பீகார் மாநிலத்தில் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக இரண்டு பழங்குடியினப் பெண்களை பஜ்ரங் தள் குண்டர்கள் மரத்தில் கட்டிவைத்து அடித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து ஒரு நாளுக்குப் பின்பு (டிசம்பர் 26) பாலசோர் மாவட்டத்தின் முகுரா கிராமத்தில் உள்ள சங்கன்பூர் குக்கிராமத்திற்கு இரண்டு பழங்குடியினப் பெண்கள் பிரார்த்தனைக்காகச் சென்றனர். அப்போது பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் “இவர்கள் இங்குள்ள மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்ய வந்தவர்கள்” என்கிற பொய்யான செய்தியைக் கிராமம் முழுவதும் பரப்பி அவர்களைத் தாக்கினர்.
நடந்த சம்பவம் குறித்து பாஸ்டர் சாது சுந்தர் சிங் மக்தூப் மீடியா (Maktoob media) செய்தியாளர்களிடம் கூறுகையில் “இரண்டு பெண்களும் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர். அப்போது வீட்டின் முன்பு திரண்ட பஜ்ரங் தள் உறுப்பினர்கள் மதமாற்றம் செய்பவர்கள் வெளியே வாருங்கள் என்று கூறினர். உடனடியாக இரண்டு பெண்களும் வன்முறைக் கும்பல்களிடமிருந்து பாதுகாக்கப்படுவதற்காக வீட்டின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டனர்” என்று தெரிவித்தார்.
மதவெறிக் கும்பலை வீட்டின் உள்ளே செல்வதற்கு உரிமையாளர் தடுத்த போது அவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் உள்ளே நுழைந்த கும்பல் பெண்கள் இருக்கும் இடத்தை தெரிவிக்கும்படி வீட்டில் உள்ளே பெண்களையும் குழந்தைகளையும் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
அதனைப் பற்றி பாஸ்டர் சாது சுந்தர் சிங் (Sadhu Sunder Singh) கூறுகையில் “அவர்கள் குழந்தைகளைக் கடுமையாக அடித்தார்கள். பயத்தினால் குழந்தைகள் அந்தப் பெண்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சொல்லிவிட்டனர். பின்பு அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் பெண்களின் கழுத்தை நெறித்தும் காலால் உதைத்தும் அவர்களின் மேல் தண்ணீர் ஊற்றியும் மிகவும் கொடிய முறையில் துன்புறுத்தினர்.
அதன் காரணமாக பெண்களால் நடக்க முடியவில்லை. ஆனாலும் மனிதநேயமற்ற அக்கும்பலிலிருந்த ஆண்கள் அப்பெண்களை வெளியே இழுத்துச் சென்று அவர்களின் புடைவைகளைக் கழற்றுமாறு வலியுறுத்தினர். மற்றவர்களையும் அதில் சேருமாறு கேட்டுக்கொண்டனர். அப்பெண்களை மேலும் அதிகமாக அடித்தனர்” என்று சிங் கூறினார்.
படிக்க: கனிமவளக் கொள்ளைக்காக பழங்குடிகள் அமைப்பைத் தடை செய்த சத்தீஸ்கர் அரசு!
இத்தகைய துன்புறுத்தலுக்குப் பிறகு மரத்தில் கட்டிவைத்து கடுமையாக அடித்து ஒரு பெண்ணின் முகத்தைச் சிதைத்து இந்து மதம் மற்றும் கலாச்சாரத்தை அழித்ததற்கு இந்த இரண்டு பெண்கள் தான் காரணம் என்று வெள்ளை சட்டை அணிந்த ஆண் ஒருவர் கூறுவது காணொளியில் பதிவாகி உள்ளது.
நெற்றியில் திலகம் அணிந்த அந்த நபர் “பாரத் மாதா கி ஜெய்” மற்றும் ”ஜெய் ஸ்ரீராம்” போன்ற முழக்கங்களையும் எழுப்புகின்ற காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிய பின்பே இப்படியொரு மோசமான சம்பவம் நடந்தது குறித்து வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது.
Two Christian tribal women in Odisha were tied and beaten for celebrating Christmas.
This horrific incident occurred in the area of same Pratap Sarangi, who falsely accused LoP @RahulGandhi Ji of pushing him.
These attackers are followers of his ideology. pic.twitter.com/ZnHQ3n2MCA
— Dr. Shama Mohamed (@drshamamohd) December 29, 2024
இந்து மதவெறி கும்பலினால் தாக்கப்பட்ட இரண்டு பெண்களும் பாலசோர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சிங் கூறினார்.
மேலும் தாக்கப்பட்ட இரண்டு பேர் 42 வயதான சுபாசினி சிங் மற்றும் சுகந்தி சிங் என்பதை உறுதிப்படுத்திய ரெமுனா போலீசார் காவி கும்பலுக்கு ஆதரவாகப் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளிகளாக மாற்றும் நோக்கில், அவர்கள் இந்து பழங்குடியினரை மதமாற்றம் செய்ய வந்ததாகக் கூறியுள்ளனர். ஆனால் அதனை ஆதாரமற்றவை என்று பாஸ்டர் சிங் மறுத்துள்ளார்.
பின்னர் இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேரின்மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் ஒடிசா மதசுதந்திரச் சட்டம் (1957) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இருப்பினும் கைது செய்யப்பட்டு ரெமுனா போலீசு நிலையத்திற்குக் கூட்டிச் செல்லப்பட்டவுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக சிங் தெரிவித்தார். பெண்களும் குற்றம்சாட்டப்பட்டவர்களும் சமரசம் செய்து கொண்டனர் என்று போலீசு தெரிவித்துள்ளது.
ஆனால் “குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அச்சுறுத்தியுள்ளனர். அதனால்தான் அவர்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்துவிட்டனர். அப்பெண்கள் என்னை அழைத்து இத்துடன் இந்த விஷயத்தை விட்டுவிடலாம் என்று கூறிவிட்டனர்”என்று சாது சுந்தர் சிங் கூறினார்.
மேலும் “சமீபத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவது அதிகரித்து வருகிறது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை அவர்கள் இந்த விஷயத்தைத் தொடர்வார்கள்” என்று சிங் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் மதத்தினை பின்பற்றுவதற்கும் பரப்புவதற்கும் சட்டப்படி உரிமை உள்ளது. ஆனால் காவி கும்பல் மதமாற்றம் செய்கிறார்கள் என்கிற பெயரில் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அதற்கு ஏற்றவாறு பாசிச கும்பல் சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. மக்கள் போராட்டங்கள் மூலமே இத்தகைய பாசிச தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த முடியும்.
நன்றி: மக்தூப் மீடியா
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram