப்பிற்கு உட்படுத்துங்கள்! – சந்திரசூட்

காஷ்மீர் சிறப்புச் சட்டங்கள் நீக்கப்பட்டதே "ஒரு பாசிச நடவடிக்கை" என்பதுதான் காஷ்மீரின் தன்னுரிமையை ஆதரிக்கின்ற ஜனநாயக சக்திகளின் கருத்து. ஆனால், சந்திரசூட்டோ 'சட்டத்திற்கு உட்பட்டு நடந்துள்ளதா?' என்று கேட்கிறார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து:
பாசிசத்தை அரசியலமைப்பிற்கு உட்படுத்துங்கள்! – சந்திரசூட்

திக்கற்றவர்களுக்கு தெய்வம்தான் துணை’ என்பதுபோல, ‘நீதிமன்றங்கள்தான் பாதிக்கப்பட்ட மக்களின் கடைசி புகலிடம்’ என்று பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பிற்குப் பிறகும் சிலரால் கருதப்படுகிறது. ஆளும் அரசாங்கங்கள், அதிகாரவர்க்கம், போலீசு என அரசமைப்பின் பல்வேறு அங்கங்களும் தாங்கள் வரையறுத்துக் கொண்ட கொள்கைகளுக்கே கூட உட்படாமல், தோற்று திவாலாகி எதிர்நிலை சக்திகளாக மாறிப்போய் பெரும்பான்மை மக்களிடம் நம்பிக்கையிழந்த நிலையில், “நீதிமன்றத்திற்குச் சென்றால் நியாயம் கிடைக்கும்” என்ற ஒரு மாயையை ஆளும்வர்க்க சிந்தாந்தவாதிகள் மக்கள்மீது திணித்து வருகிறார்கள்.

ஆனால், பாசிச பா.ஜ.க.வின் ஆட்சியில் பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள், பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு முதல் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு வரை, ‘நீதிமன்றங்கள் கடைசி புகலிடம்’ என்ற அந்த மாயையும் மறைந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் பாசிசக் கொடுங்கோலோட்சியிலிருந்து இளைப்பாறுதல் தேடுபவர்களுக்கு ‘நம்பிக்கை நட்சத்திர’மாகக் காட்டப்பட்டார். பல்வேறு வழக்குகளில், அவர் ஒன்றிய மோடி அரசை நோக்கி எழுப்பிய கேள்விகள், அளித்த தீர்ப்புகள் ஜனநாயக சக்திகளால் பாராட்டப்பட்டன.

எனினும் நீதிபதி சந்திரசூட்டை நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதிக் கொண்டிருந்த யாரேனும் காஷ்மீர் சிறப்புச் சட்டம் நீக்கம் தொடர்பான விசாரணையில் நேற்று (28.08.2023) அவர் கூறிய கருத்துக்களைக் கவனித்திருந்தால் நிச்சயம் வெறுப்படைந்திருப்பார்கள். அமர்வுக்கு தலைமைவகிப்பது துஷார் மேத்தாவா, சந்திரசூட்டா என்ற குழப்பமும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

ஏனெனில், காஷ்மீர் சிறப்புச் சட்டம் நீக்கம் பற்றிய விசாரணையின் தொடக்கக் கட்டத்திலேயே, அது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்பது போன்ற கருத்துக்களை சந்திரசூட் வெளிப்படுத்துகிறார். ஒன்றிய அரசை நோக்கி அவர் எழுப்பிய மையமான கேள்வி, “சிறப்புச் சட்ட நீக்கம் தொடர்பான விவகாரம் அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு உட்பட்டுதானே நடந்துள்ளது?” என்பதுதான்.


படிக்க: காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !


நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இவ்வழக்கு விசாரணைக்கு வருவதால், எப்படியாவது காஷ்மீர் மக்களின் தன்னுரிமையை உத்தரவாதப்படுத்தும் 370 மற்றும் 35A சட்டப்பிரிவுகளை மீட்டுக் கொண்டுவந்துவிட முடியும் என்று கருதிக் கொண்டிருந்தவர்கள் பலரை, இந்தக் கேள்வி நிச்சயம் திடுக்கிடச் செய்திருக்கும்.

இச்சட்டங்கள் நீக்கப்பட்டதே “ஒரு பாசிச நடவடிக்கை” என்பதுதான் காஷ்மீரின் தன்னுரிமையை ஆதரிக்கின்ற ஜனநாயக சக்திகளின் கருத்து. கொரோனா பெருந்தொற்றின் போது தடாலடியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கைப் போல, இது வழிமுறை தொடர்பான பிரச்சினையல்ல. ஆனால், சந்திரசூட்டோ ‘சட்டத்திற்கு உட்பட்டு நடந்துள்ளதா?’ என்று கேட்கிறார். அது எப்படிச் சரியாக இருக்கும். இதுதான் நாம் ஆராய வேண்டிய இடம்.

அதுமட்டுமல்ல, காஷ்மீர் பூர்வ குடிகளுக்கு தனிச்சிறப்பான உரிமைகளை வழங்கிவந்த 35A சட்டப் பிரிவை, “அரசியலைமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் வழங்கக் கூடிய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது” என்று கருத்து தெரிவித்துள்ளார் சந்திரசூட்.


படிக்க: காஷ்மீரில் தொடரும் ஒடுக்குமுறைகளும், அமித்ஷாவின் பொய்யுரைகளும் !


35A சட்டப்பிரிவு, காஷ்மீர் பூர்வகுடிகளுக்கு மாநிலத்தின் வேலைவாய்ப்புகளில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்குகிறது; மேலும் காஷ்மீரின் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு விற்கக் கூடாது என்கிறது. காஷ்மீரின் விவசாய நிலங்களை விவசாயமல்லாத தொழிலுக்காக காஷ்மீரிகளே கூட வாங்க முடியாது. பொதுவாக அந்நியர்களுக்கு மட்டும் தடை என்பது பச்சைப் பொய். இந்த உரிமையானது இந்தியாவுக்கு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படாத காலத்திலேயே, காஷ்மீரில் மன்னராட்சிக்கு எதிராக அந்த தேசிய இன உழைக்கும் மக்கள் போராடியதால் பெறப்பட்டதாகும்.

ஆனால், காஷ்மீர் மக்களின் தன்னுரிமையை பாதுகாக்கக் கூடிய இதுபோன்ற சட்டப்பிரிவுகள், அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் மூலதன வேட்டைக்கு தடையாக இருக்கிறது என்பதுதான் பா.ஜ.க. கும்பலுக்கு இருந்த உறுத்தல். அதனால்தான், “ஐயோ இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ள, இச்சட்டங்களை ஒழிக்க வேண்டும்”, “சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று கூப்பாடு போட்டார்கள்.

இந்த நோக்கத்தில், அச்சட்டத்தை விமர்சிக்கவில்லை என்றாலும், ‘மேதகு’ சந்திரசூட்டும் அச்சட்டம் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உடன்படுகிறார்.

சந்திரசூட்டின் இந்த கருத்துக்குப் பின், “ஆமாம்… இச்சட்டம் ரத்துசெய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் பல்வேறு ‘வளர்ச்சி’த் திட்டங்களை ஒன்றிய அரசு கொண்டுவந்திருக்கிறது” என்று சுருதி சேர்க்கிறார், ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரான துஷார் மேத்தா.

அடுத்தது, “காஷ்மீரின் சட்டமன்றத்தைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்துவதற்கு முன்பு, குடியரசுத் தலைவரை வைத்து சம்மந்தபட்ட சட்டமன்றப் பிரநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டீர்களா, அப்படிச் செய்யவில்லை எனில் அது சட்டப் பிரிவு 3க்கு எதிரானது” என்கிறார் சந்திரசூட்.

அதற்கு “இல்லை அந்த அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது”, “அது ஒரு சிறப்பு நடவடிக்கை” என்று நியாயவாதம் பேசுகிறார், துஷார் மேத்தா.

ஆக மொத்தத்தில், இந்த வழக்கு எப்படி முடித்துவைக்கப்பட இருக்கிறது என்பது, இப்போதே தெரிந்துவிட்டது. நமக்கு எழும் கேள்வி ஒன்றுதான், சந்திரசூட் ஏன் இந்த விசயத்தில் ஒன்றிய அரசுக்கு சாதகமாகச் செயல்படுகிறார்?

மக்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளாக இருக்கட்டும், பாசிசத் திட்டங்களாக இருக்கட்டும் – அதை ‘சட்டம் அனுமதிக்கும் வழிகளில் செய்யுங்கள்’, ‘சட்டத்தை மீறி எதையும் செய்ய வேண்டாம்’ என்பதில்தான் சந்திரசூட் நிற்கிறார்.

காஷ்மீர் மக்களின் தன்னுரிமையை பறிப்பது, காஷ்மீர் மக்களுக்கும் அம்மக்களின் தன்னுரிமைக் கோரிக்கையை ஆதரிக்கக் கூடிய பிற தேசிய இன உழைக்கும் மக்களுக்கும்தான் பிரச்சினை. அரசியலமைப்புச் சட்டம், இதுகுறித்தெல்லாம் கவலைப்படுதில்லை என்பதைதான், சந்திரசூட் தனது கருத்துக்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக, “அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்” என்ற முழக்கமும் சந்திரசூட்டைப் போலத்தான் என்பது சொல்லாமலே விளங்கும்.

தனது இயல்பிலேயே சர்வாதிகாரமான போலி ஜனநாயகத்தை மீண்டும் அதன் பழைய நிலைக்குக் கொண்டுவருவதை விரும்பாமல், அனைத்து தேசிய இனங்களின் தன்னுரிமையை அங்கீகரிக்கக் கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவதே தீர்வு!


வாசு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க