தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் 1990-ல் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து பண்டிட்டுகள் வெளியேற்றம் பற்றி சொன்ன திரைக்கதை மிகப் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. மிகப் பலரும் அது “உண்மை” என்று சொன்னதில் உள்ள பொய்களை மறுத்தனர்.
பிரதீப் மேகசின்-இன் புத்தகமான ‘கிரிக்கெட் மட்டுமல்ல : நவீன இந்தியாவின் வழியே ஒரு பத்திரிகை செய்தியாளனின் பயணம்’, விவேக் ரெய்னா என்பவர் பார்த்த அந்த சம்பவங்கள் பற்றிய ஒரு நுணுக்கமான பதிவாகும். பள்ளத்தாக்கில் போராளிகளின் நடவடிக்கைகள் உச்சத்தில் இருந்தபோது அங்கிருந்து விவேக்குடும்பம் வெளியேறியது. ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பகத்தாரின் ஒப்புதலுடன் மறுபதிப்பு செய்யப்படுகிறது.
000
நான் காஷ்மீருக்கு பலமுறை வருகை தந்தபோது, காஷ்மீர பண்டிட் என்ற எனது அடையாளம் முஸ்லீம்களுடன் பேசும்போது இடையூறாக இருந்ததில்லை. ஆனாலும், 1990களிலான பண்டிட்டுகள் ‘வெளியேற்றம்’ பற்றி விவாதம் திரும்பினால் அவர்கள் தற்காப்பு வாதத்திற்குச் சென்றுவிடுவார்கள். சிலர் பண்டிட்டுகள் பள்ளத்தாக்கிலேயே தொடர்ந்து வாழ்வதற்கு உத்தரவாதப்படுத்தும் செயல்களைப் போதுமான அளவு செய்யாததற்கு வருத்தங்களைக் கூடத் தெரிவிப்பார்கள்! தில்லியில் குடியேறிவிட்ட விவேக் ரெய்னா என்ற சக காஷ்மீரி பண்டிட் கூட இதுபோன்ற அனுபவத்தைப் பெற்றுள்ளார். ‘1988 – 1990-க்கு இடைபட்ட அதிர்ச்சியூட்டும் அந்த கால கட்டத்தில் எங்கள் இனத்திற்கு நேர்ந்தது பற்றிய குற்ற உணர்வு இல்லாத ஒரு காஷ்மீரி முஸ்லீம் கூட இல்லை’ என விவேக் கூறுகிறார்.
படிக்க :
♦ முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !
♦ ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !
விவேக் வளர்ந்த சூழலில் அவருக்கு இந்து நண்பர்களைவிட இசுலாமிய நண்பர்கள்தான் மிக அதிகம். அவர் ஸ்ரீநகருக்கு அருகில் உள்ள பல பிரிவினரும் கலந்து வசித்த சட்டாபால் எனும் பகுதியில் வாழ்ந்தார். அவர் குடும்பமும் இசுலாமிய குடும்பங்களுடன் ஆழமான உறவு கொண்டிருந்தது. அவர் 1989-ல் காஷ்மீரின் புகழ் பெற்ற நேஷனல் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவன். இது நான் குழந்தைப் பருவத்தைக் கழித்த கரன் நகர் பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. அவரைச் சுற்றி உள்ள உலகம் மிக மோசமாக மாரிக் கொண்டிருந்த சூழலில், பள்ளியின் 50-ம் ஆண்டு விழாவை மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாகக் கொண்டாட, பள்ளிக் குழந்தைகள் சுறுசுறுப்பாக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த விழா நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. அடுத்த ஓராண்டிற்குள் தமது வீட்டையும் பொருட்களையும் விட்டு விட்டு, தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவரது குடும்பம் நள்ளிரவில் வெளியேறியது.
அவரைச் சுற்றி தொல்லை தரும் அமைதி நிலவுவதை அவர் உணர்ந்ததாக நினைவு கூர்ந்தார். 1987-ம் ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தல் நடந்தது. முஸ்லீம் யுனைட்டெட் ஃப்ரன்ட்-டுக்கும் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரசுக்கும் முரண்பாடு வந்தது. காங்கிரசு கூட்டணி தேர்தலில் தில்லு முல்லு செய்து வெற்றி பெற்றுவிட்டதாக முஸ்லீம் யுனைட்டெட் ஃப்ரன்ட் குற்றம் சுமத்தியது. பெருவாரியான மக்கள் அதிருப்தி அடைந்தனர். தோற்றுப்போன சில முஸ்லீம் யுனைட்டெட் ஃப்ரன்ட் வேட்பாளர்கள் பாகிஸ்தானின் இராணுவப் பயிற்சி பெற எல்லை தாண்டிச் சென்றதாக செய்திகள் வந்தன. லால்சௌக் பகுதியில் ஒரு குண்டு வெடித்தது. போராளிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்குமான சண்டையில் இடையில் சிக்கி ஒரு பண்டிட் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவங்கள் பண்டிட்டுகளுக்கு கவலையளித்தது, ஆனால் அங்கு பீதி ஏதும் தோன்றவில்லை. எதிர்ப்பாளர்கள் முழங்கிய முழக்கம் நம்பிக்கை ஏற்படுத்தியது என்பதை விவேக் நினைவில் வைத்துள்ளார். ‘பண்டிட் – முஸ்லீம் பாய் பாய், பாரதிய ஃபௌஜ் கஹான் செ ஆயெ? (பண்டிட்டும் முஸ்லீம்களும் சகோதரர்கள், எங்கிருந்து வந்தது இந்திய இராணுவம்?)’ என்பதே அந்த முழக்கம்! ஆயினும், விரைவிலேயே மசூதிகளில் டேப் ரிக்கார்டரில் பதிவு செய்யப்பட்ட ஆசாதி முழக்கங்கள் காதுகளைப் பிளந்தன. அவை மிகக் கடுமையாக இந்திய எதிர்ப்புத் தன்மை கொண்டிருந்தன.
இதைத் தொடர்ந்து இரண்டு சமூகங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் குறிவைக்கப்பட்டு, அடுத்தடுத்து அலையலையாக கொல்லப்பட்டனர். பண்டிட்டுகளில் உயர்நீதிமன்ற நீதிபதி நீலகாந்த் கஞ்ஜூ, பாஜக தலைவர் டிகா லால் டப்லூ மற்றும் தூர்தர்சன் டைரெக்டர் லாசா கௌல் கொல்லப்பட்டனர். முஸ்லீம்களில் காஷ்மீர் பல்கலைக்கழக துணைவேந்தர் முஷிர்-உல்-ஹக் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இப்போது சட்டாபால் பகுதியிலிருந்த ரெய்னாவினர் கவலைப்பட்டாலும், பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறுவது என சிந்திக்கவில்லை. விவேக்கின் அப்பா ஓம்கார் நாத் சுகாதாரத் துறையில், அரசாங்க மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தார். அருகில் வசித்த முஸ்லீம்கள் ஆதரவும் நம்பிக்கையும் கொடுத்து, பீதியடைய வேண்டாம் என ஆதரவு தந்தனர்.
இதே காலகட்டத்தில்தான் ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்த முஃப்தி சையீதின் மகள் ரூபையா-வைக் கடத்திய தீவிரவாதிகள் அவரை விடுவிக்க பேரம் பேசி மிக அபாயகரமான சில காஷ்மீர் போராளிகளை விடுவித்தனர். தமது மகிழ்ச்சியைக் கொண்டாட வீதிகளில் இறங்கிய வெறிகொண்டவர்கள் போட்ட முழக்கங்கள் முழுக்க கடுமையான இந்திய எதிர்ப்பு முழக்கங்களாக இருந்ததோடன்றி, இசுலாமியத் தன்மையையும் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து மசூதிகளில் டேப்பில் பதிவு செய்த இஸ்லாமிய முழக்கங்கள் ஒலிபெருக்கியில் அலற, நகரம் முழுதும் அது எதிரொலித்தது.
பிறகு, ஜக்மோகன் இரண்டாவது முறையாக மாநில கவர்னராக பதவியேற்றார். ஒரு நாள் தனது மூன்று மாடி வீட்டின் பால்கனியிலிருந்து விவேக் பார்க்கும்போது, ஸ்ரீநகரிலுள்ள காவ் கடல் பாலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அவர்கள் பீதியடைந்து ஓடிக் கொண்டிருந்தனர். கட்டுப்பாடற்ற அந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தப் பாதுகாப்புப் படையினர் சுட்டதில் குறைந்த்து 28 பேராவது கொல்லப்பட்டிருப்பார்கள். (மீண்டும் இங்கே எண்ணிக்கை 300 பேர் வரை என வேறுபடுகிறது). இந்த நிகழ்வு ‘காவ் கடல் படுகொலை’ என அறியப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு சற்று பின்னர் கீழ்த் தளத்தில் குடியிருந்த விவேக்கின் மாமா ராம்ஜி பால் வாங்கச் சென்றபோது சி.ஆர்.பி.எஃப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அவர்களிடம் நான் ஒரு பண்டிட் என கூறியபோது, அவரை அடித்தவர்கள் கூறியது: ‘காஷ்மீரில் ஒரு நாய் கூட பாகிஸ்தானி தான்’. (’காஷ்மிர் கா குட்டா பி பாகிஸ்தானி ஹை’).
இப்படிப்பட்ட கொலை நிகழ்வுகள் அடிக்கடியும் அதிகரிக்கவும் தொடங்கியது. அதில் மிக மோசமானதை விவேக் நினைவு கூர்ந்தார்: ஷெர்-இ-ஹாஸ்பிடலில் (மருத்துவனை) ஒரு நர்ஸ் (செவிலியர்) பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக சிதைக்கப்பட்டார். உடனடியாக யாரும் எதுவும் செய்யலாம் என தறிகெட்டு நடக்கத் தொடங்கியது. அதிகரிக்கும் அரசின் ஒடுக்கு முறைகளுக்கும், இதோ விரைவில் விடுதலை கிடைக்கப் போகிறது என நம்பும் முஸ்லீம் மக்களின் விருப்பங்களுக்கும் இடையில் பண்டிட்டுகள் சிக்கிக் கொண்டனர். இந்த எல்லா நேரங்களிலும் போராளிகள் அவர் முஸ்லீமா? இந்துவா? என்றெல்லாம் பார்க்காமல் இந்திய ஆதரவாளர் என சந்தேகப்படும் ஒரு ஹிட் பட்டியலை வைத்துக் கொண்டு கொடூரக் கொலைகளையும் குண்டு வீச்சுத் தாக்குதல்களையும் தொடர்ந்தனர். யார் ஒருவரும் பண்டிட் சாதியினரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர முடியாது.
படிக்க :
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !
காஷ்மீர் : கருத்துரிமையை கல்லறைக்கு அனுப்பும் காவி பாசிசம் !
ஓர் இரவு பண்டிட் வீடுகளைத் தாக்கி சூறையாடவும் கொள்ளையடிக்கவும் ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக வதந்தி ஒன்று பரவியது. ரெய்னா குடும்பத்தினரின் வீட்டு முகப்பு வாயிற் கதவு இரும்பினால் ஆனது. அதில் மின்சாரத்தைப் பாய்ச்சி வைத்தனர். யாராவது அத்துமீறி நுழைய முயன்றால் மின்சார தாக்குதலுக்கு ஆளாகட்டும் என இந்த ஏற்பாடு. 14 வயதேயான விவேக் தன்னையும் தனது 4 வயது தங்கையையும் பாதுகாக்க ஒரு கிரிக்கட் மட்டையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். சில மணி நேரங்கள் காத்திருந்த விவேக் எந்த பரபரப்பு நடவடிக்கையும் இல்லாமற்போகவே சலிப்புற்று, அவனது பெற்றோரிடம் ஏன் இன்னும் யாரும் வரவில்லை எனக் கேட்டு, செமத்தையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.
பிற்பாடுதான் அண்டை வீட்டு முஸ்லீம்களும் தனது குடும்பத்தினர் போலவே தங்களது குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு தயாரிப்பு செய்துகொண்டு இரவு முழுதும் பயபீதியில் கழித்ததாக விவேக் கண்டு பிடித்தார். இந்திய இராணுவம் அன்றிரவு இசுலாமியர் வீடுகளைத் தாக்கி, பெண்களைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி கொல்லப்போவதாக வதந்தி பரவியுள்ளது.
ரெய்னாவினருக்கு இறுதியாக ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் அவர்கள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறி ஓடிப்போகவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டியிருந்துள்ளது. அவர்களும் மேலும் நான்கு பண்டிட் குடும்பங்களுடன் சேர்ந்து இரகசியமாக ஏற்பாடு செய்து, ஒரு லாரியின் பின்புறம் ஒளிந்து கொண்டு நள்ளிரவு 2 மணிக்கு அந்தப் பகுதியைவிட்டு வெளியேறிவிட்டனர்.

கட்டுரையாளர் : பிரதீப் மேகசின்
தமிழாக்கம் : நாகராசு
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க