தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர்கள் பெரும்பான்மையாக சுமார் 1,500 குடும்பங்களும், மறவர் சாதியினர் சுமார் 150 குடும்பங்களும் வாழ்கின்றனர்.

ஜூலை 9 இரவு சுமார் 10 மணி அளவில், செல்லப்பா என்கிற 72 வயது தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சேர்ந்த முதியவர், தன் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது பக்கத்து ஊரான தோழப்பன்பண்ணை என்ற ஊர் மறவர் சாதியைச் சேர்ந்த பேச்சிராஜன், மனோஜ் இருவரும் ஆழ்வார்கற்குளம் ஊரில் இருக்கும் பெட்டிக் கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் இருவரும் மதுபோதையில் வந்துள்ளனர். அப்போது தூங்கிக் கொண்டிருந்த செல்லப்பா எழுந்து வழக்கமாக வீட்டிற்குள் செல்ல முற்படுகையில், அவரது சட்டையைப் பிடித்து ஒருவன் இழுத்துள்ளான். தன் கையிலிருந்த வாளை கொண்டு அவரை வெட்டுவதற்கு ஓங்கவே, அந்த வாளை பிடித்துக் கொண்ட செல்லப்பா, என்னை ஏம்பா வெட்டுற எனக் கேட்க, ‘நீ பள்ளப்பயதான’ என அவன் கேட்டுள்ளான். ஏம்பா கேக்குற என செல்லப்பா மறுபடியும் கேட்க, ‘எண்ணிக்கைக்காக உன்னை வெட்டுறோம்’ என்று கூறிவிட்டு, செல்லப்பாவின் நெஞ்சில் உதைத்து கீழே தள்ளியுள்ளான். மற்றொருவன் ‘விடாத வெட்டுல’ என்று கூறியுள்ளான்.

கொலைவெறியுடன் கழுத்துக்கு வீசப்பட்ட வாளை, செல்லப்பா கையை வைத்துத் தடுக்க, கைகளில் மாறிமாறி ஐந்து வெட்டுக்கள் விழுந்தன.

இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கீழே விழுந்துள்ளார் செல்லப்பா. அவரை வெட்டிய சாதிவெறியர்கள் இருவரும் பைக்கில் ஏறித் தப்பித்துச் சென்றனர். நடந்ததைக் கேள்விப்பட்டுக் கூடிய ஊர்க்காரர்கள் செல்லப்பா இறந்து விட்டதாகவே கருதினர். ஆனால் அவரது முனகல் சத்தம் கேட்ட பின் உயிரோடு இருப்பதை அறிந்து கொண்டு அவரை அவசர, அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் செல்லப்பாவிற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உயிர் பிழைத்துக் கொண்டார்.

ஆழ்வார்கற்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர் பாக்கியராஜ் நடந்த சம்பவத்தைத் தெரிவித்தார். இதன்படி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக, மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா மற்றும் தோழர் தமிழ்வேந்தன், தோழர் கொம்பையா ஆகியோர் ஆழ்வார்கற்குளம் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தோம். அதன் பின் நெல்லை அரசு மருத்துவமனையில் பெரியவர் செல்லப்பாவைச் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்து, ஆறுதல்கள் கூறினோம்.

இந்தப் பகுதியிலேயே ஆழ்வார் கற்குளத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த போதிலும் மறவர் சாதியினரின் ஆதிக்கம் உள்ளது. மறவர் சாதியினர் வாழும் வீடுகளின் பின்புறத்தில் கால்வாய் கட்டுவதால் ஏற்படும் இட நெருக்கடி தங்களைப் பாதிக்கிறது என்று தேவேந்திரகுல வேளாளர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்பிரச்சனையில், ‘நாலு பேரை வெட்டி வீசினாதான் அடங்குவானுங்க’ என அவ்வப்போது மறவர் சாதியைச் சேர்ந்த சிலர் சொல்லியபடி இருந்துள்ளனர். மேலும் அவ்வூரில் மறவர் சாதியினருக்குப் பாத்தியப்பட்ட அரசன் குல கோயில் உள்ளது. அங்கு 15 ஆண்டிற்கு ஒரு முறை திருவிழா நடக்கும். கோவிலைச் சுத்தம் செய்வது, மண் அடித்து ஒழுங்குபடுத்துவது… இப்படி கடந்த காலங்களில் கடவுளின் பெயரால், சாதியின் அடிப்படையில் தேவேந்திர குல வேளாளர் சாதியினர் இவ்வேலைகளைச் செய்ய வேண்டும் என ஆதிக்க எண்ணம் கொண்ட மறவர் சாதியினரால் பணிக்கப்பட்டனர்‌. இந்த முறை தேவேந்திர குல வேளாளர் இளைஞர்கள் இந்த வேலையைச் செய்ய மறுத்துள்ளனர்.

தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும் மறவர் சாதியினர் இருவருக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகள் இருந்த போதும், அது கொலைவெறித் தாக்குதல் என்ற அளவுக்குப் போகவில்லை. ஆனால் தற்போது நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சாலையை மறிக்கச் சென்ற ஊர்பொதுமக்களை போலீஸ் தடுத்து நிறுத்தியது. அதன் பின் தென்மண்டல டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு ஆறு மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்து விடுவதாக மக்களிடம் வாக்குறுதி அளித்தார். ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனால் பகுதி இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் தூத்துக்குடி – திருநெல்வேலி நெடுஞ்சாலையை மறித்து சாலையில் அமர்ந்தனர்‌.

நீதி கேட்டு, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸ் கைது செய்து வண்டியில் ஏற்றியது‌. அப்போது இளைஞர்கள் நான்கு பேரின் செல்போனை பிடுங்கி, அவர்களை அடித்து வண்டிக்குள் தள்ளி அடாவடி செய்துள்ளது. வாகைக்குளம் வரை கொண்டு சென்று அதன்பின் ஊரின் அருகில் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஸ்ரீவைகுண்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சாதியப் படுகொலைகள், தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கிறன. கூலிப்படைகள் உருவாகி மக்கள் அச்சத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளனர். மணக்கரை மணி உள்ளிட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். தேவேந்திர ராஜா போன்றோர் மீது சாதிவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதையெல்லாம் தடுக்கத் தவறிய, தூண்டிவிடும் மூலகாரணமான குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இருக்கும் போலீஸ் பாதிக்கப்பட்ட மக்கள் போராடும்போது அவர்களை ஒடுக்குகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒடுக்குமுறைகளைப் புறந்தள்ளி மக்கள் நீதிக்கான தங்களின் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

தற்போது மக்களின் போராட்டங்களை அடுத்து குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்‌. குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act) மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நேரடியாகத் தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர். இச் சம்பவத்திற்குத் தூண்டுதலாக இருந்தவர்களைக் கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன் போலீசிடம், “நான் வண்டியில் வேகமாகச் சென்றேன். அவர் என்னைக் கெட்டவார்த்தையில் திட்டினார். அதனால் நான் அவரை வெட்டினேன்” என்று கூறியுள்ளான். இதை முன்வைத்து தனிநபர் பிரச்சனையாக போலீஸ் இதை முடிச்சுப் போட நினைக்கிறது. ஆனால் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதாகவும், தனிப்பட்ட பகையினாலும் இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதாகவும் ஊர் மக்களும், பாதிக்கப்பட்ட பெரியவர் செல்லப்பாவும் கூறுகின்றனர்.

மேலும் வெட்டியவர்களில் ஒருவன் இராமநாதபுரத்தில் அடைக்கலம் புகுந்தான். இவர்களுக்கு வழக்கறிஞர் உடனடியாக வந்துள்ளார். இது எல்லாம் இந்த தாக்குதல் ஏற்கெனவே திட்டமிட்டு நடத்தப்பட்டதற்கான சான்றாக உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

1997-இல் அழ்வார்கற்குளத்தில் நடந்த சாதிய கலவரம் தென் மாவட்டங்களில் பரவியது. கொடியங்குளம் மட்டுமன்றி அதன் சுற்றுவட்டாரத்திலிருந்த பல கிராமங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட எல்லையோர கிராமங்களில் பதற்றம் நிலவியதால், ஆழ்வார்கற்குளம் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் தாக்குதல்கள், போக்குவரத்து முடக்கம், வாழ்வாதார இழப்பு மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போன்ற சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட தலித் மக்கள் கையறு நிலையில் நிறுத்தப்பட்டனர்.

தற்போது தாக்குதல் நடந்த பின்னும் தங்களது ஆதாயத்தை முன்வைத்து, எந்த ஓட்டுக் கட்சிகளும் இதுவரை ஊருக்குள் வந்து பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கவில்லை. மக்களுக்காகப் போராடுகின்ற கட்சி என்கிற அடிப்படையில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து பிரச்சினைகளைக் கேட்டறிந்தோம்.

ஆழ்வார்கற்குளம் கலவர சம்பவம் நடந்து, சுமார் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்பிரச்சனையால் இப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது போதையினால் நடந்ததல்ல.

ஏற்கெனவே நாங்குநேரி – பெரும்பத்து, இந்திரா காலனி, ஆலங்குளம் நெட்டூர் ஆகிய பகுதிகளில் சாதிவெறி, கொலைவெறித் தாக்குதல்கள் உழைக்கும் மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கியது போலவே, தற்போது ஆழ்வார்கற்குளம் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சாதிவெறி, கொலைவெறி தாக்குதலும் தேவேந்திர குல வேளாளர் மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

13.07.2026 அன்று ஊர்மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக தோழர்கள் பங்கேற்றோம்.

அனைவரும் ஒன்றிணைந்து சாதிவெறியைத் தூண்டிவிடும் சாதிவெறியர்களையும், கூலிப்படை கும்பலையும் கைது செய்யப் போராட வேண்டும். திட்டமிட்டு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இம்மாதிரியான சாதிவெறி, கொலைவெறித் தாக்குதல்களுக்குப் பின்னால் ஆதிக்க சாதிவெறிச் சங்கங்களும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலும் இருந்து செயல்படுகின்றன. அதனால் உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து ஆதிக்க சாதிவெறி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல்களையும் தடை செய்யப் போராடுவோம். சாதிவெறி கொலைவெறித் தாக்குதல்களை முறியடிப்போம்.

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி மாவட்டம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க