கடந்த ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதிக்குட்பட்ட கான்கேர் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படை (BSF) மற்றும் மாவட்ட ரிசர்வ் காவல்படை (DRG) ஆகியவை இணைந்து 29 மாவோயிஸ்ட் தோழர்களை போலி மோதலில் துப்பாக்கியால் சுட்டும் சித்திரவதை செய்தும் படுகொலை செய்தது. இந்த ஆண்டிலேயே அதிக எண்ணிக்கையில் மாவோயிஸ்டுகளை படுகொலை செய்த இந்த போலி மோதலில், மாவோயிஸ்ட் அமைப்பின் சங்கர் ராவ், லலிதா மாத்வி உள்ளிட்ட முன்னணி தோழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மாவோயிஸ்டுகள் தேர்தலை தடுத்து நிறுத்தும் சதி வேலைகளில் ஈடுபட்டதாகவும், அதை துணை இராணுவப் படை முறியடித்ததாகவும் பா.ஜ.க. கும்பல் பொய்யான கதையைக் கட்டி இந்தப் படுகொலையை ‘பா.ஜ.க. அரசின் சாதனையாக’ காட்டுவதற்கு முயற்சித்து வருகிறது. சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு தேவ் சாய், இந்தப் படுகொலையை“ஒரு வரலாற்று வெற்றி” என்றும் சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா, “நக்சலிசத்தின் மீதான பஸ்தார் போலீசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்” என்றும் கூறியுள்ளனர்.
ஆனால், சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) கட்சியின் வடக்கு துணை மண்டலப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் மங்கலி வெளியிட்டுள்ள அறிக்கை பா.ஜ.க. கும்பலின் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்துகிறது.
முதலில் போலி மோதலில் 12 மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் பின்னர் 8 மாவோயிஸ்டுகளை சித்திரவதை செய்து கொன்றதாகவும், நிராயுதபாணியாக இருந்த 9 தோழர்களை இரண்டு கி.மீ தொலைவில் இருந்த தியாகிகள் நினைவிடத்திற்கு இழுத்துச் சென்று மனிதாபிமானமற்ற முறையில் லத்திகளால் தாக்கி அதன் பிறகு சுட்டுக்கொன்றதாகவும் அம்பலப்படுத்தியுள்ளது. மேலும், இந்தப்படுகொலை “ஆபரேஷன் ககர்”(Operation Kagar) அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
படிக்க: சத்தீஸ்கர் போலி மோதல் கொலை: FACAM கண்டன அறிக்கை
இவ்வாறு கனிம வளக் கொள்ளைக்காக மாவோயிஸ்டு தோழர்களும் பழங்குடி மக்களும் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கண்டனங்களை கூட தெரிவிக்கவில்லை. சத்தீஸ்கர் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல், “பா.ஜ.க. அரசு பல அப்பாவி பழங்குடி கிராம மக்களை நக்சல்கள் என்று முத்திரை குத்தி போலியாக எண்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்கிறது” என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். மற்றபடி, காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல், மற்ற இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் என யாரும் இதுகுறித்து வாய்திறக்கவில்லை.
ஏனென்றால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் தாங்கள் ஆளும் மாநிலங்களில் கார்ப்பரேட் நலத் திட்டங்களை தீவிரமாக அமல்படுத்திக் கொண்டு இருக்கின்றன. அதிலும் 2004-2014 காங்கிரஸ் ஆட்சிக் காலக்கட்டத்தில்தான், சல்வாஜூடும் என்ற சட்டவிரோத பயங்கரவாத படை மூலமாகவும், துணை இராணுவப் படைகளைக் கொண்டு “ஆபரேஷன் கிரீன் ஹண்ட்” என்ற பெயரிலும் பழங்குடி மக்கள், மாவோயிஸ்டுகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தது.
பாசிசக் கும்பலின் நரவேட்டைக்கான பயங்கரவாதத் திட்டம்
“ஆபரேஷன் ககர்” என்பது, சத்தீஸ்கரில் பஸ்தர், அபுஜ்மர் மற்றும் காடுகளை உள்ளடக்கிய பிற பகுதிகளில் உள்ள கனிம வளங்களை அம்பானி, அதானி, வேதாந்தா, ஜிண்டால் போன்ற கார்ப்பரேட் கும்பல்கள் சூறையாடுவதற்கு தடையாக இருக்கும் பழங்குடியின மக்களையும் அவர்களுக்கு உறுதுணையாக போராடிவரும் மாவோயிஸ்ட் போராளிகளையும் வேட்டையாடுவதற்காக, பெரிய அளவில் (ஒவ்வொரு ஏழு பழங்குடியின மக்களுக்கும் மூன்று ராணுவ வீரர்கள் என்ற வகையில்) எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களைத் திரட்டும் நோக்கத்துடன் பாசிச பா.ஜ.க கும்பலால் கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாதத் திட்டமாகும்.
இத்திட்டத்தால் இந்தாண்டு ஜனவரி முதல் மாவோயிஸ்டுகளும் பழங்குடியின மக்களும் போலி மோதலில் படுகொலை செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கான்கேர் மாவட்டத்தில், மரங்களின் பட்டைகள், தண்டுகள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு கயிறு தயாரிப்பதற்காக காடுகளுக்கு சென்ற பழங்குடியினத்தைச் சார்ந்த மூன்று பேரை மாவோயிஸ்டுகள் என்றுக் கூறி அரசின் பயங்கரவாதப் படை படுகொலை செய்தது. அதேபோல, மார்ச் மாதத்தில் பிஜப்பூர் மாவட்டம் சிபுர்பட்டியில் மக்களின் குறைகளை கேட்பதற்காக கிராமத்திற்கு சென்ற மாவோயிஸ்ட் தோழர்கள் இருவரையும், பழங்குடியின மக்களில் நான்கு பேரையும் கைது செய்து, ஓட விட்டு கண்மூடித்தனமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளது. இவ்வாறு பா.ஜ.க. அரசு, மாவோயிஸ்டுகளை மட்டுமின்றி, கேள்விக்கிடமற்ற முறையில் மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் அப்பாவி பழங்குடி மக்களையும் நரவேட்டையாடி வருகிறது.
படிக்க: மாவோயிஸ்டுகளை நரவேட்டையாடும் சத்தீஸ்கர் அரசு! | தோழர் ரவி
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 79 மாவோயிஸ்டுகள் போலி மோதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த இரு ஆண்டுகளில் போலி மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். இந்த கனிமவள கொள்ளைக்காக நடத்தப்படும் இந்த நரவேட்டையை மோடி-அமித்ஷா கும்பல் தனது தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் பயன்படுத்தி வருகிறது.
ஏப்ரல் 22-ஆம் தேதி கான்கேர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகலின் ஆட்சியின் கீழ் நக்சல்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றும், “நீங்கள் விஷ்ணு தியோ சாயை உங்கள் முதலமைச்சராக்கியுள்ளீர்கள். நான்கு மாதங்களில் 90-க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டனர். 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 250 பேர் சரணடைந்துள்ளனர், மோடிக்கு இன்னொரு பதவி கொடுங்கள். சத்தீஸ்கரில் இருந்து நக்சலிசம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்” என கார்ப்பரேட் கொள்ளைக்காக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரசு பயங்கரவாதத்தை பா.ஜ.க-வின் சாதனையாக சித்தரிக்கிறார்.
கனிம வளக் கொள்ளைக்கான போர்
பழங்குடி மக்களை மலைகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக துணை இராணுவப் படைகள் மூலம் படுகொலைகளை நிகழ்த்துவது மட்டுமின்றி, அம்மக்கள் வாழும் பகுதிகளில் ஆளில்லா ட்ரோன் (Drone) மூலம் எதிரி நாட்டின் மீது பயன்படுத்தப்படும் குண்டுகளை வீசி பாசிச பயங்கரவாதத் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி 13 அன்று பஸ்தரில் 5-வது முறையாக ட்ரோன்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டதாகவும், இந்த குண்டு வீச்சுகளுக்கு பா.ஜ.க. அரசு இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹெரான் மார்க் 2 (Heron Mark 2) ட்ரோன்களை அதிகளவில் பயன்படுத்துவதாகவும் “பெருநிறுவனமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு எதிரான மன்றம்” (FACAM) கூறுகிறது.
சத்தீஸ்கர் மட்டுமின்றி, ஒடிசா, ஜார்கண்ட போன்ற மாநிலங்களிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பழங்குடி மக்கள் மீது துணை இராணுவப் படைகள் மூலமும் அம்மாநில போலீசு மூலமும் பா.ஜ.க. அரசு தாக்குதலை தொடுத்து வருகிறது; கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காக பழங்குடி மக்கள் மீது அறிவிக்கப்படாத உள்நாட்டுப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. வனப் பாதுகாப்பு சட்டத் திருத்தம், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்தம் போன்ற சட்டத் திருத்தங்கள் மூலம் கனிம வளக் கொள்ளையை தீவிரப்படுத்துவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. எனவே, இனி வருங்காலங்களிலும் மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடி மக்கள் மீதான மோடி அரசின் தாக்குதல்கள் அதிகரிக்கவே செய்யும்.
ஆகவே, கனிம வளக் கொள்ளைக்கு எதிராக போராடும் மாவோயிஸ்டுகளும் பழங்குடி மக்களும் மோடி அரசால் படுகொலை செய்யப்படுவதை கண்டிக்க வேண்டியதும், கார்ப்பரேட்டுகளின் கனிம வளக் கொள்ளையை தடுத்து நிறுத்தும் வகையில் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியதும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.
சிவராமன்
(புதிய ஜனநாயகம் – மே 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube