தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (NCRB) தரவுகளின் படி, வடகிழக்கு இந்தியாவானது கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்தாவது ஆள் கடத்தலின் மையமாக விளங்கி வருகிறது. 2015-ல், இந்தியாவின் ஒட்டுமொத்த ஆள் கடத்தல் வழக்குகளில் அசாமின் பங்கு மட்டும் 22 சதவீதம். தற்போது வரை அசாமில் இந்த நிலைமையே நீடித்து வருகிறது.

ஆள் கடத்தல் அங்கு இவ்வளவு அதிகமாக இருப்பதற்கான காரணம் வேலைவாய்ப்பின்மையே. வேலைதேடும் இளம்பெண்களையும் இளைஞர்களையும் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ஏமாற்றி, பாலியல் தொழிலிலும் வீட்டு வேலை மற்றும் கட்டுமான தொழில்களிலும் அடிமைகளாக ஈடுபடுத்துகின்றனர்.

வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை அருணாச்சலப்பிரதேசம் பொருளாதார ரீதியாக மேம்பட்ட மாநிலமாக இருக்கிறது. அதனால் அங்கு வீட்டு வேலை மற்றும் கட்டுமானத் தொழிலுக்கான வேலையாட்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். இதன் காரணமாக அசாமிலிருந்து அருணாச்சலப்பிரதேசத்திற்கு அதிகமான அளவில் ஆள் கடத்தல் நடைபெறுகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளில் (2014-ல் இருந்து) பதிவு செய்யப்பட்டிருக்கும் அதிக அளவிலான ஆள் கடத்தல் வழக்குகள் உண்மையை பிரதிபலிக்கவில்லை. பெரும்பாலான வழக்குகள் ஆட்களை காணவில்லை என்ற அடிப்படையிலேயே பதிவு செய்யப்படுகிறது; ஆள் கடத்தல் என்ற பிரிவில் அல்ல. ஆனால், அவர்கள் நிரந்தரமாக காணாமல் போகிறார்கள் என்பதே கள யதார்த்தமாக உள்ளது.

படிக்க: ஒடிசா : சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்தும் டால்மியா! பழங்குடி மக்கள் போராட்டம்!

அசாமில் சக்மா (Chakma) என்ற பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களே அதிக அளவில் அருணாச்சலப்பிரதேசத்துக்கு கடத்தப்படுகிறார்கள்; குறிப்பாக அம்மாநிலத்தின் தலைநகரான இட்டாநகருக்கு (Itanagar) கடத்தப்படுகிறார்கள். சக்மா சமூகத்தைச் சேர்ந்த மாணவர் தலைவர்களைக் கேட்டபோது, ஏராளமான குழந்தைகள் கடத்தப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சக்மா சமூக மக்களுக்கு அசாமில் குடியுரிமை இல்லாமல் இருப்பதாலும், அவர்கள் அங்கு மிகவும் பின்தங்கிய சமூகமாக இருப்பதாலும் பெரும்பாலான புகார்கள் பதிவு செய்யப்படுவதே இல்லை.

சமீபத்தில் பேசிய அருணாச்சலப்பிரதேச முதல்வர் பேமா காண்டு (Pema Khandu), தனது மாநிலத்தைச் சேர்ந்த சக்மா அகதிகளை இந்தியாவின் மற்ற பாகங்களுக்கு இடம் மாற்றுவது குறித்துப் பேசினார். இது அம்மக்களிடையே பெரிய கோபத்தை ஏற்படுத்தியது.

வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு பெளத்த இனக்குழுவான சக்மாக்கள், சிட்டகாங் மலைப்பகுதிகளிலிருந்து திரிபுரா மற்றும் மிசோரம் வழியாக 1964-இல் இந்தியாவுக்குள் நுழைந்தனர். அப்போதைய கிழக்கு பாகிஸ்தான் அரசாங்கம் கர்னாபுலி (Karnaphuli) ஆற்றின் மீது கப்தாய் அணையை (Kaptai Dam) அமைத்ததால் அவர்கள் இடம்பெயர்ந்தனர். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையின் காரணமாக இந்த சமூகம் அப்போதைய பாகிஸ்தான் அதிகாரிகளால் மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது.

1964 ஆம் ஆண்டில், கப்தாய் அணை கட்டியதன் காரணமாக இடம்பெயர்ந்த சக்மா அகதிகள் இந்தியாவுக்குள் நுழைந்தபோது, இந்திய அரசாங்கம் அவர்களில் ஒரு குழுவை அப்போதைய வடகிழக்கு எல்லைப்புற முகமையின் (North East Frontier Agency – NEFA) திராப் பள்ளத்தாக்கில் (Tirap valley) குடியமர்த்தியது; அந்த NEFA-தான் இன்றைய அருணாச்சலப்பிரதேசம்.

1987 ஆம் ஆண்டில் அருணாச்சலப்பிரதேசம் மாநில அந்தஸ்தைப் பெற்றதிலிருந்தே உள்ளூர் பழங்குடிகளால் சக்மா மக்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

1972-இல் இந்திய அரசாங்கம் சக்மா மக்களுக்கு குடியுரிமை வழங்குவதாக முடிவெடுத்தது. உச்சநீதிமன்றமும் 2015-இல் அம்மக்களுக்கு குடிமக்களுக்கான உரிமைகளை வழங்குமாறு அம்மாநில அரசிற்கு உத்தரவிட்டது. ஆனால் அம்மாநில அரசோ அனைத்து உத்தரவுகளையும் குப்பைத் தொட்டியில் போட்டது.

இந்தியாவில் சக்மா மக்களுக்கு எந்த உரிமையும் இல்லாததால், கடத்தப்பட்ட சக்மா குழந்தைகளைப் பற்றிய எந்த ஆவணங்களும் போலீசுத்துறையிடம் இல்லை. சங்லாங் (Changlang), நம்சாய் (Namsai) மற்றும் பப்பும் பரே (Papum Pare) ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சக்மா குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

சாங்லாங் மாவட்டத்தின் தியான் வட்டத்தில் (Diyon Circle) உள்ள ஆரண்யப்பூர் (Aranyapur), உதய்பூர் (Udaipur), தர்மாபூர் (Dharmapur), முடோய் டுவீப் (Mudoi Dweep) மற்றும் தும்பனி (Dumpani) ஆகிய கிராமங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பமும் ஆள் கடத்தலுக்கு குழந்தைகளை இழந்துள்ளன. இந்தக் குழந்தைகளில் சிலர் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அடிமைத்தனம் மற்றும் மிருகத்தனமான துன்புறுத்தல்களிலிருந்து மீட்கப்பட்டாலும், பலர் காணாமல் போனவாரே உள்ளனர்.

படிக்க: ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு !

சுமார் ஒரு ஆண்டிற்கு முன்பு, நம்பர் 2 ஜோதிபூர் கிராமத்தைச் (No. 2 Jyotipur village) சேர்ந்த 13 வயதான ரிது சக்மா (Ritu Chakma) நம்சாய்க்கு (Namsai) சென்றார். அவர் ஒரு நல்ல வாழ்க்கையைப் பெறுவார் என்று அவரது பெற்றோருக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால், ஒரு அறியப்படாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பெண் குழந்தை, ஒவ்வொரு இரவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசு மற்றும் குழந்தைகள் நல மையத்தால் மீட்கப்பட்ட அவர் இப்போது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

அந்தப் பெண் குழந்தையின் தந்தையான அருண் குமார் சக்மா, நிலமற்ற ஒரு கூலித் தொழிலாளி. அவருக்கு ஆறு குழந்தைகள் இருப்பதால் தினக்கூலியை மட்டும் வைத்து குடும்பம் நடத்த இயலவில்லை. தனக்குத் தெரிந்த ஒரு நபரின் மூலமே தன் மகளை நம்சாய்க்கு வேலைக்கு அனுப்பி இருக்கிறார். இப்படி நடக்கும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

குடியுரிமை இல்லாததால் அருண் குமார் சக்மாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ரேசன் கிடையாது; அரசின் மருத்துவக் காப்பீடு (Atal Amrit Abhiyan), பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் போன்ற எந்த திட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ளவும் இயலாது.

சக்மா மக்கள் குடியிருக்கும் கிராமங்கள் இன்னும் மின்சார வசதியோ குடிநீர் வசதியோ கூட இல்லாமல்தான் இருக்கின்றன. அவர்களுக்கு ஓட்டுரிமையும் இல்லை. ஆரண்யப்பூர் கிராமத்தில் 200 வீடுகளுக்கு ஒரு கிணறு மட்டுமே உள்ளது. அங்குள்ள பெண்கள் தண்ணீருக்காக தினமும் ஐந்து முதல் பத்து கிலோமீட்டர் வரை நடக்க வேண்டி உள்ளது. 1994-இல் பரவிய மலேரியா கொள்ளை நோய், அப்பகுதி மக்களை சராசரியாக வீட்டிற்கு ஒருவர் என்ற அளவில் கொன்றொழித்தது. அரசாங்கம் அவர்கள்மீது எந்த அளவிற்கு அக்கறை காட்டுகிறது என்பதற்கு இது ஒரு துலக்கமான சான்று.

குடியுரிமை இல்லாததாலும் இருப்பிடச் சான்றிதழ் இல்லாததாலும் சக்மா மக்கள், வேலை வாங்கித் தருவதாக கூறி ஆள் கடத்தலில் ஈடுபடும் கடத்தல்காரர்களை நம்புவதைத் தவிர வேறுவழியில்லை. அரசாங்கத்திற்கோ அவர்களைக் கண்டு கொள்ள நேரமும் இல்லை. அம்மக்களுக்கு வாக்குரிமையும் இல்லை. ‘ஜனநாயக’ இந்தியாவின் தனிச்சிறப்பிற்கு புறக்கணிக்கப்பட்ட சக்மா பழங்குடி மக்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க