தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்கின்ற பளியர் பழங்குடி மக்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுகளைச் சுமத்தி மலைகளிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிராகத் தொடர்ந்து மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தின் சோத்துப்பாறை அணைக்கு மேலே மேற்குத் தொடர்ச்சி மலையில் அகமலை ஊராட்சி அமைந்துள்ளது. அதில் ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, குறவன்குழி, சொக்கனலை, பட்டூர், சுளுந்துக்காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் நூற்றுக்கணக்கான பளியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் காட்டுக்கு தீ வைத்ததாகப் பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் அங்கு வசிக்கும் மக்களைக் குற்றவாளியாக்கும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது. மாற்றுச் சமூகத்திற்காக மலைகளை விட்டு தங்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகப் பளியர் பழங்குடி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக பிப்ரவரி 5 ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் காட்டுக்கு தீ வைத்ததாகப் பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தி கரும்பாறை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி விவசாயி பாப்பையாவை அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் கிராம மக்கள் பாப்பையாவை கூட்டி வருவதற்கு வனத்துறை அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். அதன் பின்பு செய்யாத குற்றத்திற்காக மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அவரை அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்துப் பேசிய பளியர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாப்பையா என்கிற பாண்டியன் “எங்கள் மூதாதையர் காலம்தொட்டு நாங்கள் கரும்பாறையில்தான் வாழ்ந்து வருகிறோம். இந்த வனம்தான் எங்களுடைய ஒரே வாழ்வாதாரம். விவசாயம் செய்துதான் பிழைத்து வருகிறோம்.
கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி, வனவர் ஆனந்தபிரபு எனக்கு போன் செய்து, ‘உங்க இடத்துக்குப் பக்கத்துல வனத்துல தீப்பற்றியிருக்கு. அதை அணைப்பதுபோல வீடியோ எடுத்து அனுப்புங்க’ என்றார். உதவிக்கு, அரண்மனைப் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனை அனுப்புவதாகவும் சொன்னார். அந்த அதிகாரி கூறியதுபோலவே வீடியோ எடுத்து, நானும் முத்துகிருஷ்ணனும் அனுப்பினோம்.
ஆனால் கொஞ்ச நேரத்தில் மீண்டும் எனக்கு போன் செய்த வனவர் ஆனந்தபிரபு, ‘வனத்தில் நீங்கள்தான் தீ வைத்திருக்கிறீர்கள். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. தேனி வனச்சரக அலுவலகத்துக்கு விசாரணைக்கு வர வேண்டும்’ என்று அதிர்ச்சி கொடுத்தார். ‘நான் எங்கே தீ வைத்தேன். நீங்கள் அணைக்கச் சொன்னதைத்தானே செய்தேன்…’ என்று நான் கூறியதை அவர் காதில் வாங்கவில்லை” என்றார்.
படிக்க: பீகார்: பழங்குடியினப் பெண்களைக் கட்டிவைத்து அடித்த பாசிச கும்பல்
“மறுநாள், வனவர் உட்பட நான்கு பேர் என் வீட்டுக்கு வந்து, ‘ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு விசாரணைக்கு வாருங்கள்’ என்றனர். நான் ஆதார் அட்டையை எடுக்கச் சென்றபோது, எங்கள் பகுதிக்கு நபார்டு திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் பைப்புகளை அரிவாளால் துண்டு துண்டாக வெட்டி எறிந்தனர்.
தேனி வனச்சரக அலுவலகத்தில் நாள் முழுக்க என்னை உட்காரவைத்தனர். எங்கள் ஊர் மக்கள் திரண்டு வந்து நியாயம் கேட்டதால், ‘இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்’ என எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டுப் போகச் சொன்னார்கள். நான் செய்யாத தவறுக்கு எழுதிக் கொடுத்துவிட்டுப் போகச் சொல்வது எந்த வகையில் சரி? எங்களுடைய அடிப்படைத் தேவையான குடிநீருக்குப் போடப்பட்ட பைப்புகளை வெட்டி எறிந்தது என்ன நியாயம்..?” என்று தங்களுக்கு எதிரான வனத்துறையின் நடவடிக்கை குறித்து பாப்பையா கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் வனத்துறை அதிகாரிகளின் பழங்குடி மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அகமலையைச் சேர்ந்த கருப்பையா கூறுகையில், “அகமலையில் வனத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் பிற சமூக மக்களுக்கு ஆதரவாக இருந்துகொண்டு, எங்களின் வாழ்வாதாரத்தை அழித்து வெளியேற்றும் வேலையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறது வனத்துறை.
பிற சமூக மக்களின் ஆதிக்கம்தான் அகமலையில் அதிகமாக இருக்கிறது. அவர்கள்தான் பணப்பயிர்களைப் பயிரிட்டுச் செழுமையாக வாழ்கின்றனர். அவர்களைக் காப்பாற்றவே வனத்துறை எங்களைப் பலிகடா ஆக்குகிறது’’ என்று வனத்துறையின் மக்கள் விரோத நடவடிக்கைகளை திரை கிழித்துள்ளார்.
படிக்க: திருவாரூர்: ஓரவஞ்சனை செய்யப்படும் ஆதியன் பழங்குடி மக்கள் | எஸ்.டி சாதி சான்றிதழ் கேட்டு போராட்டம்
இச்சம்பவம் குறித்துப் பேசிய தேனி வனத்துறை அலுவலர் சிவராம், வனவர் ஆனந்தபிரபு “அகமலையில் வனத்தில் தீ பற்றியதாகத் தகவல் கிடைத்தவுடன், பாப்பையாவுக்குத் தகவல் கொடுத்து அணைக்கச் சொன்னதும், வீடியோ எடுக்கச் சொன்னதும் உண்மைதான். அந்தப் பகுதியிலிருந்தவர்களை விசாரித்தபோது, பாப்பையாதான் தீ வைத்தார் எனக் கூறினார்கள். அதனடிப்படையில் தான் சாதாரண விசாரணைக்காக பாப்பையாவை அழைத்துவந்தோம்.
அவரைத் துன்புறுத்தவோ, மிரட்டவோ இல்லை. விதிகளை மீறி பட்டா நிலங்களுக்கு ஓடையை மறித்துக் கொண்டு செல்லப்பட்ட தண்ணீர் பைப்புகளைத்தான் அகற்றினோம். குடிநீர் பைப்புகளை வெட்டிப் போடவில்லை. வனத்தில் பட்டா இன்றி இருப்பவர்களை வெளியேற்ற நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம். வன உரிமையுள்ள பழங்குடியினரை வெளியேற்றும் நோக்கத்தில் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை’’ என்று அதிகார வர்க்கத்திற்கே உரிய பாணியில் பழங்குடி மக்களுக்கு எதிரான வனத்துறையின் நடவடிக்கைகளை மறுத்துள்ளனர்.
தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பழங்குடி மக்கள் குரல் எழுப்பிக் கொண்டிருந்தாலும் தற்போது வரை பெயரளவிலான நடவடிக்கைகூட எடுக்கப்படாமல் உள்ளது.
செய்தி ஆதாரம்: விகடன்
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram