டந்த அக்டோபர் மாதம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்புகையில் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தனது மகளுக்கு டிசம்பரில் அஞ்சலி செலுத்தியது நூரின் குடும்பம். பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகாயமடைந்த அப்பெண் கிட்டத்தட்ட ஒருமாத காலம் மருத்துவமனையில் உயிருக்காக போராடினார்.

கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த நூரின் மகள், அக்டோபர் மாதம் தனது உறவினரின் திருமணத்திற்கு சென்று, வீடு திரும்புகையில் இரண்டு நபர்களால் கடத்தப்பட்டார். “அவர்கள் அவளைக் கடத்தி அடர்த்தியான தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றார்கள். அங்கு அவளை பாலியல் பலாத்காரம் செய்து கடுமையாக தாக்கினார்கள்” என்று அப்பெண்ணின் உறவினர்களில் ஒருவர் சம்பவத்தை நினைவுக்கூர்ந்தார்.

அப்பெண் உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். SKIMS மருத்துவமனையின் மருத்தவ கண்காணிப்பாளர் டாக்டர் ஃபரூக் ஜன் கூறுகையில், “அந்த பெண் மோசமான நிலையில் இங்கு கொண்டு வரப்பட்டார். ஒரு மாத காலமாக ICU-வில் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்தவர் நவம்பர் 27 அன்று உயிரிழந்தார்” என்றார்.

படிக்க :
♦ வெட்கக்கேடு : மத்தியப் பிரதேசம் பாலியல் குற்ற வழக்கு
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !

அப்பெண் கொடூரமாக தாக்கப்பட்டார் என்கிறார்கள் குடும்பத்தினர். “அவளுக்கு நடந்த கொடூரத்தை நான் மனிதர்களிடமிருந்து சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. மிருகத்தனமாக அடித்து சித்திரவதை செய்யப்பட்டாள். அவள் அணிந்திருந்த தாயத்து கயிற்றை வைத்தே அவள் கழுத்தை நெறித்து கொல்லப்பார்த்திருக்கிறார்கள்; நாக்கை பிளந்திருக்கிறார்கள். அவள் அனுபவித்த வலியை என்னால் கற்பனைக்கூட செய்துப்பார்க்க முடியாது” என்று நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

மற்றொரு உறவினர், “இருவரும் அப்பெண்னை கொலை செய்யப் பார்த்தார்கள். ஆனால், சில உள்ளூர் மக்கள் அவர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்” என்று கூறினார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை :

‘பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பி பிழைத்தவர்கள் தங்கள் வழக்குகளை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடுகையில் எதிர்கொள்கின்ற மோசமான சூழ்நிலை’யை ஸ்ரீநகர் குற்றப்பிரிவின் அதிகாரப்பூர்வ தரவுகள் விவரிக்கின்றன.

ஜம்மு–காஷ்மீரில் தற்போது 1,046 பாலியல் வன்கொடுமை வழக்குகள் விசாரணையில் உள்ளன என்பதை ஆறு ஆண்டுகளில் (மார்ச் 2019 வரை) கிடைத்த தரவுகள் தெரிவிக்கின்றன. அவற்றில், 831 வழக்குகள் 2014 முதல் நிலுவையில் உள்ளன. இதில் 820 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் சிறு குழந்தைகள்.

2019-ல் முதல் மூன்று மாதங்களில் மட்டும் ஜம்மு-காஷ்மீரில் 64 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 33 குழந்தைகளும் அடக்கம். ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் தண்டனை விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைந்திருக்கிறது என்று தகவல் கூறுகிறது.

ஜம்மு–காஷ்மீர் நிர்வாகம் நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, கொரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் ஜம்மு-காஷ்மீரில் 16 பாலியல் வல்லுறுவு வழக்குகளும், 64 பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் நடந்துள்ளன என்று பதிவாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்வாறு வழக்கமாக மாறியுள்ளன என்பதை இத்தரவுகள் அம்பலப்படுத்துகிறது.

2014-ம் ஆண்டில், 352 வழக்குகளில், 265 மைனர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தரவு கூறுகிறது. 2015-ல்  312 (251 மைனர்) வழக்குகளும், 2016-ல் 263 (204 மைனர்) வழக்குகளும், 2017-ல் 314 (213 மைனர்) வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 359, இதில் மைனர் சம்பந்தப்பட்ட வழக்குகள் 273.

ஏற்றுக் கொள்ளமுடியாத மௌனம் :

21 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டதன் பின்னரும், ஏற்றுக் கொள்ளமுடியாத மௌனம் காஷ்மீரில் தொடர்கிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளூர் மக்கள் உடனடியாக போராட்டம் நடத்தினார்கள் எனினும் இச்சம்பவம் யூனியன் பிரதேசத்தின் கவனத்தைப் பெறவில்லை.

“ஏற்றுக்கொள்ள முடியாத இந்த அமைதிக்கான எந்த விளக்கமும் இல்லை. இந்த குரூரத்தை கண்டு கொள்ளாத சமூகமாக மாறிவிட்டோமா? இந்த பள்ளத்தாக்கு நேர்மையான நாகரிகத்துக்கு சொந்தமானது. ஆனால் இதுகுறித்து யாரும் கவலைப்படுவதில்லை” என்று யூனியன் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டுகிறார் இறந்தவரின் மூத்த சகோதரி.

”இந்த அமைதி, வன்முறையை அதிகரிக்கவே செய்யும்” என்கிறார் காஷ்மீரைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் எசாபீக் அலி. “ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்த சம்பவத்தைப் பற்றி உள்ளூர் செய்தி நிறுவனங்கள் எதுவும் பின் தொடரவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் நம்மில் ஒருவர் என்பதால் மக்கள் மத்தியில் எந்தவிதமான கூச்சலும் அழுகையும் இல்லை. இதுவே வெளிநாட்டவராக இருந்தால், அதைப் பற்றி பேசியிருப்பார்கள்” என்று வருத்தப்படுகிறார் அலி.

வன்முறை சம்பவங்களில் சமூகத்தின் இத்தகைய அலட்சிய போக்கு என்பது சமூகத்தில் பெண்களுக்கான இடங்களை சுருக்கிவிடும் என்கிறார் அலி. அவர், “இது நிச்சயமாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும். பெண்களை எங்கும் தனியாக செல்ல அனுமதிக்க மாட்டார்கள்” என்று விளக்குகிறார்.

காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை பரவல் :

21 வயது மாணவி இறந்த சில நாட்களுக்குள், குல்கம் மாவட்டம் தேவ்சரில் 17 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார். சிறுமியை வல்லுறவு செய்த காட்சியை குற்றவாளிகள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். போலீஸ் அவர்களை உடனடியாகக் கைது செய்தது.

படிக்க:
♦ புனிதப் பசுவின் சாணத்தை பாஜக தலைவர் வீட்டு முன் கொட்டியதற்கு கொலை முயற்சி வழக்கு !
♦ இந்தியா 2020 : வல்லரசு கனவும் – தொடரும் துயரமும்

மாநில மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரான நயீமா மெஹூர், “ஆரம்பத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மரியாதைக் குறைவாகவும் கடுமையாகவும் நடத்தப்பட்டனர். இருந்தும் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்கச் செய்திருக்கிறது. முழு பள்ளத்தாக்கையும் உலுக்கிய சில சம்பவங்களும் இருக்கின்றன. பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் குறித்த பிரச்சினைக்குரிய பகுதிகளில், பெண்கள் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.” என்கிறார்.

பெண்கள் மத்தியில் பரவும் அச்சம் :

21 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் கிராமப்புற பெண்களை அதிர்ச்சியில் உறையவைத்தது மட்டுமல்ல அவர்களின் சுதந்திரத்தையும் பறித்துள்ளது.

“இந்த சம்பவத்திற்கு பிறகு வயல்வெளிக்கு போகக்கூட பயமாக இருக்கிறது. வெளியே செல்லவேண்டிய கட்டாயம் இருந்தால், நாங்கள் கூட்டமாகவோ அல்லது எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஆண்களில் ஒருவரை அழைத்துக் கொண்டுதான் செல்வோம்” என்று கிராமத்து பெண்களில் ஒருவர் கூறுகிறார்.

“நான் குல்கம் மாவட்டத்திலுள்ள கல்லூரியில் இரண்டாமாண்டு சேர்ந்தேன். இந்த சம்பவத்திற்கு பிறகு நான் எனது கல்லூரிக்குக் கூட போகக்கூடாது என்று எனது பெற்றோர் திட்டவட்டமாக கூறிவிட்டனர். என் பெற்றோருக்கு எல்லாவற்றையும் விட என் வாழ்க்கைதான் முக்கியம்” என்று பாதிக்கப்பட்டவரின் மற்றொரு உறவினர் ஒருவர் கூறினார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 18 வயதான அடில் அகமது தர் மற்றும் 24 வயதான வசீம் அகமது தர். இருவரும் குல்கம் மாவட்டத்திலுள்ள அஸ்முஜி கிராமத்தில் வசிப்பவர்கள். “குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அனாதைகள். வசீம் பஸ் டிரைவர். இந்த இருவருக்கும் நீண்ட காலமாக போதை பழக்கம் இருக்கிறது” என்று உள்ளூரில் வசிக்கும் ஒருவர் கூறினார்.

“சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. அவள் இறந்து ஐந்து நாட்கள் (இந்தப் பேட்டி எடுக்கப்படும்போது) ஆகிவிட்டது. எனது சகோதரி கல்லறையில் இருக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர்களோ போலீஸ் காவலில் பாதுகாப்பாக உள்ளனர்” என்று ஆதங்கப்படுகிறார் இறந்தவரின் மூத்த சகோதரி. தங்களது இறந்த மகளுக்கு நீதியை உறுதி செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பெண்ணின் குடும்பத்தினர் கேட்கின்றனர்.

கட்டுரையாளர் : பிஸ்மா பட்
தமிழாக்கம் : ஷர்மி
நன்றி : The Wire

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க