
12.05.2026
கன்னியாகுமரி முகில் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்!
பத்திரிகைச் செய்தி
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் அமைந்துள்ள தனியார் முகில் சட்டக் கல்லூரியில் மே 9 முதல் மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
மூன்றாண்டு சட்டப்படிப்பில் பயிலும் 120 மாணவர்களில் 60 மாணவர்கள் மற்றும் ஐந்தாண்டு சட்டப்படிப்பில் பயிலும் 74 மாணவர்களில் 18 மாணவர்கள் என மொத்தம் 78 மாணவர்களுக்கு தேர்விற்கான பதிவெண் வழங்கப்படவில்லை. இதனால் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை.
2025-2026 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் நிரப்பும் இடம் போக மேனேஜ்மெண்ட் (management) இடங்களில் பார் கவுன்சில் (BCI) நிர்ணயித்த இடங்களைவிட அதிகமாக மாணவர் சேர்க்கை நடத்தி கல்லூரி நிர்வாகம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது.
தற்போது பல்கலைக்கழகம் கூடுதலான மாணவர்களுக்கு பதிவெண் வழங்கவில்லை. ஆனாலும் கல்லூரி நிர்வாகம் பதிவெண் கிடைத்துவிடும் தேர்வு எழுதலாம் என ஒரு மாதமாக மாணவர்களை பொய்வாக்குறுதி அளித்து ஏமாற்றி வந்துள்ளது. தற்போது மாணவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தவுடன் பல்கலைக்கழகத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாகவும் அதில் தீர்வு கிடைத்துவிடும் என்றும் கூறி வஞ்சித்து வந்துள்ளது. பணவேட்டை நோக்கத்திற்காக விதிமுறைகளையும், வரம்பையும் மீறி மாணவர் சேர்க்கை நடத்திய கல்லூரியின் கல்விக் கொள்ளையினால் அப்பாவி மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் உறுதியாக நின்று போராடி வருகின்றனர். மற்ற மாணவர்களும் துணை நிற்கின்றனர்.
மாணவர்கள் ஒட்டுமொத்தமாக கல்லூரியின் மீதும் நிர்வாகத்தின் மீதும் அதிருப்தியில் உள்ளனர். கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறை மட்டுமே உயர்தரத்திலும் மற்றபடி வகுப்பறை உள்ளிட்ட பலவும் மிகவும் மோசமான நிலையிலும் இருக்கின்றன. கல்லூரியின் விரிவுரையாளர்கள் பலரும் வகுப்பை முறையாக நடத்துவதில்லை என்றும் உரிய சான்றிதழ் கூட இல்லாமல்தான் பணிசெய்கின்றனர் என்றும் மாணவர்கள் கவலைப்படுகின்றனர்.
தனியார் சட்டக்கல்லூரிகளில் காலவாரியாக நடத்தப்படும் தணிக்கை ஆய்வில் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழுவின் மோசடிகள் இதன்மூலம் அறியமுடிகிறது. ஆய்வு நடைபெறும் போது மாணவர்கள் தங்கள் குறைகளை வெளிப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக விடுமுறை அளித்து அனுப்பிவிடுகின்றனர். பெரும்பாலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் சட்டக் கல்லூரிகளும் இத்தகைய நிலையில்தான் உள்ளன. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திலேயே மாணவர்களுக்கான பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும் போது அதன்கீழ் இயங்கும் மற்ற அனைத்து கல்லூரிகளின் அவலநிலையை என்னவென்பது.
தற்போது கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் அடுத்த ஆண்டு மீண்டும் முதலாமாண்டு பயிலுமாறும் உள்மதிப்பீடு, ஒப்படைவு, வைவா என ஏதுமின்றி நேரடியாக தேர்வு எழுத ஏற்பாடு செய்வதாகவும் நயவஞ்சகமாக கூறிவருகிறது.
78 மாணவர்களின் வாழ்க்கையில் ஓராண்டை அழித்துவிட எத்தனிக்கிறது நிர்வாகம். பல்கலைக்கழகத்திடம் மாணவர்கள் முறையிடவே, அவர்கள் ஏதோ தங்களுக்கு தொடர்பே இல்லை என்பது போலவும், நீங்கள் கல்லூரியிடம்தான் கேட்கவேண்டும் என்றும், இங்கு பேசக்கூடாது என்றும் பதிலளித்து தனது தார்மீக பொறுப்பை கைகழுவியுள்ளனர். அப்படியெனில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமான மாணவர்களை நிரப்பியுள்ளதை ஓராண்டாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ஏன்? தனது விதிமுறையின் கீழ் இயங்கும் கல்லூரியை கண்டிக்காதது ஏன்? எதற்காக இத்தகைய கல்லூரிகளை அங்கீகரித்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
மாணவர்கள் மூன்று நாட்களாக நெருக்கடியின் உச்சத்தில் இருந்து போராடி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டக் கல்வி இயக்குநரகம் தலையிட்டு மாணவர்களின் பாதிப்பை களைய உரிய நடவடிக்கை எடுத்து அவர்களின் கல்வி உரிமை மற்றும் எதிர்கால வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும்.
சமூகப் பொறுப்பின்றி நிர்வாக சீர்கேட்டில் ஈடுபட்ட, துளியும் தகுதியற்ற இந்த முகில் சட்டக் கல்லூரியின் உரிமத்தை நீக்கவேண்டும்; அனைத்து மாணவர்களையும் பாதுகாக்க வேண்டும் என போராடும் மாணவர்கள் குரலெழுப்புகின்றனர்.
போராடும் மாணவர்களை தனிப்பட்ட முறையிலோ போலீசை கொண்டோ அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் நிர்வாகம் ஈடுபடக்கூடாது; மீறினால் அனைத்து கல்லூரி மாணவர்களும் திரண்டு களத்தில் இறங்கப்போவதாக மாணவர்கள் எச்சரிக்கின்றனர்.
தேர்வுகளை எழுத அனுமதிக்காமல் புறக்கணிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக பதிவெண் வழங்க வேண்டும் என்றும், நடைபெறவுள்ள தேர்வுகளை எழுத அனுமதிக்க வேண்டும் என்றும், நடைபெற்று முடிந்த பாடங்களுக்காக சிறப்புத் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
![]()
இவண்
தோழர் எழில் கருளன்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
நெல்லை.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











