அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் சிறுபான்மையினரை ஒடுக்கும் வேலையை செய்து வருகிறது ஹிமந்த பிஸ்வா ஷர்மா தலைமையிலான பாஜக அரசு. “2026 ஆம் ஆண்டிற்குள் பிற்போக்கு நடவடிக்கையான குழந்தைத் திருமணங்களை முற்றிலும் ஒழிப்பேன்” என கடந்த ஜனவரி மாத இறுதியில் தெரிவித்திருந்த ஹிமந்த பிஸ்வா அரசு, முஸ்லீம் மற்றும் பழங்குடியின மக்களை ஒடுக்கும் கருவியாக இதனை பயன்படுத்திவருகிறது.
அரசு மேற்கொண்டுவரும் ‘குழந்தைத் திருமண ஒழிப்பு’ நடவடிக்கையில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது; போக்சோ சட்டத்தின் கீழ் இதுவரை 2,442 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை தொடருமானால் இந்த எண்ணிக்கை மேலும் கூடும்.
தற்போது குழந்தைத் திருமணத்தில் ஈடுபடுவோரை மட்டுமின்றி, நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குழந்தைத் திருமணத்தில் ஈடுபட்ட பெற்றோர்களையும், திருமணங்களைச் செய்துவைத்த மதபோதகர்களையும் தேடி தேடி கைது செய்துவருகிறது பாஜக அரசு. கைதுசெய்யப்படுவோரில் பெரும்பான்மையானோர் முஸ்லீம் ஆண்கள்.
படிக்க : இந்தியாவில் அதிகரித்துவரும் கிறித்துவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்!
கணவன்களை இழந்த பெண்களும், மகன்களை இழந்த தாய்மார்களும் வாழ வழியின்றி நிர்கதியாக்கப்பட்டிருகின்றனர். எங்கே தனது வீட்டிற்குள் போலீசு நுழைந்து தனது தந்தையை கைது செய்து சிறையில் அடைத்துவிடுமோ என்ற பயத்தில், கணவனை இழந்த, 2 குழந்தையின் தாயான பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இனியும் பொறுத்துபோக முடியாது என, கடந்த 4 ஆம் தேதி மோரிகான் மாவட்டத்தில் உள்ள லஹரிகாட் போலீஸ் நிலையத்திற்கு முன்கூடிய பெண்கள், கைது செய்யப்பட்ட தனது கணவன்களையும் மகன்களையும் விடுவிக்கும்படி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் என்றும் பாராமல் அவர்கள்மீது காட்டுமிரண்டாண்டிதனமாக நடந்து கொண்டது போலீசு. அவர்கள் கேட்கும் கேள்வி ஒன்றுதான் – “திருமணம் நடந்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது குழந்தைகளுடன் குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் எங்களை ஏன் கைது செய்கிறீர்கள்” என்பதுதான்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஹிமந்த பிஸ்வா, “குழந்தைத் திருமணத் தடுப்பு நடவடிக்கையில் இருந்து பின் வாங்கப் போவதில்லை” என்று கூறியவர், “5 ஆண்டு நடவடிக்கையில் இதுவொரு பகுதி மட்டும்தான்” என திமிராக பதிலளித்துள்ளார். பாஜக அரசின் இத்தகைய நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
பாஜகவின் இத்தகைய நடவடிக்கையை விமர்சிப்பதால் குழந்தைத் திருமணங்களை நாம் ஆதரிக்கிறோம் என்பதல்ல. ஆனால் சாதிய வர்ணாசிரம பிற்போக்கில் மூழ்கித் திழைத்திருக்கும் பாசிச பாஜகவுக்கு இதில் பேசவேண்டிய தேவை என்ன என்பதுதான் நமது கேள்வி. பெண்களை பாதுகாக்கவேண்டுமானால், கிராமப்புறங்களில் பள்ளிக்கூடங்களைத் திறந்திருக்க வேண்டும். கல்விபயில உதவித் தொகை வழங்கியிருக்க வேண்டும். வாழ்க்கைக்கு உத்தரவாதமான வேலைவாய்ப்பினை வழங்கியிருக்க வேண்டும். மாறாக, 2020 இல் முஸ்லீம் பிள்ளைகள் குறிப்பாக பெண்கள் பயிலும் அசாம் மாநில அரசு நடத்திவந்த பல மதராஸாக்கள் மூடப்பட்டன. இது நடந்தது பாஜக ஆட்சியில்தான்; அப்போது கல்வி அமைச்சராக இருந்தவர் இதே ஹிமந்த பிஸ்வா தான்.
படிக்க : அதிகரித்துவரும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் மீதான காவி குண்டர்களின் தாக்குதல்கள்!
பெண்கள் பாதுகாப்பு குறித்தோ பிற்போக்குதனம் குறித்து பேச முதலில் பாஜகவுக்கு யோக்கியதை இருக்கிறதா? பாஜக ஆளும் மாநிலங்கள்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கூடாரங்களாக இருக்கின்றன. பாஜக முக்கிய பொறுப்புகளை வகிப்பவர்கள்தான் பாலியல் பொறுக்கிகளாக உள்ளனர். இதற்கு சமீபத்திய சான்று பாஜக எம்.பி பிரிஜ் பூஜன் சிங் மீதான மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார். இத்தகைய பின்னணியில் உள்ள பாஜக குழந்தைத் திருமண ஒழிப்பு என்று பேசுவது வெற்று நாடகம் என்று சுருக்கிப் பார்க்க முடியாது. மத பண்பாடுகளைக் கடைப் பிடித்துவரும் முஸ்லீம், பழங்குடியின மக்களை ஒடுக்க பயன்படுத்த கையாண்டுவரும் ஓர் கருவியே இந்த நடவடிக்கை. பல்தேசிய கலாச்சாரம், பண்பாட்டை அழித்து ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே பண்பாடு, கலாச்சாரம் கொண்ட இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கான காவிகளின் நகர்வு இது.
ஆதினி