மிழ்நாட்டின் தேர்தல் களம் என்று பார்க்கையில் பாரதிய ஜனதா கட்சிக்கு சொல்லிக்கொள்ளும்படி ஆதரவு இல்லை. ஆனால் அதன் இந்துத்துவா சித்தாந்தம் ‘திராவிட மரபு’ கொண்ட தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றி வளர்ந்து வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிறிஸ்துவ நிறுவனங்களின் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. மோடி அதிகாரத்திற்கு வந்த 2014-ம் ஆண்டிலிருந்து கிறிஸ்துவர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் பெருமளவு அதிகரித்துள்ளது என்று அம்மனு கூறுகிறது.

2019 ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகளவு தாக்குதல்கள் நடத்தப்பட்ட மாநிலங்களில் உத்தர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது. இதனை பொதுநல வழக்கு தாக்கல் செய்த நிறுவனங்களில் ஒன்றான ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் (United Christian Forum) இப்புள்ளி விவரங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளது. அந்த அட்டவணையில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்களாகும் அல்லது அதன் இந்துத்துவா சித்தாந்தம் உறுதியாக வேரூன்றியுள்ள மாநிலங்களாகும். ஆனால், இவ்விரு வகையினங்களில் வராத மாநிலமாக கருதப்படும் தமிழ்நாடு இப்பட்டிலியில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதுவரை 227 தாக்குதல் சம்பவங்கள் 2014-22 க்கு இடைப்பட்ட ஆண்டில் மட்டும் நிகழ்ந்துள்ளன. பாதிரியார்களும் தேவாலயங்களும் இந்துத்துவ குண்டர்களால் குறிவைத்து தாக்கப்படுகின்றன. மேலும் ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் 2015 ஆம் ஆண்டு முதல் ஒரு கட்டணம் இல்லா உதவி எண்ணை தொடங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டபூர்வ உதவிகளைச் செய்து வருகிறது. அந்நிறுவனம் தான், காவி குண்டர்களால் மத நம்பிக்கையாளர்கள் தாக்கப்படுவது, பிரார்த்தனைகளை சீர்குலைப்பது, பாதிரியார்கள் மற்றும் அவரது குடும்பங்களை துன்புறுத்துவது, தேவாலயங்களை நாசமாக்குவது போன்ற பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியலைத் தொகுத்துக் கொடுத்துள்ளது.

படிக்க: அதிகரித்துவரும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் மீதான காவி குண்டர்களின் தாக்குதல்கள்!

இதில் பாதி (117) சம்பவங்கள் கொங்கு பகுதிகளில் தான் நிகழ்ந்துள்ளன; குறிப்பாக கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருப்பூர், மதுரையில் சில பகுதிகள். இதில் குறிப்பான விசயம் என்னவென்றால் இப்பகுதிகளில்தான், தேவர் மற்றும் கவுண்டர் போன்ற சாதிகள் ஆதிக்க சாதியாகவும், தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளாகவும் உள்ளன.

தி நியூஸ் மினிட் (The News Minute) குழு இக்குற்றச்சாட்டுகள் குறித்து களத்தில் இறங்கி விசாரிக்க முடிவு செய்தது. அதில், “எங்களால்(TNM)  மாநிலத்தின் உள்பகுதிகளில்  கிறிஸ்தவ எதிர்ப்பு மனநிலையை உறுதியாக உணர முடியவில்லை, ஆனால் மிஷனரிகளுக்கு விரோதமாக காவல்துறை வழக்கு பதிவு செய்வதை நாங்கள் கண்டுபிடித்தோம்”.

இதனைத் தொடர்ந்து நாங்கள் ஒரு பாதிரியாரை சந்தித்துக் கேட்டபொழுது அவர் கூறியது, “நாங்கள் மதமாற்றம் செய்வதாகக் கூறி பிரார்த்தனை நடத்தும் வாடகை வீட்டில் இருந்து உரிமையாளரால் வெளியேற்றப்பட்டோம். இதனைத் தொடர்ந்து காவி குண்டர்கள் எங்களை கடுமையாகத் தாக்கினார்கள். அதில் இந்து முன்னணி தான் முதன்மையாக இருந்தது”.

மேலும், இங்கு கலவரங்கள் ஒரே வடிவில் தான் நடக்கிறது என்றும் கூறினார். உதாரணமாக, மதமாற்றம் நடப்பதாகக் கூறி அண்டை வீட்டில் வசிப்பவர்களை காவிகள் தூண்டி விடுவது அதன் பிறகு தேவாலயங்கள், பிரார்த்தனைக் கூடங்கள் மற்றும் பாதிரியார்களை தாக்குவது; இதன் பிறகு போலீசு தலையிட்டு வன்முறைகளைத் தடுக்கப் போவதாகக் கூறி இடத்தின் உரிமையாளரைக் கட்டாயப்படுத்தி எங்களை வெளியேற்றுவது.

இதன் பிறகு நாங்கள் தமிழகத்தின் இந்துத்துவ சோதனைச் சாலையும் இந்து முன்னணியின் கோட்டையுமாகிய கோவைக்குச் சென்றோம்.ஏனென்றால், ஐக்கிய கிறிஸ்தவ மன்றத்தின் அறிக்கையின் படி கிறிஸ்தவர்களுக்கு எதிராக கோயம்புத்தூரில் தான் 42 குற்றங்கள் நடந்துள்ளது.

இந்து முன்னணி

ஆர்.எஸ்.எஸ் ஊழியரான ராமகோபாலானால் இந்து முன்னணி 1980-களில் தொடங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் மூலம் 1990-களில் பெருமளவு இந்து முன்னணி வளர்ந்தது. இதற்கு உறுதுணையாக அப்போதைய ஜெயலலிதா அரசு மறைமுகமாக ஆதரவை வழங்கியது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களின் ஒருங்கிணைப்பாளர் வேண்டுமென்றே ஊர்வலங்களை முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் செலுத்துவார். ஆதலால்  ஊர்வலங்கள் பெரும்பாலும் கலவரங்களில் முடிந்துவிடும். ஆனால் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்  இருந்து இந்து முன்னணி கிறிஸ்துவர்கள் பக்கம் தனது பார்வைத் திருப்பியுள்ளது என்று உயர்மட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகிறார் என்று நியூஸ் மினிட் பதிவு செய்துள்ளது.

இந்து முன்னணி ஊழியர்கள் மிகவும் பயிற்சி பெற்றவர்கள் என்று போலீஸ் கூறுகிறது. “நீங்கள் இவர்களை கலவரம் நடக்கும் போது அரிதாகவே பார்க்க முடியும். இவர்கள் கலவரங்களில் தலைமை பாத்திரம் வகிப்பதில்லை. அவர்களுடைய பங்கு கலவரங்களை அமைதியாக இருந்து தூண்டி விடுவது மட்டுமே” என்று கோயம்புத்தூர் உயர் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

இந்து முன்னணி அமைப்பின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் நடராஜன், “கோவையில்  கிறிஸ்தவர்களை மட்டும் கண்காணிக்க  ஒவ்வொரு தெருவிலும் ஒரு நபரை நியமித்துள்ளோம். மேலும் 100 வார்டுகளிலும் ஒரு இந்து முன்னணியின் உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்து இல்லாத நபர் எந்த வார்டில் இருக்கிறார் என்பதும் தெரியும் அவர் மதமாற்றத்தில் ஈடுபடுகிறாரா அல்லது சாதாரண வாழ்க்கை வாழ்கிறாரா என்பதும் எங்களுக்கு உடனடியாக தெரிந்துவிடும்” என்று கூறிகிறார்.

(இதன்பிறகு தி நியூஸ் மினிட் குழு கோவிந்தராஜ் நடராஜனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேட்டி எடுத்தது. அப்போது கிறிஸ்தவர்களுக்கு எதிராக அணி திரட்டுவது தொடர்பாக ஒரு ஆங்கில செய்தி நிறுவனம் வந்திருப்பதை கண்டு இந்து முன்னணி உறுப்பினர்கள் சந்தேகத்துடனும் பதற்றத்துடனும் காணப்பட்டார்கள். ஆனால் கோவிந்தராஜ்   கிறிஸ்தவர்களுக்கு எதிராக இந்து முன்னணி பிரச்சாரம் செய்வதை பேசுவதற்காக ஆர்வமாக இருந்தார் என்று அந்த ஊடகம் பதிவு செய்துள்ளது).

கோவிந்தராஜ் அளித்த பேட்டியில், “இப்பகுதி முழுவதும் கவுண்டர் சாதியால் நிரம்பியது, உங்களால் இங்கே சாதி பாகுபாட்டை பார்க்க முடியாது. சில வருடங்களுக்கு முன்பு இரண்டு அல்லது மூன்று  கிறிஸ்தவ குடும்பங்கள்தான் இங்கு இருந்தன. ஆனால் தற்போது 40 குடும்பங்கள் கிறிஸ்துவத்தை நம்புகின்றனர்”. கடந்த சில வருடங்களாக மதமாற்றம் அதிக அளவில் நடந்துள்ளதாகவும் திமுக ஆட்சியில் அது உச்சத்திற்கு சென்று விட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

“இந்து முன்னணி தலைவர்கள் கலவரங்களில் ஈடுபடுவதில்லை. கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் சாமானிய இந்துக்கள் ஆற்றும் உடனடி எதிர்வினைகளே. இந்துக்களுக்கும் மதமாற்றம் செய்பவர்களுக்கும் ஏற்படும் பதற்றத்தை நம்மால் தடுக்க  முடியாது. பாதிரியார்கள் இந்துக் கடவுள்களை அவமதிப்பதை சாதாரண இந்துக்களால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்” என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

“நாங்கள் இந்து மதத்தைப் பற்றியும் பாரம்பரிய வழிபாடு முறைகளைப் பற்றியும் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கிறோம். நாங்கள் எங்களுடைய மதத்தின் நன்மைகளை தொகுத்து, துண்டறிக்கைகளாக தலித்துகளிடம் கொண்டு செல்கிறோம். இதன் மூலம் அவர்கள் விழிப்புணர்வு பெற்று பாதிரியார்களிடம் கேள்வி கேட்கின்றனர். மேலும் இந்து கடவுள்களை அவமதிப்பதற்கு எதிராக அவர்கள் பொருத்தமான பதில்களை கொடுக்கின்றனர்” என்றும் அவர் கூறுகிறார்.

இதன் பிறகு நியூஸ் மினிட் குழு இந்து முன்னணியின் கோவை பொதுச் செயலாளர் ஜெய்சங்கரை சந்தித்தது.

ஜெய் சங்கர் அளித்த பேட்டியில், “இந்து முன்னணிக்கும் கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் பிரிவினருக்கும் எவ்வித பிரச்சனையும் கிடையாது. நாங்கள்  குறிப்பாக சுவிசேஷகர்கள் பெந்தெகொஸ்தே பிரிவினரைத்தான் கண்காணித்து வருகிறோம். இதனை நிரூபிக்கும் விதமாக ஜெய்சங்கர் அவருடைய ப்ரொடஸ்டன் கிறிஸ்துவ நண்பரான ஸ்டாலினை பேட்டியின்போது அழைத்து வந்தார். “இவன் என்னுடைய நண்பன் ஸ்டாலின். இவன்  கிறிஸ்தவன் தான். ஆனால் நாங்கள் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். இவன் என்னை கிறிஸ்துமஸுக்கு அழைப்பான், நான் இவனை பொங்கல் மற்றும் தீபாவளிக்கு அழைப்பேன்” என்று கூறினார். ஸ்டாலினும் இக்கூற்றை உற்சாகமாக ஏற்றுக் கொண்டு சுவிசேஷகர்களைக் கடுமையாக விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து நாங்கள் இந்து முன்னணியின் மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷை சந்தித்தோம். இவர் 25 ஆண்டு காலமாக இவ்வமைப்பில் வேலை செய்து வருகிறார்.

சதீஷ் கூறியது, “இம்மாநிலத்தில் 70-களின் இறுதியிலும் 80-களின் தொடக்கத்திலும் மதமாற்றம் என்பது உச்சத்திற்கு சென்று விட்டது. இந்து முன்னணி வந்த பிறகு இவ்விகிதங்கள் சரிய தொடங்கியது. இந்துக்களுக்கு ஒரு தூணாக இந்து முன்னணி தான் விளங்குகிறது”.

மேலும் அவர் கூறுகையில், “தூண்டுதலின் பெயரால்தான் மதமாற்றம் நடப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார். இந்து நூலான மகாபாரதம் ராமாயணம் படிக்காத இந்துக்கள், மதம் மாறிய பிறகு முழு பைபிளையும் படித்து விடுகின்றார்கள். பணம் எவ்வாறு வேலை செய்கிறது என்று பாருங்கள்” என்று வருத்தப்படுகிறார்.

இந்து முன்னணி கவனித்து வரும் பகுதிகளை அவர் பட்டியலிட்டார். தலித்கள் மற்றும் ஆதிவாசிகள் அதிகம் வாழும் இடங்களான பேரூர், ஆலந்துறை, தொண்டாமுத்தூர், ஆனைகட்டி, புலிக்குளம், சிவானந்தா காலனி, சரவணம்பட்டி, அறிவொளி நகர், மைல்கல், செட்டிபாளையம், கலைஞர் நகர் மற்றும் சமத்துவபுரம்.

இதன்பிறகு நாங்கள் கோவை வழக்கறிஞர் ரா.முருகவேளிடம் பேட்டி எடுத்தோம். அவர் கூறியது, “அதிமுக ஆட்சியில் தான் மத நல்லிணக்கம் பெருமளவு சீரழிந்து போனது. எடப்பாடி பழனிச்சாமி பெயரில் கோவையில் பாஜகவின் ஆட்சி செய்து வந்தது. பல விஷயங்கள் மாறியும் மோசமடைந்து போய்விட்டது”.

“சுவிசேஷகர்கள் தெருக்களில் நற்செய்தி வாசகங்களை பிரச்சாரம் செய்வதையெல்லாம் முன்னால் எளிதாக பார்க்க முடியும். இந்து கோவில்களின் ரதங்கள் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல்  கிறிஸ்தவ தெருக்களில் செல்லும். ஆனால் மதமோதல்கள் அதிகமாகிவிட்ட இந்நிலையில் அந்நிகழ்வுகள் அனைத்தும் அரிதாகி விட்டது. தற்போது போலீசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மத மோதல்களை உருவாக்க இந்துத்துவ குண்டர்கள் வலுக்கட்டாயமாக ஊர்வலங்களை  கிறிஸ்தவ குடியிருப்புகளுக்குள் செலுத்துகின்றனர்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

படிக்க: கோவை இந்து முன்னணி கலவரம் – விரிவான ரிப்போர்ட்

அரசு என்ன செய்கிறது?

கிறிஸ்தவ நிறுவனங்கள் அளித்த இத்தகவல்கள் அனைத்தும் அரைவேக்காடு என்றும் ஊடகங்களில் திணிக்கப்பட்டது என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகம்  கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தாக்க செய்த இந்த வாக்குமூலத்திற்கு உள்துறை அமைச்சகம் இவ்வாறு பதிலளித்துள்ளது: “இதுபோன்ற ஏமாற்று மனுக்களை வைத்துப் பார்க்கும் பொழுது இதன் பின்னால் மறைமுக நிகழ்ச்சி நிரல் இருக்குமோ என்று சந்தேகம் தோன்றுகிறது. மேலும் நாட்டின் அமைதித் தன்மையையும் பாதுகாப்பையும் கெடுக்க அந்நிய தலையீடுகள் இருக்குமோ என்றும் கேள்வி எழுகிறது”.

மாநிலத்தின் குற்ற புள்ளி விவரங்களைப் பார்க்கும் பொழுது மறுக்கமுடியாத உண்மைகள்  வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதில்  கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்கள் அரிதாகவே வெறுப்பு குற்றங்களாகவும் மத மோதல்களாகவும் பதிவு செய்யப்படுகிறது என்பதே அந்த உண்மை. முருகவேளின் கூற்றுப்படி தாக்கினவர்களுக்கும் தாக்கப்பட்டவர்களுக்கும் இடையில் சமரசம் செய்து வைத்து தரகு வேலையை போலீசு செய்து வருகிறது. வழக்குகளை பதிவு செய்யும்போது போலீசால்  வழக்குகள் குறைத்துக் காட்டப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில் அவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள மத வன்முறை சம்பந்தமான பிரிவில் வழக்குகளை பதிவு செய்வதில்லை. குறிப்பாக, 295 (வழிப்பாட்டை தலத்தை அசுத்தல் செய்தல்), 295A (மத உணர்வுகளை சீர்குலைத்தல்), 296 (மதக் கூட்டத்தை தொந்தரவு செய்தல்), 153 (கலகம் செய்வதற்கு தூண்டிவிடுதல்) மற்றும் 153A (மதம் சம்பந்தமாக விரோத உணர்ச்சிகளை தூண்டிவிடுதல்) போன்றவற்றில் வழக்குப்பதிவு செய்வதில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் முன்னாள் அரசு வழக்கறிஞருமாக இருந்த ஒருவர் கூறுகிறார்.

இக்குற்றச்சாட்டை டெல்டா பகுதிகளில் பாதிக்கப்பட்ட  கிறிஸ்தவர்களுக்கு சட்டபூர்வ உதவிகளை செய்து வரும் ஒரு வழக்கறிஞரும் ஏற்றுக்கொள்கிறார். இவர் கூறும்போது, “திட்டமிடப்பட்ட மத மோதல் குற்றங்களை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யும்போது மதக்கலவரங்கள் சார்ந்த சட்டத்தில் பதிவு செய்யாமல் தனிநபர்களுக்கு இடையில் நடக்கும் மோதலாகப் பதிவு செய்கின்றனர். இது போன்ற நடவடிக்கைகள் திராவிட கட்சிகளுக்கு மதசார்பற்ற மாநிலமாக காட்டுவதற்கும் உதவுகிறது”.

புதிய பக்தர்களை தேடும் சுவிஷேகர்களுக்கு இந்த வன்முறைகள் அனைத்தும் தொழில்சார்ந்த அச்சுறுத்தலாக உள்ளது.ஆனால் சிலர் இந்த துன்புறுத்தல்களை வரவேற்கின்றனர். தங்களின் விசுவாசத்தை நிரூபிக்க இது உதவுகிறது.சுவிஷேகர்கள் பிரார்த்தனைகள் நடத்தவும் புதிய தேவாலயங்கள் கட்டவும் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அனுமதி வாங்குவது என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது.

புதிய இடங்களில் பிரார்த்தனைகள் நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் கட்டிட சட்டங்கள் கூறுகின்றன. இந்த அனுமதிகள் அரிதாகவே வழங்கப்படுகின்றன.

நாங்கள் சட்ட ஆய்வாளர் ஒருவரின் உதவியுடன் உயர்நீதிமன்ற இணைய தளத்திற்கு சென்றோம். அரசியலமைப்பின் சட்டம் 25-28 பிரிவின் கீழ் மத சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை வலியுறுத்தி  கிறிஸ்தவ அமைப்புகளால் குறைந்தது 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று நாங்கள் கண்டறிந்தோம்.

இந்த வழக்குகள், கிறிஸ்துவர்களால் மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. “ஒரு மத சிறுபான்மையினர் தனது வழிபாட்டிற்கு அனுமதி பெறுவதற்காக உயர்நீதிமன்றம் வரை செல்ல வேண்டும் என்பது, மத சிறுபான்மை சமூகம் வெறித்தனமான கும்பல்களால் துன்புறுத்தபப்படுவதைக் காட்டிலும்  அதிகார வர்க்கத்தால் அதிகமாக துன்புறுத்துகிறது என்பதைக் காட்டுகிறது”.

சட்ட ஆய்வாளரின் உதவியுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் நீதிமன்றங்களால் தீர்க்கப்பட்ட 45 வழக்குகளின் பட்டியலை நாங்கள் தொகுத்தோம். 45 பேரில் 10 பேர் மட்டுமே  கிறிஸ்தவ மனுதாரர்களுக்கு ஆதரவாக இருந்தனர்.  திண்டுக்கல்லில் உள்ள பிலீவர்ஸ் சர்ச் தொடர்பான வழக்கில், மனுதாரர்களுக்கு 12 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 2020 பிப்ரவரியில் மாவட்ட காவல்துறை ஆணையர்க்கு உத்தரவிட்டது.  நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை ஆணையர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தேவாலயத்தின் விளம்பரதாரர்கள் தி நியூஸ் மினிட்-யிடம் கூறினர்.

மற்றொரு வழக்கில், வாணியம்பாடி நகருக்கு வெளியே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தனது சொந்த நிலத்தில் பாழடைந்த இடத்தில் ஒரு தேவாலயத்தை பாதிரியார் ஆமோஸ் கட்டினார். இந்துத்துவாதிகளின் தொடர்பில் உள்ள ஒருவர், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து, கட்டடத்தை இடிக்கக் கோரினார்.  ஆனால், காவல்துறை ஆணையர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் பிறகு இந்துத்துவாதிகள்  உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தபிறகு இவ்வழக்கு மீண்டும் காவல்துறை ஆணையரிடம் வந்தது. இந்த வழக்கில் உத்தரவு வரும்வரை பாதிரியார் பிரார்த்தனை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஒரு கிராமத்தில் உள்ள  கிறிஸ்தவ சமூகத்துடன் தொடர்புடைய ஒருவர் கூறும்போது, “இங்கு 3 கோவில்கள் தனி நபர்களிடம் உள்ளது. அவர்கள் வழிபாடு நடத்த எந்த அனுமதியும் வாங்குவதில்லை. இதனைப் பார்க்கும் போது அனுமதி வாங்கும் சட்டங்கள் அனைத்தும் சிறுபான்மையினர்களுக்காக மட்டும் தான் என்று தோன்றுகிறது” என்று ஆதங்கத்தை வெளிபடுத்தினர்.

இவற்றை மொத்தமாக தொகுத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவதையும், இந்து முன்னணி போன்ற இந்துத்துவ கும்பல்கள் மதக் கலவரங்களை தூண்டி நடத்துவதையும், காவல்துறை அவற்றை மத மோதல்கள் என்று வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதையும் காணமுடிகிறது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவா சித்தாந்தம் வேரூன்றி செழித்து வளரத் துவங்கியுள்ளதையே இது காட்டுகிறது.


ஹைதர்
நன்றி : தி நியூஸ் மினிட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க