இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் (United Christian Forum – UCF) டிசம்பர் 20 ஆம் தேதியன்று செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியை தளமாகக் கொண்டு செயல்படும் ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் 2024 ஆம் ஆண்டின் நவம்பர் மாத இறுதிக்குள் தங்களுடைய ஹெல்ப்லைனில் 745 சம்பவங்கள் பதிவாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தத் தரவுகளில் கடந்த ஆண்டு முதல் பற்றி எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூரில் கொல்லப்பட்ட மனித உயிர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் இடிக்கப்பட்டது குறித்தான புள்ளிவிவரங்கள் சேர்க்கப்படவில்லை என்று தன்னுடைய செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசானது வங்கதேசத்தில் வசிக்கக் கூடிய சிறுபான்மையினரான இந்துக்கள் தாக்கப்பட்ட போது உடனடியாக இங்கிருந்து ஒரு சிறப்பு அதிகாரியை வங்கதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுப்பியது.
ஆனால் இந்தியாவில் வசிக்கின்ற சிறுபான்மைச் சமூகம் தாக்கப்படுகின்றபோது அதனைத் தடுப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதைத் தெரிவித்து கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து தேசிய அளவிலான விசாரணை தேவை என்று ஒன்றிய மோடி அரசிற்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஐக்கிய கிறிஸ்தவர்கள் மன்றம் தன்னுடைய அக்டோபர் மாத அறிக்கையினை மேற்கோள்காட்டி, ”இந்தியாவின் 23 மாநிலங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் தினந்தோறும் பலவிதமான வன்முறைகளை எதிர்கொள்கின்றனர். அவற்றில் பாஜக ஆட்சி செய்யக்கூடிய உத்திரப் பிரதேசத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 182 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் 139 வன்முறைச் சம்பவங்களுடன் சத்தீஸ்கர் மாநிலமும் உள்ளது” என்று தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ளூர் போலீஸ் கும்பல் வன்முறைக் கும்பல்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு கிறிஸ்தவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்துகின்றனர் என்பதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் (Peoples Union For Civil Liberties – PUCL) வெளியிட்டுள்ள அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
படிக்க: சத்தீஸ்கர்: கிறிஸ்தவ பழங்குடிகள் மீது வன்முறையை ஏவும் ஆர்.எஸ்.எஸ்!
மேலும் ”ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளப்படும் இந்தியாவில் ஆங்கிலோ இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டு முறை மறுக்கப்படுகிறது. இதனால் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பிரதிநிதிகளாக இருப்பதற்கு மிகக் குறைவான கிறிஸ்தவ மக்களுக்கே உரிமை உள்ளது.
இவை அல்லாது தேசிய சிறுபான்மையினருக்கான ஆணையம் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையம் ஆகியவற்றில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கிறிஸ்தவ உறுப்பினர் கூட சேர்க்கப்படவில்லை. மாநில சிறுபான்மை ஆணையங்களிலும் கிறிஸ்தவ உறுப்பினர்கள் நிரப்பப்படுவதில்லை என்பதிலிருந்தே கிறிஸ்தவ மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவ்வறிக்கை கூறுகிறது.
பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில் “கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடிய வன்முறைக் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு 2022 ஆம் ஆண்டு விசாரணைக்குப் பிறகு தற்போது வரை விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றது” என்று சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படுகின்ற நீதித்துறையையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
பாஜக ஆட்சி செய்யக் கூடிய மாநிலங்களில் மதமாற்ற தடைச்சட்டங்கள் இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த ஜூலை மாதம் உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத் அரசு மதமாற்ற தடை (திருத்த) சட்டத்தை கடந்த ஜூலை மாதம் கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி வெளிநாடு ஏஜென்சிகளுடன் தொடர்பில் இருக்கும் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டால் 19 லட்சம் ரூபாய் அபராதமும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்படும். மேலும் பட்டியல் பழங்குடியின பெண்ணை சட்டவிரோதமாக மதமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் 29 ஆண்டுகள் முதல் ஆயுள்தண்டனை வழங்கப்படும் என்று அச்சட்டத் திருத்தத்தில் முன்மொழியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது ”இச்சட்டத்திருத்தமானது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 வழங்கிய மதத்தைப் பின்பற்றுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்குமான சுதந்திரத்தை அடிப்படையிலேயே பறிக்கின்றது” என்று இவ்வறிக்கை கூறுகிறது.
மேலும் ”சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA), பணமோசடி தடுப்பு சட்டம் (PMLA) போன்ற கருப்பு சட்டங்களுக்கு இணையானதாக தற்போது உ.பி அரசால் கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடைச் சட்டம் திருத்த மசோதா அமைந்துள்ளது” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததையும் அறிக்கை குறிப்பிடுகிறது.
குறிப்பாக பாசிச மோடி கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மை சமூகங்கள் மீது தினந்தோறும் மதக் கலவரங்களைத் திட்டமிட்டே தீவிரமாக நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை தற்போது வெளியாகியுள்ள செய்தி எடுத்துக்காட்டுகிறது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram