ம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புரிமை வழங்கும் பிரிவு 370 மற்றும் 35A சட்டங்களை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இரத்து செய்ததுடன் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக துண்டாடியது மோடி – அமித்ஷா கும்பல். அம்மாநிலத்தின் மற்றொரு பகுதியான லடாக்-ஐ ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.
ஜம்முவின் ஸ்ரீநகரில் அமித்ஷா நடத்திய பொதுக்கூட்டம்.
அதனைத் தொடர்ந்து அங்கு எழுந்த மக்கள் எதிர்ப்பை முடக்குவதற்காக இராணுவ ஒடுக்குமுறையை அதிகரிப்பது, இணைய முடக்கம், அரசியல் தலைவர்களை கைது செய்வது, வீட்டுக் காவலில் வைப்பது, பத்திரிகைகளை கடுமையான தணிக்கைக்கு உட்படுத்துவது, ஊபா, பொதுப்பாதுகாப்புச் சட்டம் போன்ற கொடூரச் சட்டங்களின்கீழ் அப்பாவிப் பொதுமக்களை கைது செய்வது என காஷ்மீரை நரகமாக்கிய மோடி, ‘புதியதொரு காஷ்மீர்’ பிறந்திருப்பதாக கொஞ்சமும் கூச்சமின்றி பேசினார்.
காஷ்மீர் முடக்கப்பட்டு, இரண்டாண்டுகள் கழித்து, முதன்முதலாக கடந்த அக்டோபர் மாதம் காஷ்மீருக்கு மூன்றுநாள் (23, 24, 25) பயணமாகச் சென்ற அமித்ஷா ‘‘ஜம்மு காஷ்மீர் ஓரங்கட்டப்பட்ட காலம் முடிந்துவிட்டது, இனி அது வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்’’ என முழங்கியதோடு ‘‘பிரிவு 370 இரத்துக்குப்பின் ஒரு நோக்கம் இருந்தது, அது ஜம்மு – காஷ்மீர் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட லடாக் ஆகியவற்றை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது பற்றியது. 2024-ம் ஆண்டிற்குள் எங்கள் முயற்சியின் பயனை நீங்கள் காண்பீர்கள்’’ என பேசியுள்ளார்.
படிக்க :
குற்றத் தலைநகரம் டெல்லி : அமித்ஷாவின் டெல்லி போலீசு இலட்சணம் !
விரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு
காஷ்மீருக்கு விரைவில் சட்டமன்றத் தேர்தலை நடத்தவிருப்பதாகவும் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்போவதாகவும் தெரிவித்த அமித்ஷா, சிறப்புச் சட்டம் இரத்து செய்யப்பட்ட பிறகு பயங்கரவாதம் எப்படி கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, காஷ்மீரில் என்னென்ன ‘வளர்ச்சிப் பணிகள்’ நடந்துவருகிறது, இளைஞர்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது என புள்ளிவிவரத்தோடு ஒப்பிக்க ஆரம்பித்தார்.
அவர் பேசியதை காஷ்மீரிகளல்லாதவர்கள் அல்லது களநிலவரம் தெரியாதவர்கள் யாராவது கேட்டிருந்தால் நிச்சயம் அதில் சொக்கிப்போகலாம். ஆனால் காஷ்மீரின் உண்மை நிலவரம் என்ன? அமித்ஷாவின் காஷ்மீர் பயணத்தின் நோக்கம் என்ன? அமித்ஷாவின் காஷ்மீர் பயணம் அச்சத்தின் வெளிப்பாடு என்பதையும் அவரது பேச்சுக்கள் அனைத்தும் புகழ்மிக்க பொய்யுரைகள் என்பதையும்தான் காஷ்மீரின் களநிலவரம் நமக்கு உணர்த்துகிறது.
காஷ்மீரை சிறைவைத்து ‘வெளிப்படையாக’ பேசிய அமித்ஷா
பயணத்தின் கடைசிநாளில், ஸ்ரீநகரில் தாம் பங்கேற்ற கூட்டமொன்றில், மேடையில் தமக்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த குண்டு துளைக்காத கவசத்தை நீக்கச் சொல்லிவிட்டு பேசிய அமித்ஷா, ‘‘நான் காஷ்மீர் மக்களுடன் மனம்திறந்து பேசவிரும்புகிறேன். என்னைக் கிண்டல் செய்தார்கள், கண்டனம் செய்தார்கள். இன்று நான் உங்களிடம் வெளிப்படையாகப் பேச விரும்புகிறேன். அதனால்தான் இங்கு குண்டு துளைக்காத கவசமும் இல்லை. பாதுகாப்பும் இல்லை. நான் உங்கள் முன் இப்படி நிற்கிறேன்’’ என்று தன் உரையைத் தொடங்கினார்.
குண்டு துளைக்காத கண்ணாடியை நீக்க உத்தரவிட்டதைச் சுட்டிக்காட்டி சங்க பரிவாரத்தினர் கொண்டாடினர். அவ்வளவு பெரிய தைரியசாலியா அமித்ஷா? உண்மை என்னவென்றால், அமித்ஷா காஷ்மீருக்கு வருவதற்கு முன்பே அங்கு வெகுவாக பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுவிட்டது. காஷ்மீர் முழுவதும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) உலாவத் தொடங்கின. நகரில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டன. இருசக்கர வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. சந்தைக்கு சென்றவர்கள் கூட சந்தேகக் கண்ணோடு பார்க்கப்பட்டனர். கல்லெறிந்தவர்கள், ‘தீவிரவாதிகளின்’ உறவினர்கள் என்று காரணம் காட்டி கிட்டத்தட்ட 900 பேர் வரை போலீசால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பலரும் கைது செய்யப்பட்டனர். பலர் காஷ்மீருக்கு வெளியே உள்ள சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். இப்படி மொத்த காஷ்மீரையும் சிறை வைத்துவிட்டுதான் சிறிய கண்ணாடி கவசத்தை விட்டு வெளியேற துணிந்தார் ‘மாவீரர்’ அமித்ஷா. என்ன இருந்தாலும் ‘வீர’ சாவர்க்கர் பரம்பரை அல்லவா?
ஜம்மு பகுதியில், அம்பானி நூறு ரிலையன்ஸ் சில்லறை வணிகக் கடைகளை திறந்துள்ளதற்கு எதிராக போராடும் சிறு வணிகர்கள்.
மேலும் பேசிய அமித்ஷா, தாம் இளைஞர்களுடன் நட்பு நாடி வந்திருப்பதாகவும் காஷ்மீர் இளைஞர்கள் மோடி அரசுடன் ஒத்துழைத்தால் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டலாம் என்று கூறினார். இந்திய இராணுவத்தின் துப்பாக்கி முனையில் காஷ்மீர் இளைஞர்களை நிறுத்தி வைத்து அவர்களிடம் நட்பு பாராட்டுவதாகத் தெரிவித்திருப்பதெல்லாம் வக்கிரத்தின் உச்சம்.
அமித்ஷாவின் காஷ்மீர் வருகை சமயத்தில்தான், T-20 கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெற்ற வெற்றியை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கொண்டாடியதாகக் குற்றம்சாட்டப்பட்டு மாணவர்கள் மீது, ஊபா கொடுஞ்சட்டம் பாய்ச்சப்பட்டது. இந்தியாவின் தோல்வியைக் கொண்டாடியதன் மூலம் அமித்ஷா கோரியபடி இந்திய (மோடி) அரசிடம் ‘ஒத்துழைத்துப் போவதற்கோ’, ‘நட்பு செய்வதற்கோ’ காஷ்மீர் இளைஞர்கள் தயாரில்லை என்பதை தங்களது செயலால் காரி உமிழ்ந்து சொல்லிவிட்டார்கள்.
காஷ்மீர் இளைஞர்கள் மீது ஊபா சட்டத்தைப் பாய்ச்சியதைதான் ‘மனம் திறந்து’ பேச விரும்புகிறார் போலும் என அமித்ஷாவை ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கேலி செய்துள்ளார்.
போராடியவர்களுக்கும் எதிர் கருத்து தெரிவிப்பவர்களுக்கும் எதிராக மட்டுமல்ல, பத்திரிகையாளர்களுக்கும் எதிராக ஊபா சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் இரண்டாண்டு வாழ்க்கையை முடக்கிய பாஜக – சங்க பரிவாரக் கும்பலின் மீது காஷ்மீர் இளைஞர்கள் கடும் கோபத்தில் இருக்கும் நிலையில் இளைஞர்களிடம் நட்பு நாடி வந்திருப்பதாக அமித்ஷா கூறுவதே கேலிக்கூத்து!
பயங்கரவாதம் ஒழியவில்லை…. புதிய வடிவில் பிறப்பெடுத்திருக்கிறது!
தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீரில் பயங்கரவாதம் கடுமையாக ஒடுக்கப்பட்டிருப்பதாகப் பேசிய அமித்ஷா, 2004 – 2014 வரையிலான பத்தாண்டுகளில் 2,081 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாகவும் பாஜக ஆட்சிக்கு வந்த 2014 முதல் செப்டம்பர் 2021 வரை அது 239-ஆகக் குறைந்துள்ளதாகவும் அதாவது ஆண்டுக்கு 208 பேர் என இருந்த உயிரிழப்பு தற்போது ஆண்டுக்கு 30 பேர் என குறைந்துள்ளதாகவும் புள்ளிவிவரம் கொடுக்கிறார். ஆனால், கடந்த அக்டோபர் மாதம் அமித்ஷாவின் காஷ்மீர் வருகையின்போது அங்கு நிலவிய சூழல் ‘பயங்கரவாதத்தை ஒடுக்கிவிட்டதாகக்’ கூறும் அவரின் அண்டப் புளுகுகளை அம்பலப்படுத்துகிறது.
காஷ்மீரில் பயங்கரவாதம் புதிய வடிவில் பிறப்பெடுத்திருக்கிறது. சிறுபான்மை இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் காஷ்மீரிகள் அல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்கள், எதிர்ப்பு முன்னணி (The Resistance Front) என்ற பெயரில் புதிதாக உருவாகியுள்ள பயங்கரவாதக் குழுவினரால் குறிவைத்துக் கொல்லப்படுகிறார்கள். இந்த ஆண்டு (2021) மட்டும் சுமார் 31 பேரும் குறிப்பாக அமித்ஷா காஷ்மீருக்கு வந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 11 பொதுமக்களும் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஆதிக்கசாதி இந்துக்களான காஷ்மீரி பண்டிட்டுகள், பாஜக-வின் சமூக அடித்தளமாக இருப்பவர்கள். இதுபோன்ற சம்பவங்களால் அச்சமுற்ற பண்டிட்டுகளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் கூட்டம் கூட்டமாக காஷ்மீரைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இராணுவத்தினர் மீது மட்டுமே நடத்தப்பட்டு வந்த பயங்கரவாதத் தாக்குதல், தற்போது சிறுபான்மையினரை (பொதுமக்களை) குறிவைத்துக் கொல்வது என நூதன வடிவெடுத்துள்ளது. இதுபோன்றதொரு எதிர்வினையை சமாளிக்க முடியாமல் திணறிவருகிறது இராணுவம்.
எதிர்ப்பு முன்னணியின் படுகொலைகளுக்குப் பிறகு, பயங்கரவாதிகளைப் பிடிக்கிறேன் என இராணுவம் நிகழ்த்தும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கண்ணில்படும் அப்பாவி காஷ்மீரிகளை சுட்டுக் கொன்றுவிட்டு, ‘பயங்கரவாதிகள் சுட்டுப் பிடிக்கப்பட்டனர்’ என போலி மோதல் படுகொலைகளை அரங்கேற்றி வருவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
‘சிறுபான்மையினரை குறிவைத்துக் கொல்லுதல்’ என்ற பயங்கரவாத வடிவம் 1990-களை நினைவுபடுத்துகிறது என்கின்றன பத்திரிகைகள். 1990-களில், காஷ்மீரிலுள்ள மத அடிப்படையிலான பயங்கரவாதக் குழுக்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் குறிவைத்துக் கொன்றனர். காஷ்மீரை விட்டு அவர்கள் வெளியேற வேண்டும் என மிரட்டல் விடுத்தனர். 1990 – 1992-க்கு இடைப்பட்ட காலத்தில், சுமார் 70,000 பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறினர். தற்போது அந்தச் சூழல் மீண்டும் உருவாகிவிடுமோ என்று அச்சம் நிலவுகிறது.
இந்த சூழலில்தான், காஷ்மீரை சாந்தப்படுத்துவதற்காக சில அறிவிப்புகளை வெளியிடவும் தனது அடித்தளமாக உள்ள பண்டிட்டுகளுக்கு ஆறுதலளிப்பதற்காகவும் மூன்றுநாள் பயணத்தை திட்டுமிட்டுக் கொண்டார் அமித்ஷா.
30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, மீண்டும் அப்படியொரு பயங்கரவாதக் குழு  தலையெடுத்திருக்கிறதென்றால் அதற்கு மோடி – அமித்ஷா தலைமையிலான பாஜக அரசுதான் காரணம். சிறப்புச் சட்டம் இரத்து செய்யப்பட்ட பிறகுதான் எதிர்ப்பு முன்னணி (TRF) என்ற பயங்கரவாதக் குழு உருவாகியிருக்கிறது. சிறுபான்மையினர் மீதான படுகொலைக்குப் பொறுப்பேற்றிருக்கும் எதிர்ப்பு முன்னணி, ‘‘நாங்கள் அப்பாவிப் பொதுமக்கள் யாரையும் கொல்லவில்லை, ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளைத்தான் கொல்கிறோம்’’ என்று நியாயம் சொல்கிறது. ஆனால், எதிர்ப்பு முன்னணி கொன்றவர்கள் எல்லோரும் ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதிகள் இல்லை. பிற மாநிலங்களில் இருந்து பணிக்காக அங்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை உள்ளடக்கிய சிறுபான்மையினர் கொல்லப்பட்டிருந்தார்கள். ‘‘காஷ்மீருக்கு வந்து குடியேறும் அனைவரையும் நாங்கள் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளாகத்தான் கருதுவோம்’’ என்று காரணம் சொல்கிறது எதிர்ப்பு முன்னணி.
இத்தகைய பயங்கரவாதக் குழுக்கள் உருவாகுவதற்கான அடித்தளத்தை மோடி அரசு இந்த இரண்டாண்டுகளில் பல்வேறு சட்டங்கள் மூலம் அடித்தளமிட்டிருக்கிறது. காஷ்மீர் சிறப்புச் சட்டம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு சட்டங்கள் அங்கு திருத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, 15 ஆண்டுகள் காஷ்மீரில் வசிக்கும் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்ற சட்டத்திருத்தம், காஷ்மீரில் யார் வேண்டுமானால் நிலம் வாங்கலாம் என்ற சட்டத்திருத்தம், அரசு வேலைகளில் காஷ்மீரிகளுக்கு இருந்த 50 சதவிகிதம் பிரதிநிதித்துவத்தை 33 சதவிதமாக குறைத்தது போன்றவை இந்தச் சட்டத் திருத்தங்களில் அடங்கும்.
பாலஸ்தீனத்தைப்போல காஷ்மீரின் மக்கள் தொகை விகிதத்தையே மாற்றமுனையும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்திட்டத்தின் அங்கம்தான் இந்தச் சட்டத் திருத்தங்கள் என்றும்,  இதன் காரணமாகவே காஷ்மீரிகள் அல்லாத எல்லோரையும் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளாகத்தான் பார்ப்போம் என்றும் சொல்கிறது எதிர்ப்பு முன்னணி.
தெளிவாகப் பார்த்தோமென்றால், அமித்ஷா பீற்றிக் கொள்வதைப்போல பாஜக அரசு அங்கு பயங்கரவாதத்தை ஒடுக்கிவிடவில்லை. மாறாக, பழைய பயங்கரவாதக் கும்பல்களோடு ஒரு புதிய பயங்கரவாதக் குழுவின் பிரசவத்திற்கு வழிவகுத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவதோ அப்பாவி பொதுமக்கள்தான்.
மாநில ‘ஜனநாயகத்திற்கு’.. பாஜகவின் உள்ளாட்சி ‘ஜனநாயகம்’ ஒரு சாட்சி!
ஜம்மு – காஷ்மீரில் எல்லைகள் மறுநிர்ணயம் செய்யப்பட்டு, தொகுதிகள் பிரிக்கப்பட்டபின் மீண்டும் ஜம்மு – காஷ்மீருக்கு மாநில தேர்தலை நடத்தப்போவதாக சொல்லும் அமித்ஷா, அதற்கு ஆதரமாக, காஷ்மீரில் தாங்கள் ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தல் நடத்தியிருப்பதைக் குறிப்பிட்டு பெருமையடைகிறார்.
குறிப்பாக, ‘‘70 ஆண்டு காலமாக ஜம்மு – காஷ்மீரை ஆண்ட மூன்று குடும்பங்கள் 87 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 6 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு என்ன கொடுத்தன. திரு நரேந்திர மோடி 30,000 உள்ளாட்சி பிரதிநிதிகளை வழங்கியுள்ளார். இப்போது பஞ்ச்களும் சர்பஞ்ச்களும் (காஷ்மீர் உள்ளாட்சி பிரதிநிதிகளை இவ்வாறு அழைக்கின்றனர்) இந்திய அரசில் அமைச்சராகலாம், ஜம்மு – காஷ்மீரின் முதல்வராகலாம்’’ என்று பேசியிருக்கிறார் நமது  ‘ஜனநாயக மூர்த்தி’ அமித்ஷா.
இந்த உரையைக் கேட்கும் காஷ்மீர் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் கண்கள் நிச்சயம் கோபத்தால் சிவந்திருக்கும்.. ஏனெனில், காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடந்ததே தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு முறையான அதிகாரம் வழங்கப்படவில்லை.
‘‘ஜி.ஆர்.எஸ்., கிராம சேவகர்கள், பி.டி.ஓ., ஏ.சி.டி., ஏ.சி.ஆர். உள்ளிட்ட கிராம அளவிலான அதிகாரிகளிலிருந்து மாவட்ட அளவிலான நிர்வாகம் வரை யாரும் எங்கள் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்கவில்லை. நாங்கள் பலமுறை அவர்களை அணுகி பல்வேறு கடிதங்களை சமர்ப்பித்தோம், ஆனால் அவர்கள் எங்கள் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் சொல்லவில்லை’’ என்று பஞ்சாயத்து உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ரம்பன் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 70 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இக்காரணங்களால் கூண்டோடு பதவி விலகியுள்ளனர்.
ஜனநாயக அலங்காரத்திற்காக உள்ளாட்சித் தேர்தல்! பொம்மைகளாக பஞ்சாயத்து தலைவர்கள்! ‘வேர்மட்ட ஜனநாயகமே’ பல்லிளிக்கும் இலட்சணத்தில், மாநிலத் தேர்தலை நடத்தி கூடுதல் ‘ஜனநாயகம்’ வழங்கப்போவதாக அமித்ஷா கூறுவது, எப்படிப்பட்ட ஜனநாயகமாக இருக்குமென்பதை இதிலிருந்தே நாம் அவதானித்துக் கொள்ளலாம்.
கூடுதலாகச் சொல்ல வேண்டுமென்றால், காஷ்மீரில் ‘வேர்மட்ட ஜனநாயத்தை’ தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக உறுப்பினர்களும் கூட அனுபவிக்க முடியவில்லை. அதற்கும் மோடிதான் காரணம். 370 சிறப்புச் சட்டம் இரத்து செய்யப்பட்ட 2019 ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த ஆண்டு (2021) ஆகஸ்டு மாதம்வரை சுமார் 23 உள்ளூர் பாஜக தலைவர்களும் உறுப்பினர்களும் பயங்கரவாதிகளால் குறிவைத்துக் கொல்லப்பட்டனர். அதிலும், குறிவைக்கப்பட்ட பெரும்பாலானோர் பஞ்சாயத்துத் தலைவர்கள், உறுப்பினர்கள். இக்காரணங்களாலும் பலர் பதவி விலகினர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பல பிரதிநிதிகளை அரசு மற்றும் தனியார் விடுதிகளில் பாதுகாப்போடு தங்கவைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தைப் பார்க்கக்கூட அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த ஜூன் மாதம் காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் மாவட்ட கவுன்சில் உறுப்பினரான அஷாக் ஹுசைன் ஹுர்ரா தனது ஹோட்டல் அறைக்குள் தற்கொலைக்கு முயன்ற கொடுமையும் அரங்கேறியுள்ளது.
‘வளர்ச்சி’த் திட்டங்களின் உண்மை முகம்
சிறப்புச் சட்டம் இரத்து செய்யப்பட்டது காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் செலுத்துவதற்குத்தான் என்று கூறிய அமித்ஷா, ‘‘இங்கு 9 மருத்துவக் கல்லூரிகள், 15 நர்சிங் கல்லூரிகள், ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., ஐ.ஐ.எம்.சி., 2 கேன்சர் இன்ஸ்டிடியூட், பாலிடெக்னிக், நர்சிங் கல்லூரிகள் என பல கல்வி நிறுவனங்கள் கட்டப்பட்டு தொடங்கப்பட்டுள்ளன… இனி மருத்துவம் படிக்க காஷ்மீர் இளைஞர்கள் பாகிஸ்தான் போக வேண்டியதில்லை… இந்த பகுதிக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கும் இடையிலான வளர்ச்சியை ஒப்பிட்டுப் பாருங்கள், அங்கு மின்சாரம், சாலைகள், கழிப்பிட வசதிகள் ஏதேனும் உள்ளனவா எதுவும் இல்லை. மறுபுறம் இங்கோ, மற்ற இந்தியர்களைப் போலவே உங்களுக்கும் (காஷ்மீரிகளுக்கும்) உரிமை உள்ளது’’ என்றார்.
மேலும், கடந்த ஆறு மாதத்தில் ஜம்மு – காஷ்மீரில் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளதாகவும், அதனை 2022-க்குள் ரூ.51 ஆயிரம் கோடியாக்க இலக்கு வைத்துள்ளதாகவும் கூறுகிறார். இதன்மூலம் ஜம்மு – காஷ்மீரில் 5 இலட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று கூறுகிறார் அமித்ஷா.
முதலாவதாக, மருத்துவக் கல்லூரிகள், ஐ.ஐ.டி.க்கள் கட்டப்பட்டுள்ளதாக சொல்வதைப் பற்றி பார்க்கலாம். காஷ்மீர் மண்ணின் மைந்தர்களுக்கு இருந்த சிறப்புரிமைகள், சலுகைகள் எல்லாவற்றையும் பறித்து, அம்மாநிலத்தை துண்டாக்கி இராணுமயப்படுத்தி ஒடுக்கி வருவது, குறிப்பாக மத அடிப்படையிலான பாகுபாடுகள் போன்றவற்றால் காஷ்மீர் இளம்தலைமுறையினர் பாகிஸ்தானை ஆதரிக்கும் எதிர் மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதை எப்படியாவது சரிகட்டவிட வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள்தான் இவை.
எதார்த்தத்தில், இதில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. அங்கிருக்கு மருத்துவக் கல்லூரிகளோ, ஐ.ஐ.டி.க்களோ காஷ்மீரிகளுக்கு மட்டுமா கல்வி வழங்கப்போகிறது? மருத்துவத் துறையைப் பொறுத்தவரை நீட் தேர்வு நுழைந்ததிலிருந்து பணம் கட்டி கோச்சிங் சென்றால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இந்தியா முழுவதுமுள்ள உயர் வர்க்கத்தாரும் அதன் விளைவாக பெருமளவில் உயர்சாதியினரும் ஆதாயமடைவார்களே தவிர இதனால் காஷ்மீரிகளுக்கு பெரிய நலன் இருக்க முடியாது. ஐ.ஐ.டி.களைப் பற்றி தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அது ஏற்கனவே பார்ப்பன உயர்சாதியினரின் கூடாரங்களாத்தான் இருக்கிறது.
இரண்டாவதாக அமித்ஷா, ரூ.51 ஆயிரம் முதலீடு, 5 இலட்சம் பேருக்கு வேலை என்கிறாரே, உண்மையிலேயே காஷ்மீர் இளைஞர்களுக்கு மோடி அரசு வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கிறதா? எதார்த்தத்தில் இது குறித்த புள்ளிவரங்கள் அனைத்தும் அமித்ஷாவின் பிதற்றல்களைப் பார்த்து பல்லிளிக்கின்றன. காஷ்மீரின் சிறப்புரிமை இரத்து செய்வதற்கு முன்பு 7.9 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 2021 ஆகஸ்டில் 13.6 சதவீதமாக உயர்ந்தது. பின்னர் ஒரே மாதத்தில் 21.6 சதவீதமாக வேலையின்மை விகிதம் அதிகரித்தது. இது தேசிய சராசரியான 6.9 சதவீதத்தைவிட பல மடங்கு அதிகமாகும். உண்மையைச் சொன்னால், இந்திய இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு கொடுத்த கதைதான், இந்த 5 இலட்சம் வேலைவாய்ப்பும்.
படிக்க :
புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2021 அச்சு இதழ் !
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2021 மின்னிதழ் !
அப்படியெனில், தற்போது வந்துள்ள ரூ.12 ஆயிரம் கோடி முதலீடும், அடுத்த ஆண்டிற்குள் வரவிருக்கும் ரூ.51 ஆயிரம் கோடி முதலீடும் யாருக்கான வளர்ச்சியை உருவாக்கப்போகின்றன, சிறப்புச் சட்டம் இரத்து செய்தபிறகு ஏன் இவ்வளவு மூலதனம் குவிந்துள்ளது, இவையெல்லாம் யாருடைய முதலீடுகள்…? சந்தேகமே வேண்டாம் அம்பானி, அதானி உள்ளிட்ட மோடியின் கார்ப்பரேட் நண்பர்கள் காஷ்மீரை சுரண்டிக் கொழுக்க செய்துள்ள முதலீடுகளே அவை. இந்த முதலீடுகளுக்குத் தோதாகத்தான் விவசாய காரணங்களுக்காக அல்லாமல் வேறு காரணங்களுக்காக நிலம் வாங்க முடியாது என்றிருந்த காஷ்மீரின் பெரும் பண்ணை ஒழிப்புச் சட்டத்தை நீக்கி கார்ப்பரேட்டுகள் அபகரித்துக் கொள்ள வழியேற்படுத்தியிருக்கிறது.
இந்த மையமான நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தான் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமை இரத்து செய்யப்பட்டது. அப்போது மோடி ‘‘நயா காஷ்மீர்’’ (புதிய காஷ்மீர்) பிறந்துள்ளதாக அறிவித்தார்.
உழுபவனுக்கு நிலம், ஆண் – பெண் சமத்துவம், அனைவருக்கும் வாக்குரிமை என நிலப்பிரபுத்துவ மன்னராட்சியை எதிர்த்துப் போராடி வென்ற காஷ்மீர் மக்கள் 1940-களில் முழங்கிய முழக்கம்தான் ‘‘நயா காஷ்மீர்’’. அவர்கள் போராடிப் பெற்ற ஒவ்வொரு உரிமைகளையும் பறித்துவிட்டு, கார்ப்பரேட்டுகளின் மற்றுமொரு சுரண்டல் நிலமாக மாற்றப்பட்டிருக்கும் காஷ்மீரை, ‘‘நயா காஷ்மீர்’’ என்று சொல்வதற்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் தேவை இந்த காவிக் கும்பலுக்கு…

துலிபா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க