பருத்தி இறக்குமதி வரி ரத்து: விவசாயிகளைப் பலிகொடுக்கும் அமெரிக்க அடிமை மோடி அரசு!

2,000 ஏக்கர் பரப்பளவில் அதிக மானியம் பெற்று விவசாயம் செய்யும் அமெரிக்க கார்ப்பரேட் விவசாயிகளுடன் கடன் வாங்கி விவசாயம் செய்கின்ற இந்திய விவசாயிகளால் போட்டியிட முடியாது. இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைத் தனது விவசாயப் பணப்பயிர் பொருளாதாரத்தின் கணிசமான பங்கை இழக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது பாசிச மோடி அரசு.

0

பாசிச மோடி அரசு பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத சுங்க வரியை ரத்து செய்துள்ளது. இது ஜூன் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாய அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள இச்சூழலில் வரியை ரத்து செய்திருப்பதன் மூலம் டாலருக்கு நிகரான இந்தியப் பணத்தை அமெரிக்காவிற்கு அதிகளவில் வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கு அடிபணிந்த மோடி அரசு பருத்தி மீதான சுங்க வரியைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இதன் மூலம் பருத்தி ஒரு பொதி தோராயமாக ₹5,000, 5,100 என்ற விலையில் இந்தியாவிற்கு வந்தடைந்தது. உள்நாட்டுப் பருத்தி ₹6,100க்கு விற்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை நடுத்தர இழைப் பருத்திக்கு ₹ 7,710 ஆகவும் நீண்ட இழைப் பருத்திக்கு ₹ 8,100 ஆகவும் இருந்தது.

ஆனால் இறக்குமதி வரி நீக்கப்பட்டதால் ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைந்த விலையில் கிடைத்த அமெரிக்க பருத்தியையே அதிகளவில் வாங்கினர். இதனால் உள்நாட்டுப் பருத்தியின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய வருமான இழப்பு ஏற்பட்டது. மேலும் இந்திய மக்களின் பணம் அமெரிக்க விவசாயிகளுக்குச் செல்வதைக் கண்டித்தும், இறக்குமதி வரியை ரத்து செய்ததைக் கண்டித்தும் பல விவசாய அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன.

குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய பருத்தி பதப்படுத்தும் தொழில்துறையை நடத்துவதற்கு கச்சா பருத்தியில் 15 சதவீதமும், நூலில் 20 சதவீதமும் இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் வரி நீக்கப்பட்டதால் அமெரிக்க பருத்தி மிக எளிதாக இந்திய சந்தைக்குள் நுழைந்து உள்நாட்டில் பருத்தி விலையைக் குறைக்கும்.

மேலும் அமெரிக்க விவசாயிகள்தான் பருத்திக்கு அதிக மானியம் பெறுபவர்கள். இந்த துறையை உயிர்ப்புடன் வைத்திருக்க அமெரிக்க பல ஆண்டுகளாக பில்லியன் கணக்கான டாலர்களை மானியமாக வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய மோடி அரசின் இந்த வரி நீக்கத்தை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் இறக்குமதி வரி அமலிலிருந்த 2024-25 ஆண்டில் உள்நாட்டின் விவசாயிகளின் வருமானம் நிலையாக இருந்தது. ரூபாயின் வீழ்ச்சி காரணமாக ஏற்றுமதி செய்யும் தொழில்துறையினருக்கும் உகந்த சூழல் இருந்தது. எனவே தற்போது பருத்தி மீதான இறக்குமதி வரி அமெரிக்க அடிமைத்தனத்தின் விளைவாகவே ரத்து செய்யப்பட்டுள்ளது.

பருத்தி உற்பத்தியில் உலக அளவில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாகும். இது உலக உற்பத்தியில் கிட்டத்தட்ட 24 சதவீதம் ஆகும். சுமார் அறுபது லட்சம் விவசாயிகள் பருத்தி விவசாயம் செய்கின்றனர். பருத்தி பதப்படுத்துதல் மற்றும் ஆடை தயாரிக்கும் தொழில்களில் சுமார் 4-5 கோடி தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

ஜவுளி மற்றும் ஆடைத் துறை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2.3 சதவீதம் பங்களிப்பைத் தருகிறது. தொழில்துறை உற்பத்தியில் 13 சதவீதம் மற்றும் ஏற்றுமதியில் 12 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.

இந்நிலையில் இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் உள்நாட்டில் விலை குறைந்து பருத்தி உற்பத்தி குறையும்; ஏற்கனவே கடன் சுமையாலும், தீவிர மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதுடன் வேறு பயிர்களுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவர்.

குறிப்பாக 2,000 ஏக்கர் பரப்பளவில் அதிக மானியம் பெற்று விவசாயம் செய்யும் அமெரிக்க கார்ப்பரேட் விவசாயிகளுடன் கடன் வாங்கி விவசாயம் செய்கின்ற இந்திய விவசாயிகளால் போட்டியிட முடியாது. இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைத் தனது விவசாயப் பணப்பயிர் பொருளாதாரத்தின் கணிசமான பங்கை இழக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது பாசிச மோடி அரசு.


படிக்க: மானாமதுரை: சிப்காட் வளாகத்திலிருந்து மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நச்சு ஆலையை வெளியேற்று!


மேலும் இந்திய விவசாயிகளின் இழப்பில் அமெரிக்க உள்ளிட்ட வெளிநாட்டு விவசாயிகள் லாபமடைவர். காலப்போக்கில், நமது ஒட்டுமொத்த ஆடைத் தொழிலும் வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் தொடர்ந்து அந்நியச் செலாவணி கையிருப்பு குறையும்.

தற்போதைய நிலையில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகள் மீதான உரிமத்தொகை (royalty) மற்றும் பண்புக் கட்டணங்களாக (trait fees) இந்தியா தனது அந்நியச் செலாவணியை அமெரிக்க விதை நிறுவனங்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. அதே நிறுவனங்கள்தான் பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் வழங்குகின்றன. அந்நிறுவன முதலாளிகள்தான் தற்போது பருத்தி வளர்ப்புச் சுழற்சியின் அனைத்து நிலைகளிலும் லாபம் ஈட்டுகின்றனர். ஆனால் நாம் அந்நியச் செலாவணியை இழந்து கொண்டிருக்கிறோம்.

பருத்திக்கு மாற்றாக உள்நாட்டிலே எளிதாகக் கிடைக்கும் வாழை நார், மூங்கில் (bamboo) மற்றும் சணல் (hemp) போன்றவற்றை ஆடை தயாரிப்பிற்குப் பயன்படுத்த ஒன்றிய அரசு ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகள் இந்த மாற்றுப் பயிர்களைத் தனித்தனியாக வளர்த்தால் விற்பனை செய்வது கடினம். எனவே, அரசாங்கம் சில குறிப்பிட்ட மாவட்டங்களை அல்லது ஊர்களைத் தேர்ந்தெடுத்து, அதை “இயற்கை நார் உற்பத்தி மண்டலங்களாக” அறிவிக்க வேண்டும்.

அதாவது, ஒரு பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும் வாழை நார் அல்லது மூங்கில் வளர்ப்பார்கள்; அந்த ஊரிலேயே அதைத் துணியாக மாற்றும் சிறிய தொழிற்சாலைகளையும் அரசாங்கம் அமைத்துக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளும் தொழிற்சாலைகளும் நேரடியாக இணைக்கப்படும். இதன் மூலம் துணி ஆலைகளுக்குத் தேவையான நூல் மற்றும் துணிகளை நாம் இந்த வாழை நார், மூங்கில் மூலமாகவே தயாரித்துக் கொள்ளலாம். இறக்குமதிக்கான தேவை குறையும்.

ஜவுளி துறையினரின் கோரிக்கையை ஏற்று பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்ததாக பாசிச மோடி அரசு பொய்யுரைத்து வருகிறது. ஆனால் அமெரிக்காவிற்கு அடிபணிந்து அமெரிக்காவில் 500 பில்லியன் முதலீடு செய்வதாக அறிவித்திருப்பதன் ஒரு பகுதியாகத்தான் இந்த வரி விதிப்பை ரத்து செய்துள்ளது அடிமை மோடி அரசு.

எனவே, “பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்ற பருத்தி வரி ரத்தை உடனே திரும்பப் பெறு! இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்!” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாசிச மோடி அரசுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுக்க வேண்டும். அதற்கு ஜனநாயக சக்திகள், இயக்கங்கள் ஆதரவளிக்க வேண்டும்.

நன்றி: தி வயர்


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க