லடாக்கை பிரித்தாளத் துடிக்கும் பா.ஜ.க.: ஒற்றுமையுடன் முன்னேறும் மக்கள் போராட்டம்

தற்போது லடாக்கில் நடந்து வரும் போராட்டம் என்பது வெறுமனே லடாக் மக்களின் சமூக-பொருளாதார நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கானது மட்டுமல்ல; அது மணிப்பூர், சத்தீஸ்கர் என இந்தியாவின் பல மாநிலங்களில் கார்ப்பரேட்டுகளுக்குத் தங்களது நிலங்கள் தாரைவார்க்கப்படுவதற்கு எதிராகப் போராடிவரும் பழங்குடியின மக்களின் போராட்டத்தின் அங்கமாகும்.

மது நாட்டில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல் மோசடி, முறைகேடுகள் மூலம் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்து வந்தாலும், களத்தில் நடந்துகொண்டிருக்கும் மக்கள் போராட்டங்கள் அதற்கு தொடர்ந்து அடி கொடுத்த வண்ணமே உள்ளன. அவற்றுள் லடாக் மக்களின் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.

2019 ஆகஸ்டில் பாசிச மோடி அரசு ஜம்மு-காஷ்மீரின் சிறப்புரிமையை (370-வது பிரிவு) இரத்து செய்து, அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக துண்டாடியது. இந்த ஒடுக்குமுறை நடந்த சில மாதங்களிலேயே லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை உரிமை கோரி லடாக் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாது நடந்துவரும் இப்போராட்டம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தீவிரமடைந்தது. சூழலியல் ஆர்வலர் சோனம் வாங்சுக் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பள்ளி – கல்லூரி மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்; லடாக் முழுவதும் கடையடைப்பு செய்யப்பட்டது. முன்னெப்போதும் காணாத அளவில் இளைஞர்கள் திரண்டதைக் கண்ட ஊடகங்கள் இதை “லடாக் ஜென் சி எழுச்சி” என்று குறிப்பிட்டன.

நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இளைஞர்களின் எழுச்சிமிக்க போராட்டத்தால் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்ததைக் கண்டு ஏற்கெனவே பீதியுற்றிருந்த பாசிச மோடி அரசிற்கு இப்போராட்டம் கிலியூட்டியது. துப்பாக்கிச்சூடு நடத்தி அநியாயமாக நான்கு இளைஞர்களை கொன்றது; சோனம் வாங்சுக்கை கைது செய்தது.

ஆனாலும், லடாக் மக்கள் தங்களது கோரிக்கைகளுக்காக உறுதியுடன் போராடிவரும் நிலையில், லடாக் மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பார்ப்பனிய நரித்தனங்களையும் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் கையாண்டு வருகிறது.

லடாக்கை பிரித்தாளும் சூழ்ச்சி

லடாக் யூனியன் பிரதேசத்தில் லே (பௌத்தர்கள் பெரும்பான்மை), கார்கில் (இஸ்லாமியர்கள் பெரும்பான்மை) என இரண்டு பகுதிகள் உள்ளன. 1947 முதலே ஜம்மு-காஷ்மீரிலிருந்து பிரிந்து தனி யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை லே பகுதியில் இருந்து வந்தது. இக்கோரிக்கையை முன்வைத்து 1989-இல் லடாக் பௌத்த சங்கம் (LBA) முன்னெடுத்த போராட்டம், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டிவிட்டு, நீண்ட காலமாக இணக்கமாக வாழ்ந்த பௌத்த-இஸ்லாமிய மக்களிடையே பிளவை ஏற்படுத்தியது.

இப்பின்னணியிலிருந்தே ஆகஸ்ட் 2019-இல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் துண்டாடப்பட்டு லடாக்கிற்கு யூனியன் பிரதேச அங்கீகாரம் வழங்கப்பட்டதை லே பகுதி மக்கள் கொண்டாடினர். ஜம்மு – காஷ்மீரிலிருந்து பிரிவதை தொடக்கத்திலிருந்தே எதிர்த்துவந்த கார்கில் இஸ்லாமிய மக்கள் மோடி அரசின் இப்பாசிச நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், தாம் வஞ்சிக்கப்பட்டதை விரைவிலேயே உணர்ந்த லே மக்கள் கார்கில் மக்களுடன் ஒன்றிணைந்து போராட்டத்தில் இறங்கினர். லே பகுதி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் “லடாக் அபெக்ஸ் பாடி” (LAB), கார்கில் பகுதி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் “கார்கில் ஜனநாயகக் கூட்டணி” (KDA) ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து போராட்டத்தை ஒருங்கிணைக்கின்றன.

லடாக்கிற்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்; அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் லடாக்கை இணைக்க வேண்டும்; உள்ளூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பாதுகாக்கப்பட வேண்டும்; நாடாளுமன்றத்தில் கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் ஆகியவையே இப்போராட்டத்தின் நான்கு பிரதான கோரிக்கைகளாகும்.

இந்நிலையில், ஒற்றுமையான இப்போராட்டத்தை சிதைக்க பா.ஜ.க. பல சூழ்ச்சிகளில் இறங்கியுள்ளது.

லடாக் மாவட்ட மறுவரையறை எனும் சதி

லடாக்கில், லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் இருந்த நிலையில், மறுவரையறை மூலம் புதிதாக ஐந்து மாவட்டங்களை உருவாக்கி மாவட்டங்களின் எண்ணிக்கையை ஏழாக உயர்த்தியது மோடி அரசு. இதில், லடாக்கில் 46 சதவிகிதம் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு ஒரு மாவட்டத்தையும், 39 சதவிகிதம் உள்ள பௌத்த மக்களுக்கு நான்கு மாவட்டங்களையும் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் லடாக்கில் ஐந்து மாவட்டங்களில் இஸ்லாமிய மக்களை சிறுபான்மையாக்கியுள்ளது. எதிர்காலத்தில் இஸ்லாமியர்களுக்கான தொகுதிகளை ஒழித்து அவர்களின் அரசியல் பிரிதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்டும் வகையிலும் இதனை அரங்கேற்றியுள்ளது.

மேலும், இஸ்லாமிய மக்கள் கோரிவந்த பகுதிகளை மாவட்டங்களாக அங்கீகரிக்காதது; நிதி, நிர்வாக நெருக்கடி ஏற்படும் வகையில் அம்மாவட்டங்களில் அதிக கிராமங்களை ஒதுக்கியிருப்பது போன்ற நடவடிக்கையிலும் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாமிய மக்களின் பிரதிநிதித்துவமும் உரிமைகளும் திட்டமிட்டே பறிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, இது இஸ்லாமிய – பௌத்த மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி அவர்களை மோதிக்கொள்ளச் செய்யும் சதி நடவடிக்கையாகும்.

பௌத்தர்களை பிரிக்கும் சூழ்ச்சி

மறுபுறத்தில் பௌத்த மக்கள் மத்தியில் வேரூன்றுவதற்கான முயற்சியிலும் பாசிச கும்பல் ஈடுபடுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் லடாக்கில் தொடங்கப்பட்ட “லடாக்கின் குரல்” (VBL) எனும் அமைப்பு தாங்கள்தான் லடாக் பௌத்தர்களுக்கான உண்மையான பிரதிநிதிகள் என்றும் லே அபெக்ஸ் பாடி அமைப்பு பௌத்தர்களின் நலன்களைப் பாதிப்பதாகவும் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஒற்றுமையாகப் போராடிவரும் பௌத்த மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியுடன் தொடங்கப்பட்டுள்ள இவ்வமைப்பை “பா.ஜ.க-வின் படைப்பு” என லே அபெக்ஸ் பாடி அம்பலப்படுத்தியுள்ளது.

மேலும், இந்தாண்டு புத்த பூர்ணிமா நாளன்று அமித்ஷா லடாக்கிற்கு சென்றது, கடந்த காலத்தில் லடாக்கில் பிரிவினையை தூண்டிய எல்.பி.ஏ. அமைப்பின் பௌத்த தலைவர்களை சந்தித்ததெல்லாம் அம்மக்கள் மத்தியில் வேரூன்றிப் போராட்டத்தை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளே ஆகும்.

இந்துராஷ்டிரம் எனும் பெயரில் பார்ப்பனிய சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த, ‘இந்து’ என்ற ஒற்றை அடையாளத்திற்குள் பௌத்தம் உள்ளிட்ட பல்வேறு மதங்களை விழுங்கத் துடித்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல், தற்போது பௌத்த மதத்தை ஊக்குவிப்பதாகக் கூறுவது எத்துணை முரண்பாடானது!

000

அதைப்போல், சோனம் வாங்சுக் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்த போதே மோடி அரசு அவரை திடீரென விடுதலை செய்தது. லடாக்கிற்கு திரும்பிய வாங்சுக், மாநில அந்தஸ்து மற்றும் 6-வது அட்டவணை பாதுகாப்பு ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளில், ஏதேனும் ஒன்றை வழங்க முன்வந்தாலே பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகப் பேசினார். லடாக் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திய சோனம் வாங்சுக்கின் கருத்து, மக்களின் கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்து பாசிச கும்பலுடன் சமரசம் செய்து வைப்பதற்கான ஏற்பாடு என்பதை பலரும் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தின் தீவிரத்தையடுத்து கடந்த மே 22 அன்று ஒன்றிய உள்துறை அமைச்சகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் லடாக்கிற்கு சட்டமன்றம் வழங்குவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. இதனை தங்களது போராட்டத்திற்கு கிடைத்த தொடக்கக்கட்ட வெற்றியாக லடாக் மக்கள் வரவேற்ற நிலையில், பேச்சுவார்த்தை நடந்த அதிகாரப்பூர்வ குறிப்பிலிருந்து வாக்குறுதி நீக்கப்பட்டிருப்பதானது பாசிச கும்பலின் பார்ப்பனிய நரித்தனத்தைக் காட்டுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் அரசிற்கும் போராட்டக் குழுக்களுக்கும் இடையே நடக்கும் ஒப்பந்தங்களில் மோசடியாகத் திருத்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள மோடி அரசு, தற்போது அதே சூழ்ச்சியை லடாக்கிலும் அரங்கேற்றியுள்ளது.

நில உரிமைக்கான
லடாக் பழங்குடியினரின் போராட்டம்

தற்போது லடாக்கில் நடந்து வரும் போராட்டம் என்பது வெறுமனே லடாக் மக்களின் சமூக-பொருளாதார நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கானது மட்டுமல்ல; அது மணிப்பூர், சத்தீஸ்கர் என இந்தியாவின் பல மாநிலங்களில் கார்ப்பரேட்டுகளுக்குத் தங்களது நிலங்கள் தாரைவார்க்கப்படுவதற்கு எதிராகப் போராடிவரும் பழங்குடியின மக்களின் போராட்டத்தின் அங்கமாகும்.

லடாக் மக்களில் ஆகப்பெரும்பான்மையோர் பழங்குடியினர் ஆவர். அதிகாரப்பூர்வமாக 79.5 சதவிகித மக்கள் பட்டியல் பழங்குடியினராக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், உள்ளூர் அரசாங்க அமைப்புகளும் தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையமும் (NCST) பூர்வீகப் பழங்குடியின மக்கள்தொகை ஏறக்குறைய 97 சதவிகிதமாக இருக்கும் எனக் குறிப்பிடுகின்றன.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்புரிமைகளான 370 மற்றும் “35A” ஆகிய பிரிவுகள் நீக்கப்படுவதற்கு முன்புவரை, வெளியாட்களோ வெளி நிறுவனங்களோ லடாக்கில் நிலம் வாங்கவும் வணிகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டு, பழங்குடியினரின் நில உரிமை பாதுகாக்கப்பட்டது. ஆனால், சிறப்புரிமை இரத்து செய்யப்பட்டு லடாக் தனி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு, அது கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாறியுள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் கனிம அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் பெருநிறுவனங்கள் லடாக்கிற்குள் நுழைகின்றன. உலகப் புகழ்பெற்ற பஷ்மினா கம்பளியைத் தயாரிக்கும், “சாங்பா” பழங்குடிகளின் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்கள் லடாக்கில் 48,000 ஏக்கரில் அமையவுள்ள மாபெரும் சூரியசக்திப் பூங்காவால் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

உயரமான பனிப்பாறைப் பாலைவனமான லடாக்கின் நீராதாரம் பனி உருகுவதையே சார்ந்துள்ளது. சூரியசக்தித் தளங்கள், புவிவெப்பத் துளையிடல் மற்றும் ஆடம்பரச் சுற்றுலா போன்ற பெருநிறுவன உள்கட்டமைப்புகள் அங்கிருக்கும் நுண் காலநிலையைச் சீர்குலைத்து, பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்து கிராமங்களுக்குக் கடுமையான நீர்ப்பற்றாக்குறையை உருவாக்கும் என உள்ளூர்வாசிகள் அஞ்சுகின்றனர்.

உள்ளூர் கிராம சபைகளின் ஒப்புதலின்றி கொண்டுவரப்படும் நில டிஜிட்டல்மயமாக்கல் வரைபடம், உள்ளூர்வாசிகளைப் புறக்கணித்து கார்ப்பரேட் நலனை மையப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கைச் சூழலையும் நாசமாக்குவதாக உள்ளது.

லடாக்கிற்குச் சட்டமன்றம் வழங்கப்படாததால் அதிகாரம் ஆளுநரிடம் குவிக்கப்பட்டு, டெல்லியின் ஏஜெண்டுகளால் லடாக் மக்கள் ஆளப்படுகின்றனர். லே மற்றும் கார்கில் ஆகிய பகுதிகளில் தன்னாட்சி மலைப்பகுதி மேம்பாட்டுக் கவுன்சில்களின் அதிகாரம் ஒழிக்கப்பட்டு, இராணுவ ஒடுக்குமுறை தீவிரமடைந்து வருகிறது.

எனவேதான், இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் (Sixth Schedule) லடாக்கை இணைக்குமாறு மக்கள் போராடுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இவ்வுரிமை கிடைத்தால், தன்னாட்சி மாவட்ட மன்றங்கள் மூலம் நிலம், காடு மற்றும் உள்ளூர் வளங்களைப் பாதுகாக்கும் சட்ட அதிகாரத்தைப் பெற்று, சூழலியலை அச்சுறுத்தும் கார்ப்பரேட் திட்டங்களைத் தடுக்க முடியும் என்று மக்கள் கருதுகின்றனர்.

ஆனால் இந்திய ஊடகங்களோ, லடாக் மக்களின் போராட்டமானது பழங்குடியின மக்களின் நிலத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்ற உண்மையை மூடிமறைத்து, வன்முறையாகச் சித்தரித்து வருகின்றன. பாசிச மோடி அரசோ மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் சூழ்ச்சி, ஒடுக்குமுறைகளின் மூலம் போராட்டங்களை ஒடுக்குவதைப் போலவே லடாக் பழங்குடியின மக்களின் போராட்டத்தையும் ஒடுக்கத் துடிக்கிறது.

எனினும், லடாக் மக்கள் இச்சதிகளை எல்லாம் முறியடித்து, மத, பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து வர்க்க ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். சமீபத்தில், லடாக்கிற்குச் சட்டமன்றம் தருவதாக அளித்த வாக்குறுதியை அரசு மறைத்து ஏய்க்க நினைத்ததற்கு எதிராக, ஒட்டுமொத்த லடாக்கும் ஒரே குரலில் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. இரு பிராந்திய அமைப்புகளும் (LAB & KDA) ஒன்றிணைந்து லடாக்கில் விடுத்த முழு கடையடைப்புப் போராட்ட அறைகூவல் மிக வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

பாசிச கும்பலை நேருக்கு நேர் எதிர்த்து நெஞ்சுரத்துடன் போராடிக் கொண்டிருக்கும் லடாக் மக்களின் போராட்டம், பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கையை அளிப்பதாகும். இம்மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதும், பாசிச கும்பலின் சதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும் நம் அனைவரின் கடமையாகும்.


பானு

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க