நாடு முழுவதும் தீவிரமடைந்துவரும் மக்கள் போராட்டங்களின் விளைவாக தோல்வி முகத்தை சந்தித்துள்ள பாசிச பா.ஜ.க. கும்பல் அதன் விளைவாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பின்னடைவை சந்தித்தது. எப்படியேனும் இந்தத் தோல்வி முகத்திலிருந்து மீள வேண்டுமென்பதற்காக பல்வேறு தகிடுதத்தங்களை அரங்கேற்றிவரும் பாசிச கும்பல், அதிகார வர்க்கத்தின் துணையுடன் பட்டவர்த்தனமான தேர்தல் மோசடிகளின் மூலம் மாநிலங்களின் ஆட்சியைக் கைப்பற்றி வருகிறது.
குறிப்பாக, நடைபெறவிருக்கும் தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத் தேர்தல்களில் வெற்றி பெறுவதையும் தனது அடித்தளத்தை பலமாக்கிக் கொள்வதையும் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒரு முக்கியமான படியாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் கருதுகிறது. அந்தவகையில், மேற்குவங்கத்தில் மம்தா பேனர்ஜி தலைமையிலான 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரசு ஆட்சியை வீழ்த்திவிட்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு பா.ஜ.க. தனது ஒட்டுமொத்த பாசிச பலத்தையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
மேற்குவங்க மக்களின் அவலநிலையும்
மக்கள் போராட்டங்களும்
மேற்குவங்க மக்களின் பிரதான பிரச்சினையாக வேலைவாய்ப்பின்மை உள்ளது. படித்த இளைஞர்கள், முறைசாரா தொழிலாளர்கள், பட்டதாரிகள் மத்தியிலும் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. இதன் விளைவாக, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களின் வரிசையில் அண்டை மாநிலங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்களாக வெளியேறும் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலமாக மேற்குவங்கம் உள்ளது. அரசின் தரவுகளின்படியே, அம்மாநிலத்தைச் சேர்ந்த 22.40 லட்சம் பேர் பிற மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களாக உள்ளனர். ஆனால், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே உள்ளது.
குறிப்பாக, மேற்குவங்கத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் (நூறு நாள் வேலைத்திட்டம்) கீழ் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்து வந்தனர். ஆனால், அதில் ஊழல், முறைகேடுகள் நடப்பதாகக் கூறி கடந்த 2021 டிசம்பரிலிருந்து அத்திட்டத்திற்கான நிதியை மோடி அரசு எதேச்சதிகாரமாக நிறுத்தியுள்ளது. இது அம்மாநில மக்களை புலம்பெயர் தொழிலாளர்களாக விரட்டியடிப்பதைத் தீவிரப்படுத்தியுள்ளதோடு, தங்களின் வாழ்வாதாரத்திற்காக நூறு நாள் வேலைத்திட்டத்தை மட்டுமே சார்ந்திருந்த இலட்சக்கணக்கான பெண்களை நிர்கதியாக்கியுள்ளது.
மறுபுறம், வெளிமாநிலங்களுக்கு பிழைப்புத் தேடிச் செல்லும் மேற்குவங்க இஸ்லாமிய தொழிலாளர்கள் ஒடிசா, டெல்லி, மகாராஷ்டிரா போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ‘சட்டவிரோத வங்கதேசத் குடியேறிகள்’ எனப் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு அடித்துப் படுகொலை செய்யப்படுவதும், சிறையிலடைக்கப்படுவதும், வங்கதேசத்திற்கு சட்டவிரோதமாக நாடுகடத்தப்படுவதும் புதிய இயல்புநிலையாக்கப்பட்டுள்ளது. இதனால், தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழும் நிலைக்கு அத்தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். உயிர் பயத்தினால் மேற்குவங்கத்திற்கே திரும்பிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமுமின்றி வறுமையில் வாடி வருகின்றனர்.
அதேபோல், அரசின் அலட்சியத்தாலும் தனியார் – கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபவெறியாலும் மேற்குவங்கத் தொழிலாளர்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரியில் ஆனந்தபூரின் நசிராபாத்தில் முறையான பாதுகாப்பு வசதியின்றி இயங்கி வந்த “வாவ் மோமோ” நிறுவனத்தின் உணவுக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 27 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இவ்வாறு, தொழில் நிறுவனங்கள், பட்டாசு ஆலைகள், சுரங்கங்களில் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் படுகொலை செய்யப்படுவது மேற்குவங்கத்தில் தொடர் நிகழ்வாக மாறியுள்ளது.
மேற்குவங்கம் சாதிய முரண்களற்ற மாநிலமாக பொதுவெளியில் சித்தரிக்கப்பட்டாலும் அப்பட்டமான சாதிய ஏற்றத்தாழ்வு அம்மாநிலத்தில் நிலவுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம், பொருளாதாரம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட – பழங்குடியின மக்கள் தொடர் புறக்கணிப்புகளை சந்தித்து வருகின்றனர். சமீப ஆண்டுகளாக அம்மாநில தலித் மக்கள் முன்னெடுத்துவரும் ஆலைய நுழைவுப் போராட்டங்கள் மேற்குவங்கத்தில் கடைபிடிக்கப்பட்டுவரும் சாதியத் தீண்டாமையைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஆனால், ஆளும் மம்தா பேனர்ஜி அரசு இதனை மூடிமறைப்பதிலேயே குறியாக உள்ளது. அம்மாநிலத்தில் பார்ப்பனர்கள் – ஆதிக்கச் சாதியினரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் அரசியலை மேற்கொண்டுவரும் பா.ஜ.க-வின் வளர்ச்சியானது தலித் மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
இவை மட்டுமின்றி, மேற்குவங்கம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக உருவாகி வருகிறது. கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனை முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியது. அதன்பிறகு 2025 ஜூனில் தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை, 2025 அக்டோபரில் ஐ.க்யூ. நகர மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை என கல்லூரி வளாகங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இச்சம்பவங்களில் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்கும் வகையில் மம்தா அரசு செயல்பட்டது. மேலும், பெண்கள் மீது அதிகளவில் ஆசிட் வீச்சு நடைபெறும் மாநிலங்களில் மேற்குவங்கம் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் குறைந்த தண்டனை விகிதம் கொண்ட மாநிலங்களில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதேபோல், மேற்குவங்கம் ஆண்டுதோறும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும் இந்திய மாநிலங்களில் ஒன்றாகும். மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 42 சதவிகிதம் (37,660 சதுர கிலோமீட்டர்) வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதன் விளைவாக, வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாவது, இடம் பெயர்வது உள்ளிட்ட கொடுமைகளுக்கு மேற்குவங்க மக்கள் தொடர்ந்து உள்ளாகின்றனர்.
அதேபோல, அரசுத்துறைகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அத்துறைகள் திட்டமிட்டு படிப்படியாக கார்ப்பரேட்-காண்ட்ராக்ட்-டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. அதற்கெதிராகவும் தங்களின் உரிமைகளுக்காகவும் போராடும் அரசு ஊழியர்கள் மீது திரிணாமுல் காங்கிரசு அரசு மிருகத்தனமான ஒடுக்குமுறையை செலுத்துகிறது. சான்றாக, கடந்த ஜனவரி 21-ஆம் தேதி மாதாந்திர ஊதியத்தை ரூ.5,250-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்துவது; தங்களை நிரந்தர அரசு ஊழியர்களாக அங்கீகரிப்பது உள்ளிட்ட எட்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மாநில சுகாதாரத் துறையின் தலைமையகத்தை ஆயிரக்கணக்கான ஆஷா தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். ஆனால், பெண்கள் என்றும் பாராமல் அவர்கள் மீது போலீசின் மூலம் மம்தா அரசு ஒடுக்குமுறை செலுத்தியது.
மேற்குவங்க மாநில மம்தா பேனர்ஜி அரசின் இந்த மக்கள் விரோதத் தன்மையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அம்மாநிலத்தில் வேரூன்றுவதற்கும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் பாசிச பா.ஜ.க. கும்பல் மூர்க்கமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
பா.ஜ.க. – தேர்தல் ஆணையத்தின் கள்ளக் கூட்டு
பீகாரில் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் பல்வேறு மோசடிகளை அரங்கேற்றி வெற்றிபெற்றதைப்போல மேற்குவங்கத்திலும் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. எஸ்.ஐ.ஆர். எனும் பாசிச நடவடிக்கை மூலம், அதிகாரப்பூர்வமாகவே 61.7 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உண்மையில் 1.20 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆளும் மம்தா அரசு குற்றஞ்சாட்டுகிறது.
குறிப்பாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 89 சட்டமன்றத் தொகுதிகளில் 10,000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே பா.ஜ.க-வை விட திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருக்கிறது. தற்போது அவற்றில் கணிசமான தொகுதிகளில் 10,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை பா.ஜ.க. நீக்கியுள்ளது.
மேலும், பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், பெயர்களில் உள்ள எழுத்துப் பிழைகள், வயது முரண்பாடுகள் உள்ளிட்ட சிறு காரணங்களுக்காக 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் “தீர்ப்பளிக்கப்பட வேண்டியவர்கள்” (Under adjudication) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும், நீதித்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு அனுமதியளித்த பிறகே, அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 20-ஆம் தேதி நிலவரப்படி, 22 லட்சம் பேரின் விசாரணைகள் முடிவடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், துணை வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படாமல் இருப்பது அம்மக்களில் கணிசமானோரின் வாக்குரிமையை பறிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் சதித்தனத்தையே வெளிக்காட்டுகிறது.
அதிலும், இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய மக்களாகவே உள்ளனர். சான்றாக, மால்டா மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு வாக்குச்சாவடியில் உள்ள 1,300 வாக்காளர்களில் 1,200 பேருக்கு விசாரணைக்கு ஆஜராக அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு வாக்குச்சாவடியில் உள்ள 1,279 வாக்காளர்களில் 73 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நீக்கங்கள் அனைத்தும் இஸ்லாமிய மக்களின் வாக்குரிமை-குடியுரிமையைப் பறிக்கும் வகையிலும் திரிணாமுல் காங்கிரசு கட்சியின் அடித்தளத்தை சரிக்கும் வகையிலுமே உள்ளது. இது வருங்காலங்களில் வாக்குரிமை பறிக்கப்பட்டவர்கள் மீது ‘வங்கதேச ஊடுருவிகள்’, ‘சட்டவிரோதக் குடியேறிகள்’ என்றுப் பொய் குற்றஞ்சாட்டி, அவர்களின் குடியுரிமையைப் பறித்து பாசிச தாக்குதலை தொடுப்பதற்கான ஏற்பாடாகும்.
பா.ஜ.க-வின் இந்துமுனைவாக்க அரசியல்
மேற்குவங்க மாநிலம் வங்கதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் மாநிலமாகும். மேலும், இந்தியாவிலேயே அதிக இஸ்லாமியர்கள் வசிக்கும் மாநிலங்களில் ஒன்றாக மேற்குவங்கம் உள்ளது. இவற்றை தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்டு ‘சட்டவிரோத குடியேற்றம்’ என்ற இஸ்லாமிய வெறுப்பு – இந்துமதவெறி – தேசவெறி பூதத்தைக் கிளப்பிவிட்டு அம்மாநில மக்களை இந்துமுனைவாக்கம் செய்யும் அரசியலை பா.ஜ.க. கும்பல் கையிலெடுத்துள்ளது.
சான்றாக, கடந்த மார்ச் 2-ஆம் தேதி மால்டா மாவட்டத்தின் இஸ்லாம்பூரில் கட்சியின் பேரணியைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பா.ஜ.க-வின் தேசிய தலைவர் நிதின் நபின், “மேற்குவங்கத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சந்தேகிக்கப்படும் வங்கதேச ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவதற்காக, அசாமின் “கண்டறி, அழி, நாடு கடத்து மாதிரியைப் பின்பற்றுவோம்” என்று வெளிப்படையாகவே இஸ்லாமியர்கள் மீதான இனப் படுகொலைக்கு அழைப்பு விடுத்தார். இது வங்க மொழி பேசும் இஸ்லாமியர்கள் மேற்குவங்கத்திற்குள்ளும் மாநிலத்திற்கு வெளியிலும் இனப்படுகொலை அபாயத்தை எதிர்கொண்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஏற்கெனவே, “ஆபரேஷன் புஷ் பேக்” என்ற பாசிச திட்டத்தின் மூலம் ’சட்டவிரோத குடியேறிகள்’ என்ற பெயரில் சொந்த நாட்டு இஸ்லாமிய மக்களையே பாசிச கும்பல் நாட்டைவிட்டு வெளியேற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் மேற்குவங்க புலம்பெயர் தொழிலாளர்களே அதிகம் பாதிப்படைகின்றனர்.
மேலும், ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் குண்டர் படைகள் இஸ்லாமிய மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியும் கலவரங்களை கட்டவிழ்த்துவிட்டும் வருகிறது. கடந்த மார்ச் 27-ஆம் தேதி கூட, முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ரகுநாத்கஞ்ச் பகுதியில் ராம நவமி ஊர்வலத்தின் மூலம் இஸ்லாமிய மக்கள், அவர்களின் கடைகள் மீது தாக்குதல் தொடுத்து ஏற்படுத்திய கலவரத்தில் 45 பேர் காயமடைந்து இருக்கின்றனர். இத்தகைய வன்முறை வெறியாட்டங்களின் மூலம் மேற்குவங்கத்தில் இந்துக்கள் ஆபத்தில் இருப்பதாக பிரச்சாரம் செய்தும், இந்துக்களின் பாதுகாவலர்களாக தங்களை முன்னிறுத்திக் கொண்டும் அம்மக்களின் வாக்குகளை பா.ஜ.க. கவரத் துடிக்கிறது.
அதேபோல, வங்கதேசத்திலிருந்து மேற்குவங்கத்திற்கு இடம்பெயர்ந்து வந்த மத்துவா சமூக இந்துக்களை தன்னுடைய முக்கிய அடித்தளமாக பா.ஜ.க. மாற்றியிருக்கிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 77 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றியதில் இம்மக்களின் வாக்குவங்கி முக்கியப் பங்காற்றியுள்ளது.
அதேபோல், மேற்குவங்க மக்களின் உணவின் மீதான உரிமையைப் பறிக்கும் வகையில் இறைச்சிக் கடைகளின் மீது ஆர்.எஸ்.எஸ். குண்டர் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்தாண்டு டிசம்பரில் கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் இறைச்சி பட்டீஸ்களை (பஜ்ஜி) விற்பனை செய்துகொண்டிருந்த இரண்டு இஸ்லாமிய தெருவோர வியாபாரிகளை ‘வங்கதேசக் குடியேறிகள்’ எனப் பொய் குற்றஞ்சாட்டி ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் கடுமையாகத் தாக்கினர். மேலும், வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் நாடியா போன்ற எல்லைப்புற மாவட்டங்களிலும், இந்துப் பண்டிகைகள், அரசியல் பேரணிகளின் போது இறைச்சிக் கடைகளை மூடுமாறு ஆர்.எஸ்.எஸ். கும்பல் அட்டூழியங்களை செய்து வருகிறது. மீன் உள்ளிட்ட இறைச்சிகளை தங்களது பாரம்பரிய உணவாகக் கொண்டுள்ள மேற்குவங்க மக்களிடையே சங்கி கும்பலின் இந்நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு கிளப்பியதையடுத்து, தாங்கள் ‘சட்டவிரோத பசுக் கொலைக்கு’ மட்டுமே எதிரானவர்கள் என்று கூறி கையில் மீன்களுடன் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்கு பா.ஜ.க-வினர் தற்காலிகமாகத் தள்ளப்பட்டுள்ளனர்.

முடக்கப்படும் மேற்குவங்க அரசு
டெல்லியில் பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த ஆம் ஆத்மி அரசுக்கு துணைநிலை ஆளுநர் மூலம் குடைச்சல் கொடுத்து, அரசுத் திட்டங்களுக்கான நிதியை முடக்கி, ஆட்சியதிகாரத்தை பறித்து, ஒன்றிய அரசின் அதிகாரத்தை கேள்விக்கிடமின்றி குவித்து, பொய்யான ஊழல் குற்றஞ்சாட்டி ஆம் ஆத்மி தலைவர்களை சிறையிலடைத்து, ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பையும் முடமாக்கி கடந்தாண்டு டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது, பாசிச பா.ஜ.க. கும்பல். இதற்கு டெல்லி யூனியன் பிரதேசமாக இருப்பதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது.
தற்போது இம்மாதிரியை ஒரு மாநிலத்திற்கு பொருத்தும் வகையில் மேற்குவங்கத்தில் பாசிச பா.ஜ.க. கும்பல் செயல்பட்டு வருகிறது. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஆளுநர் மூலம் அரசிற்கு நெருக்கடி கொடுப்பது மட்டுமின்றி, குடியரசுத் தலைவர், நீதிமன்றம், தேர்தல் ஆணையம், என்.ஐ.ஏ., மத்தியப் படைகள் என ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் துணையுடன் திரிணாமுல் காங்கிரசு அரசின் மீது தனது அஸ்திரங்களை ஏவி வருகிறது.
சான்றாக, 2023-ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர் நியமனங்களில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி 32,000 ஆசிரியர் நியமனங்களை ஒரேயடியாக இரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யா உத்தரவிட்டார். இது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மம்தா ஆட்சியின் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால், அந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பாக போட்டியிட்டு தம்லுக் தொகுதியின் மக்களவை உறுப்பினரானது பா.ஜ.க. மற்றும் அதிகார வர்க்கத்தின் கூட்டுடன் நடந்தேறிய சதி நடவடிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
அதேபோல், மார்ச் மாதத்தில் மேற்குவங்கத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகைபுரிந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை முதலமைச்சர் மம்தா பேனர்ஜியும் அமைச்சர்களும் நேரில் சென்று வரவேற்கவில்லை. இதனையடுத்து, மம்தா குடியரசுத் தலைவரையும் பழங்குடி சமூகத்தையும் அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடியிலிருந்து ஒட்டுமொத்த சங்கிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது இதுவரை வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று.
மேலும், இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து மேற்குவங்கத்தில் 483 நிர்வாக மற்றும் போலீசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது, ஆளும் திரிணாமுல் காங்கிரசு அரசை முடக்குவதற்கும், ஆர்.எஸ்.எஸ். கைக்கூலி அதிகாரிகளை குவித்து தேர்தல் முறைகேடுகள் மூலம் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டமிட்ட சதி நடவடிக்கையாகும்.
அதேபோல், மேற்குவங்க மாநிலம் சர்வதேச எல்லைகளை பகிர்வதை சாதகமாகக் கொண்டு அம்மாநிலத்தில் மத்தியப் படைகளை குவித்து வருகிறது. சான்றாக, எஸ்.ஐ.ஆர். மூலம் தங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராடிவரும் இஸ்லாமிய மக்கள், கடந்த ஏப்ரல் 1 அன்று மால்டாவின் காலியாச்சக் பகுதியில் எஸ்.ஐ.ஆர். சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏழு நீதித்துறை அதிகாரிகளை எட்டு மணி நேரத்திற்கும் மேலாக சிறைப்பிடித்தனர். இது, பாசிச கும்பலுக்கு கிலியூட்டிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் துணையுடன் மேற்குவங்கத்தில் என்.ஐ.ஏ., மத்தியப் படைகளை குவித்தும், இஸ்லாமிய இளைஞர்களையும் தலைவர்களையும் கைது, சிறை என வேட்டையாடி வருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது மால்டாவில் மத்தியப் படையால் மூன்று அப்பாவி இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதன் வடுவே இன்னும் ஆறாத நிலையில், இப்படைக் குவிப்பானது இஸ்லாமிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவை மட்டுமின்றி, ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை முடக்கி வைத்து மேற்குவங்க உழைக்கும் மக்களின் வயிற்றில் அடித்திருப்பது; தேசிய கல்வி கொள்கை, பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காததற்காக மேற்குவங்கத்தின் பத்தாயிரம் கோடி ரூபாய் கல்வி நிதியை முடக்கியிருப்பது; 2022-ஆம் ஆண்டிலிருந்து பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (PMAY–G) திட்டத்திற்கான நிதியை முடக்கியிருப்பது என மேற்குவங்க அரசை முடமாக்கி மாநில அரசின் மீது மக்களின் எதிர்ப்பைக் கிளப்பி வருகிறது.
திரிணாமுல் காங்கிரசின்
கவர்ச்சிவாத – மிதவாத இந்துத்துவ அரசியல்
பொதுவில், ஒன்றிய மோடி அரசின் பாசிச சட்டத் திட்டங்களை எதிர்ப்பதில் மற்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஒப்பிடும்போது மேற்குவங்க மம்தா அரசு கடுமையான போராட்டம் நடத்துவதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான வழக்கில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாதாடியது; எஸ்.ஐ.ஆர். மூலம் இஸ்லாமியர்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது; பேரணிகள், தர்ணா வடிவங்களிலான போராட்டங்களை கட்டியமைப்பது; பா.ஜ.க-வின் இந்துத்துவ அடையாளத்திற்கு மாற்றாக மேற்குவங்கத்தின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் முன்னிறுத்துவது ஆகியவை அதற்கான சான்றுகளாக முன்வைக்கப்படுகின்றன.
பா.ஜ.க-வை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் பிற ‘இந்தியா’ கூட்டணிகளுடன் ஒப்பிடும் போது திரிணாமுல் காங்கிரசு பா.ஜ.க-வை காத்திரமாக எதிர்த்தாலும், அது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் பாசிசத்தை பலவீனப்படுத்துவதாக இல்லை. குறிப்பாக, எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட பாசிச சட்டத்திட்டங்களுக்கு எதிராக களத்தில் நடக்கும் போராட்டங்களை பாசிச மோடி அரசை நிர்பந்திக்கும் வகையிலான போராட்டங்களாக வளர்த்தெடுத்து மோடி அரசை பின்வாங்கச் செய்யாமல் வரம்புக்குட்பட்ட எதிர்ப்புடன் நிறுத்திக்கொள்கிறது மம்தா அரசு. பாசிச எதிர்ப்பு மாற்று திட்டம் – சித்தாந்தமின்றி பா.ஜ.க-வின் அரசியலுக்கு பலியாகி கவர்ச்சிவாதம் – மிதவாத இந்துத்துவத்தை முன்வைத்தும் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை கவர்வதற்குமே முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
மேற்குவங்க மக்கள் வேலைவாய்ப்பின்மையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காமல், கவர்ச்சிவாதத் திட்டங்கள் மூலம் இளைஞர்களின் வாக்குகளைக் கவர முயல்கிறது. 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் வங்காளர் யுபா சாத்தி (Banglar Yuva Sathi) என்ற திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறது.
அதேபோல, மேற்குவங்கப் பெண்கள் நுண்கடன் நிறுவனங்களின் பிடியில் அவதிக்குள்ளாகும் நிலையில், மம்தா அரசானது அதனை சரிசெய்யாமல் கவர்ச்சிவாதத் திட்டங்கள் மூலமே பெண்களின் வாக்குகளை கவரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 2.42 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் (பட்டியல், பழங்குடியினப் பெண்களுக்கு மாதம் ரூ.1,200) லட்சுமி பண்டார் திட்டத்திற்கான மாதாந்திரத் தொகையை ரு.500 அதிகரிப்பதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு வழங்கப்படும் இந்த சொற்ப நிதியும் நுண்கடன் நிறுவனங்களால் பறிக்கபடுகிறது. இவை மட்டுமின்றி, புலம்பெயர் தொழிலாளர்கள், மதகுருக்கள் என பலதரப்பட்ட பிரிவினருக்கும் கவர்ச்சிவாதத் திட்டங்களை மம்தா அரசு அறிவித்திருக்கிறது.
அதேபோல், திரிணாமுல் காங்கிரசு இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தும் கட்சி என்ற பா.ஜ.க-வின் பிரச்சாரத்திற்கு பலியாகி இந்து கோயில்களை கட்டுவது, நேரடியாக பூஜைகளில் ஈடுபடுவது, மதச் சுற்றுலாவை ஊக்குவிப்பது போன்றவற்றின் மூலம் தன்னை இந்துக்களுக்கு ஆதரவான கட்சியாக காட்டிக்கொள்கிறது. சான்றாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 30 அன்று தீகா நகரத்தில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஜெகன்நாதர் கோயில் மம்தா அரசால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கொல்கத்தாவின் நியூ டவூன் பகுதியில் ரூ.262 கோடி முதலீட்டில் துர்கா கோயில் மற்றும் கலாச்சார வளாகத்திற்கும், டார்ஜிலிங் மாவட்டம் சிலிகுரிக்கு அருகே உள்ள மதுகாராவில் ரூ.344.2 கோடி மதிப்பீட்டில் சிவன் கோயிலுக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறது.

அதேபோல, இந்துராஷ்டிரத்திற்கான கடவுளாக இந்துத்துவ கும்பலால் முன்னிறுத்தப்படும் ராமன் பிறந்த நாளான ராம நவமி கொண்டாட்டத்தை மேற்குவங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் திணித்து வருகிறது. முன்னர் இதற்கு மாற்றாக மேற்குவங்கத்தின் துர்கை, காளி போன்ற கடவுள்களை முன்னிறுத்திவந்த மம்தா அரசு, பா.ஜ.க-வின் நிகழ்ச்சிநிரலுக்குப் பலியாகி சமீப ஆண்டுகளாக பா.ஜ.க-வுடன் போட்டி போட்டுக்கொண்டு ராம நவமியை ‘கோலாகலமாக’ கொண்டாடி வருகிறது. இஸ்லாமியர்கள் மீதான கலவரத்தை தூண்டுவதற்கான ஆயுதமாக பா.ஜ.க. கும்பல் கையிலெடுத்துள்ள ராம நவமி பேரணிகள், மத ஊர்வலங்களைத் தடை செய்வதற்குப் பதிலாக அதனை தானும் கடைப்பிடிப்பது என்பது அப்பட்டமாக பா.ஜ.க.வின் கலவர நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோகும் நடவடிக்கையே ஆகும்.
ஒடிசாவை ஆட்சி செய்த நவீன் பட்நாயக் அரசு, இந்து மக்களின் வாக்குகளை கவர்வதற்காக “ஜெய் ஸ்ரீராம்”-க்கு மாற்றாக “ஜெய் பூரி ஜெகன்நாதர்” என்ற முழுக்கத்தை முன்வைத்தது. இறுதில் அது பா.ஜ.க-விற்கே ஆதரவாக சென்று ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியது. எனவே, கோயில்களை கட்டி இந்து மக்களின் வாக்குகளை கவர எத்தனிப்பது, பா.ஜ.க-விற்கு போட்டியாக இந்துப் பண்டிகளை கொண்டாடுவது போன்ற திரிணாமுல் காங்கிரசு அரசின் மிதவாத இந்துத்துவ அரசியல் பா.ஜ.க. கும்பலுக்கே சாதகமாக அமையும்.
இருமுனைப் போராட்டமே தீர்வு!
மேற்குவங்கத்தின் கள எதார்த்தத்திலிருந்து பார்க்கையில், அம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசு கட்சியே மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகளே உள்ளன. ஆனால், பா.ஜ.க-வின் எஸ்.ஐ.ஆர். தேர்தல் மோசடி, இந்துமுனைவாக்க நடவடிக்கைகள், திரிணாமுல் காங்கிரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள அதிருப்தி, காங்கிரசு, சி.பி.ஐ(எம்) ஆகிய கட்சிகள் ஏறக்குறைய களத்திலிருந்து அகற்றப்பட்டு இருமுனை போட்டி நிலவுவது ஆகியவற்றால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற 77 தொகுதிகளை விட அதிக இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மேலும், 2011 சட்டமன்றத் தேர்தலில் 4.06 சதவிகித வாக்குகளுடன் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பா.ஜ.க., 2021 சட்டமன்றத் தேர்தலில் 37.97 சதவிகித வாக்குகளுடன் 77 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்ததற்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் குண்டர் படை அமைப்புகள் மம்தாவின் ஆட்சிக்காலத்தில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்ததே காரணமாகும். சான்றாக, 2011-ஆம் ஆண்டில் மேற்குவங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்-இன் அலகுகள் (ஸ்தான்கள், கிளைகள், மிலன்கள், மண்டலிகள்) 830-ஆக இருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டில் 4,540 அலகுகளாக அதிகரித்துள்ளது என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அவற்றை 8,000 அலகுகளாக அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் மே 26, 2025 தேதியிட்ட “தி டெலிகிராஃப்” பத்திரிகை கூறுகிறது.
இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் மம்தா ஆட்சிக்காலத்தில் வளர்ச்சியடைந்துள்ள போதிலும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு மம்தா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 27 சதவிகிதமாக உள்ள நிலையில், இஸ்லாமிய வெறுப்பை விதைத்து இந்துமதவெறியைத் தூண்டுவதற்கான சிறு சிறு நடவடிக்கைகளைக் கூட ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளன. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மிதவாத இந்துத்துவா மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளும் அவைகளின் வளர்ச்சிக்கு உதவியுள்ளன.
ஒருவேளை, மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசு 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் மிக வேகமாக வளர்ச்சியடையும்; முன்பை விட மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபடும்.
எனவே, மேற்குவங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் பாசிச சர்வாதிகாரம் நிலைநாட்டப்படுவதை தடுத்துநிறுத்த வேண்டும் என்பதை விரும்பும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் அக்கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களை கட்டியமைப்பதோடு, திரிணாமுல் காங்கிரசின் மக்கள் விரோத, கவர்ச்சிவாத, அடையாள, மிதவாத இந்துத்துவ நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களையும் கட்டமைக்க வேண்டும். அதாவது, இருமுனைப் போராட்டம் காலத்தின் கட்டாயமாகும். இத்தகைய போராட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் உருவாகும் பாசிசத்திற்கு எதிரான விழிப்புணர்வே மேற்குவங்கத்தில் பாசிச சர்வாதிகாரம் நிலைநாட்டப்படுவதை தடுத்து நிறுத்தும்.
![]()
அமீர்
(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











