விவாதம் மற்றும் மாற்றுக்கருத்துக்கான தளம் சுருங்கிவருவதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்வர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் அமர்த்தியா சென் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய மின்னஞ்சல் வழியான நேர்காணலுக்கு பதில் அளிக்கையில் இது குறித்து பேசியுள்ள அவர், மோடி அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களையும் ஆதரித்துப் பேசியுள்ளார்.
“ இந்த அரசாங்கத்திற்கு பிடிக்காத நபர்கள், பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் போராட்டம் நடத்துவதற்கான வாய்ப்பும் சுதந்திரமான கலந்துரையாடல்களும் தடைசெய்யப்பட்டுள்ளன. மாற்றுக் கருத்து மற்றும் விவாதத்திற்கான களம் சுருங்கிவருகிறது. தேசவிரோத குற்றம்சாட்டப்பட்டு விசாரணை இல்லாமலேயே மக்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். ” என்று ம்த்திய அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
படிக்க :
♦ கொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் ! | பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் காணொளி
♦ கொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …
”அமைதியான, வன்முறையற்ற வழிமுறைகளில் உறுதியாக இருக்கும் கன்னையா, காலித், ஷீலா ரக்ஷித் உள்ளிட்ட தீர்க்கமான பார்வை கொண்ட இளம் தலைவர்களை, ஏழைகள் நலன் சார்ந்த அவர்களது முயற்சியை அமைதியான வழிமுறையில் மேற்கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டிய அரசியல் சொத்துக்கள் என்று பார்க்கப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் ஒடுக்கப்பட வேண்டிய எதிரிகளைப் போலத்தான் அடிக்கடி நடத்தப்படுகின்றனர்” என்று இளம் செயற்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்து அமர்த்தியா சென் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
பாஜக அரசாங்கத்திற்கு எதிரான அவரது கருத்துக்களை எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவானதாக பேசப்படுவது குறித்து பி.டி.ஐ செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமர்த்தியாசென், மக்களை துன்புறுத்தும் தவறுகளை ஒரு அரசாங்கம் செய்யும் போது, அதுகுறித்துப் பேசுவது அனுமதிக்கத்தக்கது மட்டுமல்ல, உண்மையில் அவசியமானது. ஜனநாயகம் அதனைக் கோருகிறது!” என்றார்.
பாஜக அரசுகொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்துக் கூறுகையில், இச்சட்டங்களுக்கு எதிராக வலுவான வழக்கு ஒன்று இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை நடத்துவதில் பெரும் இடைவெளி இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்திருப்பதாகவும் அதனைச் சரி செய்ய பல விவகாரங்களில் நமக்கு வெவ்வேறான கொள்கைகள் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அரசின் செயல்பாடு குறித்துப் பேசுகையில், இடைவெளியைக் கடைபிடிப்பதன் அவசியத்தை இந்தியா உணர்ந்தது சரியானது என்றும், ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஊரடங்கை அறிவித்தது தவறு என்றும் அமர்த்தியாசென் தெரிவித்துள்ளார்.
பிரிவினைக்குப் பிறகு மிகப்பெரும் அளவிலான தொழிலாளர்களின் இடப்பெயர்வை உண்டாக்கி, கோடிக்கணக்கான மக்களை வேலையின்றி, உணவின்றி வீதியில் அலையவிட்ட நாடு தழுவிய ஊரடங்கு குறித்துக் கூறுகையில், “ ஏழைத் தொழிலாளர்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கான தேவையை புறக்கணித்ததிலும் தவறு செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
அமர்த்தியா சென் கம்யூனிஸ்ட் அல்ல. அவர் எதிர்க்கட்சிக்காரரும் அல்ல. உலகம் போற்றும் ஒரு முதலாளித்துவ பொருளாதார அறிஞர். மக்கள் மீதான மோடி அரசின் பொருளாதார தாக்குதல்களை இந்த நேர்காணல் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
கருப்பு
செய்தி ஆதாரம் : The Telegraph