ஹரியானா மாநிலம் சார்க்கி தாத்திரி மாவட்டத்தில், ஹன்சவாஸ் குர்த் கிராமத்தில் குடிசை அமைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆகஸ்ட் 27-ம் தேதி கிராமத்திற்குள் புகுந்த பசு குண்டர்களைக் கொண்ட கும்பல், மாட்டுக்கறி சாப்பிட்டதாக கூறி குடிசைகளை சோதனையிட்டுள்ளது. குடிசைப் பகுதியில் இருந்த சப்ருதீன் என்ற ஒருவரை அவர்கள் அங்கேயே அடித்துள்ளனர். பிறகு, போலீசில் தகவல் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் குடியிருப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது சார்க்கி தாத்திரி போலீசு.
இது முடிந்த பிறகு போலீஸ் நிலையத்திலிருந்து கிளம்பிய ‘பசு பாதுகாப்பு’ கும்பல், ஜுய் ரோட்டில் உள்ள குடிசை பகுதிக்குச் சென்று, மாட்டுக்கறி உட்கொண்டதாகக் கூறி சபீர் மாலிக் என்பவரை அடித்தே கொன்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளியான சபீர் மாலிக், தெருக்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை விற்றுப் பிழைப்பு நடத்திவரும் அன்றாடங்காட்சி. இவரிடம் பிளாஸ்டிக் பொருட்கள் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று குச்சி, இரும்பு கம்பியைக் கொண்டு தாக்கியுள்ளது. சபீர் மாலிக்கை தாக்கிய காணொளி இணையதளங்களில் வைரல் ஆனது. ஹரியானாவின் சார்க்கி தாத்திரி போலீஸ் இரண்டு சிறுவர்கள் உட்பட ஏழு பேரை கைது செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
திரிணாமூல் காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் மஹூவா மொய்த்ராவின் எக்ஸ் தள பதிவில்,”பாஜகவின் வெறுப்பு பிரச்சாரம் கொலை செய்து கொண்டிருக்கிறது, இதற்கான நீதி கிடைக்க வேண்டும். இதுபோன்று எண்ணற்ற கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது”.
காங்கிரசின் எம்.எல்.ஏ அஷ்தப் அகமத், “ஹரியானாவில் சட்டம் ஒழுங்கே இல்லை. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
படிக்க: ராஜஸ்தான்: பசுவின் வாலை கோவிலுக்குள் முஸ்லீம்கள் வீசியதாகக் கூறி கலவரம்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31 அன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி “பசு பாதுகாப்பிற்காகச் சட்டமன்றத்தில் கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதில் எந்த விதமான சமரசமும் கிடையாது. ஆதலால் இதனைக் கும்பல் கொலை என்று கூறுவது சரியல்ல. கிராம மக்கள் பசுக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இது போன்ற விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியவந்தால், அவர்களை யாரால் தடுக்க முடியும்? இருப்பினும், இவ்வாறான சம்பவங்கள் இடம் நடைபெறக் கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் துரதிருஷ்டவசமானது” என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். இது இஸ்லாமிய வெறுப்புடனும் திமிருடனும் அளிக்கப்பட்ட பதிலாகும்.
கடந்த 2015 முதல் ஹரியானாவில் பசு பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் இஸ்லாமியர்களை ஒடுக்குவதற்கான சட்டம் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தால் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்திப் பசு பாதுகாப்பு கும்பல்கள் இஸ்லாமியர்கள் மீது வெறிச் செயல்களில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் ஹரியானாவில் இயல்பாகியுள்ளது.
ஹரியானா முதல்வர் தற்போது அளித்துள்ள பேட்டியானது, ‘பாசு பாதுகாப்பு’ என்ற பெயரில் நடக்கும் பயங்கரவாதத்தை அவரே ஊக்குவித்து வழிநடத்துகிறார் என்பதைத் தெளிவாக்குகிறது. நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. வயது மூத்தவர்கள் தொடங்கி 18 வயது இளைஞர் (முஸ்லீம் என்று நினைத்து அடித்துக் கொல்லப்பட்டார்) வரை அனைவரும் சங்கப் பரிவார குண்டர்களால் தாக்கப்படுகின்றனர்; அவர்கள் முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக.
ஹைதர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram