சத்தீஸ்கர் மாவட்டத்தில் உள்ள பஸ்தரில் சமீப காலமாகவே இராணுவ முகாம்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் அம்மக்களின் அனுமதியின்றி இந்தாண்டு பிப்ரவரியில் மட்டும் சுமார் 50 ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒன்பது பழங்குடியினருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற அடிப்படையில் அப்பகுதி ராணுவ மையமாகியுள்ளது.
தங்கள் நிலங்களில் தொடர்ச்சியாக ராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதற்கு எதிராக பஸ்தர் பகுதி முழுவதும் பழங்குடியின மக்கள் பெரிய அளவிலான ஜனநாயகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சுக்மா மாவட்டத்தில் உள்ள சில்கர் போன்ற சில பகுதிகளில் இத்தகைய போராட்டங்கள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன.
‘பகுதி ஆதிக்கத்தை’ உறுதிப்படுத்த முகாம்கள் அமைப்பது அவசியம் என்று பாசிச பா.ஜ.க அரசு கூறுகிறது. சாலைகள் அமைப்பதற்கும், பள்ளிகள், சுகாதார மையங்கள் மற்றும் வாக்குச் சாவடிகள் அமைப்பதற்கும் துணை ராணுவ முகாம்கள் அவசியம் என்றும், இவை அனைத்தும் அரசு சேவைகளுக்குத் தேவை என்றும் கதையளக்கிறது. ஆனால், அப்பகுதியை ராணுவ பயன்படுத்துவதன் மூலமாக அங்கு வாழும் பழங்குடி மக்களின் மீது பல்வேறு அடக்குமுறைகளும் தாக்குதல்களும் ஏவப்படுகின்றன; கனிம வளங்கள் கட்டற்ற முறையில் சூறையாடப்படுகின்றன. இதற்கு எதிராக பழங்குடி மக்கள் போராடினால் அப்போராட்டங்களை ‘மாவோயிஸ்டுகளால் தூண்டப்பட்டவை’ என்று பா.ஜ.க. அரசு சித்தரித்து வருகிறது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ‘பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின்மை, பஸ்தர் பிரிவு, சத்தீஸ்கர், 2023 – 2024’ என்ற தலைப்பில் சமூக ஆர்வலர்களால் கூட்டம் நடத்தப்பட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த கூட்டத்தில் ஜார்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களின் நிலைமை குறித்தும் பேச்சாளர்கள் உரையாற்றினர்.
படிக்க: சத்தீஸ்கர் போலி மோதல் கொலை: FACAM கண்டன அறிக்கை
இக்கூட்டத்தில் ராணுவ மையங்கள் அமைக்கப்படும் இடங்கள் பெரும்பாலும் பழங்குடி மக்களுக்கு சொந்தமானவை என்று சுட்டிக்காட்டப்பட்டது. பஞ்சாயத்து (பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம், 1996 (PESA), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன உரிமைகள் அங்கீகாரம்) ஆகிய சட்டங்களை மீறியும் கடுமையான அடக்குமுறைகளையும் ஏவி ராணுவம் பழங்குடியினரின் நிலத்தில் முகாம்களை அமைக்கிறது என்று அம்பலப்படுத்தப்பட்டது.
ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள இப்பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளது. ராணுவ படையினரால் பழங்குடி மக்கள் துன்புறுத்தப்படுவது இயல்பு நிலையாகிவிட்டது. பழங்குடி மக்களின் சமூகங்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமாக விளங்கும் வாரச்சந்தை மற்றும் வழக்கமான கொள்முதல் கூட போலீசு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இதனைப் பற்றி உண்மை அறியும் குழுவிடம் மக்கள் கூறுகையில், நாங்கள் சாலைகள் அமைப்பதை எதிர்க்கவில்லை, அது எப்படி எங்கே அமைக்கப்பட வேண்டும் என கூற விரும்புகிறோம். சாலைகளின் தளவமைப்பு மற்றும் அகலம் போன்றவை கனிம வளங்களை சூறையாடுவதற்கு ஏதுவாகவே அமைக்கப்படுகிறது என பழங்குடி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு புறம் பழங்குடி மக்களின் அனுமதியின்றி சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால் 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி, பஸ்தர் பகுதியில் குத்தகைக்கு விடப்பட்டுள்ள 51 சுரங்களில் 14 மட்டுமே பொதுத்துறையிடம் உள்ளது. மற்றவை எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளன.
கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்காக பழங்குடி மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களை இந்திய ராணுவம் தொடுத்து வருகிறது. இதற்கு எதிராக பழங்குடி மக்கள் போராடினால் அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து சிறையில் அடைக்கிறது. 2011 முதல் 2022 வரை சுமார் 6084 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதேபோல் சட்ட விரோத படுகொலைகளும் அதிகரித்துள்ளது. 2024 ஜனவரி 1 முதல் ஜூலை 15 வரை சுமார் 141 படுகொலைகள் நடந்துள்ளது.
படிக்க: சத்தீஸ்கர் படுகொலை: பாசிசக் கும்பலால் நடத்தப்படும் நரவேட்டை
ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்களின் நிலையும் இதேதான் உள்ளது. அங்கு சரண்டா மற்றும் கோல்ஹான் காடுகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் குறைந்தது 30 ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.முகாம்களை அமைப்பதுடன், பாதுகாப்பு மண்டலத்தில் சுரங்கத்தை அனுமதிக்கும் வகையில் MPSM-ஐ திருத்துவதற்கு அம்மாநில மற்றும் ஒன்றிய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அங்கும் பழங்குடி மக்களுக்கு எதிரான சட்டவிரோத தடுப்புகள், பொய் வழக்குகள் மற்றும் நாளுக்கு நாள் வன்முறைகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.
பாசிச பா.ஜ.க கும்பலின் கார்ப்பரேட் சேவைக்காக பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளை ராணுவ மையப்படுத்தி அவர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. கனிம வளங்கள் சூறையாடப்படுவதற்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு கொடூரமான முறையில் ஒடுக்கப்படுகின்றனர். நமது நாட்டின் வளங்களை பாதுகாக்க வேண்டும் எனில், பழங்குடி மக்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube