அசாமில் வங்காள மொழி பேசும் முஸ்லீம் (‘மியா’ முஸ்லீம்) சமூகத்தைச் சேர்ந்த ஒன்பது தொழிலாளர்கள் கிழக்கு அசாமின் சராய்டியோ மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் மயூர் போர்கோஹைன் (Mayur Borgohain) மீது புகார் அளித்துள்ளனர். உடல் ரீதியான தாக்குதல் மற்றும் மாவட்டத்தை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தியதாக பா.ஜ.க தலைவர் மீது புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
(அசாமில் உள்ள வங்காள மொழி பேசும் முஸ்லீம்களைக் குறிக்க ‘மியா’ முஸ்லீம் என்ற பதம் முதலமைச்சரால் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ‘மியா’ என்பது ஒரு இழிவான வார்த்தையாகும். இது பூர்வீக மக்களில் பலரால் “பஹிரகதா” (வெளியாட்கள்) மற்றும் பங்களாதேஷில் இருந்து ‘சட்டவிரோதமாக’க் குடியேறியவர்கள்’ என்று பொருள்படும் படி பயன்படுத்தப்படுகிறது.)
கிழக்கு அசாமில் உள்ள பல உள்ளூர் அசாமிய தேசியவாத அமைப்புகள் பெங்காலி முஸ்லிம்களை, அசாமியர்கள் ஆதிக்கம் செலுத்தும் “மேல் அசாம்” பிராந்தியத்தை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், பாஜக தலைவரின் உத்தரவின் பேரில் சில குண்டர்கள் அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்களைத் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்கு ஆளான தொழிலாளர்கள் போலீசிடம் புகார் அளித்தனர். இவர்கள் மேற்கு அசாமில் உள்ள பார்பேட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க: ஹரியானா: பசுவின் பெயரில் நடக்கும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முதல்வர் சைனி
பார்பேட்டாவின் சதார் போலீசு நிலையத்தில் ஆகஸ்ட் 26 அன்று பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில், சராய்டியோவில் (Charaideo) மூன்று மாடி திறன் மேம்பாட்டு மையத்தை நிர்மாணிப்பதற்காக ஒன்பது பேரும் கடந்த மூன்று ஆண்டுகளாக பா.ஜ.க தலைவர் போர்கோஹெய்னால் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
புகார்தாரர்களில் ஒருவரான ரஜிபுல் ஹக் (Rajibul Hoque) “எங்கள் பணிக்கான ₹15 லட்சம் பில் (bill) அவரிடம் நிலுவையில் உள்ளது. பலமுறை கேட்டும் போர்கோஹெய்ன் பணத்தைக் கொடுக்கவில்லை. இதனையடுத்து ஆகஸ்ட் 24 அன்று இரவு 10.30 மணியளவில், 14 முதல் 15 குண்டர்கள் முகத்தை மூடியபடி எங்களிடம் வந்து, எங்கள் அறைகளுக்கு முன்னால் முழங்காலிடுமாறு கட்டாயப்படுத்தினர். அவர்கள் கைகளில் கத்திகள், துப்பாக்கிகள், கம்புகள், பிளாஸ்டிக் குழாய்கள் இருந்தன. அவர்கள் எங்களை பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் பிரம்பு குச்சிகளால் அடிக்கத் தொடங்கினர். நாங்கள் அனைவரும் காயமடைந்தோம். துப்பாக்கியால் எங்களைக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். நாங்கள் உதவிக்காகக் கூச்சலிட்ட பின்னர் அவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் எங்களை மாவட்டத்தை விட்டு வெளியேறச் சொன்னார்கள். போர்கோஹெய்னிடமிருந்து ₹15 லட்சத்தைக் கேட்க வேண்டாம்” என்று கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.
ரஜிபுல் ஹக், அஹதுல் கான், அமினுல் ஹக், அமிருல் ஹக், சுரோத் ஜமால், ஆசிருதீன், சதாம் ஹுசைன், அலி ஹசன் மற்றும் அசாபுல் ஹக் ஆகியோர் தான் தாக்குதலுக்கு ஆளான அந்த ஒன்பது பேர்.
தாக்குதல் நடத்த உத்தரவிட்ட போர்கோஹெய்ன் மற்றும் தக்குதல் நடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பவத்தின் காணொளியையும் அவர்கள் போலீசிடம் சமர்ப்பித்துள்ளனர்.
படிக்க: ஹரியானா: பசுவின் பெயரில் நடக்கும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முதல்வர் சைனி
மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்தால், அந்த தொழிலாளர்கள் அதே இரவில் மாவட்டத்தை விட்டு வெளியேறி பார்பேட்டாவை அடைந்துள்ளனர். அவர்கள் பார்பேட்டாவில் உள்ள மண்டியா மாதிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆகஸ்ட் 28 அன்று செய்தியாளர்கள் கேட்டபோது, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “நடவடிக்கை எடுப்பது காவல்துறையின் வேலை. முதல்வர் என்ன சொல்ல முடியும்?” என்று திமிராகப் பேசினார்.
மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்பு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் முஸ்லீம்கள் மீதான காவிக் குண்டர்களின் கொலைவெறித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக அசாம் மற்றும் ஹரியானா முதல்வர்களின் கூற்றுகள் வெளிப்படையாகவே இவர்கள் இந்த பயங்கரவாதத்தை ஆதரிப்பதைக் காட்டுகிறது.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram