இந்திய–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை இரத்து செய்ய வலியுறுத்தி கடந்த ஜூன் 24-ஆம் தேதி அன்று பஞ்சாபின் 21 மாவட்டங்களில் உள்ள 28 இடங்களில் “கிசான் மஸ்தூர் மோர்ச்சா” (KMM) தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியச் சந்தையை அமெரிக்காவிற்குத் தாரைவார்த்து, இந்தியாவை அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கு இந்திய விவசாயிகளும் விவசாயமும் முதல் பலியாகும் அபாயம் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த அமெரிக்க அடிமை ஒப்பந்தத்திற்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் இப்போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
பாசிச மோடி அரசின் கொள்கைகள் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரானது என்று தெரிவித்த விவசாயிகள், ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்தியப் பிரதமர் பாசிஸ்ட் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பாசிஸ்ட் டிரம்பின் உருவ பொம்மைகளை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஹோஷியார்பூரில், விவசாயிகள் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய மாவட்டத் தலைவர் பரம்ஜித் சிங் புல்லா “இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் விவசாய சந்தையை வெளிநாட்டுப் பொருட்களுக்குத் திறந்துவிடும். சிறு-குறு விவசாயிகளுக்குக் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்” என்றார்.
மேலும், “இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற உணவுப் பொருட்களின் இறக்குமதி அதிகரிக்க வழிவகுக்கும். அமெரிக்க விவசாயிகள் பெரிய அளவிலான அரசு மானியங்களைப் பெறுகிறார்கள் மற்றும் பெரிய நிலப்பரப்புகளில் விவசாயம் செய்கிறார்கள். இதனால், பெரும்பாலும் சிறிய நிலங்களைக் கொண்டுள்ள இந்திய விவசாயிகளால் அவர்களுடன் போட்டியிடுவது கடினம். இதனால் உள்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் விவசாயத் துறையும் பாதிக்கப்படும்” என்று விவசாயத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாசிச மோடி அரசின் வர்த்தகக் கொள்கைகள் உள்நாட்டு விவசாயிகளையும், பால்வளத் துறையையும் புறந்தள்ளி, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உலகளாவிய வர்த்தக நலன்களுக்கும் சாதகமாகச் செயல்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
படிக்க: உயரும் விலைவாசி, நசுக்கப்படும் விவசாயிகள்: விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!
“ஒன்றிய மோடி அரசு விவசாயத் துறையை கார்ப்பரேட்மயமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய போது, இச்சட்டங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளிடமோ அல்லது விவசாயத் தலைவர்களிடமோ எந்தவித ஆலோசனையும் நடத்தவில்லை. இதே அணுகுமுறையைத்தான் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திலும் பின்பற்றுகிறது” என கே.எம்.எம். தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், இந்திய–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும்; மின்சாரத் திருத்த மசோதா 2025 மற்றும் விதை மசோதா 2025 ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும்; ஸ்மார்ட் மின்சார மீட்டர்கள் பொருத்துவதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.
இப்போராட்டத்தில் பாரதிய கிசான் யூனியன் (தோவாபா) தலைவர் மஞ்சித் சிங் ராய் பேசுகையில், “சீரற்ற பருவமழை சாத்தியம் என்று சமீபத்தில் வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கூறிய கருத்துகள், சிறந்த ஆயத்தப் பணிகளின் தேவையை உணர்த்துகிறது” என்று தெரிவித்தார். அனைத்துப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) சட்டப்பூர்வமாக உத்தரவாதம் செய்ய வேண்டும் என்றும் நீர் சேமிப்பு விவசாய முறைகளை ஊக்குவிக்கவும், கால்வாய் பாசன வசதிகளைச் சிறப்பாகப் பயன்படுத்தவும் வலியுறுத்தினார். விவசாயச் சவால்களை எதிர்கொள்ளவும், வானிலை சார்ந்த அபாயங்களுக்கு விவசாயிகளைத் தயார்ப்படுத்தவும் மாவட்ட அளவிலான குழுக்களை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா தங்களின் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (BTA) முதற்கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வரும் நிலையிலேயே இப்போராட்டங்கள் நடந்துள்ளன. இரு நாடுகளும் சமீபத்தில் டெல்லியில் இரண்டு நாள் பேச்சுவார்த்தையை நிறைவு செய்தன. அதில், மேம்படுத்தப்பட்ட சந்தை அணுகல், டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் வர்த்தகம் சாரா தடைகளைக் குறைத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள தற்காலிக 10 சதவிகித வரி விதிப்பு ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் இந்த இடைக்கால ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரு தரப்பும் இலக்கு வைத்துள்ளன. அப்போதுதான் இந்தியாவிற்கு அமெரிக்கச் சந்தையில் வரிச் சலுகை கிடைக்கும் என்று முதுகெலும்பற்ற மோடி அரசை அமெரிக்கா நிர்ப்பந்தித்துள்ளது.
அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு அடிபணிந்து, பன்னாட்டு நிறுவனங்களின் லாபவெறிக்காக இந்திய சந்தையைத் திறந்து விடுவதற்கான பேச்சுவார்த்தையில் அடிமை மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் உள்ளிட்டு ஒட்டுமொத்த இந்திய மக்களையும் பாதிக்கின்ற இந்திய–அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி சலோ போன்றதொரு மாபெரும் போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுக்க வேண்டும். இதற்கு ஒட்டுமொத்த ஆதரவளிக்க வேண்டும்.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











