நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஜூலை 20 அன்று டெல்லியில் மாணவர்கள் நாடாளுமன்ற முற்றுகைப் பேரணி நடத்தினர். இம்மாணவர்கள் மீது போலீசும் துணை இராணுவப் படையும் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் கொடூரத் தாக்குதல் நடத்தியது. மறுபுறம், மாணவர்கள் நாடாளுமன்ற முற்றுகைக்கு சென்றதைப் பயன்படுத்திக்கொண்டு, ஜந்தர் மந்தரில் மாணவர்களின் போராட்டக் கூடாரத்தைப் பிய்த்தெறிந்தது.
ஆனால், மோடி அரசின் இந்த பாசிச அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் மறுநாள் காலையிலேயே ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீண்டும் ஜந்தர் மந்தரில் கூடினர். மாணவர்கள் மீதான போலீசின் அடக்குமுறைக்கு எதிராகவும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அச்சமடைந்த பாசிச கும்பல் போலீசைக் கொண்டு மாணவர்களை ஜந்தர் மந்தரிலிருந்து அப்புறப்படுத்தியது.
ஆனால், சில மணி நேரங்களிலேயே, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த மாணவர்கள், இளைஞர்கள் மீண்டும் ஜந்தர் மந்தரை நோக்கி வந்தனர். அனைவரும் இணைந்து மீண்டும் போராட்ட மேடையை அமைத்து போராட்டத்தைத் தொடங்கினர். இதில் கைகளில் மாவுக்கட்டுடன் பல மாணவர்கள் பங்கேற்றது அவர்களின் உறுதியான போராட்டக் குணத்தை வெளிப்படுத்துகிறது.
மாநில அரசுப் பணியாளர் தேர்வுக்குத் தயாராகும் அற்பிதா சிங் என்ற இளைஞர் கூறுகையில், “போராட்டக்காரர்கள் மீண்டும் ஜந்தர் மந்தருக்குத் திரும்பியிருப்பது, இந்த குண்டர் ராஜ்ஜியத்திற்கு எதிராக அவர்களுக்கு இருக்கும் பயமின்மைக்குச் சான்றாகும்” என்றார். தடியடியில் தானும் காயமடைந்ததாகவும், ஆனால் மாணவர்களை இனி ஒடுக்க முடியாது என்பதைக் காட்டுவதற்காகவே இன்று மீண்டும் போராட்டத்தில் கலந்துகொண்டதாகவும் உணர்வுபூர்வமாகத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான சட்டக்கல்லூரி மாணவர் கேசவ் கூறுகையில், “நேற்று தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவையும், பிரதமரின் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தோம். இன்று, போலீசின் எந்தவொரு அராஜகத்தாலும் எங்களது மன உறுதியைக் குலைக்க முடியாது என்பதைக் காட்டவே இங்கு வந்துள்ளோம்” என்று உறுதியுடன் தெரிவித்தார்.
தன் மீது நான்கு முறை கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டதாகத் தெரிவித்த ராஜஸ்தானைச் சேர்ந்த இளங்கலை மாணவி அஞ்சலி, “போலீசுதுறை எங்களை ஒருபுறம் தடுப்புகளால் மறித்துக்கொண்டு, மறுபுறம் வந்து தாக்கினார்கள். இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்காகப் பிரதமரிடம் பொறுப்புக்கூறலைக் கேட்கவே நான் இன்று மீண்டும் வந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
படிக்க: டெல்லி மாணவர் போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள கொலைகார மோடி அரசு!
இதற்கிடையில் அன்று மாலையில் சன்சாத் மார்க்கை மீண்டும் மறித்த டெல்லி போலீசு, போராடும் மாணவர்களுக்கு தண்ணீர் கேன்களை எடுத்துச் சென்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஜந்தர் மந்தர் நோக்கிச் செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியது. இதனால் போலீசுக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் மாணவர்கள் டெல்லி போலீசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடி, தடுப்புகளுக்கு இடையே ஒரு சிறிய பாதையை உருவாக்கி தண்ணீரைச் சுமந்து சென்றனர். தங்களை மீறி மாணவர்கள் சென்றதை பொறுத்துக்கொள்ள முடியாத போலீசு சன்சாத் மார்க்கை மீண்டும் முழுமையாகத் தடுத்தது.
சில நிமிடங்களிலேயே, டெல்லி போலீசைக் கண்டித்து சி.ஜே.பி. செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், “சி.ஜே.பி-யின் அனைத்து செய்தித் தொடர்பாளர்களும் ஜெய் சிங் சாலையில் உள்ள டெல்லி போலீசுதுறை தலைமையகத்தின் முன் தர்ணா போராட்டம் நடத்துவார்கள்” என்று அறிவித்தார்.
மேலும் “சூரியன் மறைந்தவுடனேயே எங்கள் மீது தடியடி நடத்துவதற்காக அவர்கள் மீண்டும் தடுப்புகளை அமைத்து, கலவரத் தடுப்பு வாகனங்களை நகர்த்தி வருகிறார்கள்” என்று கேரளாவைச் சேர்ந்த அனீஸ் என்ற இளைஞர் தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்திலிருந்து 20 சி.ஆர்.பி.எஃப். கம்பெனிகள் (2,000 பேர்) டெல்லிக்கு வரவழைக்கப்பட்டிருப்பது இதனை நிரூபிக்கிறது.
ஆனால், அடக்குமுறைகளை கடந்தும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜந்தர் மந்தரில் அணிதிரண்டிருப்பதும், அம்மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் வீதியில் திரண்டிருப்பதும் உணர்த்துவது ஒன்றைத்தான். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது உள்ளிட்டு மாணவர்கள் – இளைஞர்களின் கோரிக்கைகள் ஈடேற்றப்படும் வரை கரப்பான்பூச்சிகளை விரட்டியடிக்க முடியாது!
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











