அக்டொபர் 30 ஆம் தேதியன்று சத்தீஸ்கர் உள்துறை அமைச்சகமானது மூல்வாசி பச்சாவோ மஞ்ச் (Moolvasi Bachao Manch – MBM) என்கிற பழங்குடியின அமைப்பை சட்டவிரோத அமைப்பு என்று சத்தீஸ்கர் சிறப்பு பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (CSPSA- Chhattisgarh Special Public Security Act) ஒரு வருடம் செயல்படுவதற்குத் தடை விதித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வமைப்பானது இளைஞர்களின் தலைமையில் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகவும் பழங்குடியின மக்களின் உரிமைக்காகவும் போராடுவதற்காக விவசாயிகளையும் மக்களையும் பெருமளவில் ஒன்றிணைத்தது.
மே 17, 2021 அன்று அப்படி ஒன்றிணைக்கப்பட்ட மக்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் உள்பட நான்கு பேர் துணை ராணுவப் படையினரின் கொடூரமான துப்பாக்கிச் சூட்டால் படுகொலை செய்யப்பட்டனர். அதன் பின்பு அவ்வமைப்பின் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்தது.
இந்நிலையில் இவ்வமைப்பின் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக “சட்டவிரோதமான அமைப்பு”, “மாவோயிஸ்ட்டுகளுடன் இணைந்து அரசின் வளர்ச்சி திட்டங்களை தடுக்கின்றது” என்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி தற்போது ஒரு வருடத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமைப்பு மீதான தடை பற்றி கோண்ட் ஆதிவாசியும் 23 வயதான மூல்வாசி பச்சாவோ மஞ்ச் தலைவருமான ரகு மிடியம் (Raghu Midiam) “எங்கள் வளங்களையும் நிலங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையைச் சட்டப்படி எதிர்கொள்வோம்.
எங்களுக்கு ஆதரவாகப் போராடுகின்ற அமைப்புகள் எல்லாம் நகரங்களில் உருவாக்கப்பட்டவை. கிராமங்களில் உள்ள எங்கள் மக்களைப் பாதுகாப்பதற்காக இளம் தலைவர்களைக் கொண்ட இந்த அமைப்பை உருவாக்கினோம்.
நாங்கள் பள்ளிகள், அங்கன்வாடிகள், சுகாதார கட்டமைப்புகள் போன்ற அடிப்படை வசதிக்காகவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் எங்கள் காடுகள், நீர் மற்றும் நிலங்களைக் காப்பாற்றுவதற்காகவும் தொடர்ந்து போராடி வருவதால் ஆளும் அரசாங்கத்தால் வளர்ச்சிக்கு எதிரானவர்களாகவும் மாவோயிஸ்ட்டுகளாகவும் சித்தரிக்கப்பட்டுத் தாக்கப்படுகிறோம்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் “அரசு எங்கள் மக்கள் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு, வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் கிராம மக்கள் வெளியே செல்லவே பயப்படுகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் மக்களையும் கடுமையான சட்டங்களைக் கொண்டு கைது செய்கின்றனர். தற்போது வரை 800 பழங்குடி மக்களைக் கைது செய்துள்ளனர்.
மறுபுறம் இந்த ஆண்டு மட்டும் அரசிற்கு எதிராகப் போராடிய பழங்குடி விவசாயிகள் மற்றும் மக்கள் 300 பேரைப் படுகொலை செய்துள்ளனர். அதேபோல், நானும் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டால் போலீசால் கொல்லப்படுவேன்” என்கிற தன்னுடைய பயத்தினையும் வெளிப்படுத்தியுள்ளார்.
PUCL அமைப்பைச் சேர்ந்த ரின்சின் (Rinchin) கூறுகையில் ராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுகின்ற அமைப்பைத் தடை செய்திருப்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் அரசானது நீண்ட காலமாகவே நக்சலிசத்தை ஒழிக்கிறோம் என்று பழங்குடி மக்களைப் படுகொலை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
படிக்க: சத்தீஸ்கர்: அதானியின் நலனுக்காக ஹஸ்தியோவின் பழங்குடி மக்களைத் தாக்கும் பாசிச பா.ஜ.க அரசு
FACAM (Forum Against Corporatization and Militarisation) உறுப்பினரான வழக்கறிஞர் எஹ்த்மாம்- உல்- ஹக் (Ehtmam-Ul-Haque) “எம்.பி.எம் (MBM) மீதான தடை என்பது சத்தீஸ்கரில் விஷ்ணு தியோ சாய் மற்றும் விஷ்ணு சர்மா தலைமையில் ஆட்சி செய்கின்ற பா.ஜ.க-வின் பாசிசத் தன்மையைப் பிரதிபலிக்கிறது.
ஏற்கெனவே சல்வார் ஜூடும் மற்றும், ஆப்ரேசன் கிரீன் ஹண்ட் திட்டத்தின் மூலம் மாவோயிஸ்ட்டுகளை அழிக்கிறோம் என்கிற பெயரில் பழங்குடியின மக்களையும் அவர்களின் குடும்பங்களையும் படுகொலை செய்த அரசிற்கு எதிராகவே இளைஞர்கள் போராடி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
“பா.ஜ.க தலைமையிலான அரசானது வளர்ச்சி என்கிற பெயரில் இங்குள்ள காடுகளையும், மலைகளையும் அழித்து கார்ப்பரேட் நிறுவனங்கள் கனிமங்களைக் கொண்டு செல்வதற்கும் ராணுவ வாகனங்கள் செல்வதற்கும் அகலமான சாலைகள் அமைத்ததே தவிர பள்ளிகள் மருத்துவமனைகள் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தரவில்லை” என்று எஹ்த்மாம் மேலும் கூறினார்.
படிக்க: பஸ்தர்: பழங்குடியினர் மீது பயங்கரவாத தாக்குதல்களை ஏவும் ராணுவ முகாம்கள்
தங்கள் மலைகளில் உள்ள கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கு எதிராக அமைதியான முறையில் போராடிக் கொண்டிருக்கின்ற பழங்குடியின மக்கள் மீது பாசிச கும்பல் தினந்தோறும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தி மறைமுகமான உள்நாட்டுப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது.
கனிமவள கொள்ளையன் அதானி உள்பட அம்பானி, அகர்வால் போன்ற கார்ப்பரேட் கும்பல்களின் கனிமவள கொள்ளைக்காகச் சட்டங்கள் திட்டங்கள் எல்லாம் மாற்றியமைக்கப்பட்டு நாடுமுழுவதும் மோடி தலைமையிலான பாசிச கும்பலாட்சி அமல்படுத்தப்பட்டு வருகிறது.
முக்கியமாக பா.ஜ.க ஆள்கின்ற மாநிலங்களில் கனிமவள கொள்ளை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கரிலும் கனிமவள கொள்ளைக்காகவே மூல்வாசி பச்சாவோ மஞ்ச் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தடையானது அமைப்பின் பொறுப்பில் உள்ள முக்கியத் தலைவர்கள் மீதும் பழங்குடியின மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் கார்ப்பரேட் கும்பலின் கனிமவள கொள்ளையையும் தீவிரப்படுத்தும்.
எனவே பாசிசத்தை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் அனைவரும் சத்தீஸ்கர் பழங்குடி மக்கள் மீது மோடி அரசால் தொடுக்கப்படும் ராணுவத் தாக்குதலுக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும்.
செய்தி ஆதாரம்: கவுண்ட்டர் கரண்ட்ஸ்
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram