மிழகத்தில் நாடகக்காதல் என்ற பெயரில் சாதிவெறி ஆணவக்கொலைகள் அடிக்கடி நடக்கின்றன. ஆனால் கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளாவிலும் கூட ஆணவக்கொலைகளா என்று நம்மில் சிலர் அதிர்ச்சி அடையலாம். ஆனால் கேரளாவின் இரண்டாண்டுகளில் அடுத்தடுத்த நடந்த இரண்டு சாதி ஆணவப் படுகொலைகள் அம்மாநிலத்தில் புரையோடியிருக்கும் சாதிவெறி முடைநாற்றத்தை வெளிக்கொணர்ந்திருக்கின்றன.

கெவின் ஜோசப் என்ற தலித் கிருத்துவ இளைஞர் 2018 ஆம் ஆண்டில் அவரது மனைவி நீனுவின் குடும்பத்தினரால் (லத்தீன் கிருத்துவம்) ஆணவப்படுகொலை செய்யப்பட்ட போது அது கேரளாவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 27 வயது இளைஞரான அனீஷ் அதே போல ஆதிக்கச் சாதிவெறியர்களால படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

சாதியிலும், பொருளாதாரத்திலும் தன்னை விட ஆதிக்க சக்தியாக இருக்கும் பிள்ளை சாதியைச் சேர்ந்த ஹரிதாவை அனீஷ் காதலித்து திருமணம் செய்திருந்தார். இந்த சாதியப்படுகொலை நடந்த பிறகு, சமூக வலைதளங்களில் அதுக்குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் கேரளாவில் புரையோடியிருக்கும் சாதி அமைப்பையும், சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

பேஸ்புக்கில் வந்த பல்வேறு கருத்துக்கள் கொலையாளிகளான ஹரிதாவின் தந்தை பிரபு குமார் மற்றும் அவரது மாமா சுரேஷ் இருவருக்கும் ஆதரவாக இருப்பதை காணலாம். ‘தந்தையின் பாச உணர்ச்சியால்’ நடந்தது என்றும், “ஒரு அப்பா தன்னுடைய மகளை வளர்த்த பாசத்தால் பைத்தியமாகிவிட்டார்” என்றும் பலரும் குற்றவாளிகளை நியாயப்படுத்தி மன்னித்து விடுகிறார்கள்.

தெலுங்கானா பிரணய் : இந்தியாவை உலுக்கிய சாதிவெறிப் படுகொலை !
உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !

தெலுங்கானா, நல்கொண்டா மாவட்டத்தில் செப்டம்பர் 14, 2018 அன்று நடந்த பிரணய் சாதி ஆணவப்படுகொலை குறித்தும் கூட இதே போன்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

பட்டியல் சாதியைச் சேர்ந்த பிரணய், பார்ப்பனரல்லாத ஆதிக்க சாதியைச் (கோமதி) சேர்ந்த அம்ருதாவை காதலித்து மணந்தார். தனது மனைவி மற்றும் தாயின் முன்னால், பகல் நேரத்தில், ஒரு பொது இடத்தில் வைத்து பிரணய் கொல்லப்பட்டார். பிரணயை கொலை செய்ய 1 கோடி ரூபாய் கொலையாளிகளுக்கு கொடுத்தாக அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கைது செய்யப்பட்டார்.

கொலையான அனீஷின் மனைவி ஹரிதா

ஆதிக்கச்சாதிகளை சேர்ந்த சாதிவெறியர்கள் பலரும் தெலுங்கு ஊடகங்கள் மற்றும்சமூக வலைதளங்களில் நெஞ்சை பதறச்செய்யும் இந்த படுகொலையை ஆதரித்து கருத்திட்டனர். இந்த கொலையை, மகள் மீதான ”தந்தையின் பாசம்” என்று கூறியதுடன், அம்ருதாவை ஒரு “ஒழுக்கக்கேடான பெண்” என்றும், பெற்றோர் மீதும் அவர்களுடைய மானம், மரியாதை குறித்தும் அவருக்கு துளியும் அக்கறை இல்லை என்றும் வசைபாடினார்கள்.

அனீஷின் படுகொலைக் குறித்தும் அதே மாதிரியான கருத்துக்கள் தான் சமூக வலைதளங்களில் காணக்கிடக்கின்றன. பெரிய வேறுபாடு எதுவும் இல்லை.

  • “பெண்ணின் அப்பாவைக் குறித்து நான் வருத்தப்படுகிறேன். அவரது அன்பு மகள் ஒரு வெறும் பயலுடன் வாழ்கிறாள் என்பதை அறிந்து அவர் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார்” என்று அனீஷ் கொலை குறித்த வெளியான செய்திக் கட்டுரைக்கு கீழே ஒருவர் பின்னூட்டம் செய்துள்ளார்.
  • “ஒரு மகளை பாசத்தோடு வளர்த்த ஒரு தந்தையால் இந்த செயலை செய்ய முடியும்” என்று ஒருவர் பேஸ்புக்கில் கொலையை நியாயப்படுத்தினார். “ஏமாற்றப்பட்டு தோற்கும் ஒரு தந்தை இப்படி பைத்தியம் ஆவது உண்டு” என்று மற்றொருவர் கூறுகிறார்.
  • “இங்கே கொலையை நியாயப்படுத்தவில்லை. ஆனால் இவர்கள் ஒருபோதும் தங்கள் சொந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணையோ அல்லது அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் உள்ள ஒரு பெண்ணையோ காதலிக்க மாட்டார்கள். மதம் மாறியவர்கள் இதில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், காதலித்து எப்படி மதம் மாற்றப்படுகிறாகள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. உங்கள் சொந்த சமுதாயத்தில் உள்ள பாகுபாட்டையும் வேறுபாடுகளையும் முதலில் சரி செய்யுங்கள்” என்று மற்றொரு நபர் எழுதுகிறார். இப்படியாக பல கருத்துகள் பகிரப்படுகின்றன.

பெண்ணின் அப்பா மற்றும் மாமா செய்த இந்த கொலையை நியாயப்படுத்தவில்லை என்று கூறும் பலரும் கொலையாளிகள் மீது வருத்தப்படுவதாக கூறுவது தான் முரண்நகை. இவர்கள் நடுநிலை அவதாரம் எடுத்து சாதிவெறியை நாசூக்காக கக்குகிறார்கள்.

தர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !
கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே !

கொலையாளிகளுக்காக வரிந்துகட்டுவது ஒருபுறமிருக்க, பாதிக்கப்பட்ட ஹரிதாவையும் குற்றம் சாட்டுவதற்காக பலரும் கதைகளை கட்டமைக்கிறார்கள். “இந்த பெண்ணால் தான் ஒரு இளைஞன் உயிரை இழந்திருக்கிறான், மேலும், இருவர் சிறையில் இருக்கிறார்கள்” என்று அனீஷின் கொலைக்கு வருந்துவது போல மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, கொலையாளிகளுக்கு ஆதரவாக தீர்ப்பெழுதுகிறார்கள்.

  • “அந்தப் பெண் முன்கூட்டியே இதுக்குறித்து சிந்தித்திருக்க வேண்டும். தன்னுடைய வீட்டில் ஆடம்பரமாக வாழ்ந்த அவள், அந்த பையன் அந்த வசதிகளையெல்லாம் கொடுக்க முடியாமல் போனவுடன் மனம் உடைந்து போவாள். பின்னர் திருமண உறவு கசந்து, உடைந்து போயிருக்கும் … இன்னும் சொல்லலாம்” என்று மற்றொருவர் இறுதித்தீர்ப்பே எழுதி விட்டார்.
  • “காதல் என்பது வேடிக்கையான ஒன்று. இந்த காதல் திருமணங்களில் பெரும்பாலானவை வேடிக்கை முடிந்த பின் மணமுறிவில் முடிவடைகின்றன….. திருமணத்திற்குப் பிறகு, எதார்த்தம் சில வாரங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது” என்று மற்றொரு நபர் எழுதினார்.

“தன்னுடைய குடும்பத்தை அழித்ததற்காக” அந்த பையனுக்கு பதிலாக ஹரிதா கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் உள்ளனர்.

  • “வேறொருவரின் மகனுக்கு பதிலாக அவர்கள் ஏன் தங்கள் சொந்த மகளை கொல்ல கூடாது. அவளுடைய செயலால் அவர்கள் வேதனை அடைந்தால், அவள் தான் கொல்லப்பட வேண்டும்” என்று ஒருவர் கூறுகிறார்.
  • “அவள் தண்டிக்கப்பட வேண்டும், அவளது தந்தையை அவள் தான் ஏமாற்றினாள். அவள் ஒரு குடும்பத்தையே அழித்துவிட்டாள். அவளுடைய தந்தையின் வலியை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று மற்றொரு நபர் எழுதுகிறார்.

பாலக்காட்டில் உள்ள தென்குரிசியைச் சேர்ந்த ஓவியரான அனீஷ், டிசம்பர் 25 அன்று ஹரிதாவின் தந்தை மற்றும் மாமாவால் படுகொலை செய்யப்பட்டார். மூன்று மாதங்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்து கொண்டாலும், ஹரிதாவின் குடும்பத்தினர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

சாதி ஆணவப் படுகொலையாளிகள் குறித்தான சமூக ஊடகங்களின் தீர்ப்பு, மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டம் புதியதல்ல. ஒருபுறம் நீதித்துறையின் தாமதம் மறுபுறம் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கவுசல்யா போன்றவர்கள் சாதி ஆணவப் படுகொலைகளை எதிர்த்து இன்னும் இடைவிடாமல் போராடுகிறார்கள். கவுசல்யாவின் கணவரான சங்கர், ஒரு தலித் இளைஞர். மார்ச் 2016 இல் சங்கர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டபோது, ​​ சமூக வலைதளங்களில் பலரும் கொலையாளிகளுக்கு வாழ்த்துக்கள் சொன்னது மட்டுமல்ல, இது போல கலப்பு மணம் புரிபவர்களுக்கு துணிச்சலாக சமூக வலைதளங்களில் மிரட்டல்களையும் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆறுமுகம்
நன்றி :  The news minute

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க