மனிதம் மலர்வது போராட்டக்களங்களில்! | டெல்லி போராட்ட அனுபவம்

மக்கள் சமூகப் பிரச்சினைகளில் தலையிடும் போது சுயநலன்கள் உடைத்தெறியப்பட்டு மக்களின் உயர்ந்த குணநலன்கள் இயல்பாக வெளிவருகின்றன. சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்குகின்றனர். போராட்டங்கள் என்பன அதற்கான சிறந்த களமாக விளங்கி மனிதத்தை மலரச் செய்கின்றன.

0

நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட மாணவர் போராட்டத்திற்கு அடிபணிந்து நேற்று (25 ஜூலை, 2026) தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார். இது மாணவர்கள் – இளைஞர்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்!

இப்போராட்டமானது போராடிய மாணவர்களுக்கு பல்வேறு அனுபவங்களைக் கொடுத்துள்ளது. மோடி அரசின் பாசிச முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. அதிகார வர்க்கத்தின் வன்முறை குணத்தை திரைக்கிழித்துள்ளது. மாணவர்களின் சமூக அக்கறையையும் அரசியல் உணர்வையும் வளர்த்தெடுத்துள்ளது. சாதி, மத, இன, மொழி பேதங்களைக் கடந்து ஒன்றிணைத்துள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மனிதனின் உன்னதமான குணங்களை வெளிக்கொணர்வது போராட்டக்களங்களே என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

குறிப்பாக, இப்போராட்டத்தை எப்படியேனும் ஒழித்துக்கட்டிவிடத் துடித்த பாசிச மோடி அரசு, ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்களுக்கு உணவு, தண்ணீர் கொண்டு செல்லும் பாதையை முடக்கி தனது பாசிச முகத்தை வெளிக்காட்டியது. ஆனால், பொதுமக்களோ ஸ்விக்கி, சொமேட்டோ மற்றும் பிளின்கிட் போன்ற உணவுச் செயலிகள் மூலம் உணவு, குடிநீர், தின்பண்டங்கள் போன்றவற்றை ஜந்தர் மந்தருக்கு அனுப்பி வைத்து பாசிச கும்பலின் முகத்தில் ஓங்கி அறைந்தனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், ஏன், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, கத்தார் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் கூட “பசியோடு இருக்கும் எந்தவொரு மாணவருக்கும் இதை வழங்குங்கள்” என்ற குறிப்போடு போராட்டக் களத்திற்கு உணவுப் பொட்டலங்கள் ஆர்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதானது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதைப்போல், போராட்டக்களத்தில் தன்னார்வலர்கள் பலர் ஒன்றிணைந்து முகக்கவசங்கள், கையுறைகள், சானிடைசர்கள் (Sanitizer), வைப்ஸ் (Wipes) மற்றும் ஓ.ஆர்.எஸ். (ORS) போன்ற அத்தியாவசியச் சுகாதாரப் பொருட்களைச் சேகரித்து மாணவர்களுக்கு விநியோகித்தனர். குறிப்பாக, மாணவிகள் அல்லும் பகலும் போராட்டக் களத்திலேயே தங்கியிருப்பதால், அவர்களுக்குத் தேவையான சானிட்டரி நாப்கின்கள் (Sanitary napkins) சேகரிக்கப்பட்டுத் தடையின்றி வழங்கப்பட்டன.

போராட்டக்களத்தில் உள்ள மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, அங்கு தன்னார்வலர்கள் முதலுதவி சிகிச்சை மையங்களை அமைத்தனர். போராட்டத்தில் ஈடுபடும் போது மாணவர்களுக்கு ஏற்படும் சிறிய காயங்கள், தீக்காயங்களைச் சுத்தம் செய்து கழுவுதல், அவற்றுக்கு மருந்திடுதல் மற்றும் வலி நிவாரணிகள் வழங்குதல் போன்ற முதலுதவி சிகிச்சைகள் இம்முகாம்களில் இலவசமாக அளிக்கப்பட்டன. மாணவர்கள் சிகிச்சைக்காக வெளியே செல்ல வேண்டிய அவசியமின்றி, அங்கேயே மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

அதைப்போல், கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் நிவாஸ் உள்ளிட்ட பல மருத்துவர்கள் போராட்டத்திற்குத் தாமாக முன்வந்து மருத்துவ முகாமை அமைத்தனர். ​போராட்டம் நடைபெறும் பகுதியில் போதுமான, சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இல்லாததால், மாணவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் நிலவியது. இதனை எதிர்கொள்ளத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவக் குழுவினர் மேற்கொண்டனர். குறிப்பாக, இம்முகாமிற்குத் தேவைப்பட்ட எந்தவொரு மருத்துவப் பொருளும் பணம் கொடுத்து வாங்கப்படவில்லை; அவை யாவும் டெல்லியைச் சேர்ந்த பொதுமக்களும் ஆதரவாளர்களும் வழங்கிய முழுமையான நன்கொடைகள் மூலமாகவே பெறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டக் களத்தில் உள்ள மாணவர்களின் கைப்பேசிகள் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதற்காக ஒரு பெண் தன்னார்வலர் அவர்களுக்கு பவர் பேங்க்-களை (Power bank) வழங்கினார். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் நிதி திரட்டி 40 பவர் பேங்க்-களை வாங்கிய அவர், அதனைச் சுழற்சி அடிப்படையில் மாணவர்களுக்குக் கொடுத்தார்; பின்னர் 2-3 மணி நேரத்திற்குப் பிறகு அவற்றைச் சேகரித்து, வீட்டிற்கு எடுத்துச் சென்று சார்ஜ் செய்துவிட்டு, மீண்டும் மறுநாள் களத்திற்குக் கொண்டு வந்து மாணவர்களுக்கு வழங்கினார்.


படிக்க: “என் தந்தையை போலீசு வேலையிலிருந்து விலகுமாறு கூறிவிட்டேன்” – யு.பி.எஸ்.சி. மாணவி | டெல்லி போராட்டக்கள அனுபவங்கள்


மாணவர்கள் தொடர்ந்து உரத்த குரலில் முழக்கங்களை எழுப்புவதால் அவர்களின் தொண்டை கட்டிக்கொள்வதையும், பேசுவதற்குச் சிரமப்படுவதையும் கவனித்த மற்றொரு தன்னார்வலர் “விக்ஸ்” (Vicks) மிட்டாய்களை விநியோகித்தார். ​இது தவிர, கடும் வெயில் மற்றும் திடீர் மழையிலிருந்து காத்துக்கொள்ளக் குடைகள், வெயிலின் தாக்கத்தைக் குறைக்க டால்கம் பவுடர், முகக்கவசங்கள் மற்றும் கைக்குட்டைகள் போன்ற பல பொருட்கள் மக்களால் நேரடியாக வழங்கப்பட்டன. மேலும், கூட்டத்தைச் சீர்படுத்துவது மற்றும் வழிகாட்டுவது போன்ற பணிகளிலும் தன்னார்வலர்கள் சுழற்சி முறையில் ஈடுபட்டனர். இவையன்றி இன்னும் பல்வேறு வடிவங்களில் மக்கள் இப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இவை யாவும், தங்களால் நேரடியாகப் போராட்டத்திற்கு வர முடியாவிட்டாலும், நெடுநேரம் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் இப்போராட்டத்திற்கு ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்ய வேண்டுமென்ற மக்களின் உணர்வைத் துலக்கமாக வெளிக்காட்டுகின்றன.

இவர்களில் பலருக்கு போராட்டக்களங்களும் இத்தகைய தன்னார்வப் பணிகளும் முதல் அனுபவம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. குறிப்பாக, ஆளும் வர்க்கங்கள் தங்களது சுரண்டலைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மக்களை அந்நியப்படுத்தியும் சமூகப் பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பியும் வருகின்றன. அதற்காக மக்களிடம் திட்டமிட்டு சுயநலனை வளர்த்துவிடுகின்றன. ஆனால், மக்கள் சமூகப் பிரச்சினைகளில் தலையிடும் போது சுயநலன்கள் உடைத்தெறியப்பட்டு மக்களின் உயர்ந்த குணநலன்கள் இயல்பாக வெளிவருகின்றன. சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்குகின்றனர். போராட்டங்கள் என்பன அதற்கான சிறந்த களமாக விளங்கி மனிதத்தை மலரச் செய்கின்றன. அதன் வெளிப்பாடே மேற்குறிப்பிட்ட அனுபவங்களாகும்.

இந்தியா முழுவதும் மோடி அரசின் கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகவும் அதன் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் விரிவடைவதும், மக்கள் மத்தியில் ஒற்றுமையும் சமூக அக்கறையும் வளர்வதும்தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிச கும்பலின் தூக்கத்தைக் கலைக்கிறது!


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க