ஆலங்குளம் சாதிய தாக்குதல்: தென் மாவட்டங்களில் தொடரும் ஆதிக்கச்சாதி வெறியாட்டம்!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோவில் பகுதியைச் சேர்ந்த ‘தேவேந்திர குல வேளாளர்’ சாதியைச் சேர்ந்த 6 பேர் மீது அதே ஊரைச் சேர்ந்த மறவர் சாதி கும்பல் சாதிவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கிறித்துவ மதத்தைப் பின்பற்றுவோராக உள்ளனர்.

நாங்குநேரி பெரும்பத்து, இந்திரா காலனியில் நடத்தப்பட்ட சாதிவெறி தாக்குதலின் சுவடு மறைவதற்குள் மீண்டும் அதே போன்றதொரு சாதிவெறித் தாக்குதல் தற்போது நடத்தப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோவில் பகுதியைச் சேர்ந்த ‘தேவேந்திர குல வேளாளர்’ சாதியைச் சேர்ந்த 6 பேர் மீது அதே ஊரைச் சேர்ந்த மறவர் சாதி கும்பல் சாதிவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கிறித்துவ மதத்தைப் பின்பற்றுவோராக உள்ளனர்.

கடந்த 29.05.2026 அன்று மாலை 6 மணியளவில் மூன்று இருசக்கர வாகனங்களில் பத்துக்கும் மேற்பட்டோரைக் கொண்ட சாதிவெறி பிடித்த கும்பல் முகத்தை மூடிக்கொண்டு, கைகளில் வாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக வெட்டியுள்ளது.

இதில் அருண் மாறன், அவரது தந்தை மாற்கு ரமேஷ், ராயப்பன், ராம்குமார், சந்தோஷ்குமார் மற்றும் திருமண வீட்டிற்கு ட்ரம்ஸ் வாசிக்க வந்த மாடசாமி என 6 பேர் தாக்கப்பட்டு, 2 பேர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையிலும், 4 பேர் நெல்லை அரசு மருத்துவமனையிலும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மாற்கு ரமேஷ் தவிர அனைவரும் இளைஞர்கள்.

தகவல் அறிந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நெல்லை மண்டல துணைச்செயலாளர் தோழர் முத்து வளவன்; மக்கள் அதிகாரக் கழகம் தோழர் கின்ஷன் வழக்கறிஞர்; தமிழ்ப் புலிகள் கட்சி மாநில துணை செய்தித் தொடர்பாளர் தோழர் நெல்லை தமிழரசு; இளம்புலிகள் அணி, பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி, தமிழ்ப் புலிகள் கட்சி தோழர் ஆனந்த் உள்ளிட்டோர் நேரில் சென்று தாக்குதல் குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த சாதிவெறி கும்பல் தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களை நெட்டூர் தேவேந்திரகுல மக்கள் மீது நடத்தி வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட போலீசாரிடம் புகார் அளித்தும் வழக்கம்போல் சமாதானம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

அதன் விளைவு இன்று மிகப்பெரிய தாக்குதலில் முடிந்துள்ளது என பாதிக்கப்பட்ட மக்கள் பதற்றத்துடன் பேசினர்.

இத்தாக்குதலுக்கு சிறிதும், பெரிதுமாக கால வரிசைப்படி பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மையமானது ஆதிக்கச் சாதிவெறி. 1990-களில் ஏற்பட்ட கலவரங்களுக்குப் பின் அமைதியை நோக்கியும், பெரியவர்கள் இணக்கத்தை நோக்கியும் வாழ்ந்து கொண்டிருக்க, இளந்தலைமுறை சாதியின் பெயரால் அரிவாள் உயர்த்துகிறது.

இந்த கும்பல் நெட்டூரில் தாக்குதல் நடத்திவிட்டு, போகிற வழியில் நெல்லை மானூர் அருகில் தெற்கு பட்டியில் முபாரக், அப்துல் ரகுமான் ஆகியோரை வெட்டியுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு முந்தைய நாள் அம்பாசமுத்திரம் பிரம்மதேசம் பகுதியில் இதே கும்பலால் மணிகண்டன் (29) என்பவரும் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது.

பெரும்பத்து, இந்திரா காலனி சாதிவெறி தாக்குதலை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு, இது செய்யப்பட்டுள்ளது. பெரும்பத்து தாக்குதலை முறியடித்து பின்னணியில் இருக்கும் குற்றவாளிகளைத் தண்டிக்காமல் சம்பவ இடத்தில் வெட்டியவர்களை மட்டும் கைது செய்த நாங்குநேரி போலீசின் ரோல்மாடலை அப்படியே காப்பியடித்து ஆலங்குளம் போலீசும் 8 பேரைக் கைது செய்துள்ளது. அதில் 3 பேர் பதினெட்டு வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணி பற்றி விசாரிக்கப் போவதில்லை. இதே போன்று இன்னொரு தாக்குதல், இன்னொரு இடத்தில், இன்னொரு கும்பலால்… நீளும் இந்த பட்டியலுக்கு முடிவுரை எழுதுவது எப்படி?

தனித்திருக்கும்போது செயல்பட முடியாத ஆதிக்க மனநிலை, கூட்டாக இருக்கும்போது விழித்துக் கொள்கிறது. சாராயம், கஞ்சா துணையுடன் அது நடைமுறைக்குப் போகிறது. ஆனால் ‘ஆதிக்கச்சாதி’ இளைஞர்களுக்கும் பயன்படாத, அழிந்து வரும் சாதியை ஒரு கும்பல் தூபம் போட்டு வளர்க்கிறது. அது அந்த ஆதிக்கச்சாதி இளைஞர்களைப் பலிகடாவாக்கி தன்னை வளர்த்துக் கொள்ள சாதி சங்கமாகத் தன்னை முன்னிறுத்துகிறது. தன் மீது அரசியல் சாயமும் பூசிக் கொள்கிறது. இந்த ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தனக்கான அடித்தளமாகக் கொண்டு அதைப் பின்னணியிலிருந்து இயக்கி வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.

இவர்களைத் தொடாமல் அரசும், போலீசும் நடவடிக்கை என்கிற பெயரில் கண்துடைப்பு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது. சாதி வெறிக் குற்றங்களைத் தடுப்பார்கள் என இவர்கள் கையில் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, நாம் இனி சாதிவெறித் தாக்குதலுக்கு எத்தனை பேரை பலி கொடுப்பது?

ஆதிக்கச்சாதி வெறி சங்கங்களைத் தடை செய்! ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலைத் தடை செய்! இந்த முழக்கங்களை முன்வைத்து புரட்சிகர இயக்கங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள், உழைக்கும் மக்களை அணிதிரட்டி களத்தில் இறங்கிப் போராட வேண்டும். அதற்கான பணிகளை சாதி வெறியர்கள் சாதிவெறிக் களமாக மாற்றத் துடிக்கும் தென்மாவட்டங்களிலிருந்து தொடங்காமல், வேறெங்கிருந்து தொடங்குவது?

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க