01.07.2026

மக்களின் சொத்தான என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனத்தை
தனியாருக்குத் தாரைவார்க்கும் பாசிச மோடி அரசின்
தேசத் துரோக செயலை முறியடிப்போம்!

கண்டன அறிக்கை

நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி-இன் 3 சதவீத பங்குகளை விற்கப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

‎தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன் ‎மிகப்பெரும் லாபமீட்டும் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி.யின் 100% பங்குகளும் ஒன்றிய அரசிடம் இருந்தன.

‎2011 – 2012 நிதியாண்டிலேயே என்.எல்.சி-யின் லாபம் ரூ. 1,411 கோடி (மொத்த வருவாயில் 24.77%). 2025 –2026ம் நிதியாண்டில் நிகர லாபம் 3,769.46 கோடி. இது என்.எல்.சி. வரலாற்றிலேயே அதிகபட்ச ஆண்டு லாபம்.

‎இந்த லாபமும் மற்ற தனியார் விற்கும் மின்சாரத்தின் விலையை விடக் குறைந்த விலையில் விற்றுக் கிடைக்கும் லாபம் என்பதை மறந்து விடக் கூடாது. இதுதான் மக்களுக்குச் சேவை செய்யும் பொதுத் துறை.

‎ஆனால் இன்று என்.எல்.சி-யின் 3% பங்குகளை விற்றால் ஒன்றிய அரசுக்குக் கிடைக்கும் மொத்தத் தொகை 1,263 கோடி ரூபாய் மட்டுமே! அதாவது என்.எல்.சி-யின் லாபத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே!

‎ஆனால் ஒன்றிய அரசு 3% பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதை வளர்ச்சி என்பதா அல்லது தனியாருக்கு செய்யும் சேவை என்பதா? நிச்சயமாக இது தனியாருக்கு செய்யும் சேவை என்பது வெள்ளிடை மலை!

ஏன் தங்க முட்டையிடும் வாத்தை அறுக்கத் துணிகிறார்கள்?

‎90களில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற பெயரில் உலகம் முழுவதும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்று விட வேண்டும் என உத்தரவிட்டனர். எஜமானர்களின் உத்தரவுக்கு அடிபணிந்த அடிமைகள் தனியார்மயக் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தத் தொடங்கினர்.

1991 – 92, 1992 – 93 நிதியாண்டுக் காலத்திலேயே 6.44% பங்குகளை தனியாருக்கு விற்று விட்டனர். அதன்பின் மீண்டும் 2006-இல் விற்க முயன்ற போது மாநில அரசின் கடும் எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது. திரும்ப 2013-இல் 5% பங்குகளை விற்க முனைந்த போது தமிழ்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்தது. அப்போது முதல்வராயிருந்த ஜெயலலிதா அந்த 5% பங்குகளை தமிழ்நாடு வாங்கிக் கொள்ளும் எனக் கூறி, தமிழ்நாடு வாங்கியது. அப்போதும் புரட்சிகர அமைப்புகள் இது பொதுத்துறை நிறுவனங்களை ஒழிக்கும் சதியின் ஓர் அங்கமே என எதிர்த்து அம்பலப்படுத்தினோம். 2013-இல் 5% பங்குகளை விற்ற பின் இன்று என்.எல்.சி-யில் ஒன்றிய அரசு வைத்திருக்கும் மொத்தப் பங்கு 72.2% மட்டுமே. படிப்படியாக என்.எல்.சி. பங்குகள் விற்கப்படுவதையே இது காட்டுகிறது. 2013-இல் என்.எல்.சி. ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், 10,000 பேர் உட்பட, 27,000 பேர் 13 நாட்கள் பொதுத்துறை நிறுவனத்தைக் காப்பதற்காகப் போராடினர். அந்தப் போராட்டத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு பங்குகளை வாங்கும் என திசை திருப்பினார் ஜெயலலிதா. இன்று என்.எல்.சி-யில் ஒன்றிய அரசின் பங்கு 72.2% தான். இதைக் காக்க தமிழ்நாடே ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் அறைகூவுகிறது. குறைந்த விலையில் சூரிய மின்சாரம் முதல் அனைத்தையும் விற்கும் என்.எல்.சி-யின் பங்குகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டால் தனியார் விற்கும் கூடுதல் விலையில் தான் மின்சாரம் வாங்க வேண்டியிருக்கும்.

‎கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் என்.எல்.சி-க்காக தங்களுடைய நிலத்தை கொடுத்தனர். இன்றளவும் கூட என்.எல்.சி. நிறுவனம் விரிவாக்கம் என்ற பெயரில் விளைநிலங்களைச் சூறையாடி வருவதை அனைவரும் அறிய முடியும். அப்படிப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் தமிழ்நாட்டின் சொத்தான என்.எல்.சி-யின் பெயரை நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் என்பதிலிருந்து நேஷனல் லிக்னைட் கார்ப்பரேஷன் என்று பாசிச மோடி அரசு சில வருடங்களுக்கு முன்பு மாற்றியது.

அதன் தொடர்ச்சியாகவே இப்பொழுது மூன்று சதவீத பங்குகளை விற்கப் போவதாகவும் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தமிழ்நாட்டு மக்களின் பெரும் இழப்புகள் ஊடாக உருவான இந்த என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டின் சொத்து. அதனைத் தனியாருக்கு விற்பதற்கு தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

‎இந்த அறிவிப்பு வெளியான உடனே இதற்கு சிறு கண்டனம் கூட தெரிவிக்காத தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய், இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார். குறிப்பாக இதுவரை இருந்த அரசுகள் ஒன்றிய அரசே என்று குறிப்பிட்டதை மேற்கண்ட கடிதத்தின் போது இந்திய அரசு என்று தெரிவித்துத் தான் மோடி அரசின் அடிமையாக ஒலிக்கப் போகிறேன் என்பதையும் விஜய் தெரிவித்துள்ளார்.

‎ஏறத்தாழ 60 ஆண்டுகளாக தொடர்ந்த திராவிட கட்சிகளின் ஆட்சிகளுக்கு மாற்றாக விஜய் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார். அவருடைய கவர்ச்சிவாத அரசியல் தமிழ்நாட்டை வெற்றி கொண்டு இருக்கிறது. கடந்த 40 நாட்களில் பல நூறு ஆண்டுகளாக தமிழ்நாடு உருவாக்கி வைத்திருந்த சுயமரியாதை உணர்வு பின் தள்ளப்பட்டு பார்ப்பனிய மற்றும் ஒன்றிய அரசின் ஆதிக்க உணர்வுக்கு பலியாகின்ற நடவடிக்கைகளைத் தமிழக வெற்றிக் கழகம் நடைமுறைப்படுத்தி வருவதையும் மக்கள் அதிகாரக் கழகம் கண்டிக்கிறது.

‎எனவே என்.எல்.சி. பங்குகளை ஒன்றிய அரசு தனியாருக்கு விற்கக் கூடாது என்று மக்கள் அதிகார கழகம் கேட்டுக் கொள்வதுடன் என்.எல்.சி-இன் பெயரை மீண்டும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் என்று மாற்ற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க