ஜம்மு-காஷ்மீர்: ஏ.பி.வி.பி நோக்கத்திற்குத் துணைபோகும் உமர் அப்துல்லா அரசாங்கம்

“ஜனவரி 23 அன்று நடைபெறும் பேரணிக்கு இரண்டு ஆசிரியர்களுடன் 40 முதல் 50 மாணவர்களை அனுப்ப வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

னவரி 23 அன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் (ABVP) நடத்திய ‘திரங்கா’ பேரணியில் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். பேரணிக்கு ஒரு நாள் முன்னதாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கேற்பை உறுதி செய்யுமாறு பூஞ்ச் மாவட்டத்தின் கல்வித் துறைக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகம் உத்தரவிட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மக்கள் ஜனநாயகக் கட்சியானது (PDP), தேசிய மாநாட்டுக் கட்சி (NC) அரசாங்கம் ஏ.பி.வி.பி-யின் சித்தாந்த ரீதியான பேரணி நிகழ்வில் கலந்து கொள்ள மாணவர்களைக் கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கான சங்கமும் இந்த நிகழ்வு குறித்து விசாரிக்க வேண்டுமெனக் கோரியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கல்வித் துறையின் செயல்பாடுகள் ஆளும் பாஜகவுடன் இணக்கமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் உமர் அப்துல்லா அரசாங்கத்தின் செயல்பாடு குறித்து இந்த நிகழ்வு தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஏ.பி.வி.பி-யின் பூஞ்ச் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான கனவ் பாலி, 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, திரங்கா பேரணிக்கு அனுமதி கோரி, ஜனவரி 20ம் தேதி மாவட்ட நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார். இதற்கடுத்து, ஜனவரி 22 அன்று, பூஞ்ச் மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டால் அம்மாவட்ட தலைமைக் கல்வி அதிகாரிக்கு (CEO) கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் “ஜனவரி 23 அன்று நடைபெறும் பேரணிக்கு இரண்டு ஆசிரியர்களுடன் 40 முதல் 50 மாணவர்களை அனுப்ப வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சம்பிரதாயத்துக்கு சில கட்டுப்பாடுகளுடன் தலைமைக் கல்வி அதிகாரியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏ.பி.வி.பி பேரணியில் கலந்து கொள்ளக் கோரி, பூஞ்ச் நகரில் உள்ள ஒன்பது தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளுக்குத் தலைமை கல்வி அதிகாரி அனுமதிக் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பூஞ்ச் பட்டக் கல்லூரியில்  தொடங்கிய பேரணி நகாவலி சாலை, சிட்டி சௌக் மற்றும் கிலா மார்க்கெட் வழியாகச் சென்று கல்லூரி விளையாட்டு மைதானத்தை வந்தடைந்துள்ளது. பேரணியில் நூற்றுக்கணக்கான குழந்தைகளும், மாவட்ட நிர்வாகத்தின் சில அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.


படிக்க: ஜம்மு-காஷ்மீர்: சந்தேகத்தை ஏற்படுத்தும் சமீபத்திய பயங்கரவாத தாக்குதல்கள்


போலீஸ் பைக் ரைடர்களின் பங்கேற்போடு இந்தப் பேரணி நடைபெற்றதாக பூஞ்ச் மாவட்ட துணை ஆணையர் விகாஸ் குண்டல் தெரிவித்தார். மேலும் இப்பேரணியில் குண்டல் அல்லது மாவட்ட நிர்வாகத்தின் மற்ற அதிகாரிகளின் பங்கேற்றார்களா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.

’பூஞ்ச் நியூஸ்’ என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட பேரணியின் காணொலியில் ஏ.பி.வி.பி-யின் பேனரை ஏந்தியபடி இரண்டு பெண்களும், ஏ.பி.வி.பி செயல்பாட்டாளரான ஒரு இளைஞனும் பேரணியில் முன் செல்கின்றனர். இது குறித்துப் பேசிய அந்த இளைஞன், பேரணிக்கு முன்னதாக பூஞ்ச் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஏ.பி.வி.பி சென்றதாகவும், மாணவர்கள் பேரணியில் கலந்து கொள்ள உற்சாகமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளான். மேலும் “இதே ஜம்மு காஷ்மீரில்தான் தேசியக் கொடியை யாரும் ஏந்தமாட்டோம் என்று அறிக்கை விடப்பட்டது” என்று சர்ச்சைக்குரிய வகையில் வேண்டுமென்றே அந்த இளைஞன் பேசியதும் காணொலியில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து, பி.டி.பி தலைவர் இல்திஜா முப்தி, உமர் அப்துல்லா அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். “முஸ்லிம் எதிர்ப்பு மதவெறியைப் பரப்பும் ஆர்எஸ்எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் பூஞ்ச் முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிக் குழந்தைகள் கட்டாயப்படுத்திக் கலந்து கொள்ள வைக்கப்பட்டதாகவும், மதவெறிக்கான பிரச்சாரக் கருவியாகக் கல்விக் கூடங்களைப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாதது” என்று அவரது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும் குஜ்ஜர் பேகர்வால் மாணவர் கூட்டமைப்பு, இது குறித்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் “ஏபிவிபி தனது மதவெறி சித்தாந்தத்தைப் பிரச்சாரம் செய்வதற்காக நடத்தும் பேரணியில் பங்கேற்க அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளை தலைமை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் எவ்வாறு உத்தரவிட முடியும்? யாருடைய வழிகாட்டுதலின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டது என்பது விசாரிக்கப்பட வேண்டும்” என்றும் கூறியுள்ளது.

அரசியல் கட்சிகள், மக்களின் கடுமையான எதிர்ப்பினை தொடர்ந்து, தோடா மாவட்டத்தில் ஏ.பி.வி.பி நடத்தத் திட்டமிட்டிருந்த இரண்டு நாள் நிகழ்வினை நடத்த நான்கு அதிகாரிகளை நியமித்த உத்தரவை அரசாங்கம் திரும்பப் பெற்றுக் கொண்டது. அதே சமயம், மாணவர்கள் பங்கேற்கும் ஏ.பி.வி.பி-யின் அந்த நிகழ்விற்குத் தடை விதிக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான மதவெறியை மாணவர்கள் மத்தியில் எளிதாகப் பரப்புவதற்கு உமர் அப்துல்லா அரசாங்கம் துணைபோவதை எதிர்க்கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கும், பள்ளிகளுக்கும் சில கூடுதல் கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துள்ளது.

மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பறித்துக் கொண்டு, பாசிச ஒன்றிய பாஜக அரசின் துணையோடு, பெருமளவில் தனது கைவசம் அதிகாரத்தை வைத்துள்ள ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநரின் உதவியோடுதான் ஆர்.எஸ்.எஸ் கும்பல் தனது மதவெறியைப் பரப்பும் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்து வருகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். காவி கும்பலின் நோக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அம்பலப்படுத்தி, அதன் மூலம் காவி கும்பலின் செயல்திட்டத்தை முறியடிக்க முயலாமல் செயலற்று உள்ளது, உமர் அப்துல்லா அரசாங்கம்.

மூலம்: தி வயர்


மொழிபெயர்ப்பு: அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க