சத்தீஸ்கர்: கிறிஸ்தவ பழங்குடிகள் மீது வன்முறையை ஏவும் ஆர்.எஸ்.எஸ்!

இந்துத்துவா பாசிச கும்பல்கள் பழங்குடி மக்களின் அடையாளங்களை அழித்து அவர்களை இந்துக்களாக்க முயற்சி செய்து வருகின்றன. அதற்கான கருவிதான் கிறித்தவர்கள் மீதான வன்முறை!

0

த்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதியை ஆர்.எஸ்.எஸ் மதக் கலவரத்திற்கான புதிய மையமாக உருவாக்கியுள்ளது. கடந்த ஜனவரி 2-ஆம் தேதியன்று நாராயண்பூர் நகரில் ஒரு கும்பல் தேவாலயத்தை சூறையாடியது; தடுக்க முயன்ற போலீசுகாரர்களையும் தாக்கியது. கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்தத் திட்டமிட கூட்டம் ஒன்று நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த வன்முறை சம்பவம் அரங்கேரி உள்ளது.

இதற்கு முன்னதாக, ஜனவரி 1-ஆம் தேதியன்று, கோரா (Gorra) கிராமத்தில் கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவர்-அல்லாத பழங்குடிகளுக்கு இடையில் நடைபெற்ற மோதலில் கிராம மக்கள் பலரும் போலீசுகாரர்களும் காயமடைந்தனர். அதேபோல டிசம்பர் 18 அன்று, நாராயண்பூர் மற்றும் கொண்டகான் மாவட்டங்களில் ‘தாய் மதம் திரும்புதல்’ (Ghar Wapsi) என்பதற்கு உடன்படாத பழங்குடிகள், கிட்டத்தட்ட 500 பேர், அப்பகுதிகளில் இருந்து வன்முறை மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வன்முறைகள் அதிகரிப்பதற்கான காரணம், ஜன்ஜாதி சுரக்ஷா மன்ச் (Janjati Suraksha Manch) என்ற ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்பே ஆகும். ஒரு வருட காலமாக, முன்னாள் பாஜக எம்.எல்.ஏ-ஆன போஜ்ராஜ் நாக் (Bhojraj Nag) தலைமையேற்று இப்பகுதியில் மத முனைவாக்கத்தை உருவாக்கியதன் விளைவே தற்போது நடைபெற்று வரும் இக்கலவரங்கள்.

நாராயண்பூர் மற்றும் கொண்டகான் மாவட்டங்களில் பல்வேறு பேரணிகளை நடத்திய போஜ்ராஜ் நாக், கடந்த நவம்பர் 6 அன்று “பழங்குடிகளுக்காக வழங்கப்படும் ஆதாயங்களை இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது கிறிஸ்தவர் என்றோ இஸ்லாமியர் என்றோ அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களுக்கு இடஒதுக்கீடு தருவதை நிறுத்த வேண்டும். அதற்காக நீதிமன்றம் செல்ல இருக்கிறோம்” என்று கூறினார். ஒருபுறம் நீதிமன்றத்தை நாடுவதாக கூறிவிட்டு மற்றொருபுறம் கலவரத்தை தொடங்கிவிட்டனர்.


படிக்க: அதிகரித்துவரும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் மீதான காவி குண்டர்களின் தாக்குதல்கள்!


சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 30.6 சதவிகிதத்தினர் பழங்குடிகள் ஆவர். காலனிய காலத்திலிருந்து கிறிஸ்தவ மிஷனரிகள் இங்கு செயல்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ அமைப்புகள் பழங்குடிகளை ஏமாற்றியும் கட்டாயப்படுத்தியும் மதமாற்றம் செய்து வருவதாகக் கூறி ஆர்.எஸ்‌.எஸ் கிறிஸ்தவ வெறுப்பை பரப்பி வருகிறது. இதற்காக வனவாசி கல்யாண் ஆசிரமம் (Vanavasi Kalyan Ashram) என்ற ஒரு அமைப்பை வடக்கு சத்தீஸ்கரில் 1952 ஆம் ஆண்டில் ஏற்படுத்தியது. இந்த அமைப்பின் மூலம் ‘தாய் மதம் திரும்புதல்’ (Ghar Wapsi) என்ற பெயரில் சடங்குகளை நடத்தி கிறிஸ்தவ பழங்குடிகளை இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்து வருகிறது.

பழங்குடி மக்களை இந்து அடையாளத்தைக் கொண்டு விழுங்க எத்தனிக்கிறது ஆர்.எஸ்.எஸ். பழங்குடிகளை ‘ஆதிவாசி’ என்று குறிப்பிடாமல் ‘வனவாசி’ என்றே ஆர்.எஸ்.எஸ் குறிப்பிடுகிறது. அதாவது, “பழங்குடியினர் என்பவர்கள் ‘பிற்பட்ட இந்துக்கள்’; சில சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் அவர்களை இந்து மதத்திற்குள் இணைத்துக் கொள்ளலாம்” என்பதே அவர்களின் நிலைப்பாடு.

2006 ஆம் ஆண்டில், வனவாசி கல்யாண் ஆசிரமத்தின்(VKA) ஒரு முன்னெடுப்பாக ஜன்ஜாதி சுரக்ஷா மன்ச் தொடங்கப்பட்டது. ஆனால், 2018 ஆம் ஆண்டில், 15 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சி முடிவு பெற்று காங்கிரஸ் ஆட்சி தொடங்கிய பின்புதான் இந்த அமைப்பின் செயல்பாடுகள் அதிகரித்தது. அதிலும் கடந்த ஒரு வருடத்தில் வடக்கு பஸ்தர் பகுதியைச் சேர்ந்த நாராயண்பூர், கொண்டகான் மற்றும் காங்கேர் மாவட்டங்களில் வீரியமாக செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசிய சத்தீஸ்கர் கிறிஸ்தவ மன்றத்தின் (Chattisgarh Christian Forum) தலைவர் பன்னாலால் “15 ஆண்டு கால பாஜக ஆட்சியில் கிறித்தவர்கள் மீது 18 தாக்குதல்கள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் 3 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் 380 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன” என்று கூறினார்.


படிக்க: தமிழ்நாடு: கிறிஸ்துவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தும் காவிக் குண்டர்கள்!


கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நான்கு நாள் பயணமாக சத்தீஸ்கர் சென்று வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த திலீப் சிங் ஜூடெவ் (Dilip Singh Judeo) சிலையை திறந்து வைத்தார். திலீப் சிங் ஜூடெவ் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிரானவர்; பழங்குடியினரை இந்துத்துவா கருத்தாக்கத்திற்கு ஆட்படுத்த வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டவர். மோகன் பகவத், ஜூடெவ்-ஐ நினைவு கூர்வது என்பது “பழங்குடிகள் அனைவரையும் இந்து அடையாளம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வருவோம்” என்று பிரகடனம் செய்வதாகும்.

கார்ப்பரேட் கொள்ளைக்காக பழங்குடிகள் உரிமைகள் பறிக்கப்பட்டு காடுகளில் இருந்து வெளியேற்றப்படுவது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் இந்துத்துவா பாசிச கும்பல்கள் பழங்குடி மக்களின் அடையாளங்களை அழித்து அவர்களை இந்துக்களாக்க முயற்சி செய்து வருகின்றன. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் பயன்படுத்தும் கருவிதான் கிறித்தவர்கள் மீதான வன்முறை.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க