நிலநடுக்கம் ஒரு இயற்கை பேரழிவு. அது மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கொடூரமான முறையில் தாக்குகிறது, வாழ்வாதாரங்களை அழித்து விடுகிறது. அந்தப் பிராந்தியத்தில் மனிதச் செயல்பாடுகளின் சாதனைகள், கட்டுமானங்கள், உருவாக்கி வைத்திருக்கும் அனைத்து ஒழுங்கமைப்புகள் என எல்லாவற்றையும் பொடிப்பொடியாக நொறுக்கி விடுகிறது.
ஏற்கெனவே ஏகாதிபத்தியங்கள் சில பத்தாண்டுகளாக விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளால் நிலைகுலைந்திருக்கும் வெனிசுலாவின் அரசியல் சமூகப் பொருளாதார வாழ்வின் எல்லா துறைகளிலும் சமீபத்திய நிலநடுக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் விளைவாக, நாட்டின் இறையாண்மை குறித்த முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளும் அதற்கான மக்கள் போராட்டத் தேவையும் மேலெழுந்திருக்கின்றன. இவை இன்று வெனிசுலாவை மையமாகக் கொண்டிருந்தாலும் இக்கேள்விகள் மற்றும் போராட்டங்களின் தேவை இலத்தீன் அமெரிக்கா முழுவதற்கும் பரந்து விரிந்ததாக அமைந்திருக்கின்றது.
வெனிசுலா அரசின் சீரிய மீட்பு பணிகளும்
அமெரிக்காவின் எதிர்ப் பிரச்சாரமும்
வெனிசுலா அரசாங்கம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், சிவில் சமூகச் செயல்பாட்டாளர்கள், இராணுவ வீரர்கள், சுகாதார மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை அனுப்பி மீட்பு பணிகளை சிரத்தையுடன் மேற்கொண்டு வருகிறது.
இதுபோன்ற இயற்கை பேரழிவின் நெருக்கடியான சூழலில் அமெரிக்கா, அந்நாட்டின் மீதான தனது பிடியை, தடைகளை சிறிதேனும் தளர்த்தும் என்றுதான் எந்த ஒரு அரசியல் பார்வையாளரும் கருதுவார். அதிலும் ஜனவரி 3 (ஜனாதிபதி கைது மற்றும் கடத்தல்) சம்பவத்திற்கு பிறகு அமெரிக்காவின் அரசியல் ராணுவ ஆதிக்கத்தின் கீழ் தடுமாறிக் கொண்டிருக்கும் வெனிசுலா அரசு அமெரிக்காவுக்கு தொடர்ந்து பல்வேறு சலுகைகளை வழங்கியும், பலவற்றை விட்டுக் கொடுத்தும் வந்திருக்கிறது. ஆனால் அமெரிக்கா அதற்கெல்லாம் நேர் எதிராகவே செயல்பட்டு வருகிறது.
வெனிசுலாவின் நில அதிர்வு ஓய்ந்து அடங்குவதற்குள்ளாகவே அமெரிக்கா தனது மறுகாலனியாக்கத் திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே அமெரிக்காவின் ஊடகப் போர் ஆரம்பித்துவிட்டது. அதாவது வெனிசுலாவில் மக்கள் பெரும் அவதிக்குட்படுகிறார்கள் என்றும், மீட்புப் பணிகள் எதுவுமே நடைபெறவில்லை என்றும் வெனிசுலா அரசு எந்த சிரத்தையும் காட்டாமல் சலனமற்றிருப்பதாகவும், இவையெல்லாம் வெனிசுலாவில் ஒரு எதேச்சாதிகார ஆட்சி நடப்பதை பளிச்செனக் காட்டிவிடுகிறது என்றும் மேற்குலகின் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் பரப்புரைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன.
இந்த அளவு கடுமையான நிலநடுக்க ஆபத்தை எதிர்கொள்ள எந்த ஒரு நாடும் தன்னை தயார் நிலையில் வைத்துக் கொண்டிருக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் வெனிசுலா அரசு மேற்கொண்டு வரும் மீட்புப் பணிகளை மக்கள் கவனித்தறிய முடியாதபடி எதிர் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன மேற்குலக ஏகாதிபத்தியங்கள். கார்ப்பரேட் அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களிலும் இதே பிரச்சாரங்களை சமூக ஆர்வலர்கள் என்கிற பெயரில் தனி நபர்களின் குரல்களாகவும் பதிவிடுகின்றனர்.
இவை அனைத்தும் ஒரே அலை வரிசையில் வெனிசுலா அரசின் மீதான நம்பிக்கையின்மையை மற்றும் அதிருப்தியை மக்கள் மத்தியில் விதைக்கின்றன. வெனிசுலா அரசின் தற்சார்பான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அரசியல் இறையாண்மை குறித்த விழுமியங்களை நொறுக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. அந்நிய நாடுகளின் உதவிகள் கிடைத்தால் மட்டுமே இந்த நெருக்கடியில் இருந்து வெனிசுலா வெளிவர முடியும் என்ற கருத்தை உருவாக்குகின்றன.
இந்தக் கருத்துப் போர் என்பது வெறுமனே மூடநம்பிக்கையோ அல்லது இரண்டாம் பட்சமாக கருதத்தக்கதோ அல்ல. மேற்குலக ஏகாதிபத்தியங்கள் தெற்கத்திய மற்றும் ஆசிய நாடுகளுக்குள் மூக்கை நுழைக்கவும் ஆக்கிரமிப்பு செய்யவும் இக்கருத்துருவாக்கமும் பொய்ப் பரப்புரையும்தான் முன்னெடுப்பு நடவடிக்கையாக அமைகிறது.
இது வரையிலும் அமெரிக்கா, வெனிசுலாவின் ஆட்சியை கலைக்காமலும் தரைவழி இராணுவத் தாக்குதலை மேற்கொள்ளாமலும் இருப்பதற்கு காரணமே ஏகாதிபத்திய எதிர்ப்பு கண்ணோட்டம் கொண்ட மக்களும் ஆட்சியாளர்களும் ஒன்றுபட்டிருப்பதுதான். இந்த ஒற்றுமை சிதையாமல் தமது ஆக்கிரமிப்பு நோக்கம் நிறைவேறாது என்பதை அமெரிக்கா பல வரலாற்று அனுபவங்களின் ஊடாக அறிந்து வைத்திருக்கிறது.
வெனிசுலாவில் இந்த ஒற்றுமையும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் ஹியூகோ சாவேஸ் காலத்திலிருந்து உருவாக்கி வளர்க்கப்பட்டதாகும். சாவேஸ் கட்டி வளர்த்த தேசப்பற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் இலத்தீன் அமெரிக்கா என்னும் பொலிவேரியன் உணர்வும் இன்னமும் மக்களை வலுவாக பற்றி நிற்கிறது. வெனிசுலா ஜனாதிபதி கடத்திச் செல்லப்பட்ட பின்னரும் அரசமைப்பு தகர்ந்து விடவில்லை, ஆயுதப் படைகள் கலைந்து விடவில்லை. சாவேஸ் என்கிற தமது தலைவரின் மீதான பற்றுதலையும் மக்கள் கைவிட்டு விடவில்லை.
அவர் உருவாக்கிய மக்கள் சமுதாயக் குழுக்கள், சமூக வாழ்வை ஒழுங்கமைத்து இயக்குவதில் இன்னமும் பெரும் பங்கு வகிக்கின்றன. நாடு தழுவிய அளவில் கீழ்நிலை அரசமைப்புகளில் சமுதாயக் குழுக்களின் பங்கேற்பும் கண்காணிப்பும் அகன்று விடவில்லை. வெனிசுலாவின் இந்த நிலைமைகள் தான் அமெரிக்காவை நேரடி ஆக்கிரமிப்பு பற்றிச் சிந்திக்க அச்சமூட்டித் தள்ளி வைத்திருக்கிறன.
படிக்க: வெனிசுலா மீது பல பத்தாண்டுகளாகத் தொடரும் அமெரிக்காவின் தாக்குதல்
இயற்கைப் பேரழிவு ஏற்பட்டிருக்கும் இக்காலத்தில், மக்கள் பெரும் துயருக்கு ஆட்பட்டிருக்கின்ற நிலையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை உருவாக்கிட முடியும் என்பதே அமெரிக்கா மேற்கொள்ளும் பொய் பிரச்சாரத்தின் கெடுநோக்கமாகும். இந்த நோக்கம் அம்பலப்படாமல் இருக்கவே மனிதநேய உதவி என்கிற பதாகையின் கீழ் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்க கப்பலும் வெனிசுலா வந்திருக்கிறது.
அமெரிக்காவின் மறுகாலனியாக்க வெறி
இந்த வெறுப்பு பிரச்சாரம் என்பது வெறுமனே அரசாங்கத்தை விமர்சிப்பது மட்டுமல்ல; மக்களுக்கும் அரசுக்கும் இடையில் ஒரு பிளவை ஏற்படுத்தி ஒட்டுமொத்த பொலிவேரியன் உணர்வையும், செயல்பாட்டு ஒற்றுமையையும் சீர்குலைப்பதும் பலவீனப்படுத்துவதுமாகும். தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஒரு நிரந்தரத் தரைவழி படையெடுப்பை நியாயப்படுத்துவதற்கான களத்தை தயார் செய்வதாகும்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை அதன் இலக்கு, ஜனாதிபதியோ ஒரு கட்சியோ அல்லது ஒரு கொள்கையோ அல்ல. மாறாக மக்களுக்கும் அரசுக்குமான உறவே அதன் கவனத்திற்குரியது. அதை தகர்ப்பதையே எப்போதும் இலக்காகக் கொண்டிருக்கிறது.
வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஆதிக்க வெறி வெனிசுலாவுடன் முடிந்து விடுவதல்ல. அது, இலத்தின் அமெரிக்கா எனப்படும் மத்திய அமெரிக்க நாடுகள், கரீபியன் தீவு நாடுகள் மற்றும் தென் அமெரிக்கா நாடுகள் அனைத்தின் மீதான மறுகாலனியாக்கப் பேராசையின் அங்கமே ஆகும்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் கியூபா ஏற்கெனவே கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. மற்ற பிற ஈக்வடார், எல் சால்வடார், நிக்காரகுவா, ஹோண்டுரஸ் ஆகிய மத்திய அமெரிக்க நாடுகளும், ஜமைக்கா, ஹெய்தி, போர்ட்டோரிகா போன்ற கரீபியன் தீவு நாடுகளும் இன்னும் கண்டத்து நாடுகள் பலவும் (இலத்தின் அமெரிக்கா) அமெரிக்காவின் பல வகையான நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. எல்லா நாடுகளின் இறையாண்மையும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
கண்டம் முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடும், ஆதிக்கமும் இப்போது மென்மேலும் நேரடியாக, கூட்டுறவு வளர்ச்சி என்கிற எந்த முகமூடியும் இல்லாமல் நடக்கிறது. பெரும்பாலும் பொருளாதாரத் தடை என்பது மையமாக தொடர்ந்தாலும், அதனுடன் கடற்படை முற்றுகை, இராணுவப் படைக் குவிப்பு, ஆட்கடத்தல், எல்லைகளுக்கு அப்பால் குண்டு வீச்சு என்று பல்வகை இராணுவ அச்சுறுத்தலுடன் வெளிப்படையான முறையில் தனது ஆதிக்கத்தை நிறுவ எத்தனித்து வருகிறது.
இதற்கிடையில் அந்தந்த நாடுகளிலும் நிறுவப்படும் பாசிசம் உள்ளிட்ட பலவகையான சர்வாதிகாரங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களுக்கு எதிரான மோசமான தடைகளை உருவாக்குகின்றன.
ஆகவே, வெனிசுலா மட்டுமல்லாது இலத்தின் அமெரிக்க நாடுகள் அனைத்துமே அமெரிக்காவிற்கு எதிராக உறுதியாகப் போராட வேண்டியுள்ளது. அப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் கடமையாக உள்ளது.
mronline.org இணையத்தில் வெளிவந்த கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.
![]()
வானுறை சம்பத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











