ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் சுமார் 5,000 பேர் டால்மியா சிமென்ட் நிறுவனம் தங்கள் நிலத்தை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதாகக் கூறி அக்டோபர் 21 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கிராம சபைக்கான ஜன சங்கதன் மன்றம் என்ற பதாகையின் கீழ், மாவட்டத்தில் உள்ள ஐந்து பஞ்சாயத்துகளின் – ராஜ்கங்பூர் தொகுதியின் குகுடா, அலந்தா, கேஸ்ரமல் மற்றும் ஜாகர்பூர் பஞ்சாயத்துகள் மற்றும் குத்ரா தொகுதியின் கேடாங் பஞ்சாயத்து – உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்ப்பு தெரிவித்த 5,000 பழங்குடி மக்கள் அக்டோபர் 18 ஆம் தேதி ராமபாலில் இருந்து 100 கி.மீ. நடைபயணம் தொடங்கி, அக்டோபர் 21 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தனர். அன்று இரவு, கலெக்டரை சந்திக்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி மக்கள் இரவைக் குளிரில் கழித்தனர்.
அக்டோபர் 24, அன்று ஆர்ப்பாட்ட கோரிக்கைகளை விவரிக்கும் கூட்டு செய்தி அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், பழங்குடி மக்கள் திட்டவட்டமாக நிராகரித்த போதிலும், மேற்கூறிய பஞ்சாயத்துகளின் கீழ் வரும் 750 ஏக்கர் நிலம் “சட்டவிரோதமாக டால்மியா சிமெண்ட் நிறுவனத்திற்கு” (முன்னர் ஒடிசா சிமென்ட் லிமிடெட்; OCL) ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறது.
இதனால் 57 கிராமங்களைச் சேர்ந்த 60,000 பழங்குடி மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வாதாரம் இழக்க நேரிடும் என்று அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. மிக முக்கியமாக, அவர்கள் தங்கள் அடையாளம் இல்லாமல் விடப்படுவார்கள் என்று அறிக்கை கூறுகிறது.
“பழங்குடி மக்களான எங்களுக்கு நிலம் என்பது வெறும் வாழ்வாதாரம் மட்டுமல்ல; இது நமது உடலின் ஒரு பகுதி போன்றது” என்று கிராம சபை ஜன் சங்கதன் மன்றம் மேற்கோளிட்டுள்ளது. “நிலம் நமது வாழ்க்கை, அடையாளம், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால்தான், 2017 ஆம் ஆண்டில், எங்கள் நிலத்தைக் காப்பாற்ற இந்த இயக்கத்தைத் தொடங்கினோம். டால்மியா நிறுவனத்திற்காக அரை அங்குல நிலத்தைக் கூட கையகப்படுத்துவதற்கு முன் நாங்கள் எங்கள் உயிரைக் விடுவோம் என்று பழங்குடி மக்கள் கூறுகிறார்கள்.
டால்மியா-ஓசிஎல் நிறுவனம் மற்றும் டால்மியா பாரத் என்ற தனியார் நிறுவனங்களுக்கு கூடுதலாக 2,150 ஏக்கர் நிலத்தை வழங்குவதன் மூலம், இப்பகுதியில் தனது கல் சுரங்க நடவடிக்கைகளை விரிவுபடுத்த முயல்கிறது. இந்த விரிவாக்கத்தின் முதல் கட்டத்தை முடிக்க, நிறுவனத்திற்கு 750 ஏக்கர் நிலம் தேவை என்று அறிக்கை கூறுகிறது.
அக்டோபர் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி மக்கள் வந்தபோது, ஒரு அதிகாரி கூட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வரவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, பழங்குடியினர் நான்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து ஆட்சியரிடம் அவரது அலுவலகத்தில் மனு கொடுக்க சொன்னார்கள். அதன்பிறகு, அந்த இடத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்ததால், ஆட்சியர் அலுவலகம் மற்றும் அவரது இல்லம் என நான்கு வாயில்களும் மூடப்பட்டன.
குகுடா பஞ்சாயத்தின் சர்பஞ்ச் ரிலா சுசீலா தோபே, “ஜனவரி 26, 2020 அன்று, மன்றம் எங்கள் நிலத்தை கையகப்படுத்தும் முன்மொழிவை நிராகரித்தது மற்றும் ஒரு அங்குல நிலத்தை கூட எடுக்கக் கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால், மாநில அரசும், நிர்வாகமும், நிறுவனமும், எவ்வித மதிப்பீடும் இன்றி, எவ்வித அறிவிப்பும் இன்றி, கிராம சபையின் அனுமதியும் இன்றி, நிலம் கையகப்படுத்தும் பணியை துவக்கியது.” என்று கூறினார்.
படிக்க : ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு !
“நாங்கள் பழங்குடிகள்; நாங்கள் எங்கள் நிலத்தை விட்டு வெளியேற மாட்டோம், எங்கள் கிராமத்தை விட்டு வெளியேற மாட்டோம், எங்கள் மண்ணுக்காக ஒப்பந்தம் செய்ய மாட்டோம். 25 லட்சம் பணம் தருவதாகவும், போலி கையெழுத்து போட்டு சம்மதம் தெரிவிப்பதாகவும் கூறி மக்களை கவர்ந்து இழுக்க அரசு முயற்சித்து வருகிறது; அதனால்தான் நாங்கள் நான்கு நாள் நடைபயணத்தை தொடங்கினோம். எங்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்த்து, சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்துவதை தடுக்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்” என்று மன்றத்தின் ஆசிரியர் வினய் பர்லா கூறினார்.
டால்மியா நிறுவனத்திற்காக சட்டவிரோதமாக நிலங்களை கையகப்படுத்தி, பழங்குடி மக்களை தன் சொந்த நிலத்தில் இருந்து விரட்டியடிக்க துடிக்கிறது கார்ப்பரேட் நல ஒடிசா அரசு.
சந்துரு