இந்திய அஞ்சல் துறையானது டிசம்பர் 18 அன்று புக் போஸ்ட் சேவையை நிறுத்தியுள்ளதாக தன்னிச்சையாக அறிவித்துள்ளது.
”இந்தியா போஸ்ட்” (India post) என்கிற பெயரில் ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வருகின்ற இந்திய அஞ்சல் துறையானது விலை உயர்ந்த கூரியர் சேவைக்கு மாற்றாகக் குறைந்த விலையில் புத்தகங்களை அனுப்புவதற்குப் பதிவு செய்யப்பட்ட புத்தக அஞ்சல் சேவையினை (Registered Book Post) அறிமுகப்படுத்தி இருந்தது.
இதன் மூலம் புத்தக வெளியீட்டாளர்கள் தங்கள் புத்தகங்களைக் குறைந்த விலையில் நாடு முழுவதும் அனுப்பிக் கொண்டிருந்தனர். குறைந்த செலவில் வாசகர்களுக்குப் புத்தகங்கள் சென்று சேர்வதில் இது குறிப்பிடத்தக்கப் பங்காற்றியது.
மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதற்காக அஞ்சலில் அனுப்பப்படுகின்ற பத்திரிகைகளுக்கும், இதழ்களுக்கும் இச்சேவை நீட்டிக்கப்பட்டது. அரசியல், சமூகம் சார்ந்த கருத்துகளை நாடு முழுவதும் சென்று சேர்ப்பதற்கான ஒரு கருவியாய் இது பயன்பட்டது. இன்றளவும் பல இதழ்களும் பத்திரிகைகளும் இச்சேவையைச் சார்ந்து உள்ளன.
இந்நிலையில் இந்திய அஞ்சல் துறையானது கடந்த வாரம் தன்னுடைய ஊழியர்களுக்குக் கூட முன்னறிவிப்பு செய்யாமல் பதிவு செய்யப்பட்ட புத்தக அஞ்சல் சேவையை (Registered Book Post) நிறுத்துவதாக அறிவித்தள்ளது. இவ்வறிவிப்பானது புத்தக ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பதிவு- செய்யப்பட்ட புத்தக அஞ்சல் (Registered Book Post) சேவையில் 1 கிலோ பேக்கேஜை அனுப்பு 32 ரூபாய். ஆனால் பதிவு செய்யப்பட்ட பார்சல் (Registered Parcel) மூலம் அனுப்பினால் 78 ரூபாய். இதனைப் போன்று இரண்டு கிலோவுக்கு முறையே ரூபாய் 45 மற்றும் ரூ 116; 5 கிலோவுக்கு முறையே ரூ 80 மற்றும் ரூ 229 என்ற அளவில் விலை வேறுபாடு உள்ளது.
படிக்க: பாசிச கும்பலால் குறிவைத்துத் தாக்கப்படும் கிறிஸ்தவர்கள்
அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு பதிப்பகங்களிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் வணிகம் அல்லாத புத்தகங்களுக்கும் (மாதிரிகளாகப் பெறப்படும் புத்தகங்களுக்கு) 5 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் சுதந்திர பத்திரிகைகள் மீதான பாசிச மோடி அரசின் திட்டமிட்ட தாக்குதலாகும்.
ஏனென்றால் இந்திய அளவில் உள்ள பல ஜனநாயக அமைப்புகளும், பத்திரிகையாளர்களும் தங்களின் புத்தகங்களை விற்பனைக்காக அல்லாமல் மக்களுக்கு அரசியல் உணர்வினை ஊட்டுவதற்காக தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான பாசிச கும்பலின் இத்தாக்குதல்களுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் எழுப்ப வேண்டும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram