”இந்தியா 2020” என்ற நூலில் இந்தியாவை வல்லரசாக மாறுவதற்கான திட்டங்களை முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் முன் வைத்திருந்தார்.  மனித சமூக வளர்ச்சியின் அடிப்படையான அம்சங்களைக் கூட அடைந்திராத ஒரு நாடு அடுத்த இருபது ஆண்டுகளில் ஒரு வல்லரசாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.  அன்று அனைத்து ஊடகங்களும் கலாமின் வார்ததைகளை அவரோடு சேர்ந்து இந்தியா வல்லரசு ஆகும் என்று புதிதாய் முளைத்திருந்த நடுத்தர வர்க்கமும் கனவு கண்டது.  அதற்கு பிறகு கலாம் குடியரசு தலைவரானார். அவரது சொற்கள் பொன்மொழிகளாகவும் வாட்ஸப்பில் பகிரப்பட்டும் வருகின்றன.

ஆனால், 2020-ல் இந்தியா வல்லரசாக மாறவில்லை. இந்தியா என்னவாகி இருக்கிறது என்பது குறித்து நாம் ஒரு பருந்துப் பார்வை பார்க்க வேண்டி இருக்கிறது. பொதுவில் இந்தியா தன்னுடைய மக்களுக்கு ஒப்பீட்டளவில் மிக மோசமான வாழ்க்கைத் தரத்தையே இதுவரை வழங்கி வந்துள்ளது. இன்னும் குறிப்பாக 2020 இந்திய மக்களுக்கு மிகப்பெரிய பேரழிவாய் விடிந்து விட்டது.  பணமதிப்பழிப்பு மற்றும் பொருள்கள் மற்றும் சேவை வரி போன்ற மக்கள் விரோத திட்டங்களால் வெறும் 4.7 விழுக்காடு அளவே இருந்த பொருளாதாரத்துடன் 2020-ல் வல்லரசுக் கனவுடன் இந்தியா அடியெடுத்து வைத்தது.

சமூக -அரசியல் நிலைமையைப் பொறுத்தவரை, இன்னமும் மோசமானதாக இருந்தது எனலாம். முதன்முறையாக இந்திய குடியுரிமைக்கு காரணியாக மதத்தை இந்துத்துவ மோடி அரசாங்கம் நடைமுறைப்படுத்தியதை எதிர்த்து நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன.  ஃபிப்ரவரியில் கடுமையான ஒரு வன்முறையை டெல்லி கண்டது. ரோம் பற்றியெரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல டெல்லி வன்முறையின் போது டிரம்பை வரவழைத்து உச்சி முகர்ந்தார் மோடி.  அந்த வன்முறையில் 53 இந்தியர்கள் மாண்டு போனார்கள். இந்தியாவின் சட்ட ஒழுங்குமுறையும் சமூக ஒழுங்குமுறையும் எப்படி பின்னிப் பிணைந்துள்ளது என்பதற்கு சான்றாக அது வரலாற்றில் அழியாத வடுவாய் மாறிவிட்டது.

படிக்க :
♦ கேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்
♦ வர்த்தமனம் படத்துக்குத் தடை : மாணவர் போராட்டம் பற்றிய படம் என்பதால் தேசவிரோதமாம் !

மனிதப் பேரவலம்:

டெல்லியின் மிகப்பெரிய அந்த வன்முறை இந்தியாவின் வல்லரசு கனவிற்கு பெருத்த அடியாய் விழுந்தது. அடுத்து வந்த கடுமையான கோவிட்-19 ஊரடங்கோ முன்பின் கேட்டிராத கண்டிராத மாபெரும் மனிதப்பேரவலமாய் மாறிப்போனது.  மனித உடலின் மொத்த இரத்த நாளத்தையும் நிறுத்தியது போல ஊரடங்கு மொத்த சாலைகளையும் அடைத்தது. இந்தியாவின் உள்நாட்டு அகதிகள் நாடோடியானார்கள். பல நூறு கிலோமீட்டர் தொலைவிற்கு பாதங்கள் வெடிக்க வெறும் கால்களுடன் நடந்து சொந்த கிராமங்களுக்கு திரும்பினார்கள். சிலர் வழியிலேயே மாண்டும் போனார்கள். இந்தியாவின் பொருளாதாரம் முடங்கிப் போனது.  ஓராண்டில் நூறாண்டு துயரத்தை இந்திய மக்கள் கண்டனர்.

இது தொடக்கம் தான். இந்தியாவின் சராசரி வருமானம் வங்கதேசத்தை விட குறைந்து போகும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்தது.  இது ஏதோ 2020-னால் வந்த வினையல்ல. அதற்கு முன்பும் கூட பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடத்தக்க அளவிலான தனி நபர் பொருளாதாரம் கொண்ட நாடுதான் இந்தியா. இதே அளவுகோலுடன் பார்த்தால், வல்லரசு என்ற பகட்டாரவாரம் இல்லாமல்  மேல்தட்டு வருமான நாடுகளுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டது இலங்கை .

பசியின் கொடுமை

வல்லரசு கனவிற்கு மேலும் ஒரு அடி விழுந்தது. மனித மேம்பாட்டு வளர்ச்சிக் குறியீடு மிகக் கடுமையாய் விழுந்து விட்டது.  வளரும் நாடுகளிலேயே மிக மோசமான சரிவை இந்தியா சந்தித்தது. அக்டோபர் மாதத்தில், உலகளாவிய பசி அட்டவணையில் 107 நாடுகளில் 97வது இடத்தை இந்தியா பிடித்தது. பாகிஸ்தானிலோ, வங்கதேசத்திலோ, நேபாளத்திலோ, அம்பானியும், அதானியும் உருவாகாமல் போயிருக்கலாம்.  ஆனால் சராசரியாக, ஒரு நேபாளியை விட, ஒரு பங்களாதேசியை விட, ஒரு பாகிஸ்தானியரை விட மோசமாக ஒரு இந்தியர் பசியினால் பாதிக்கப்படுகிறார்

“மாதிரி பதிவு அமைப்பில்”இருந்து எடுத்த தகவல்கள் அடிப்படையில் குழந்தைகள் இறப்பு விகிதத்தில் இந்தியா தேங்கியிருப்பதாகவும், பின்னோக்கிச் செல்வதாகவும் ஜீன் ட்ரீஸ், ஆஷிஷ் குப்தா உள்ளிட்ட பொருளாதார அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.  கடைசியாக டிசம்பர் இறுதியில், 17 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் நடந்த 5-வது தேசிய குடும்ப நல பதிவேடு பத்தாண்டுகள் பின்னோக்கி சென்று கொண்டிருப்பதாக எச்சரிக்கிறது.  மேலும் முத்தாய்ப்பாக, ஐ.நா-வின் மனித மேம்பாட்டு குறியீடுகளில் 189-க்கு 139-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.

பறிக்கப்பட்ட ஏட்டளவு ஜனநாயகம்

பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஏட்டளவிலான இந்திய ஜனநாயகத்தை பலரும் உச்சி மோர்ந்து கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். மோடி வந்தவுடன் காட்சிப்பொருளாகக் கூட ஜனநாயகம் இருக்கக்கூடாது என்பதில் இந்துத்துவா சக்திகள் தொடக்கத்திலிருந்தே உறுதியாய் இருந்தன.

முஸ்லிம்களை இரண்டாந்தர குடிமக்களாக்க 2019-ம் ஆண்டு இறுதியில், இந்திய குடியுரிமைச் சட்டம் கொண்டு வந்ததென்றால், 2020-ல் முஸ்லிம் ஆண்-இந்து பெண் கலப்பு திருமணத்தை தடுக்கவும், மதம் மாறுவதை தடுக்கவும் (மதம் மாறுவதன் மூலம் சாதி அடையாளத்திலிருந்து தப்ப தலித் மக்களுக்கு ஓரளவிற்கு வாய்ப்பிருந்தது) கடுமையான அடக்குமுறை சட்டங்களை உத்தரப்பிரதேச பா.ஜ.க கொண்டு வந்தது.

சுவீடனை சேர்ந்த “வெரைட்டீஸ் ஆஃப் டெமாக்ரசி” ( Varieties of Democracy) நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், எதேச்சதிகாரத்தன்மையுடன் உள்ள ஆளும் கட்சிக்கு மிகவும் நெருக்கமான கட்சி என்று கூறி ஜனநாயகமற்ற கட்சிகள் வரிசையில் முதலிடத்தை  பா.ஜ.கவிற்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலே குறிப்பிடப்பட்டவை தான் கலாம் கனவு கண்ட ‘வல்லரசு’ இந்தியாவின் 2020-ம் ஆண்டு நிலைமைகள். ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நிலமாக திறந்துவிடப்பட்ட ஒரு நாட்டின் ‘வல்லரசு’ கனவுகள் வறுமையில் மட்டுமே விடிய முடியும் என்பதற்கு இந்தியா ஒரு உதாரணம்.

கட்டுரையாளர் : சோஹிப் டேனியல்
தமிழாக்கம் : சுரேஷ்
நன்றி : ஸ்க்ரோல்

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க