சிறுபான்மையினர் வாக்காளர்களின் பெயர் நீக்கம் குறித்து ஐ.நா. கவலை!

மேற்குவங்க மாநிலத்தின் நந்திகிராம் தொகுதியில் மொத்த வாக்காளர்களில் இஸ்லாமியர்கள் சுமார் 25 சதவிகிதமாக உள்ளனர். ஆனால், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களில் 95 சதவிகிதம் இஸ்லாமியர்களினுடையது என்பதில் இருந்தே இந்த திட்டமிட்ட சதியை புரிந்துகொள்ள முடியும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையமும் பாசிச மோடி அரசும் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை நீக்கிவருகிறது. அதில் சிறுபான்மையின மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று சிறப்பு அறிக்கையாளர்கள் தங்களது ஆழ்ந்த  கவலையைத் தெரிவித்துள்ளனர். ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள் இதனை கடந்த மே 1 ஐ.நா. இந்திய அரசுக்குக் கடிதமாக அனுப்பியுள்ளனர்.

சிறுபான்மையினர் உரிமைகள், கருத்துச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஆகிய துறைகளுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள் அனுப்பியுள்ள இக்கடிதத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு, இந்திய அரசு 60 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. நடைமுறையின்படி, 60 நாட்கள் முடிந்த பிறகு இந்திய அரசு அளிக்கும் பதிலும் (அல்லது பதில் வராவிட்டாலும்) இந்தக் கடிதமும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும்.

ஐ.நா-வின் அறிக்கையில் எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லாத செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு; எழுத்துப்பிழை போன்ற சிறிய காரணங்களுக்காகவே வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவது; ஆவணங்களில் உள்ள தவறுகளைச் சரிசெய்ய போதுமான கால அவகாசம் வழங்கப்படாதது; பெயர் நீக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இல்லாதது உள்ளிட்டவை அதில் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு 2018-ஆம் ஆண்டு அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கப்பட்ட போதும், இன, மத, மொழி சிறுபான்மையினர் பாதிக்கப்படுவதாகக் கூறி, ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள் இந்திய அரசுக்கு இதேபோன்ற கடிதத்தை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.


படிக்க: வாக்குரிமைப் பறிப்பு முதல் இந்துமுனைவாக்கம் வரை: மேற்குவங்கத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பாசிச பா.ஜ.க.


குறிப்பாக, இந்தியா, சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் ஒப்பந்தம் (ICCPR) மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான 1992 பிரகடனம் உள்ளிட்ட பல சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், அந்த ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ள பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டிய உரிமை, வாக்களிக்கும் உரிமை, சிறுபான்மையினர் உரிமைகள் போன்றவை மீறப்படுவதாக ஐ.நா. கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் முதற்கட்டத்திலேயே நாடு முழுவதும் சுமார் 6 கோடி வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறுகிறது. குறிப்பாக, மேற்குவங்க மாநிலத்தின் நந்திகிராம் தொகுதியில் மொத்த வாக்காளர்களில் இஸ்லாமியர்கள் சுமார் 25 சதவிகிதமாக உள்ளனர். ஆனால், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களில் 95 சதவிகிதம் இஸ்லாமியர்களினுடையது என்பதில் இருந்தே இந்த திட்டமிட்ட சதியை புரிந்துகொள்ள முடியும்.

மேற்குவங்கத் தேர்தலில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை எவ்வாறு தேர்தல் முடிவுகளை மாற்றியமைத்தது என்பதைச் சுபாஷிஷ் டே என்பவர் “தி இந்தியா ஃபோரம்” (The India Forum) இதழில் விரிவாக விளக்கியுள்ளார். தொகுதி மட்டத்தில் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட மாற்றங்களை விளக்குவதற்காக, ஒரு தொகுதியின் வெற்றி வித்தியாசத்தை விட, நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை அவர் “எஸ்.ஐ.ஆர். தாக்கம்” என வரையறுத்துள்ளார். அதன்படி, 63 தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர். தாக்கம் 10,000-ஐத் தாண்டியது. 39 தொகுதிகளில் அது 20,000-யும், 21 தொகுதிகளில் 30,000-யும் தாண்டியது.

இந்துராஷ்டிரத்தை நிறுவ துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் தேர்தல் ஆணையத்தை தங்களின் கைப்பாவையாக வைத்துக்கொண்டு சிறுபான்மையினரின் வாக்குரிமையை பறிப்பது போன்ற பல்வேறு மோசடிகளை செய்து தங்களின் நோக்கங்களை நிறைவேற்றி வருகிறது.

இந்தியாவில் தற்போது நடந்துவரும் ஜென்-சி தலைமுறையினரின் போராட்டத்தைப் போன்ற போராட்டங்களை கட்டியமைப்பதன் மூலமே நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியும். அத்தகைய போராட்டங்களை புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கட்டியமைக்க வேண்டும்.


நற்சோணை

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க