அருணாச்சல பிரதேசம்: சியாங் அணை கட்டுவதற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் மக்கள்

மக்கள் எதிர்ப்பை சிறிதும் பொருட்படுத்தாத பாசிச மோடி அரசு இது போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் வன பாதுகாப்பு சட்டத்தைத் திருத்தி அமைத்தது.

0

ஜூன் 22 அன்று, அருணாச்சல பிரதேசத்தின் மேல் சியாங் (Upper Siang) மாவட்ட நிர்வாகம் 12 கிராமங்களைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தியது. 10,000 மெகாவாட் மேல் சியாங் பல்நோக்கு சேமிப்புத் திட்டத்தின் (Upper Siang Multipurpose Storage Project) நன்மைகள் மற்றும் திட்டத்திற்கான முன் சாத்தியக்கூறு ஆய்வுகளை (pre-feasibility surveys) மேற்கொள்வதற்கான நிர்வாகத்தின் முடிவு குறித்து ‘விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக’ இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

திபெத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு பாயும் பிரம்மபுத்திராவின் முக்கிய துணை நதி “சியாங்” ஆகும். சியாங் ஆற்றில் முன்மொழியப்பட்டுள்ள நீர்மின் திட்டத்தால் அங்குள்ள அனைத்து கிராமங்களும் பாதிக்கப்படும். இத்திட்டத்தை பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

துணை ஆணையர் ஹகே லைலாங் (Hage Lailang) கிராம பிரதிநிதிகளிடம் அரசாங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ‘தேசிய நலன்’ மற்றும் ‘பகுதி மேம்பாடு’ ஆகியவற்றிற்காக நடத்தப்படும் முன் சாத்தியக்கூறு ஆய்வை அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், திட்டத்தால் பாதிக்கப்பட்டும் கிராமங்களின் பிரதிநிதிகள் தங்கள் எதிர்ப்பை கடுமையாக வெளிப்படுத்தினர்.

“சியாங்கின் துணை ஆணையர் அணையை எதிர்க்க வேண்டாம் என்று எங்களிடம் கூறினார்,” என்று பரோங் (Parong) கிராமத்தின் தலைவர் தரோக் சிராம் (Tarok Siram) கூறினார். மேலும், “எனது கிராமத்தில் உள்ள 116 குடும்பங்களின் கருத்தை கேட்டுக்கொள்ளுமாறு நான் அவரிடம் கூறினேன். இங்கு அணை கட்டப்பட்டால் 43 குடும்பங்களின் வீடுகள் தண்ணீரில் மூழ்கிவிடும்; மீதமுள்ள குடும்பங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர நேரிடும் என்று நான் சுட்டிக்காட்டினேன்” என்று கூறினார்.


படிக்க: ஐந்து மாநிலத் தேர்தல்: ஓரங்கட்டப்பட்ட பழங்குடியின மக்கள் பிரச்சனை!


தேசிய நீர்மின் கழகத்தால் (National Hydroelectric Power Corporation – NHPC) இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த மெகா மின் திட்டம் செயல்படுத்தப்பட்டால் “ஆதி” (Adi) என்ற பழங்குடி சமூகத்தின் நிலங்கள் முதல் மேல் சியாங் மாவட்டத்தின் மாவட்ட தலைமையகமான யிங்கியோங் (Yingkiong) வரை மூழ்கடிக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

“இந்த அணை பல கிராமங்கள் மற்றும் நகரங்களை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் என்பதாலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட “ஆதி” பழங்குடி மக்கள் நிலமற்றவர்களாக மாற்றப்படுவார்கள் என்பதாலும் நாங்கள் 2008-09 முதல் இந்த அணைக்கு எதிராக போராடி வருகிறோம். எங்களுக்கு அணை தேவையில்லை. நாங்கள் ஏன் ஆய்வை அனுமதிக்க வேண்டும்?” என்று ஆதி சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகளின் கூட்டமைப்பான சியாங் பழங்குடி விவசாயிகள் மன்றத்தின் (Siang Indigenous Farmers’ Forum) தலைவர் கெகோங் ஜிஜோங் (Gegong Jijong) கூறினார்.

மக்கள் எதிர்ப்பை சிறிதும் பொருட்படுத்தாத பாசிச மோடி அரசு இது போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் வன பாதுகாப்பு சட்டத்தைத் திருத்தி அமைத்தது. இது ஆதி பழங்குடி மக்களின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

வன (பாதுகாப்பு) திருத்தச் சட்டம், 2023, இந்தியாவின் சர்வதேச எல்லைகளில் இருந்து 100 கி.மீ தூரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்பட உள்ள மூலோபாய திட்டங்களுக்காக, காடுகளை எந்தவொரு வன அனுமதியும் (forest clearance) பெறாமல் கையகப்படுத்திக்கொள்ள மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கிறது. சியாங் அணை ஒரு தேசிய மூலோபாய திட்டமாக அரசால் கருதப்படுவதால் புதிய வனச் சட்டத்தின்படி, வன அனுமதி தேவையில்லை.

ஜூன் 22 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட டுட்டிங்-யிங்கியோங்கின் (Tuting-Yingkiong) உள்ளூர் பா.ஜ.க எம்.எல்.ஏ அலோ லிபாங் (Alo Libang), “தேசிய நலனுக்கான ஆய்வு நடவடிக்கைகளை பொதுமக்கள் அனுமதிக்க வேண்டும். மூலோபாய முக்கியத்துவம் மற்றும் தேசிய பாதுகாப்பு காரணமாக முன்மொழியப்பட்ட அணை தேவைப்படுகிறது” என்று அவர் கூறினார்.


படிக்க: அருணாச்சல பிரதேசத்தில் புறக்கணிக்கப்படும் சக்மா பழங்குடிகள்!


இதனைத்தொடர்ந்து, ஜூலை 8 அன்று, அருணாச்சல பிரதேசத்திற்கு வருகை தரவிருக்கும் மத்திய மின்துறை அமைச்சர் எம்.எல்.கட்டார் அவர்களை சந்தித்து, சியாங் நதி திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் மனு ஒன்றை அளிக்க சமூக ஆர்வலர்களான எபோ மிலி (Ebo Mili) மற்றும் டுகே அபாங் (Dugge Apang) ஆகியோர் முயன்றனர். ஆனால், அதற்கு முன்னதாகவே மிலி மற்றும் அபாங் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சியாங் பழங்குடி விவசாயிகள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக அபாங் உள்ளார், அருணாச்சல பிரதேசத்தை தளமாகக் கொண்ட பல சிவில் சமூக குழுக்களில் மிலி அங்கம் வகிக்கிறார். கைது செய்யப்பட்டு சில மணி நேரங்களுக்குப் பிறகு இவ்விருவரும் விடுவிக்கப்பட்டனர்.

“முன்மொழியப்பட்டுள்ள சியாங் மெகா அணை நுண்மையான சுற்றுச்சூழல் அமைப்புகள் (ecosystems), வனவிலங்கு வாழ்விடங்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை வழங்கும் எங்களது வசிப்பிடத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது எங்கள் வாழ்க்கை முறையை அழித்துவிடும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

தற்போது திட்டமிடப்பட்டிருக்கும் இந்த அணை முதன்முதலில் 2017 ஆம் ஆண்டில் மத்திய அரசின் சிந்தனைக் குழாமான நிதி ஆயோக்கால் முன்மொழியப்பட்டது. இது 10,000 மெகாவாட் திறன் கொண்ட நாட்டின் மிகப்பெரிய நீர்மின் திட்டமாக இருக்கும் என்று கூறப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் சியாங் ஆற்றின் கரையோரத்தில் உள்ள உகெங், டிட்டே டிம்மே மற்றும் பரோங் பகுதிகளில் அணை கட்டுவது சாத்தியமா என்பதை ஆய்வு செய்வதற்காக தேசிய நீர்மின் கழகம் மூன்று இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஆய்வை அனுமதிக்க முடியாது என்று கூறி மக்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். ஆனால், மக்களுக்குத் தெரியாமல் நள்ளிரவு நேரங்களில் சில ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாசிச மோடி அரசு இப்பகுதியில் பல்வேறு திட்டங்களை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்த நிதிகளை ஒதுக்கி மக்களுக்கு ஆசை காட்ட முயன்றது. ஆனால், மோடி வித்தை மக்களிடம் பலிக்கவில்லை.

இந்த ஆண்டு மார்ச் 23 அன்று, சியாங் பழங்குடி விவசாயிகள் மன்றத்தின் பதாகையின் கீழ் 1,500 உள்ளூர் மக்கள், பெரும்பாலும் ஆதி விவசாய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தேசிய நீர்மின் கழகத்தை (என்.எச்.பி.சி) எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். சியாங் மற்றும் மேல் சியாங் மாவட்ட நிர்வாகங்களுக்கு என்.எச்.பி.சி ஒதுக்கிய பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியை (corporate social responsibility funds) உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

தேசிய பாதுகாப்பு, சீன அரசுக்கு எதிரான நடவடிக்கை, தேச வளர்ச்சி என்று பல்வேறு காரணங்களைக் கூறி இத்திட்டத்தை நிறைவேற்ற பாசிச மோடி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அருணாச்சல பிரதேச மக்களோ ஏமாறத் தயாராக இல்லை. விழிப்போடு அரசை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க