தூத்துக்குடி கயத்தாறு அருகே மீண்டும் ஒரு ஆணவப் படுகொலை!

சிவமதி, அபிசெல்வி என இன்னும் எத்தனை பெண்களின் உயிர்களை நாம் பலி கொடுக்கப் போகிறோம்? காதலித்த காரணத்திற்காக சுபாஷினி, கனகலெட்சுமி போன்றவர்கள் இன்னும் எத்தனை காலம் நடைப்பிணமாக வாழ வேண்டும்?

12.06.2026

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மீண்டும் ஒரு ஆணவப் படுகொலை!
மக்கள் அதிகாரக் கழகம் கண்டனம்

பத்திரிகைச் செய்தி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை கிராமம் மறவர் சாதியைச் சேர்ந்த இளம்பெண் அபிசெல்வியும், தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரை காதலிக்கிறாயே என்று அபிசெல்வியின் அண்ணன் சிவஞானம் இக்காதலைக் கண்டித்துள்ளார். இருந்தும் தன் காதலில் உறுதியாக இருந்த அபிசெல்வி, இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் 2 ஆண்டுகளுக்கு முன் மாடியிலிருந்து கீழே குதித்து சிறிய காயங்களோடு பிழைத்துக் கொண்டார்.

கடந்த 9ஆம் தேதி மாலை இது குறித்து மீண்டும் பிரச்சினை எழவே சிவஞானம், அபிசெல்வியை பலமாக தாக்கி இருக்கிறார். இதனால் அபிசெல்வி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இந்த கொலையை சிவஞானமும், அவரது தாய் எஸ்தர் பாலினும் சேர்ந்து தற்கொலையாக மாற்றி அபிசெல்வியின் உடலை தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியுள்ளனர். உடற்கூராய்வின் மூலம் இது கொலைதான் என்று தெரியவந்து, தற்போது இருவரையும் போலீஸ் கைது செய்துள்ளது.

ஆனால் இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீசு, “இது சாதி ரீதியிலான ஆணவக்கொலை அல்ல; வதந்தி பரப்ப வேண்டாம்” என்று ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது சாதி மாறி காதலித்ததால் நடந்த படுகொலைதான் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரியும் போது, போலீஸ் இதை வெறும் குடும்பப் பிரச்சினை என்று கூறி ஏன் திசை திருப்பப் பார்க்கிறது?

ஆதிக்கச் சாதி வெறியர்களின் முகத்திரையைக் கிழிக்க போலீசுக்கு ஏன் இவ்வளவு பயம்?

சாதிக்குள்ளோ அல்லது சாதிக்கு வெளியேயோ ஒரு பெண் தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுத்து, அவளைக் கொடூரமாகக் கொலை செய்யும் இந்த ஆணாதிக்க, சாதிவெறி புத்தி எப்போது மாறும்? போலீசு என்னதான் மூடி மறைக்க முயன்றாலும் இது அப்பட்டமான ஆணவக் கொலைதான்!

சிவமதி, அபிசெல்வி என இன்னும் எத்தனை பெண்களின் உயிர்களை நாம் பலி கொடுக்கப் போகிறோம்? காதலித்த காரணத்திற்காக சுபாஷினி, கனகலெட்சுமி போன்றவர்கள் இன்னும் எத்தனை காலம் நடைப்பிணமாக வாழ வேண்டும்?

பெண்களை உணர்வுகளும், உரிமைகளும் கொண்ட ஜீவனாக மதிக்க மறுக்கும் இந்த ஆணாதிக்கச் சிந்தனையையும், அதன் மூலம் சாதி வெறியைத் தக்கவைக்கத் துடிக்கும் பிற்போக்குத்தனத்தையும், அதற்குத் துணை போகும் தூத்துக்குடி போலீசின் போக்கையும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது!

இனியாவது தூங்கிக் கொண்டிருக்கும் அரசு விழித்துக்கொண்டு, இத்தகைய கொடூரங்களைக் கட்டுப்படுத்த உடனடியாக “ஆணவப்படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டம்” இயற்ற வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் வலியுறுத்துகிறோம்.

ஆணவப் படுகொலையில் ஈடுபடும் குற்றவாளிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவும், இந்த குற்றச் சம்பவங்களில் பின்னணியில் இருக்கும் ஆதிக்க சாதிவெறி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல்களையும் தடை செய்யவும் உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் களமிறங்கிப் போராடுவோம்! ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துவோம்!

மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க